அண்ணா’ எனும் பெயர் அண்ணாதுரை என்னும் பெயரின் சுருக்கம் என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால், இயற்கையாய் அமைந்த அந்த அண்ணா என்ற பெயர்ச் சுருக்கத்தின் உட்பொருள், ஆழம், அகலம், பொருத்தம், பொருள், பிணைப்பு போன்றவை ஏராளம் ஏராளம்!
திராவிட இயக்கம் ஒரு குடும்பம். இது மிகையாகச் சொல்லப்படும் வார்த்தை அலங்காரம் அல்ல. உண்மை! எவராலும் மறுக்கமுடியாத உண்மை!
பெரியார் திராவிட இயக்கத்தின் தந்தை! அண்ணா உட்பட அவரது தொண்டர்கள் அனைவரும் உடன்பிறப்பு. அதில் மூத்த பிள்ளை அண்ணா என்பதால், அண்ணன் என்ற பொருளுடைய அண்ணா என்னும் பெயர் எவ்வளவு இயற்கைப் பொருத்தம். இந்த உறவை உறுதி செய்யும் நோக்கில்தான் கலைஞர் திராவிட இயக்கத்தவரை “உடன்பிறப்பே!’’ என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ‘இளவல்’ என்றார்.
திராவிட இயக்கத்தின் தனிச் சிறப்பே குடும்ப உறவைவிட கொள்கை உறவே முதன்மை என்று சொல்லும் – ஏற்கும் உளப்பாங்குதான்!
நீரடித்து நீர் விலகாது என்பதை இந்த உறவு பலமுறை உறுதி செய்துள்ளது.
அண்ணா அய்யாவை விட்டுப் பிரிந்து அரசியல் நடத்தினாலும் எம் தலைவர் பெரியார்தான் என்றார்.
“தான் கண்ட – கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்’’ என்றார். பெரியார் ஒரு சகாப்தம். பெரியாருடன் இருந்த காலமே என் வாழ்வின் வசந்த காலம் என்றார்.
உலகம் போற்றும் ஒர் அறிஞர் பெருந்தகை, ஒருவரைத் தலைவராக ஏற்கிறார் என்றால், அந்தத் தலைவரின் தகுதி எத்தகையது! முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் நான்காம் வகுப்பு படித்த பெரியாரைத் தலைவராக ஏற்றனர்; அவரின் சிந்தனைகளைப் பின்பற்றினர் என்றால், அந்தப் பெரியாரின் சிந்தனைத் திறன், தரம், நுட்பம் எப்படிப்பட்டதாக இருக்கும்!
உதடு உதிர்க்கும் வார்த்தைகளால் பாசம் காட்டிய உறவு அல்ல. திராவிடக் குடும்பத்தின் பாசமும் உறவும் உள்ளார்ந்த பிணைந்த உறவு.
தந்தை பெரியாரும் அண்ணாவும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பாசத்திற்கு அளவே இல்லை. இதை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உணர்வு பொங்கக் குறிப்பிடுகிறார்.
“அண்ணாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் தங்கி, அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அமெரிக்காவில் ‘நியூயார்க் டவுன்ஸ்டே’ மருத்துவமனையில் சேர்த்து, டாக்டர் மில்லர் அவர்களால் அவருக்குத் தனிச் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை அவர் அரசு செலவில் செய்து கொள்ளவிரும்பவில்லை. கட்சிதான் நிதி உதவியது! அரசு இயந்திரம் தனது சொந்த இலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற உயர்ந்த நெறியை, அவர் ஆபத்தான நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதும் கூட கடைப்பிடிக்கத் தவறவில்லை.
அப்படி அண்ணா அவர்களைப் பல முக்கிய தலைவர்களும், சென்னை பொது மருத்துவமனையில் பார்த்து, வாழ்த்தி வழியனுப்பினர். அய்யா அவர்களும் இதற்காகவே சென்னை வந்தார்கள். தவத்திரு.குன்றக்குடி அடிகளாரும் அன்று வந்திருந்தார்கள். ‘ஸ்பெஷல் வார்டில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்த அண்ணாவைக் கண்டதும், கசிந்து கண்ணீர் விட்டு ஆறுதல் சொன்னார் அடிகளார்! அவ்விரு பெருமேதைகளுக்கும் சேர்த்துத் தைரியம் சொன்னார் அய்யா அவர்கள்! “இயற்கைக்கு விட்டு விடுவோம். அறுவை சிகிச்சை நல்லபடி முடிந்து, நல்ல உடல்நலத்தோடு திரும்ப வேண்டும் தாங்கள்’’ என்று அய்யா தனது பேரன்பினை அண்ணாவிடம் தெரிவித்துக் கொண்டார்கள்!
அண்ணாவுக்கு அந்த மொழிகள் எத்தகைய பெரிய ஆறுதலை அந்த நேரத்தில் தந்தன என்பது அதிகம் பேசாமல், வாஞ்சையுடன் அவர் தலையாட்டி நன்றி தெரிவித்ததன் மூலம் எங்களுக்குத் தெரிந்தது; “தங்கள் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், இடையறாத சுற்றுப் பயணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்’’ என்று அண்ணா, அய்யாவைப் பார்த்து கூறினார்! அருகில் இருந்த எங்களுக்குக் அக்காட்சி வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்ச்சிக் காவியமாய் இருந்தது!
விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்று அண்ணா – அய்யாவை அப்போது கேட்டுக் கொண்டார்.
திடலுக்குத் திரும்பினார் அய்யா அவர்கள். உணவு முடித்துச் சிறிது படுக்கையில் ஓய்வு எடுக்கும் பழக்கம் பொதுவாக இல்லை அய்யாவுக்கு – என்றாலும் கூட, மனச் சோர்வுடன் காணப்பட்ட அய்யா அவர்கள் ஏதோ ஒன்றை இழந்தவர் போல மிகுந்த கவலையுடன் கட்டிலில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டவராக அமர்ந்திருந்தார்கள்.
‘விடுதலை’ அலுவலகத்தில் (சில அடிகள் தூரத்தில்) எனது அறையில் பணிபுரிந்த என்னை அய்யா அழைக்கிறார் என்ற தகவல் வந்தவுடன் சென்றேன்.
“ஏம்பா, அண்ணா விமானம் புறப்படுவது இன்று எத்தனை மணிக்கு?” என்று என்னைக் கேட்டார். நான் (பகல்) இரண்டரை மணிக்கு என்றேன். தமது கடிகாரத்தைப் பார்த்து 2.15 மணி. நாம் விமான நிலையம் சென்று அண்ணாவைப் பார்த்து வரலாமே என்றார். அவரது பாசமிகுந்த தவிப்பினை அருகில் இருந்த என்னாலும், புலவர் இமயவரம்பன் அவர்களாலும் உணர முடிந்தது!
சற்றுத் தயங்கிக் கொண்டே நான் அய்யா அவர்களிடம், “சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் போய்ச் சென்றடைய எப்படியும் 35 முதல் 45 மணித்துளிகள் ஆகும். நாம் போய்ச் சேருவதற்குள் விமானம் புறப்பட்டுப் போய்விடக் கூடும்; அய்யா! நம்மால் அண்ணாவைப் பார்க்க இயலாமல் ஆகிவிட்டால், என்ன செய்வது?’’ என்று கூறினேன்.
எந்த ஒரு சிறு முடிவு எடுத்துவிட்டாலும், எளிதில் அதை மாற்றிக் கொள்ளாதவர் அய்யா என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும், என்றாலும் அவர்கள் அங்கே போய் ஏமாற்றதிற்கு இரையாகக் கூடாதே என்பதற்காகத் தான், இப்படிக் குறுகிய கால அவகாசம் பற்றி அய்யாவுக்கு நினைவூட்ட வேண்டிய நிலைக்கு நான் ஆளானேன்!
அய்யா அவர்கள் உடனே, “அதனால் என்ன? அண்ணாவைப் பார்க்க முடியாவிட்டால் என்ன? அவர் விமானம் புறப்பட்டுச் செல்லும் அல்லவா? அதைப் பார்த்து வருவோமே” என்றார்!
அதில்தான் எத்துணை பாசப் பிழியல்கள்! குழந்தைத்தன கொஞ்சல் உணர்வுகள்! அடடா! நெகிழ்ச்சியால் தாக்குண்டோம், உடனிருந்த நாங்கள். அவசரமாக அய்யா வேனை எடுக்கச் சொல்லி, அய்யாவையும், தள்ளுச் சக்கர நாற்காலி உட்பட ஏற்றி, புறப்பட்டோம். ஓட்டுநருக்கு மிகமிக வேகமாகப் போக நாங்களே ‘கட்டளை’யிட்டோம். வழமைக்கு மாறாக! சென்னை மவுண்ட் ரோட்டில் (அப்போது அண்ணா சாலையாக அது பெயர் மாற்றம் பெறவில்லை) சாலையின் இருமருங்கிலும் மக்கள் சோகம் படர்ந்த முகங்களுடன் ‘சாரி சாரியாக’ புறப்பட்டுச் செல்லும் கார்களைவிட அண்ணாவை அங்கே நின்று வழியனுப்ப மக்கள் காத்திருந்தனர்.
‘அய்யா பெரியார் அதோ போகிறார், விமான நிலையம் போகிறார் போலும்’ என்ற குரல்கள். போக்குவரத்து விதிகளைக் கூடத் தற்காலிகமாகப் புறந்தள்ளி அய்யா ‘வேன்’ விமானம் போல பறந்து சென்று மீனம்பாக்கத்தினை அடைந்தது. விமானம் எதுவும் மேலே பறக்கவில்லை என்பதை வேனிலிருந்தே உறுதி செய்து கொண்டே போகிறோம்.
அப்பாடி! அண்ணா புறப்படவில்லை. மணி 2.45 அப்போது. அமைச்சர்கள், தலைவர்கள், அதிகாரிகள் அணிவகுத்து, சோகப் புயலில் சிக்குண்டு, அமைதி ஆட்சி புரியும் நிலையில் அங்கே நின்றனர்! எங்கே குண்டூசி விழுந்தாலும் அதன் ஓசை கேட்கும் போல் இருந்தது. அவ்வளவு நிசப்தமான சூழ்நிலை! அய்யாவை இறக்கித் தள்ளு சக்கர நாற்காலியில் அமர்த்தினோம். அய்யா ஓர் ஓரத்தில் நின்றால் போதும், உள்ளே விமானம் அருகில் போக வேண்டாம் என்று எங்களுக்குக் கட்டளை பிறப்பித்தார்.
சில மணித்துளிகளில் ஒரு காரில் அண்ணா, (முன் இருக்கையில் கலைஞர்) வந்தார். இருமருங்கிலும் இருந்தோரை நோக்கிக் கையாட்டி வந்த அவர், அய்யாவை அங்கு எதிர்பார்க்கவில்லை. அய்யாவும், பலருடன் ஒருவராக சக்கர நாற்காலியில் அமர்ந்து இருப்பதைக் கண்டவுடன், வண்டியை நிறுத்தச் சொன்னார். ஏன் கதவைத் திறந்து இறங்கும் உணர்ச்சிக்கும் ஆளானார் – அண்ணா – கையெடுத்துக் கும்பிட்ட நிலையில்! அதைப் பார்த்த அய்யா, ஓங்கிய குரலில், “தயவு செய்து நிறுத்தாதீர்கள், செல்லுங்கள்’’ என்று கூறினார். அனைவருடைய கண்களும் கண்ணீர் அருவிகளைக் கொட்டின! அக்காட்சி அய்யாவின் கவலை படர்ந்திருந்த முகம்பற்றி அண்ணா நியூயார்க்கிலிருந்து அய்யாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அருமையாகப் படம் பிடித்து இருந்தார்! w





