வாடுகிற பயிரினையே கண்டு நெஞ்சம்
வாடியவர்! துடித்தவரும் அவரே ஆவர்!
பீடுமிகு உயிரிரக்கக் கொள்கை ஒன்றே
பெரிதென்று முழங்கியவர்! பசியால் மக்கள்
ஈடில்லாத் துயருற்ற இழிவை மாற்ற
இரவுபகல் அணையாத அடுப்பை, வாழ்ந்த
வடலூரில் அமைத்திட்டார் வையம் போற்ற!
வரலாற்றில் தனியிடத்தைப் பெற்றார் வள்ளல்!
மதமான பேய்பிடியா திருக்க வேண்டும்! மாண்பில்லார் நால்வருணம் ஆக மங்கள்
உதவாத ஆரியத்தின் ஒவ்வாப் போக்கை
உளம்கனன்றே வள்ளலாரும் எதிர்த்து வந்தார்!
பதறுகின்ற இழிநிலையில் ஏழை மக்கள்
பதராக வாழ்வதனைக் கண்டு நொந்தார்!
முதன்முதலில் கொண்டிருந்த கருத்தை யெல்லாம்
முடிவாகத் திருமுறையில் மாற்றிக் கொண்டார்!
வேதநெறி, மூடநெறி, இதிகா சங்கள்
விளம்புவதைத் தீங்கென்றே எதிர்த்து வந்தார்!
சாதிமத வேறுபாடு சரியே என்போர்,
சாத்திரத்துச் சழக்குகளில் திளைத்தோர் தம்மின்
தீதான இருள்விலக்கி ஒளியின் மேன்மை
தெளிவாக அனைவருமே உணரச் செய்தார்!
ஏதமிலா உயர்வாழ்வை நோக்கி வையம்
இயங்கிடவே வழிபாட்டில் பெருமை சேர்த்தார்!
கண்மூடி வழக்கங்கள் பெருகக் கண்டே
கழிவிரக்கம் கொண்டிட்ட வள்ள லாரோ
மண்மூடிப் போகட்டும் மடமை என்றே
மனம்குமுறிச் சனாதனச் சழக்கை யெல்லாம்
திண்ணமுறப் படைப்புகளில் மனமும் நோகத்
தெளிவான விளக்கத்தை வழங்க லானார்!
உண்மையொளிர் ‘ஞானசபை’ ஒன்றை வாழ்வில்
உருவாக்கி இனியநெறி காத்திட் டாரே! |


