யமரியாதை இயக்க நூற்றாண்டுத் தொடக்கம் முதலே, தமிழ்நாடு முழுவதும் அதுசார்ந்த நிகழ்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திராவிடர் கழகம் இடைவிடாது இப்பணியை இதழ்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் செய்து இன்றைய தலைமுறைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் விழிப்பூட்டி வருவதை அனைவரும் அறிவர். அப்படிப்பட்ட வரலாற்று முதன்மை பெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாடு மிகச் சிறப்பாக, ஒரு நாள் முழுவதும், செறிவான நிகழ்வுகளை உள்ளடக்கி மறைமலைநகரில் நடைபெறவுள்ளது.
சுயமரியாதை இயக்க நூற்
றாண்டை நாம் நிறைவு செய்யும் நிலையில், சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது எப்போது என்பதை
நாம் தெளிவாக அறிவது கட்டாயமாகும்.
1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம்
தொடங்கப்பட்டாலும், அதற்கான அடித்தளம்
பெரியார் காங்கிரசில் இருக்கும்போதே தொடங்கப்பட்டுவிட்டது. தன் கருத்துகளைக் காங்கிரஸ் ஏடுகள் வெளியிடாத நிலையில், தனக்கென ‘குடிஅரசு’ இதழைப் பெரியார்
எப்போது தொடங்கினாரோ அப்போதே
சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டு
விட்டதாகக் கொள்ள வேண்டும் என்று சில வரலாற்றாய்வாளர்கள் கூறுவர்.
காங்கிரஸை எதிர்த்து பெரியார் வெளி
யேறிய நாளை சுயமரியாதை இயக்கம் உருவான நாளாகக் கொள்ளலாம் என்று கூறுவோரும் உண்டு.
இந்தக் குழப்பங்
கள் வரக் காரணம், சுயமரியாதை இயக்கத்தின் துவக்க விழாவோ அல்லது நிகழ்வோ எதுவும் நடக்கவில்லை என்பதால், சுயமரியாதை இயக்கத் துவக்க நாள் என்று ஒன்றை நாம் குறிப்பிட இயலவில்லை.
ஆனால், தந்தை பெரியாரின் பதிவு ஒன்று இக்குழப்பத்திற்குத் தீர்வாக அமைகிறது. 1937ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் ‘குடிஅரசு’ இதழில், “சுயமரியாதை இயக்கம்” என்ற பெயரில் ஒரு கட்டுரையை பெரியார் வெளியிட்டார். அக்கட்டுரையில், “சுயமரியாதை இயக்கம்” என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சுயமரியாதை இயக்கத்தின் துவக்க
மாக 1925ஆம் ஆண்டைக் கொள்வதே சரியென்ற அடிப்படையில் நாம் இப்போது
நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடு
கிறோம்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்:
5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
- மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். ஒரு நாட்டின் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எவரும் எவருக்கும் தாழக் கூடாது. எவரும் எவரையும் தாழ்த்தவும் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும்.
- மனிதனுக்கு மனிதன், பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு எதுவும் கிடையாது. பிறப்பில் வேறுபாடுகள் கற்பித்து, உயர்வு-தாழ்வு என்ற நிலைகளை ஏற்படுத்தியது, ஆதிக்க உணர்வு கொண்ட மோசடிக்காரர்களும், பித்தலாட்டக் காரர்களும் இடைக்காலங்களில் செய்த வேலையே ஆகும்.
- மனிதனும் மனிதனும் ஒருவரோடு ஒருவர் அன்போடும், பண்போடும், உறவோடும், உரிமை
யோடும், நட்போடும், ஆதரவோடும், அரவணைப்போடும் பழகுவதற்கு ஏற்ற மனிதத் தன்மை உடையவர்களேயல்லாமல், தீண்டாமை, பாராமை, சேர்க்காமை, மதிக்காமை போன்றவற்றால், ஒருவரையொருவர் புறக்கணிப்பதற்கும், தள்ளி வைப்பதற்கும் இடமேயில்லை. - மனிதர்களுக்குள்ளாகவே, அவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் கொள்கைக் கோட்பாடு, சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சமயங்களும், ஜாதிகளும் வேரோடு களைந்தெறியப்பட வேண்டும்.
- மனிதனை முட்டாளாக ஆக்குவதற்கும், முரடனாக ஆக்குவதற்கும், வெறியனாக ஆக்குவதற்கும், பைத்தியக்காரனாக ஆக்குவதற்கும், ஆதிக்கக்காரனாக ஆக்குவதற்கும், ஆணவக்காரனாக ஆக்குவதற்கும் பயன்படுத்தப்படும் கடவுள், மதம், ஜாதி, சாத்திரம், புராணம், இதிகாசம், வேதம், மோட்சம், நரகம், பேய், பூதம், பிசாசு, பில்லி சூன்யம், ஜோதிடம், குறி, மந்திரம், பூசை, யாகம் சடங்கு, பண்டிகை போன்ற கற்பனைக் கூறுபாடுகள் அனைத்தும், அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.
- மனிதனின் சிந்தனை அறிவுத்திறன், செயலாற்றல் திறன், சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் பாங்கு, தகுதி, திறமை போன்றவற்றையெல்லாம் கெடுத்து, அவனை முழு முட்டாளாக்கக் காரணமாக இருக்கும் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம், பஜனை பாடுதல், செபம் செய்தல், வழிபாடு நடத்துதல், சடங்கு
களைக் கடைப்பிடித்தல் போன்றவை, மனித சமுதாயத்தை விட்டு அறவே அகற்றப்பட வேண்டும். - உலகில், நல்லது – தீயது, உயர்ந்தது – தாழ்ந்தது, சிறந்தது – சிறுமையது, பலன் அளிப்பது – பலன் அளிக்காதது, உதவுவது – உதவாதது, ஆக்குவது – அழிப்பது, மதிக்க வேண்டியது – மதிக்க வேண்டாதது எவை எவை என்று பகுத்தறிந்து பார்த்து, பயன்படும் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் துணிவு மட்டும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏற்பட வேண்டும்.
- தன்மான உணர்ச்சி, உரிமையுணர்வு, விடுதலை வேட்கை, சிந்திக்கும் ஆற்றல்,
செய்து முடிக்கும் தன்மை ஆகியவற்றைக்
கட்டிக் காக்கும் தகைமை ஒவ்வொருவரிடத்
திலும் இருக்க வேண்டும். - எதிர்காலம் அறிவியலுக்கு உரிய-தேயல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல; மனிதனுக்கு உரியதே அல்லாமல் கடவுளுக்கு உரியது அல்ல என்ற நிலை ஏற்பட வேண்டும்.
- பகுத்தறிவு நெறியில் நின்று, பண்பாட்டுத் தன்மையோடு, தன்மானவுணர்வு கொண்டு சமுதாயத்தைச் சீர்படுத்தவும், செம்மைப் படுத்தவும் ஒவ்வொருவரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும்.
- பகுத்தறிவுணர்வோடு எதையும் சிந்தித்து, பகுத்தறிவுணர்வோடு எதையும் சொல்லி, பகுத்தறிவுணர்வோடு எதையும் செயலாற்ற மக்களனைவரும் தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- நல்லறிவு, நல்லாற்றல், உயர் உண்மை, நல்ல உழைப்பு, நல்ல நோக்கம், நாணயம், நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம், இயற்கைப் போக்கு ஆகியவற்றிற்கு மதிப்பு அளித்துப் பாடுபடவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கொள்கை விளக்கம் செய்தார்.
1927ஆம் ஆண்டு பெங்களூரில் காந்தியாரைச் சந்தித்து விவாதித்ததன் விளைவாய்ப் பெரியார், காந்தியார் – காங்கிரஸ் சிந்தனைகளில் இருந்து முழு
மையாக வெளி
யேறினார். அதன் பிறகு சுயமரியாதை இயக்கக் கூட்டங்கள், மாநாடுகள் அதிக அளவில் நடை
பெற்றன. 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய நாள்களில் மாகாண சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது. அம்மாநாட்டில், அதுவரை செய்யப்பட்ட சுயமரியாதை இயக்கப் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அதன் பிறகு இரண்டாவது மாகாண மாநாடு ஈரோட்டிலும், மூன்றாவது மாகாண மாநாடு விருதுநகரிலும் நடைபெற்றன.
1932இல் தந்தை பெரியார் அய்ரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்த பிறகு சுயமரியாதை இயக்கத்தின் மூலம் சமதர்மக் கொள்கைகளையும் பரப்ப விரும்பினார். 1932 டிசம்பர் 17, 18இல் ம.சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் சமதர்மக் கொள்கைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டது.
1944ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் ஒன்றாக இணைக்கப்பட்டன. இச்சூழலில், சமூக விடுதலையோடு அரசியல் விடுதலையும் சேர்த்துப் பேசப்பட்டன. தமிழர்
களுக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே அரசியல் – பூகோள விடுதலை பெறப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறினார்.
சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடு
களால், ஜாதி ஒழிப்பு, ஆண்-பெண் சமத்துவம்,
பொருளாதார, சமூக சமத்துவம், பண்பாடு,
மொழி காப்பு, ஆதிக்க ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை முன்னெடுக்கப்பட்டு, நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டன.
ஜாதி ஒழிப்பு
சுயமரியாதை இயக்கத்தின் ஜாதி ஒழிப்பு மிக முதன்மையானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், ஆரிய ஊடுருவலின் விளைவாய் வந்த ஜாதிப் பிரிவுகள், கொடுமைகள், உரிமை மறுப்புகள், பறிப்புகள் மக்களை அழித்து, இழித்து, பாழாக்கிய நிலையை முற்றாக மாற்ற இவ்வியக்கம் முனைந்தது, முயற்சிகள் மேற்கொண்டது. அதன் விளைவாய் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் நடைமுறை பெருமளவு ஒழிக்கப்பட்டது.
ஜாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாய் மீட்டெடுக்கப்பட்டன.
தீண்டாமை, குலத்தொழிலையே செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை, பொது இடங்களில் புழங்கக் கூடாது என்ற தடை போன்றவை, கடுமையாக எதிர்க்கப்பட்டு, ஒழிக்கப்பட்டன.
பெண்ணுரிமை
ஆணாதிக்கம், ஆணின் மேன்மை, ஆணின் அடிமையாகப் பெண் என்ற வாழ்க்கை முறை, திருமணம், கருத்தரித்தல் போன்றவற்றில் பெண்ணின் உரிமை அறவே மறுக்கப்படல் போன்றவை கடுமையாக எதிர்க்கப்பட்டன.
வீட்டு வேலை செய்யவும், பிள்ளை பெற்று வளர்க்கவுமே பெண்கள் என்ற நிலை அறவே ஒழிக்கப்பட இந்த இயக்கத்தின் பங்கு முதன்மையாக இருந்தது. பெண்களுக்குக் கல்வி கட்டாயம், அவர்கள் உயர் கல்வி வரை படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு, அவை நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டன.
கற்றாலும், வீட்டில் ஆணுக்குச் சேவகம் செய்வதே பெண்ணின் கடமை என்ற அடிமை முறைக்கு எதிராய்ப் போராடி, அனைத்துத் துறைகளிலும் பெண்கள், அனைத்து நிலைகளிலும் வேலை பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
அரசியல், ஆட்சி, நிருவாகம், காவல், இராணுவம், வாகனம் ஓட்டுதல் என்று எல்லாவற்றிலும் பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் நிலை உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு 50% கட்டாய ஒதுக்கீடு இதில் வேண்டும் என்பது கொள்கையாகக் கொள்ளப்பட்டு வலியுறுத்தப்பட்டது.
இளம் வயதுத் திருமணம், குழந்தைத் திருமணம், மறுமணம் செய்யக் கூடாது என்ற தடை, கல்லானாலும் புல்லானாலும் கடைசி வரைக்கும் கட்டியவனே எல்லாம் என்ற நிலை, வாழ்வுக்கும், வருவாய்க்கும் கணவனையே நம்பும் தற்சார்பு அற்ற நிலை போன்றவை எதிர்க்கப்பட்டு, விலக்கப்பட்டு ஆணுக்குள்ள அனைத்தும் பெண்ணுக்கு என்ற நிலை உருவாக்கப்பட்டது.
சுயமரியாதைத் திருமணம் நடைமுறைப்
படுத்தப்பட்டு, பெண் – ஆண் இருவரும் மண ஒப்பந்தம் செய்துகொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
பெண்களுக்கும் ஆண்களைப் போல சொத்துரிமை வேண்டும் என்று போராடி, அதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் உச்சநிலை விளைவாய் அனைத்துத் துறையிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து, உயர்ந்து நிற்கும் நிலை இன்றைக்கு ஏற்பட சுயமரியாதை இயக்கத்தின் பங்கு அளப்பரியது.
சுயமரியாதை இயக்கத்திலும் பெண்களின் பங்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்தது. பெண்களுக்கென்று தனி மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை நடைமுறைக்கும் கொண்டு வரும்படி செய்யப்பட்டன.
இந்தித் திணிப்பை எதிர்த்தல்
மொழிச் சிக்கலிலும் தெளிவான நிலைப்
பாட்டை சுயமரியாதை இயக்கம் கொண்டி
ருந்தது. தாய்மொழி மற்றும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் கற்றால் போதும் என்ற இருமொழிக் கொள்கை உருவாக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தவும்பட்டது. இதனால் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பும் தடுக்கப்பட்டது.
பண்பாட்டுக் காப்பு
திராவிடப் பண்பாட்டுக்கும் ஆரியக் கலாச்சாரத்திற்குமான வரலாற்றுப் போர் 20ஆம் நூற்றாண்டிலும் நிலவியது. அதன் விளைவாய் தமிழ்ப் பண்பாடு ஒழிக்கப்பட்டு ஆரியக் கலாச்சாரம் வாழ்வியலாய் ஆனநிலை இருந்தது. சுயமரியாதை இயக்கத்தின் மூலம் தந்தை பெரியார் இச்சீரழிவை விலக்கினார்.
தமிழர் பண்பாடு ஒவ்வொன்றாக மீட்டெடுக்கப்பட்டது. காதல் மணம், குறைந்தபட்ச திருமண வயது, மணவிலக்கு, மறுமணம் என்று சமூக நீதியின்படி அமைந்த பண்பாடு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா மீட்டெடுக்கப்பட்டு, நன்றி விழாவாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்று நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழர் இசை, நாட்டியம் போன்ற கலைகள் காப்பாற்றப்
பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டன.
இடஒதுக்கீடு
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் இடஒதுக்கீடு போராடிப் பெற்றது சுயமரியாதை இயக்கம்.
இதன்மூலம் ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் பெருமளவு அகற்றப்பட்டு, அனைத்து மக்களும், அனைத்துத் துறையிலும் பணியேற்கும் சமூகநீதி நிலைநாட்டப்பட்டது. செத்த மாடு தூக்கவும், அடிமை வேலை செய்யவும், கழிவுகள் அகற்றவும் என்று ஒதுக்கப்பட்ட மக்கள், சுயமரியாதை உணர்வுடன், அளிக்கப்பட்ட சட்டப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீதிபதிகளாய், குடியரசுத் தலைவராய், பேராசிரியர்களாய், மாவட்ட ஆட்சியர்களாய்ப் பணியேற்று, பார்ப்பனர்களுக்குக் கட்டளையிடும் வாய்ப்பைப் பெற்றனர். இவையனைத்தும் சுயமரியாதை இயக்கம் தந்த, கண்ட மாற்றங்கள்.
சமத்துவபுரங்கள்
உயர் ஜாதிக்குத் தனித்தெரு, மற்ற ஜாதிக்குத் தனிக் குடியிருப்பு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஊர்ப்புறத்தே சேரி என்ற நிலையை மாற்ற எல்லா ஜாதியினரும் சேர்ந்து வாழ சமத்துவபுரங்கள் அரசால் உருவாக்கப்பட சுயமரியாதை இயக்கம் காரணமாய் அமைந்தது. இன்று நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்புகள் எல்லாம் ஜாதி பேதமற்ற சமத்துவபுரங்களாக வளர்ந்து நிற்கின்றன.
இம்மாற்றங்கள் மட்டும் இன்றைக்கும் போதாது. இன்னும் செய்யப்பட வேண்
டிய மாற்றங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை அடைய சுயமரியாதை இயக்கத்தின் பணி தொடர்ந்து தேவை. அதற்கு சுயமரியாதை இயக்கத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான விழாவாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா இருப்பதால் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதால் ஆசிரியர் வலியுறுத்தி அழைக்கிறார்.
ஆசிரியர் அழைக்கிறார்
ஒப்பாரும் மிக்காருமிலா நமது அறிவுப் பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் கண்ட ‘‘சுயமரியாதை இயக்கத்திற்கு’’ நூற்றாண்டு நிறைவு விழா!
அதுவும், 1929இல் அவ்வியக்கத்தின் முதல் மாகாண மாநாடு நடைபெற்ற செங்கற்பட்டில் நடைபெற்றது. தமிழ்க்கடல் மறைமலையடிகளார் பெயரிலான மறைமலை நகரில், இவ்வாண்டு வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி, காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை அடர்த்தியான கொள்கை விளக்க, சாதனை சரித்திரத்தினை இன்றைய இளைய தலைமுறையினரும் கண்டு, அதன் தாக்கம் எப்படி சமூகப் புரட்சியாக மலர்ந்து, புதியதோர் சுயமரியாதை உலகை உண்டாக்கியுள்ளது என்பதை அகிலம் அறிய மகத்தான, பெரியார் சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாடு ஓர் அரிய – புதிய பொன்னேட்டை இயக்கச் சரித்திரத்தில் இணைக்கப் போகிற மாநாடு, கொள்கைக் கொண்டாட்டத்துடன், கோலாகலமாக நடக்கவிருக்கிறது!
உலக மயமாகும் தந்தை பெரியாரின் கொள்கைகள்!
தந்தை பெரியாரின் தொண்டறக் கொள்கைகள் உலகமயமாகிக் கொண்டிருப்பதால், ஒரு சீரிய பங்கைச் சிறப்பாகச் செய்துவரும், உலக நாடுகள் பலவும் மெச்சிப் பாராட்டி, தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அரியதோர் சாதனையாக, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும், தமிழின இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்கும் வழி ஏற்படுத்த தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணியிலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி கடந்த 50 ஆண்டு
களுக்குமுன் அறிஞர் அண்ணாவால் பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அதனை உறுதியாகவும், சிறப்பாக பெருமிதத் திசைகாட்டியாக்கி மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களது கொள்கைவழி ஆட்சியில் வெற்றிச்
சாதனைகளும், அவருக்குப் பின் சில ஆண்டுகள்
கழித்துப் பொறுப்பேற்று, புரட்சித் தமிழ்நாடாக நம் பெரியார் மண்ணை நாளும் ஆக்கி வருகிற ஆளுமைமிகு ‘திராவிட மாடல்’ நாயகர், அந்த நூற்றாண்டு நிறைவு மாநாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து, தனது கொள்கை எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து புதிய புறநானூறு படைக்கவிருக்கிற நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்ற ஒப்புதல் அளித்துள்ளார்.
காலைமுதல் வியத்தகு நிகழ்ச்சிகள்!
மாநாட்டில், காலை முதல் நமது கொள்கைப் பரப்புப் பணியினரும், தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்!
வியக்கத்தக்க ஏற்பாடுகள்! நமது வாழ்நாளில் மறக்க முடியாத சாதனை இயக்க சரித்திரத் திருவிழா, பெருவிழா!
கடந்த சில மாதங்களாக உடல்நலங் குன்றி, அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகி, எண்ணிய வேகத்தோடு சுற்றுப்பயணத்தைத் தொடர முடியாத நிலையில், கழகத்தின் கொள்கைத் தோழர்கள் குடும்பம், குடும்பமாக வருவதைக் கண்டு, எனது வலியகல, வழிமீது விழி வைத்துக் காத்திருக்கிறேன், தோழர்களே! தவறாது வாருங்கள்!
மறைமலைநகரை நோக்கி வாரீர்!
செல்லுமிடங்கள் எல்லாம் கட்சிகளைக் கடந்தும்கூட திராவிடப் பெருமக்கள், பெரியாரின் வாழ்நாள் எளிய தொண்டன்மீது பொழியும் வற்றாத அன்பும், வாஞ்சையும் என்னை மேலும் தொண்டு செய்து, துவளாது நம் உரிமைப் போரை நடத்த, களங்களுக்குச் செல்ல, நமது இளைஞர் பட்டாளத்தையும், மகளிர் மற்றும் அனைத்து இயக்கத்தின் மாண்பைப் பரப்பும் பணியை மேலும் ஊக்கமூட்ட, உற்சாகம் பொங்கிய நிலையில், மறைமலைநகர் நோக்கி ஓடோடி வாருங்கள் தோழர்களே!
நானே அழைக்கிறேன் என்று எண்ணாதீர் –
நமது அறிவு ஆசான் அழைக்கிறார்!!
உலக மயமாகி வரும் நமது உன்னத உலகத் தலைவர் தந்தை பெரியார் அழைக்கிறார்!!
நமது பேட்டரிகளை ‘ரீசார்ஜ்’ செய்துகொள்ள வேண்டாமா?
தந்தை பெரியார்தம் கொள்கை எதிரிகளின் அழி முயற்சிகள் எவ்வளவு கூடினாலும், அவற்றை ஊதையில் துரும்புபோல் அழித்தொழிக்கும் உண்மைத் தொண்டர் கூட்டம் இவ்வளவா? அதுவும் மகளிரிலா என்று மலைக்க வையுங்கள்!
‘இவ்வளவுப் பெரிய திரளா’ என்று வியக்கவேண்டும்!
‘‘இந்த இயக்கம் பெரியாரோடு முடிந்துவிடும்’’ என்று நம் கொள்கை எதிரிகள் போட்ட கணக்கைப் பொய்யாக்கிட, இதோ நன்றி, பதவி, புகழ் நாடா, தேடாத தனித்தன்மை வாய்ந்த இளைஞர் கூட்டம், மாணவர் கூட்டம், பலதரப்பட்டவர்களும் இதில் இவ்வளவு பேர்களா? இத்தகைய மக்கள் பெருந்திரளா? என்று அவர்கள் மருண்டு போகின்ற அளவிற்கு அனைவருக்கும் ஒரே இலக்கு – மறைமலை நகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு – திராவிடர் கழக மாநில மாநாடு – அக்டோபர் 4 – நம் வாழ்வில் ஒரு திருநாள்!
‘‘பெரியார் உலக மயம்
உலகம் பெரியார் மயம்’’ என்ற சாதனைகள் தொடர, மாநாடு ஒரு பெரிய – அரிய திருப்பமாகும். பணித் தோழர்கள் என்னும் சிங்கக் குட்டிகளின் சிறப்புமிகு கூடல் களிப்புடனும், கடமையுடனும் வாருங்கள்! குடும்பத்துடன் வாருங்கள்!
வாருங்கள் தோழர்களே, தவறாது வாருங்கள்!
எதிர்நோக்கி அழைக்கும் உங்கள் தொண்டன் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள்.
தலைமை விருந்தினராகப் பங்கேற்று நிறைவுப் பேருரையை நிகழ்த்த இருப்பவரும் முதலமைச்சர்தான்! ஆம், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியை இந்தியாவே மூக்கின் மேல் விரலை வைத்து நோக்கும் வகையில் சாதனை வாகை சூடும் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்து அகிலத்தின் கண்களையே பார்க்க வைத்த கையோடு, நமது மாநாடுகளிலும் பங்கேற்று சுயமரியாதை இயக்கத்தின் திராவிடர் கழகத்தின் சித்தாந்தத்தை சீரிய முறையில் முரசு கொட்ட இருக்கிறார்.
மறைமலைநகர் எங்கிருக்கிறது என்று தெரியாத
வர்கள் எல்லாம் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.
ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் 1937 மற்றும் 1948களில் தந்தை பெரியாரோடு பங்கேற்ற பெருமகனார் மறைமலை அடிகள் ஆவார்.
மறைமலை அடிகளாரின் ‘அறிவுரைக் கொத்துகள்’ என்னும் நூலை சென்னைப் பல்கலைக்கழகம் தடை செய்தபோது, அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் ஆவார்.
அந்த வகையிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடும், திராவிடர் கழக மாநாடும் மறைமலை நகரில் நடைபெறுவது மிக மிகப் பொருத்தமே!
மாநாட்டுப் பணிகளில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மானமிகு வீ.பன்னீர் செல்வம் தலைமையில் முழு நேரப் பணிகளாக தோளின் மீது கை போட்டுக் கொண்டு அதே பணியில் மூழ்கி இருக்கிறார்கள்.
நமது மானமிகு ஆ.இராசா எம்.பி., (தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்) மாநாட்டுத் திறப்பாளர் – என்ன பொருத்தம்! என்ன பொருத்தம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் ‘உலகத் தலைவர் தந்தை பெரியார்’ (12ஆம் தொகுப்பு – இறுதியானது) நூலை வெளியிட்டு, அவருக்கே உரித்தான முறையில் ஆர்ப்பரித்து உரை நிகழ்த்துவார். பெரியார் விருது பெற்ற மானமிகு கனிமொழி கருணாநிதி பங்கேற்று உரையாற்றுகிறார்.
எப்பொழுதும் நமக்கு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் கண்காட்சியைத் திறந்து வைத்து உரை நிகழ்த்துவார். தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரைப் பெற்றுக்கொண்டு இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் தோழர் மு.வீரபாண்டியனின் உரை வீச்சு உண்டு.
படத்திறப்புகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியார் சமூகக் காப்பு அணியின் மரியாதையை ஏற்று, கழகக் கொடியைக் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உயர்த்துகிறார். மாலையில் மாபெரும் பேரணி உண்டு!
இடைவெளியில்லா முழுநாள் மாநாடு. கழகத் தோழர்களே, தமிழின உணர்வாளர்களே குடும்பம் குடும்பமாக தமிழ் மண்ணின் உணர்வை பாசிசக் கும்பலுக்கு உணர்த்திட, உறுத்திட வாரீர்! வாரீர்!! |


