நின்றசொல்லர்! நீதிமன்றின் தண்ட மஞ்சி
நிலைமாறா உரங்கொண்டு நிமிர்ந்த நெஞ்சில்!
தென்றலென்பர்! தேடிவந்தார் தீங்க றுக்கத்
தீர்வுசொல்லி ஆதரித்து நெகிழும் அன்பில்!
மின்னலன்னர்! வஞ்சர்வாய் மூடும் முன்னே
வஞ்சர்சொல் வஞ்சகத்தை உரைக்கும் பண்பில்!
திண்ணநெஞ்சர்! வேதியப்பொய் விரட்டு தற்கு
வீறுகொண்டு போரிடற்கு விரையும் மன்றில்!
தாராள மாய்த்தந்தார் தன்னு ழைப்பை!
தனைவதைத்து மறுதலித்தார் தன்ன லத்தை!
ஏராளம் நாம்பெற்றோம்! ஏற்றம் பெற்றோம்!
எம்தந்தை பெரியாரால் ஊட்ட முற்றோம்!
நூறாண்டின் முன்பிறந்த அவரி யக்கம்
நூற்றாண்டு பலகடந்தும் உலகை யாளும்!
யாராண்ட போதினிலும் பெரியார் ஆட்சி!
யாவர்க்கும் யாவுமெனும் கொள்கை சாட்சி!
சுயமரியா தைப்பாலைப் புகட்டி எம்மின்
தூர்ந்திருந்த மானவூற்றைச் சுரக்க வைத்தார்!
பெயராத கற்சிந்தை புரட்டிப் போட்டுப்
பெரியாரே பகுத்தறிவுப் பயிர்வ ளர்த்தார்!
அயலாராம் பார்ப்பனர்க்குத் தமிழ ரெல்லாம்
அடிமையெனும் அவலமதைத் துடைத்தெ றிந்தார்!
இயலாதென் றொருசொல்லை ஏற்கா ஏடு!
எடுத்தசெயல் முடித்ததுதான் பெரியார் பீடு!
ஆதிக்கத் தின்னெதிரி! அதையொ ழிக்க
ஆவிநீங்கு மட்டுமவர் அயர்ந்தார் இல்லை!
ஜாதிநோய் முதற்பகையாம்! தகர்த் தழித்தல்
தன்வாழ்வின் இலக்கென்று தொடர்ந்தார் மல்லை!
ஏதிலாரின் புகலிடமாய் எல்லோ ருக்கும்
எல்லாமும் கிட்டவைத்த பொதுமைக் கொல்லை!
சாதித்த நாயகராம் பெரியார் சொல்லை
தமிழினத்தார் மறந்துவிட்டால் விளையுந் தொல்லை!
கலகத்தின் குரலாகிக் கடிந்தொ லித்தும்
கருஞ்சட்டைப் படையாகிக் கயம றுத்தும்
பழமைக்குப் பகையாகி மடமொ ழித்தும்
பரிவுக்குத் தாயாகிப் பகிர்ந்த ளித்தும்
இலவுக்கும் எளிதாகி இரக்க முற்றும்
இரும்புக்கு மூப்பாகி எதிர்ப்பு டைத்தும்
உலவுவளி என்றாகி எல்லை யற்றே
உலகமய மாகின்றார் பெரியார்! வாழ்க!
ஈராயி ரமாண்டின் இருள கற்ற
ஈரோட்டு மண்ணுதித்த அறிவின் கீற்று!
தீராத பகைவெல்லத் தமிழ ருக்குத்
திராவிடத்தை ஆயுதமாய் வடித்த ளித்து
நாராக மெலிந்தோரும் நறும்பூ வாக
நலிவீகுந் தொண்டேற்ற பெரியார் தம்மைப்
பாராட்டு கின்றாரின் றுலக மெங்கும்!
படமாகிப் பாடஞ்சொல் பெரியார் வாழ்க!
சாதிமதம் மொழியினத்தின் நிலைக டந்து
தரணிவந்த மாந்தரெல்லாம் ஒன்றி ணைந்து
வேதியப்பொய் வீழ்த்திவர்ண மற்ற ழித்து
வேற்றுமைகள் அற்றவராய் உடனு றைந்த
சேதிவந்தென் செவிநிறைக்க வேண்டுமென்று
சூளுரைத்து வாழ்ந்திருந்த பெரியார் தம்மை
ஆதிபுத்தன் வள்ளுவர்க்குப் பின்பு தித்த
ஆளுமையாய் அறிவுலகார் போற்று கின்றார்!
ஆணாகப் பிறந்திருந்தும் பெண்க ளுக்காய்
அருஞ்செல்வம் மிகவுடைத்தும் அற்ற வர்க்காய்க்
கூனாத குலம்பிறந்தும் கடைய ருக்காய்க்
கோனாகும் நிலையுடைத்தும் குடிக ளுக்காய்
ஈனாத தாயாகி இளைத்த வர்க்காய்
இறுதிவரை உழைத்திட்ட பெரியார் தம்மைக்
காணாத ஈகத்தின் காட்டாம் என்று
கற்றறிந்தார் போற்றுகின்றார்! பெரியார் வாழ்க!
வானத்தின் உயர்வுபெறக் கல்வி பெற்று
மடமையினைப் பகுத்தறிவால் விலக்கக் கற்று
மானத்தை உயிருக்கும் மேலாய்க் கொண்டு
மாந்தரினம் மாண்பெய்த வேண்டு மென்றே
ஊனறுக்கும் வதைதாங்கி உலகஞ் சுற்றி
உரையெழுத்தால் உளஞ்சிந்தை சீர்மை செய்த
தேனருமைச் சொற்பெயலார் பெரியார் தம்மைச்
சீராட்டிப் போற்றுகின்றார் உலகார் இன்று!
வேர்மட்டும் தமிழ்நிலத்தில்! கிளைய டர்ந்து
விரிவுலகப் பரப்பெல்லாம் விரியு தின்று!
தேர்முட்டி அடங்காத திராவி டத்தேர்
தெளிவுதந்து உலகெங்கும் ஓடு தின்று!
ஏர்மாட்டே இவ்வுலகு என்பதைப் போல்
எம்பெரியார் கருத்தேற்றே உலகு முய்யும்!
ஊர்நாடு எல்லைகளால் பிரிந்தி ருந்தும்
உலகொன்றிப் பெரியார்சொல் ஓது தின்று! w





