எதிர்க்கச் சொன்னார் தலைவர் பெரியார்!
எதிர்த்து வென்றார் தொண்டர் எம்.ஆர்.ராதா!
திராவிடர் கழகம் என்பது ஓர் எதிர்ப்புணர்வு இயக்கம். அதன் வேலைத்திட்டமானது:
ஹிந்து சமுதாயத் துறையில்:
பார்ப்பன எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு, மூடநம் பிக்கை எதிர்ப்பு, சாஸ்திர புராண,இதிகாச எதிர்ப்பு, ஜோசியம், சகுனம், சடங்கு,யாகம் எதிர்ப்பு.
மதத் துறையில்: கடவுள்கள் எதிர்ப்பு, கோவில், பூசை, உற்சவங்கள் எதிர்ப்பு, ஆன்மா, மேல் உலகம் எதிர்ப்பு, மோட்சம்-நரகம் எதிர்ப்பு.
அரசியல் துறையில்: காங்கிரஸ் எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, மத்திய அரசாங்க எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு.
கல்வி-கலை-இலக்கியத் துறையில்: ஆரிய கலாச்சார, அனுஷ்டான, வர்ணஸ்ரம, மதக் கருத்துகளைப் புகுத்தும் கல்வி – கலை இலக்கியம் எதிர்ப்பு.
பொருளாதாரத் துறையில்: சுரண்டப்படுதல், குவிக்கப்படுதல் எதிர்ப்பு.
இந்தத் தன்மைகள் கொண்டதுதான் திராவிடர் கழகம். இந்த உணர்ச்சி கொண்ட வேறு எந்த ஸ்தாபனங்களுடனும் கழகம் ஒத்துழைக்கும். மேலும் கழகம் எதிர்ப்பில்தான் உற்சாகமுள்ளதாக இருக்குமே தவிர ஆதரிப்பை அவ்வளவாக விரும்பாது. என்று 1952 ஆம் ஆண்டு அறிவித்தார் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.
சமூகநீதிக்காக காங்கிரஸை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் கண்ட நம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், மக்களுக்கு பின்னால் சென்று இயக்கம் நடத்தாமல், தனக்கு பின்னால் மக்களை அணிதிரட்டி, தன் புரட்சிக் கருத்துகளால் மக்களை அறிவு விடுதலை அடையச் செய்த மாபெரும் தலைவர் ஆவார். இன்றைக்கும் ஒன்றிய பாஜக பாசிச அரசாங்கத்தின் வல்லாதித்க போக்கை திராவிடர் கழகம் எதிர்த்து நின்று போரிட்டு வருகிறது என்றால், எதையும் எதிர்த்து போரிடும் கருவிகளை கையளித்துச் சென்றுள்ள நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு வரும் 2025 செப்டம்பர் 17 அன்று 147 ஆம் பிறந்த ஆண்டு.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் திறந்து வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலக மக்களால் போற்றப்படுகிறார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளில், சுயமரியாதை இயக்கத்தின் வீரத்தளபதியாக, நடிப்புத்துறையிலும், பொது வாழ்விலும் எதற்கும் அஞ்சாத வெற்றி வீரராகத் திகழ்ந்த பெரியாரின் முனை மழுங்காத போர்வாள்
எம்.ஆர்.இராதா மறைந்தது தந்தை பெரியார் 100 ஆம் ஆண்டு பிறந்த நாளில்.
கலைஞர்களுக்கு தந்தை பெரியார் தன் அறிவுரையில், “வடமொழி சாஸ்திர புராண இதிகாசங்கள் (தமிழர்களாலேயே ஆனவைகளானாலும்) அவை எந்த ரூபத்தில் நுழைக்கப்பட்டு இருந்தாலும், அல்லது தானாகவே நுழைந்து இருந்தாலும் அவை அடியோடு ஒழிக்கப்பட்டால் ஒழிய, தமிழன் மனித உரிமையோடும் மானத்தோடும் வாழ்ந்து சமநிலை அடைய முடியவே முடியாது என்பதை உணருங்கள்.
மற்றும், அவை வடமொழியில் இருப்பதை விட தமிழில் இருப்பவைகளே நமக்கு மிகுதியும் கேடு செய்யக்கூடியவையாகும். அன்றியும் அவை வெறும் கதை, காவியம், புராணம் ஆகிய உருவில் இருப்பவைகளை விட கலை உருவில் இருப்பதும்; இலக்கியம் நாடகம், சங்கீதம் ஆகியவற்றின் உருவில் இருப்பதும் மிக மிகக் கேடு செய்பவையாகும் என்பதே எனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டிய முடிந்த முடிவாகும்.
எப்படியாவது அந்தப் புராண, இதிகாச, தேவாரப் பிரபந்தம் ஆகியவை கூறும் ராமன், கிருஷ்ணன், சிவன், சுப்ரமணியன் சண்முகன், காளி, கவுரி முதலிய கடவுள்களையும் அவர்களைப் பற்றிய கலை, இலக்கியம், நாடகம் சினிமா, சங்கீதம், பஜனை பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன்மையும் ஆன கடமையாகும் என்று உறுதி கொள்ளுங்கள்.
இந்தக் காரியங்களில் சமய, புராண, இதிகாசப் பண்டிதர்களையும், சமயாச்சாரிகளையும், கலைவாணர்களையும் துச்சமாகக் கருதுங்கள்.
உங்கள் மனோவேகம் கொண்ட மட்டும் அவர்களை வெறுத்துத் தள்ளுங்கள். இவர்களை ஆரியர்களைவிட மோசமான உங்கள் விரோதிகளாகக் கருதுங்கள்” என்றார் தந்தை பெரியார். – (குடி அரசு தலையங்கம் – 29.1.1944.)
தந்தை பெரியார் அவர்கள் கலைவாணர்கள் எப்படி நடந்த கொள்ள வேண்டுமென விரும்பினாரோ – அறிவித்தாரோ அதனை அச்சுப் பிசகாமல் அப்படியே நடைமுறைப்படுத்திக் காட்டியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள்.
‘திராவிட நாடக சபா’ என தனது நாடக நிறுவனத்துக்குப் பெயர் சூட்டிய நடிகவேள் அவர்கள் திராவிடப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் எனும் வாசகத்தைத் திரையில் பொறித்திருந்தார் என்றால், பெரியாரின் கொள்கை மீதான எம்.ஆர்.ராதாவின் மதிப்பீட்டை நாம் புரிந்துகொள்ளலாம்.
தனது நாடகங்களில் இராமாயணக் கதாபாத்திரங்களை எள்ளி நகையாடினார். இதனால், எங்கள் இந்துக்கள் மனம் புண்படுகிறது என புராணிகர்கள் கொக்கரித்தபோது, மனம் புண்படுவோர் என் நாடகத்துக்கு வரவேண்டாம். உங்கள் பணமும் வேண்டாம் என அறிவித்தவர். புரட்சிகரமான நாடகங்களைத் தடைசெய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் நாடகம் நடத்த முடியாது என்றும் கூச்சலிட்ட பிற்போக்காளர்களை, நாடகக்கொட்டகையின் வெளிப்புறத்தில் மின்சாரம் பாய்ச்சி எதிரிகளை அலறவிட்ட புரட்சி வீரர்!
விமலா அல்லது விதவையின் கண்ணீர், போர்வாள், இராமாயணம் போன்ற பல நாடகங்களிலும், 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பெரியாரின் குரலாக ஒலித்தவர் நடிகவேள்.
பெரியாரின் முனைமழுங்காத போர் வாளாக நடிகவேள் விளங்கியதால்தான் 1963 ஆம் ஆண்டு நடிகவேள் பெயரில் பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தை தந்தை பெரியார் திறந்துவைத்தார்.
இந்த மன்றத்திற்கு ஏன் ராதாவின் பெயரை வைத்தேன் தெரியுமா? இந்நாட்டுக்கு, பெரிய கேட்டைக் கொண்டு வந்த அநேக சாதனங்களில், மிக முக்கியமானது சினிமா. அதில், இதுவரைக்கும் முட்டாள்தனமான நடிகர்களே தோன்றினர். ஆனால், அத்துறையில், தன் நடிப்புக் கலையை மாற்றி, மனிதன் சிந்திக்கும்படியான கருத்துகளைச் சொல்லி வருபவர் ராதா. மடையர்கள் அதைச் சொல்லவில்லை; ராதாதான் சொல்லி வருகிறார். சுயமரியாதைக் கருத்துகளை எடுத்துச் சொன்னதால் ராதா ஒழிந்து விடவில்லை; வாழ முடியாமல் போனதுமில்லை. ராதாவைப் போல் மற்றவர்களுக்கும் புத்தி வரட்டும்…’ என்று கூறினார்.
1979 ஆம் ஆண்டு வெளிவந்த பஞ்சாமிர்தம் திரைப்படம்தான் அவரது கடைசிப்படமாக அமைந்தது. நாடகம், சினிமா, அரசியல், கொள்கைப் பரப்புரை என்று துடிப்புடன் இயங்கிய நடிகவேள்
எம்.ஆர்.ராதாவுக்கு உடல்நலம் குன்றி, மஞ்சள் காமாலை நோயும் தாக்கவே உடல்நிலை மிகவும் மோசமானது. பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதா, பெரியாரின் 100ஆம் ஆண்டு பிறந்த நாளான 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அழியாப் புகழுடன் முடிவெய்தினார்.
பெரியார் புகழ் நிலைத்திருக்கும் வரை நடிகவேளும் வாழ்வார். திராவிடப் பெருங்குடிகளே ஒன்று சேர்வோம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் கொள்கைகளை வென்றெடுக்க! w





