| ந |
ூலகம் என்றால் நம் கண்களுக்கு முன்னால் வரிசை வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் நூல்கள்தாம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இன்றைய உலகம் கருத்துப் பரிமாற்றத்திற்கு எழுத்து அல்லது நேருக்கு நேராகப் பேசுவது என்பதை மட்டும் நம்பி இருக்கவில்லை. ஒரு நூலை ஒருவர் வாசிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை அல்லது ஒரு நூல் ஒருவரிடம் சென்று சேரும் காலத்தைக் கணக்கிடும்போது, ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் சில காணொளிகள் பல இலட்சம் பேரிடம் சென்று சேர்ந்து விடுகின்றன. ஒருவர் முக நூலில் அல்லது டுவிட்டரில் பதிவு செய்யும் ஒரு கருத்து காட்டுத்தீ போல உலகம் முழுவதும் ஒரு சில நாட்களில் சென்று சேர்ந்து விடுகிறது. அவ்வாறு சேர்ந்த கருத்தை ஒரு நூலகத்தில் நூலினை எடுப்பதுபோல எடுக்க இயலுமா? எடுத்துப் பயன்படுத்த இயலுமா? இதற்கான விடையாகப் பல்லூடக நூலகம் என்பது அமைகிறது.
பல்லூடக நூலகம் என்பது பல ஊடகங்கள் வழியாகக் காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள், ஒளி-ஒலி, காணொலி போன்றவற்றை எல்லாம். வடிவில் சேகரித்து நமக்குத் தேவைப்படும்போது மின்னணு (டிஜிட்டல்) வடிவில் நமக்குக் கிடைக்குமாறு செய்யும் நூலகம் ஆகும். பல்லூடக நூலகத்தில் அச்சு நூலும் மின்னணு வடிவில் கிடைக்கும், அது தவிர டெக்ஸ்ட், டேட்டா, இமேஜ், போட்டோகிராப், அனிமேசன், ஆடியோ, வீடியோ எனப் பலவும் நமக்குக் கிடைக்கும்.
சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் பெரியார்விசன் என்னும் ஊடகத்தளம் ஒரு பல்லூடக நூலகமாகும். ஏன் பெரியார் விஷன் என்னும் கேள்வியைக் கேட்டு, அதற்கு விடை அந்தத் தளத்திலேயே உள்ளது. “பெரியாரின் கொள்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இந்தப் பெரியார் விஷன் என்னும் ஓடிடி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அவரது இலட்சியங்களை வெளிப்படுத்த இது பயன்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரும் தந்தை பெரியார் குறித்த மின்னணு வடிவங்கள் எல்லாம் இந்தத் தளத்தில் சேகரிக்கப்படுகின்றன. எனவே, இது மின்னணு நூலகமாக பல்லூடக நூலகமாகத் திகழ்கிறது.
பெரியார் விஷன் பல்லூடக நூலகத்தில் பெரியார் இயலைச் சொல்லும் பல குறும்படங்கள் இருக்கின்றன. அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற சிறுகதை செவ்வாழை. அது குறும்படமாக எடுக்கப்பட்டுப் பெரியார் விஷனில் உள்ளது. அதைப்போல என்ன கூந்தலுக்கு, கீ…கீ, மறைபொருள், துளி, மீசை, பேரன், நிஜம், அவள், செவ்ளி, வர்ணம், நடந்த கதை, திற, புனிதம் போன்ற பல தலைப்புகளில் குறும்படங்கள் இருக்கின்றன். ஊடகங்களில் தந்தை பெரியார், பார்ப்பனியம், வைக்கம் 100, அண்ணல் அம்பேத்கர் போன்ற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆளுமைகள் பேசிய உரைகள் எல்லாம் இந்தப் பெரியார் விஷனில் இருக்கின்றன. அதைப்போல ‘ஆசிரியர் கி.வீரமணி’ என்னும் தலைப்பில் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை எல்லாம் பதிவு செய்யப்பட்டு இந்தப் பெரியார் விஷன் பல்லூடக நூலகத்தில் இருக்கின்றன.பல தலைவர்களின் உரைகள், நேர்காணல்கள், நாள் தோறும் விடுதலையில் வெளிவரும் முக்கியமான செய்திகளைச் சொல்லும்; விடுதலைப் பார்வை’, என்று பல மின்னணு வடிவங்கள் இந்தப் பெரியார் விஷன் என்னும் பல்லூடக நூலகத்தில் இருக்கின்றன. தந்தை பெரியார் பற்றிய பாடல்கள் எல்லாம் மின்னணு வடிவில் பெரியார் விஷனில் இருக்கின்றன.
பல்லூடக நூலகம் என்பது பல நிறுவனங்கள், இயக்கங்களால் இன்று பயன்படுத்தும் வடிவமாகும். 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் சிங்கள வெறியர்களால் யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டது. பல்லாண்டுகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த நூல்கள் எல்லாம் இனவெறியர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டுகளில், எரிக்கப்படாத ஒரு நூலகம் வேண்டும் என்று எண்ணிய ஈழத்தமிழர்கள் நூலகம். மீடியா (noolagam. media) என்னும் பல்லூடக நூலகத்தை நிறுவி, பாதுகாத்து வருகிறார்கள். இந்த நூலகம் ஒரு அறக்கட்டளையால் பரமாரிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இருக்கும் ஈழத்தமிழர்கள் இந்தப் பல்லூடக நூலகத்திற்குத் தங்கள் பங்களிப்பைத் தருகிறார்கள். தான் பாதுகாத்து வைத்திருக்கும் நூல்களை ஒரு நூலகத்திற்கு அன்பளிப்பாக அளிப்பதுபோல, தங்களிடம் உள்ள மின்னணு வடிவத்தில் உள்ள காணொலிகள் போன்றவற்றை இந்தப் பல்லூடக நூலகத்திற்கு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சியாக வளர்ந்தோங்கி நிற்கிறது..
இந்த நூலகம் மீடியா (noolagam media) என்னும் பல்லூடக நூலகத்தில் ஒலிச்சேகரம், ஒலி நூல்கள், குறுங்கால ஆவணங்கள், எண்ணிம எழுத்தாவணங்கள், ஓவியங்கள் சேகரம், மேற்கோள்கள், தனி நபர் சேகரங்கள், காணொலிகள் சேகரம், படங்கள் சேகரம், செய்திக் கட்டுரைகள், வாய்மொழி வரலாறுகள், கட்டுரைப் பட்டியல், தமிழ் நிகழ்த்துகைகள், கையெழுத்து ஆவணங்கள், கல்வி வளங்கள், ஊர்கள் சேகரம், ஆய்வுப்பொருட்கள் சேகரம், நிறுவனங்கள் சேகரம், நூற்பட்டியல் எனப் பட்டியலிட்டு இந்தப் பல்லூடக நூலகத்தை அமைத்துள்ளனர்,
இந்தப் பல்லூடக நூலகத்தில் ஒலிச்சேகரம் என்னும் தலைப்பின் கீழ் பல்வேறு ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் பேசிய பேச்சுகள் எல்லாம் தொகுக்கப்பட்டு, பகுக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. சிறுகதைகள் பற்றிப் பேசப்பட்ட பேச்சுகள் எல்லாம் தொகுக்கப்பட்டு, சிறுகதைகள் என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் சென்றால் ‘புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் சிறுகதைகள்; போர்க்காலச் சூழலைப் பிரதிபலிக்கும் சிறுகதைத் தொகுதிகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படி ஒலிச்சேகரம் என்னும் தலைப்பின் கீழ் ஒலிப்பதிவு 1970 பதிவுகள், ஒலிப்பாடல்கள் 297 பதிவுகள், வானொலி நிகழ்ச்சி 70 பதிவுகள் எனத் தொகுக்கப்பட்டுள்ளன..
அதைப்போல ஒலி நூல்கள் என்னும் தலைப்பில் 1129 பதிவுகள் இருக்கின்றன.இவை எல்லாமே அச்சு நூல்களாக இருப்பவை வாசிக்கப்பட்டு, ஒலி நூல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கு ஆடியோ புக் எனப்படும் ஒலி நூல்களின் பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டு வருகிறது. இந்த ஒலி நூல்கள் பாட நூல்கள், தமிழ்ச்சிறுகதைகள், கட்டுரை, ஆசிரியர் வழிகாட்டி, கடந்தகால வினாத்தாள், நாடகம், பாடல் எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதை ஆக்கியவர்கள் என்னும் தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மீடியா என்னும் பல்லூடக நூலகத்திலும் ஒலி நூல்கள் ஆக்கியவர்களின் பெயர்கள் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பல்லூடக நூலகத்திற்குள் சென்று, ஒலி நூல்கள் பகுதிக்குள் சென்று, சிறுகதைப் பிரிவுக்குள் சென்று அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்புகளை மட்டும் நம்மால் பிரித்து எடுத்து ஒலி நூலாக நம்மால் கேட்க இயலும்..
இப்படி மின்னணு வடிவங்களில் இருக்கும் சேகரிப்புகளை எல்லாம் இணைத்து ஆக்கப்படும் பல்லூடக நூலகம் என்பது இன்றைய நவீன அறிவியல் நமக்குக் கொடுத்திருக்கும் கொடை. அதனைப் பற்றி இன்னும் விரிவாக அறிந்துகொள்ளப் பல்லூடக நூலகம் என்னும் தலைப்பிற்குள் சென்று இணையத்தில் தேடிப் படிக்கலாம்.பெரியார் விசன் போன்ற பல்லூடக நூலகத்தைப் பரப்பவும், பலபேருக்குப் பகிரவும் நாம் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதன் மூலம் தந்தை பெரியாரின் கருத்துகளை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரைகளைப் பல்லாயிரம் பேரிடம் கொண்டு சேர்க்க நாமும் ஆற்றில் ஓடும் நீரின் ஒரு துளியாய் இணையலாம்.
உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள். w





