Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆதிக்க வெறியின் உச்சம்

கே: .தி.மு..வின் தலைவர்கள் மீண்டும் இணைவதால் கட்சி வலுப்பெறுமா? இணைந்தாலும் இணக்கமாய்த் தொடர்ந்து நிலைப்பார்களா? பி.ஜே.பி.யிலிருந்து விலகுவதுதானே .தி.மு..விற்குப் பாதுகாப்பு, வலு?

– க.மணிமாறன், தஞ்சை

: இப்போது நடப்பது அ.தி.மு.க. இணைப்பு என்பதோ, முனைப்பு பிரிதல் என்பதோ எல்லாம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் “சித்து விளையாட்டே!” அ.தி.மு.க.வின் நலன் கருதி இவைகள் இல்லை.

மாறாக, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற தன்னலப் பாதுகாப்புக்காகவுமே!

இல்லையானால், “மோடியா? லேடியா?” என்று அந்த அம்மா சொன்னதை மறந்து, மோடி, அமித்ஷா ஆகியோரிடம் அக்கட்சியின் பல பிரிவுகளில் உள்ளவர்கள் ‘நின்னைச் சரணடைந்தோம்’ என்று வெட்கக்கேடான வகையில், “ஆளுக்கொரு வித்தை நாளுக்கொரு சந்திப்பு” – ஊடக வெளிச்சம். அரித்துவார் செல்வதாகக் கூறி, அமித்ஷாவிடம் செல்வதிலும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு செல்வாக்கை எண்ணி, ஒட்டு மொத்தத்தில் உங்கள் கையில் ஒப்படைக்கிறோம் என்ற பேரத்திலும் சில கட்சிகள் இருக்கின்றன.

எனவே, இந்தக் கேள்விக்குப் பதில் – உங்கள் நம்பிக்கைக்கு இவை, கைகொடுக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

கே: கிரகணத்தின்போது சாப்பிட்டுக் காட்டி மக்களை விழிப்பூட்டும் கழக நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் தொடருமா?

– ச.வெங்கடேசன், வேலூர்

: நிச்சயம் கழகத்தின் சார்பில், கழகத் தோழர்கள் சென்னையில் மட்டுமல்ல; பல ஊர்களில் இதனை நடத்தும் அளவுக்கு திட்டம் விரிவாக்கப்படும்.

கே: இடஒதுக்கீடே யாருக்கும் வேண்டாம். எனவே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் வேண்டாம் என்று பிரேமலதா (தே.மு.தி..) கூறுவதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

– வே.கண்மணி, செங்குன்றம்

: அபத்தமான அறியாமை கலந்தது இது! அப்படியானால், அவரது கட்சியின் பெயரையே மாற்றி, வெறும் தேசியத்தை மட்டுமே இருக்கச் செய்ய வேண்டியிருக்கும்.

இடஒதுக்கீடு, சமூகநீதி பற்றி சரியாகப் புரிந்துகொண்டால், அவரது அறியாமை அல்லது புரியாமை விலகும்.

கே: பி.ஜே.பி.யால் .தி.மு.. விழுங்கப்படாமல் இருக்கத் தாங்கள் கூறுவது என்ன?

– தி.கணேசன், மதுரை

: லேடி அம்மா சொன்னபடி மோடி பின்னால் செல்லாமல் தேடி, போய் “ஓநாய் வயிறே ஆட்டுக்குப் பாதுகாப்பான இடம்” என்று எண்ணி மாட்டிக் கொண்டதிலிருந்து வெளியே வந்தாலொழிய, இனி தப்ப முடியாது –  “வாதாபி ஜீர்ணோபவ” என்ற புராணக் கதைப்படி!

கே: பெண்கள் கல்லூரிப் படிப்பைத் தொடர அரசு நிதி உதவி செய்வதைக் குறைகூறி, தாலிக்குத் தங்கம் தரவேண்டும் என்பவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வ.சங்கமித்திரை, வந்தவாசி

: அறியாமை கலந்த வோட்டு வேட்டைத் தாகத்தின் விளைவு.

கே: சீனாவுடன் இந்தியா நட்புக் கொள்வது நம்பகத் தன்மைக்கு உகந்ததா?

– ம.கந்தசாமி, ஒசூர்

: அமெரிக்காவைவிட, இலங்கையைவிட ஆயிரம் மடங்கு நம்பத்தக்கது. ஒவ்வொரு  வீட்டிலும் Made in China பொருள் எங்கும் ஒளிர்கிறதே!

கே: ஆதிக்கத்திற்கு எதிராய் உருவாக்கப்பட்ட கம்யூனிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் ரஷ்யாவும், சீனாவும் ஆதிக்க வெறியின் உச்சியில் நின்று செயல்படுவது ஏற்புடையதா?

– மு.முகுந்தன், குடந்தை

: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே! ‘ஆதிக்கவெறி’, ‘உச்சி’ என்றே அதற்குப் பதில் கூறியுள்ளீர்கள்.

கே: வன்முறையின் உச்சத்தில் மணிப்பூர் இருந்தபோது அங்குச் செல்லாத பிரதமர் மோடி இப்போது செல்வது எதற்கு?

– த.கனிமொழி, காஞ்சி

: மக்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் செல்லவில்லை. வேறு நிகழ்வுக்காகத்தான் செல்கிறார்.