கடந்த இதழ் தொடர்ச்சி…
கிரகங்களின் இயக்கத்திற்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது என்றால், கிரகங்கள் ஒரே மாதிரியாகக் காலங்காலமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது, மனித வாழ்வும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், மனித வாழ்வு காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறதே!
சமைத்துண்ணத் தெரியாது, விலங்கு போல மனிதன் வாழ்ந்த காலத்தில் எப்படிக் கிரகங்கள் இயங்கினவோ அப்படியே இன்றைக்கும் இயங்குகின்றன. ஆனால் மனிதன் அப்படியா வாழ்கிறான்?
எத்தனையோ மாற்றம்! எத்தனையோ புதுமை! எத்தனையோ புரட்சி! ஏன், அந்தக் கிரகங்களுக்கே கூட மனிதன் செல்கிறான்!
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் சம்பந்தமே இல்லை.’
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அதற்குக் கிரக இயக்கம் காரணம் என்றால், அந்த நேரத்தில் பிறந்த அத்தனை பேருமா கொலை செய்கிறார்கள்?
அதேபோல், ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்றால், கொலையுண்டவர் பிறந்த நேரத்தில் பிறந்த அனைவரும் கொலை செய்யப்படுவதில்லையே?
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அவன் ஜாதகத்தில், இவன் இன்னாரை, இன்ன நாளில் கொலை செய்வான் என்று இருக்கிறதா?
இன்னாரால் இவன் இன்ன நாளில் கொலை செய்யப்படுவான் என்று கொலை செய்யப்பட்டவனின் ஜாதகத்தில் அமைப்பு இருக்குமா?
இன்னாரால் கொலை செய்யப்படுவோம் என்று தன் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அவனிடமிருந்து இவன் தப்பிக்க முடியுமா?
அப்படித் தப்பிக்க முடியுமென்றால், அந்தக் கிரகத்தின்படி கொலை நிகழாமல் எப்படியிருக்க முடியும்? கொலை நிகழாமல் தவிர்த்து விட்டால் ஜாதகம் பொய்யென்று ஆகிவிடாதா?
ஒருவன் பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்று ஜோதிட அமைப்பு இருந்தால், ஆயிரம் பாதுகாப்பு இருந்தாலும் அவன் பாம்புக்கடியிலிருந்து தப்ப முடியுமா?
தப்ப முடியாது எனில், ஜோதிடப்படிதான் நடக்கும் எனில், நாம் ஏன் வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பாதுகாப்பாக வாழ ஏன் முயற்சிக்க வேண்டும்?
நம்மால் எதையும் மாற்றியமைக்க முடியாது எனில், ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?
சுருங்கச் சொன்னால், பிறக்கின்றபோது உள்ள கிரக நிலைப்படி வாழ்க்கை அமைகிறது என்றால், உலகில் ஒரேமாதிரியான வாழ்வமைப்புக் கொண்ட பலர் இருக்க வேண்டும். அவ்வாறு யாரும் இருப்பதில்லையே!
எனவே, கிரக நிலையை வைத்துக் கணிக்கப்படுகின்ற ஜோதிடம் தவறானது. அது மட்டுமல்ல; ஜோதிட நம்பிக்கையும் கடவுள் பிரார்த்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நம்பிக்கைகள். ஜோதிடப்படிதான் வாழ்வு என்றால், பிரார்த்தனையால் எப்படி மாற்ற முடியும்? பின் ஏன் கடவுள் வழிபாடு? கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால் கடவுளுக்கு என்ன வேலை? ஜோதிடத்தை நம்புகின்றவர்கள் கடவுளை நம்பக் கூடாது.
பரிகாரம் மோசடியல்லவா?
கிரக நிலைக்கு ஏற்ப வாழ்வு அமைகிறது என்று சொல்லிவிட்டு, பின் பரிகாரங்கள் கூறுவது மோசடியல்லவா? பரிகாரம் செய்தால் கிரக அமைப்பு எப்படி மாறும்? சிந்திக்க வேண்டாமா?
நாடி ஜோதிடம்
ஜோதிட மோசடியின் உச்சக்கட்டம் நாடி ஜோதிடம்! ஓலைச் சுவடியில் ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பும் எழுதி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றுள் பொருத்தமானதைத் தேடியெடுத்து, படித்துக் காட்டி ஜோதிடம் சொல்வது நாடி ஜோதிட முறையாகும்.
இதில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கவுசிகர் நாடி, சிவசிந்தாமணி, புஜண்டர் மகாவாக்கியம், கன்ம காண்டம், சப்தரிஷி நாடி, அநாகத வேதம் என்ற பல பிரிவுகள் உண்டு.
நாடி ஜோதிடத்தில் படித்துக் கூறப்படும் ஓலைச் சுவடிகளில், ஒரு ஜாதகனுடைய பெயர் மற்றும் அவனது தாய் தந்தையர் பெயர்கள் கூறப்படும்போது, சரியாக இன்ன பெயர் என்று சொல்லப்படாமல், பொதுவாகவும், குறிப்பால் உணர்த்தும் படியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.
நாடி ஜோதிடத்தின் அடிப்படைத் தந்திரமே இதுதான். எப்படி ‘மந்திர வித்தை’ காட்டுகிறவன் எந்தவொன்றையும் மறைத்துச் செய்கிறானோ அதேபோல், இதில் உண்மைப் பெயர் வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாகச் சொல்லப்படுவதால், யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தச் செய்யலாம்.
மறைத்து அல்லது மறைமுகமாகச் செய்யப்படுகிற அல்லது சொல்லப்படுகிற எந்தவொன்றிலும் சூழ்ச்சியுள்ளது; ஏமாற்று உள்ளது என்பதுதான் பொருள்.
நாடிசாஸ்திரம் குறித்துக் கண்ணதாசன் தனது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
நாகர்கோயிலில் ஸ்ரீ ஆறுமுக நாவலருடைய நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய பெயரை ‘அய்ந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி’ என்று கண்டிருந்தது.
அய்ந்து + ஒன்று = ஆறு; வதனம் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.
ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறித்துவ அன்பருக்கு, சாவில் ஆறும், சாவில் ஒன்பதும் இவன் தன் நாமம் என்று கண்டிருந்தது.
‘சா’ என்ற எழுத்து வரிசையில் ஆறாவது எழுத்து ‘சூ’ ஒன்பதாவது எழுத்து ‘சை’ அவரது தந்தையிட்ட பெயர் ‘சூசை’ என்பதாகும். ஆண்டவன் இட்ட பெயரும் சூசையாகும்.
ஓர் ஹிந்துவைப் போல் மாறுவேஷம் போட்டுக்கொண்டு சென்ற மதுரையைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு ‘அப்துல் ரஹ்மான்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
ஓர் ஆங்கிலேயர் பார்த்த பொழுது முழத்தில் பாதி இவர்தன் நாமம் என்றிருந்தது. அவரது பெயர் ஜான் என்பதாகும்.
கோவையில் கவுமார மடத்தை நிறுவிய தலைவருக்கு ‘இராமக்குட்டி’ என்றும் பின் துறவு பூண்டு ‘இராமானந்தர்’ ஆவார் என்றும் கண்டிருந்தது”.
(அர்த்தமுள்ள இந்துமதம், பாகம் – 1, பக்கம் – 120)
மேலே கூறப்பட்டவை, மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டவையாகும்.
நல்லவேளை… மதுரை ஆதீனகர்த்தர் நாடி ஜோதிடம் பார்க்கப் போகவில்லை. போயிருந்தால் நாடி ஜோதிடன் தவித்துப் போயிருப்பான்.
“ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்” என்ற இவ்வளவு நீட்டுப் பெயருக்கு எப்படிச் சமாளிப்பது? ஏகப்பட்ட ‘கப்சாக்கள்’ அல்லவா அடிக்க வேண்டு!
கோவை கவுமார மடத்தின் நிறுவனர் இராமக்குட்டிக்கு பிற்காலத்தில் பெயர் ‘இராமானந்தர்’ என்று மாறும் என்று நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்.
அப்படியென்றால், நம்ம ஜெயலலிதா நாடி ஜோதிடம் பார்க்கப் போனால், புரட்சித் தலைவி, புரட்சித் தாய், தமிழ்த்தாய், காவிரித்தாய், தெய்வத்தாய், அன்னைமேரி, கன்னிமேரி, இதயத்தாய், காவல்தாய், சமூக நீதிகாத்த வீராங்கனை…, என்றெல்லாம் பெயர் சூட்டப்படுவார் என்று நாடி ஏட்டில் கண்டிருக்குமா?
இன்றைக்கு அப்பன், ஆத்தாள் பெயர்கள் தெரியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்களே அவர்களை நாடி ஜோதிடக்காரனிடம் அழைத்துச் சென்று அப்பா பெயர், ஆத்தாள் பெயர், ஊர்ப் பெயர் கேட்டால் சொல்வானா?
பெயர் என்ன என்று கேட்டால், நேரடியாக ஜான் என்று சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து ‘முழத்தில் பாதி’ என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
‘ஜான்’ என்பது இரண்டெழுத்து ‘முழத்தில் பாதி’ என்பது ஏழு எழுத்து, எப்படிச் சொல்வது சுருக்கம்?
மூக்கு என்று சொல்வதை விட்டுவிட்டு நெத்திக்குக் கீழே கண்களுக்கு நடுவே, உதட்டுக்கு மேலே உள்ள உறுப்பு என்றால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இது!
அதுமட்டுமல்ல, முழத்தில் பாதி என்றால் ஜாண்; ‘ஜான்’ என்பதற்கு ‘ன்’ இரண்டு சுழி. ஆனால் ஜாண் என்பதற்கு ‘ண்’ மூன்று சுழி.
நாடி சாஸ்திரமெல்லாம் பரமசிவன் பார்வதிக்குச் சொன்னது என்று கூறப்படுகிறபோது பிழைபடச் சொல்லியிருப்பார்களா?
பீட்டர், மேரி, இன்குலாப், அய்சக், உட்ஸ் என்ற பெயரெல்லாம் நாடி சாஸ்திரத்தில் இருக்கிறதா?
அய்ந்தும் ஒன்று வதனமெனப் பெயர் சூட்டி என்றால், அய்ந்து + ஒன்று = ஆறு என்று மட்டுந்தான் பொருள்கொள்ள முடியுமா? 51 என்று பொருள்கொள்ள முடியாதா?
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு அய்ந்தும் ஒன்றிய (ஒன்று சேர்ந்த) வதனம் அதாவது அய்ந்து முகம் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது? அய்ந்து முகம் உடைய சிவபெருமான் பெயராக ஏன் இருக்கக்கூடாது? சிவனுக்கு அய்ந்து முகம் என்பது புராணம்.
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு ஆறுமுகம் என்று மட்டுந்தான் அர்த்தமா? சண்முகம் என்று பொருள் இல்லையா? சண்முகம் என்பதன் பொருள் ஆறுமுகந்தானே?
அதாவது பலருக்கும் பொருந்தும்படித் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவை நாடி சாஸ்திர ஏடுகள் என்பது இதிலிருந்து விளங்குகிறது அல்லவா?
எந்த நாடி ஜோதிடனும் உடனே ஏடு கொடுப்பதில்லை. தேடி எடுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவான். கால அவகாசம் எடுப்பான். காரணம், அதற்குள் பழைய ஓலைகள் தயார் செய்துகொள்ள.
இந்துவைப் போல மாறுவேடத்தில் சென்ற முஸ்லிம் பெயர் அப்துல் ரஹ்மான் என்று இருந்ததாம். இந்தப் பெயர் மட்டும் எப்படி ஓலையில் நேரடியாக எழுதப்பட்டிருந்தது? ‘ஜான்’ என்ற பெயருக்கு ‘முழத்தில் பாதி’ என்று இருந்தது போல், இதற்கும் மீட்டர், கெஜக்கோல் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டாமா?
அப்துல் ரஹ்மான் என்ற நீண்ட பெயரே நேரடியாக நாடி ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் போது ‘சூசை’ என்ற சுருக்கமான பெயர் நேரடியாக எழுதப்பட்டிருக்கலாமே? அதைவிட்டு, சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் என்று ஏன் வளர்த்தலாக, மறைமுகமாகச் சொல்லப்பட வேண்டும்? சூசை என்பது தமிழ் வார்த்தை அல்ல. அப்படியிருக்க தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை எப்படிப் பொருந்தும்?
எல்லாம் மோசடிக்காகத்தான் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
“புயலாடு புலவன் சரலில் பூமகன் மதிகோலாக
வெயில் மகன் போகி நண்டில், வேதியன் தேள் மீதாக
செயுமிக்கோள் நிலையில் தோற்றும் சேயாறார்க்குரிர் சியத்தே
பயன்தரு மிவனின் ஜென்மம், பாண்டியன்
நாட்டுக் குள்ளே”.
அதாவது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக நிலையில் பிறக்கின்றவன் பாண்டியன் நாட்டுக்குள்ளே பிறப்பான் என்பதாகும்.
(ஆதாரம்: வேலு அவர்கள் எழுதிய ‘கவுமார ஜோதிடப் புரட்டு’ என்னும் கட்டுரை)
சேர, சோழ, பாண்டிய நாடு என்னும் பிரிவு இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவாகும். ஆனால், நாடி ஜோதிடமோ ஆதிநாளில் இறைவனால் கூறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகள் ஏற்படாத காலத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பாண்டிய, சோழ, சேர நாட்டுப் பிரிவுகள் தோன்றாத அந்தக் காலத்தில் பாண்டிய நாடு என்ற பிரிவு எப்படி நாடி ஜோதிடத்தில் இடம்பெற்றிருக்க முடியும்?
இந்த நாடி ஜோதிடப் பாடல் பாண்டிய நாடு நடைமுறையில் இருந்த காலத்தில் எழுதப்பட்டது. அதனால்தான் அதற்கு முந்திய காலத்திற்கும் பிந்தைய காலத்திற்கும் பொருந்தவில்லை.
எனவே, நாடி ஜோதிடப் பாடல்கள் இறைவனால் எழுதப்பட்டவை அல்ல என்பதும், அது காலத்திற்கு ஏற்ப மோசடிப் பேர்வழிகளால் எழுதிக் கொள்ளப்படுவது என்பதும் தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல, தன்னுடைய மனைவி பார்வதியைப் பிரம்மா அனுபவிக்க வருவான் என்பதையே அறிய முடியாத பரமசிவன் நம்முடைய வாழ்வைப் பற்றிக் கூறும் நாடி சாஸ்திர ஏட்டை முன்னமே அறிந்து எப்படி எழுதியிருக்க முடியும்?
கண்ணதாசன் தனது “அர்த்தமுள்ள இந்துமதம்” நூலில்,
“சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாடி சாஸ்திரத்தில் பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பது தெரியக்கூடும்.
உதாரணமாக, எகிப்து தேசத்தில் முற்பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே இன்று திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கம்பட்டி ஜமீன்தாராகப் பிறந்திருக்கிறார் என்று ‘அநாகத வேதம்’ என்ற நாடி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
அதில், முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப்பிடப் பெற்று, அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரண குணமாகி விட்டதாம்” என்று கூறியுள்ளார்.
(அர்த்தமுள்ள இந்துமதம், பாகம் – 1, பக்கம் – 122)
இவ்வளவு தூரம் எழுதும் கண்ணதாசன், தான் போன பிறவியில் யாராக இருந்தார் என்று நாடி சாஸ்திரத்தைத் தேடியெடுத்துச் சொல்லியிருக்கலாம்.
அதுமட்டுமல்ல, தனக்கு எல்லா நோய்களும் இருப்பதாகக் கூறும் அவர், தன் நோய்களுக்கு மருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டே ஒரு டாக்டரைவிட அதிக அளவிற்குத் தனக்கு மருந்து தெரியும் என்கிறார்.
உண்மையிலேயே அவருக்கு நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால், தனக்குரிய நாடி ஜோதிடத்தைத் தேடியெடுத்து, தன் ஜென்மத் தீவினையையும், அதைப் போக்குவதற்குரிய பரிகாரத்தையும் அறிந்து, பரிகாரம் செய்து பூரண குணம் அடைந்திருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை? அர்த்தமுள்ள உபதேசம் எல்லாம் ஊரை ஏமாற்றவா?
நாடி ஜோதிடம் பார்க்கிற ஜோதிடர்கள் எல்லாம், ஓலைச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருப்பதாயும், அங்கிருந்து பெறப்படுவதாகவும் கூறிவந்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இது உண்மையா என்று கேட்டபோது அப்படி எந்தச் சுவடிகளும் அங்கு இல்லை என்று அந்த நூலகத்தைச் சேர்ந்த அலுவலர் பதில் தெரிவித்துள்ளார். எனவே, நாடி ஜோதிடம் மோசடி ஜோதிடம் என்பதில் அய்யமில்லை.
(தொடரும்)





