Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு – 367 – கி.வீரமணி

சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராய் ஞாயிற்றுக்கிழமையில் உச்சநீதிமன்றம் தடை

29.09.2007 அன்று மாலை திராவிடர் கழக வழக்கறிஞர்  அணியின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று வழக்குரைகளுக்கு முக்கிய ஆலோசனைகளைக் கூறி, ராமன் பற்றி கலைஞர் தெரிவித்த கருத்து மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் கலைஞர், திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர்கள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தோம். மறுநாள் (30.9.2007 அன்று) சுவாமி மலையில் தயாராகி வந்த தந்தை பெரியார் முழு உருவச் சிலை வடிவமைப்பைப் பார்வையிட்டு சிற்பியிடம். சில ஆலோசனைகளை வழங்கி வந்தோம்.

அன்று மாலை திருச்சி திருவெறும்பூர் பெல் நகரியத்தில் திருவெறும்பூர் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் நற்குணன் – கலையரசி இணையரின் மகன் நிலவழகன் – லாவண்யா ஆகியோரின் இணையேற்பு விழாவை தலைமை ஏற்று நடத்தி வைத்தோம். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ராகு காலமான 4:30 – 6:00 மணிக்கு நடைபெற்ற இந்தத் திருமணம் கடலூர் சுப்பிரமணியம் அவர்களின் இல்ல மூன்றாம் தலைமுறை ஜாதி மறுப்பு – சடங்கு மறுப்புத் திருமணமாகும்.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம்

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், கலைஞர் அவர்களின் தலையையும். நாக்கையும் துண்டிக்க வேண்டும் என்று அறிவித்த விஸ்வ ஹிந்துபரிஷத் அமைப்பைச் சார்ந்தவரும், பா.ஜ.க., சார்பில் இருமுறை மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்திமீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தி.மு.க.. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் எடுத்த முடிவின்படி அக்டோபர் முதல் தேதி அன்று நாடு தழுவிய அளவில் முழு வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது.

இதுபோன்ற முழு அடைப்பு வேலை நிறுத்தத்தைத் தடை செய்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி, இந்த முழு அடைப்புக்கும் தடை விதிக்கவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க.. சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராது (30.9.2007) உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை ஒன்றை அளித்தனர்.

தலைவெட்டி தம்பிரான்களைக் கண்டித்து பொதுக்கூட்டம் காரைக்குடி (7.10.2007)

இது நாடெங்கும் அதிர்ச்சிப் பேரலையை எழுப்பியது. பழுத்த அரசியல் அனுபவம் உள்ள கலைஞர் அவர்களோ, போராட்ட வடிவத்தை மாற்றும் வகையில் முழு அடைப்புக்குப் பதிலாக மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். அ.இ. அ.தி.மு.க..வுக்கு விழி பிதுங்கிப் போய்விட்டது.

சேதுக் கால்வாய்த் திட்டம் வெகுகாலமாக வெகுமக்களால் எதிர்பார்க்கப்பட்ட கனவுத் திட்டமாகும். இதனை முடக்குவதற்கு அ.இ.அ.தி.மு.க., காழ்ப்புணர்சி காரணமாகவே இதைச் செய்தது. இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் அரசு நடத்தும் போராட்டம் அல்ல; திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் போராட்டம். ஆனால், அரசு நடத்துவதாகக் கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டமாக நடைபெற்றது. கலைஞர் துவக்கி வைத்து விட்டு தலைமைச் செயலகம் சென்று விட்டார். நாமும் சென்று உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்காமல் வாழ்த்துரை வழங்கினோம்.

சுயமரியாதை சுடரொளி இ.ம.அருணகிரி அவர்களின் படத்திறப்பு விழா (11.10.2007)

இது குறித்து மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்த நிலையில் நீதிபதிகள், இங்கு நடந்தது முழுஅடைப்பு அல்ல உண்ணாவிரத போராட்டம் தான் என்பதை அறியாமல் தமிழ்நாடு அரசைக் கடுமையான வார்த்தையில் விமர்சித்தனர். இந்த அரசையே கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அகர்வால் “வாய்மொழி”யாக் கூறினார். இதனைக் கண்டித்து நாம் இது ஓர் அப்பட்டமான வரம்பு மீறிய பேச்சு என்பதை விளக்கி ஒரு விளக்கமான அறிக்கையை வெளியிட்டோம். அரசைக் கலைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா? எந்தச் சட்டப் பிரிவின் கீழ் என்று கூற முடியுமா? குடியரசுத் தலைவரின் உரிமையை ஒரு நீதிபதி எடுத்துக் கொள்ளலாமா என்று சட்டபூர்வமான அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, நீதிபதி மீது நாடாளுமன்றத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றம் தமது தன்னுரிமைகளை நிலை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டோம். மேலும், மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான் என்ற நிலையில், அந்த நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு எதிராக எல்லை மீறி கருத்துகளைக் கூறலாமா? மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மக்கள் அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது அதன் மதிப்பைக் குலைக்க நினைப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

திருப்பத்தூரில் வைக்கம் வீரர் பெரியார் படிப்பகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா ( 07.10.2007)

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் 356வது விதி எப்பொழுது, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று 9 நீதிபதிகளால் நிர்ணயிக்கப்பட்ட. தீர்ப்புக்கு இது விரோதமான போக்கு ஆகும். தேவையற்ற இந்த அவதூறுப் பேச்சுகளை அந்த நீதிபதி திரும்பப் பெற்றாக வேண்டும். அதை நாட்டின் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு வலியுறுத்த வேண்டும். இது முதலமைச்சரைப் பொறுத்தது அல்ல; ஆறு கோடித் தமிழர்களின் மான உரிமைப் பிரச்சினையாகும். அலட்சியமாக எவரும் நினைக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தோம்.இது குறித்து “புதிய நீதிதேவன்கள் மயக்கம்” என்னும் தலைப்பில் ஒரு சிறப்புக் கூட்டத்தினையும் சென்னையில் ஏற்பாடு செய்து நடத்தினோம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு கடிதத்தையும் எழுதினோம். கடிதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வால், சட்டத்தை மீறி நடந்து கொண்டிருப்பதால் ராமன் பாலம் தமிழ்நாட்டில் நடைபெற்ற வேலை நிறுத்தம் தொடர்பான வழக்குகளை அவர் விசாரிக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தோம்.

சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுக்கான அம்பேத்கர் மய்யம் உரையரங்கம் (12.10.2007)

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 6.10.2007 அன்று நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம். மறுநாள் சிவகங்கை, காரைக்குடி கழக மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அன்று காலை திருச்சி பெரியார் மாளிகையில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை திருமயம் வழியாக திருப்பத்தூர் சென்றடைந்தோம். அங்கு தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். காலையில் திருப்பத்தூரில் வைக்கம் வீரர் பெரியார் படிப்பகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தோம். படிப்பகத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த சுயமரியாதைச் சுடரொளிகள் ஆசிரியர் முருகையா, பள்ளிகொண்டான் ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்தோம். அமைச்சரின் சொந்தச் செலவில் கட்டப்பட்ட கட்டடம் இது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மகாதேவன், கரு.சிதம்பரம், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உலகத் தலைவர் பெரியார் புத்தகத்தை வெளியிட, கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் பெற்றுக் கொண்டார். உலகத் தலைவர் பெரியார் 500 புத்தகங்களுக்கு மேல் விற்பனையாயின. அன்று மதியம் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் நிகழ்விலும் பங்கேற்று உரையாற்றினோம். பின்னர் மாலை காரைக்குடி கழக மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம். கூட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமை வகித்தார். கழக மாவட்டச் செயலாளர் சா.அரங்கசாமி வரவேற்புரை ஆற்றினார்.

சூளை நகர இளைஞர் கழகத்தின்
பணிமனை தொடக்க விழா (12.10.2007)

11.10.2007 அன்று சென்னையில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி இ.ம.அருணகிரி அவர்களின் படத்திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினோம். தோழர் அருணகிரி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர். தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் கருஞ்சட்டைப் பட்டாளத்தை உருவாக்கியவர். 65 ஆண்டு காலம் திராவிட இயக்கக் கொள்கையையே கடைப்பிடித்து வாழ்ந்து மறைந்தவர். தாம் மறைவதற்கு முன் தமது மரணம் ஏற்பட்டால் அந்தச் செய்தியை முரசொலியிலும், விடுதலையிலும் விளம்பரமாக தெரியப்படுத்துங்கள் என்று கூறியிருந்தார். அதை அப்படியே அவரது குடும்பத்தினர் நிறைவேற்றினர். இந்நிகழ்வில் திமுக பொதுச் செயலாளர் நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பங்கேற்று அவரது படத்தினைத் திறந்து வைத்தார்.

இறையன் திருமகள் ஜாதி மறுப்பு அறக்கட்டளை விழா (20.10.2007)

அக்டோபர் 12 அன்று சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுக்கான அம்பேத்கர் மய்யத்தில் பங்கேற்று பவுத்தம் ஒரு மதம் அல்ல என்றும், அது ஒரு வாழ்வியல் முறை என்றும், அறநெறி என்றும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மேற்கோள்களைக் காட்டி உரையாற்றினோம். அன்று மாலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சூளை மாணிக்கம் தெருவில் அமைந்துள்ள நகர இளைஞர் கழகத்தின் கழகப் பணிமனை தொடக்க விழாவில் பங்கேற்று அதனைத் திறந்து வைத்து உரையாற்றினோம்.

20.10.2007 அன்று சென்னை பெரியார் திடலில் இறையன் – திருமகள் ஜாதி மறுப்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இறையனார் நினைவு நாள் – புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று அவர் எழுதி, இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “புரிந்து கொள்வீர் புராணங்களை இதிகாசங்களை” புத்தகத்தை வெளியிட்டு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் குழந்தைக்கு நிதி உதவி அளித்து உரையாற்றினோம்.

மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அவர்களுடன் சந்திப்பு

திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஓட்டுநர்  து.செந்தில்குமார் –  ச.கிரிஜா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை 22.10.2007 அன்று காலை புத்தூர் பெரியார் மாளிகையில் தலைமை ஏற்று நடத்தி வைத்தோம்.

23.10.2007 இரவு டில்லி சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கினோம். அக்டோபர் 24, 25 ஆகிய இரு நாள்களிலும் டில்லியில் தங்கி பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்தோம்.. நம்முடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், வழக்குரைஞர் த.வீரசேகரன் ஆகியோரும் வந்திருந்தனர்.

24:10.2007 புதன்கிழமை காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு டில்லி ஜசோலா பகுதியில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய பெரியார் மய்யக் கட்டடத்தைப் பார்வையிட்டோம்.

பெரியார் மய்யத்தில் பணியாற்றும் தோழர்களும், அவ்வட்டாரத்தின் நல விரும்பியுமான பேராசிரியர் அன்சாரி அவர்களும், கழகத் நம்மை அன்புடன் வரவேற்றனர்.

கட்டுமானப் பணிகள் முடிவடையும் தறுவாயிலிருப்பதைக் கண்டு மகிழ்ந்து, அவர்களுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தோம்.

சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களுடன் சந்திப்பு

காலை 9.30 மணியளவில், பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் டாக்டர் பதஞ்சலி, சோட்டோ லால் ஆகியோர் வந்து சந்திரஜித் யாதவ்  தலைமை தாங்கிய அமைப்பான தேசிய சமூக மய்யத்தின் அகில இந்தியப் பணிகளை மேலும் தொடர்ந்து நடத்திட ஆலோசித்ததோடு, புதுடில்லி பெரியார் மய்யக் கட்டடத்திலேயே நவம்பர் 17 ஆம் தேதி, அனைத்திந்திய – கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது என்றும், அதில் பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவது என்றும் முடிவு செய்து பிறகு விடை பெற்றுச் சென்றனர்.

பகல் 2.30 மணிக்கு, மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அவர்களை, அவர்களது அலுவலகத்தில் சந்தித்து உரையாடி பெரியார் – மணியம்மை பல்கலைத் கழகத்தின் எரிசக்தி புத்தாக்க மய்யத்திற்கு வந்து பார்வை யிட்டு, பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, அதன்  வேந்தர் என்ற முறையில் நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்றார்.

பிறகு, பகல் 1.45 மணிக்கு, பல்கலைக் கழக மானியக் குழுவின் * துணைத் தலைவர் பேராசிரியர் மூல்சந்த் சர்மா அவர்களை நேரில் சந்தித்து, பல்கலைக்கழக வளர்ச்சிபற்றிக் கலந்து ஆலோசித்தார்.

அடுத்து பகல் 2.45 மணிக்கு அங்கேயே பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சுகதேவ் தொரா வாட் பல்கலைக் கழக வளர்ச்சி பற்றியும், சமூகநீதித் துறையில், புதுவகைக் கல்வியை, பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம் (Social Engineering) நடத்த ஏற்பாடு செய்து வருவதுபற்றிக் கூறியதைக் கேட்டு, அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அடுத்த முறை அவசியம் வருகை தருவதாகக் கூறி, விடைபெற்றார்.

மாலை 5.30 மணிக்கு சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, அவர்களது உடல்நலம் விசாரித்தோம். பெரியார் மய்யப் பணிகள் வெகுவிரைவில்  முடிந்ததைக் கேட்டு, அறிந்து தனது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்தார் வி.பி.சிங் அவர்கள்!

மாலை 7.30 மணியளவில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜுன்சிங் அவர்களைச் சந்தித்தோம். நம்முடன் ஒன்றிய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு வந்திருந்தார். பின்னர் பழைய பெரியார் மய்யம் இடிப்பு சம்பந்தமாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் இரவு 10:30 வரை விவாதித்து விட்டு 11 மணிக்கு தமிழ்நாட்டு இல்லத்திற்கு திரும்பினோம். மறுநாள் காலை 9:45 மணிக்கு உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைகளும் சமூக நீதி வழக்குரைஞர் அமைப்பின் அமைப்பாளருமான அட்வகேட் சிபாரா அவர்களின் சந்தித்து உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றியும், வழக்கு பற்றியும் உரையாடினோம்.

பகல் 12 மணி அளவில் இந்திய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆன டாக்டர் சேனல் எடமருகு அவர்களின் கூட்டுப் பணியாளர்கள் வந்து நம்மை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தவுடன் முழுப் பகுத்தறிவாளர்களை வேந்தராகவும், துணைவேந்தராவும் கொண்ட முதல் பல்கலைக்கழகம் நம் பல்கலைக்கழகம் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். இது ஒரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது பகுத்தறிவாளர்களின் வெற்றியை உலகுக்குப் பறைசாற்றுவதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். உலகெங்கும் உள்ள பகுத்தறிவாளர்கள் மனித நேயர்களின் வாழ்த்துகளைப் பெறத் தகுதி உள்ளது இது என்று தெரிவித்து. பகுத்தறிவு, மனிதநேயம், மனித உரிமைகள், சமூக நீதி பாலியல் நீதியை உள்ளடக்கிய படிப்புகள் பட்டங்கள் மேல் பட்டங்கள் வழங்குவதாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என்று பாராட்டினர்.

(நினைவுகள் நீளும்…)