சாவர்க்கர்
“பாரதத்தின் புதிய அரசியல் அமைப்பில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், அதில் பாரதிய தேசம் என்று எதுவுமில்லை. மனுஸ்மிருதி என்பது நமது ஹிந்து தேசத்தின் வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கக்கூடிய வேதமாகும். இது பண்டைய காலங்களில் இருந்து நமது கலாச்சாரம், வழக்கங்கள் சிந்தனைகளின் அடிப்படையாக மாறி உள்ளது. இந்தப் புத்தகம் பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மிக மற்றும் தெய்வீகப் பயணத்தைக் குறியீடாக்கியுள்ளது. இன்றும் கோடிக்கணக்கான ஹிந்துக்கள் தங்கள் வாழ்விலும் நடைமுறையிலும் பின்பற்றும் விதிகள் மனுஸ்மிருதியின் அடிப்படையிலேயே உள்ளன. இன்று மனு ஹிந்துச் சட்டமாக உள்ளது” என்கிறார் சாவர்க்கர்.
சாவர்க்கர், தேசத்தின் புனிதத் தன்மையை ஹிந்துத்துவத்தோடு இணைத்து, ஜாதி முறையை நியாயப்படுத்தும் மநுதருமத்தை ஆதரிக்கிறார். முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். இதனால் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மறுக்கப்படுகிறது.
கோல்வால்கர்
“ஏற்கெனவே ஹிந்துக்களின் முழுமையான புராதன தேசமொன்று இருந்ததென்பதையும், யூதர்களும், பார்சிகளும் விருந்தினராகவும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஊடுருவியவர்களாகவுமே அங்கு வாழ்ந்து வந்தனர் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். பலதரப்பட்ட இந்தக் குழுக்கள் ஒரு பொதுவான எல்லைப் பிரதேசத்திற்குள் ஒரு பொது எதிரியின் ஆட்சியின் கீழ் வாழ நேரிட்டது என்பதற்காக அவர்களை அந்த மண்ணின் மக்கள் என்று எப்படி அழைக்க முடியும்” என்கிறார் கோல்வால்கர்.
மூஞ்சே
“ஹிந்து மதத்தை இந்தியா முழுவதிலும் ஒரே தரப்படுத்தும் வகையில் ஹிந்து தரும சாஸ்திரத்தின் அடிப்படையிலான ஒரு திட்டத்தை நான் வகுத்திருக்கிறேன். ஆனால், பழைய சிவாஜி அல்லது தற்கால ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களான ஹிட்லர், முசோலினியைப் போன்ற ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின்கீழ் வரும் நமக்கான ஓர் ஹிந்து சுயராஜ்யம் இல்லையென்றால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. ஆனால், அது போன்ற ஒரு சர்வாதிகாரி இந்தியாவில் எழும்வரை நம் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. அந்த நோக்கத்தை அடைவதற்காக ஓர் அறிவியல் பூர்வமான திட்டத்தை வகுத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார் மூஞ்சே.
ஆர்.எஸ்.எஸ். தனது சர்வாதிகாரக் கொள்கைக்கான கொடுங்கோலராக மோடியைத் தேர்ந்தெடுத்தது. ஹிட்லர் போன்ற சர்வாதிகார அமைப்பை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத வன்முறைக் கும்பலைத் தான்.
ஜெர்மனியில் ஹிட்லருக்கு உலகம் கொடுத்த மதிப்பே, இவர்களுக்கும் வழங்கப்படும் என்பதை உணர வேண்டும்.
பாரதியார்
தமிழையும் ஆரியரையும் இணைத்துள்ளதாக நம்பப்படும் ஹிந்து மதத்தைக் கட்டிக் காப்பதில் பாரதியாருக்குத் தனி அக்கறையுண்டு! “இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனையே மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்தது என்றுநான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும்”. வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி
ஒரு பக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வணங்கிக் கொண்டு மற்றொரு பக்கம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ‘we the people of India’ என்று தொடங்குவதில் விருப்பமில்லாத மோடி அரசு ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் என்பதற்குப் பதிலாக பாரதப் பிரதமர் என்று இடம்பெறச் செய்தது. இந்தியா என்பது அவமதிப்பு போன்றும், பாரதம் என்பது பெருமைக்குரியது போன்றும் நிறுவப்பட்டது. மோடி சொல்லும் பாரதம் என்பது பழமைத் தத்துவம் பொருந்திய பாரத மநுதர்ம நாடு. அனைவரும் சமமல்ல எனும் மநுதர்மத்திற்கு மாற்றாகத்தான் அரசமைப்புச் சட்டம் உள்ளது.
பார்ப்பனர்களுக்கான தனி நீதியை வழங்கும் அரசுதான் – பாரதிய ஜனதா அரசு என்பதன் வெளிப்பாடுதான் – பொருளாதார அடிப்படையில் முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கான (EWS) 10% இட ஒதுக்கீடு.
அடுத்ததாக, மதச்சார்பின்மை என்ற கேள்விக்கு, முதலில் ‘இந்தியா’ என்று அழுத்தமாகப் பதிவு செய்தவர்தான் இப்பொழுது ‘இந்தியா’ என்ற பெயரைக் கண்டு அஞ்சி நடுங்கி இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்தியாவைப் ‘பாரத்’ என்று அழைக்கவேண்டுமாய் அறிவிப்புச் செய்ததும் செக்யூலரிசத்தைத் தூக்கி எறிவது போல ‘இந்தியா’ என்ற பெயரையும் தூக்கி எறிந்துவிட்டுப் பாரதப் பிரதமரானார் நரேந்திர மோடி. தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் “CONSTITUTION OF INDIA AS A HINDU NATION” “ஹிந்து தேசத்திற்கான இந்திய அரசியலமைப்பு” என்ற வரைவைத் தயாரித்து ‘தரம் சம்சாத்’ நிகழ்வில் வெளியிடப் போவதாக அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் இந்தியாவைச் சொந்த அரசியலமைப்பு மூலம் ஹிந்துஸ்தான் ஆக்குவது. அதற்கான அரசமைப்புச் சட்டத்தின் வரைவு 30 பேர் கொண்ட குழுவால் சாம்பவி விடாதீஸ்வரர் தலைமையில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதை சங்கராச்சாரியா பரிஷத் தலைவர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தெரிவித்தார். 700 பக்கங்களைக் கொண்ட அரசமைப்புச் சட்டமாக அது இருக்கும் என்றார்கள்.
ஹிந்துராஷ்டிர அரசியலமைப்பின்படி டெல்லிக்குப் பதிலாக ‘வாரணாசி’ நாட்டின் தலைநகராக இருக்கும். காசியில் ‘மதங்களின் பாராளுமன்றம்’ கூட்டப்படும். இட ஒதுக்கீடு மற்றும் மாற்று மதங்களைச் சார்ந்தோருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும் என்பதை அறிவிப்புகளாக வெளியிட்டு விட்டனர். அதனைத் தயாரிக்கும் குழுவினரின் பெயர்களையும் அறிவித்தார்கள். அவர்களில் ஸ்வரூப், இந்து ராஷ்ட்டிர நிர்மா சமிதி தலைவர் கமலேஷ்வர் உபாத்தியாயா, மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.என்.ரெட்டி பாதுகாப்பு நிபுணர் ஆனந்த்வரதன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.
நீதிபதி எம். என். வெங்கடாசலய்யா கமிட்டி
எந்தப் பணிக்காக யாரால் அடல் பிகாரி வாஜ்பேயி அரசு ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்ததோ அதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றும்படி ஆர்.எஸ்.எஸ். அழுத்தம் கொடுத்தது. அதன் விளைவாக டாக்டர் அம்பேத்கர் எழுதிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய இறையாண்மை கொண்ட சோசியலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கான அரசமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்க உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் தேசிய ஆணையம் ஒன்றை பிப்ரவரி 22, 2002இல் நியமித்தது, பாரதிய ஜனதா கட்சியின் வாஜ்பேயி அரசு.
புதிய அரசமைப்புக்கான குழு
அரசியலமைப்பை மாற்றும் முடிவில் உறுதியாக உள்ளது பாரதிய ஜனதா கட்சி. 2014 இல் அவர்கள் ஆட்சியமைத்ததிலிருந்தே அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான வேலைகள் நடக்கிறது. அதற்கான வரைவையும் அவர்கள் தயாரித்து விட்டதாக அறிவிப்பும் செய்திருக்கிறார்கள். இதில் ஒன்றிய அரசின் பிரதமர் தொடங்கி அமைச்சர்கள்,
எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய அரசின் அலுவலரான ஆளுநர் முதல் இல்லாத பாரதத்தைக் கட்டமைக்க இந்நாட்டு மக்களான இசுலாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் மீதான வெறுப்பை விதைத்து, அவர்களை இந்நாட்டவர்கள் அல்ல என்பதை நிறுவி, ஹிந்துக்களுக்கு மட்டுமான நாடு என்பதை முதலில் கட்டமைக்கவும், பிறகு பாரத தேசம் என்று இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றிவிட்டு, பாரதத்தில் ஹிந்துக்களுக்கும் இடமில்லை; பிரம்மாவின் தலையில் பிறந்த பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் இடம் என்று நாடற்றவர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்வார்கள். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு பார்ப்பனர்களின் புனித நூலான மநுவை சட்டமாக மாற்றும் முயற்சிதான் ஆரியர்களின் முதல் வேலை. ஏனென்றால், இந்தியாவை ஹிந்து நாடாக்க அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம் தான் தடையாக உள்ளது. யூதர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கி கொள்ள எப்படி நடந்துகொண்டார்களோ அப்படித்தான் தற்போது ஆரிய பார்ப்பனியமும் தங்களிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நகர்கிறார்கள் என்பதற்கான சான்று தான் ஆரியத் தலைவர்களின் வாக்குமூலமும், ஆளுநரின் பேச்சும்.
(நிறைவு)





