Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஓ.சி.டி. நோயை எப்படி எதிர்கொள்வது? எப்படி மீண்டும் வருவது?

ஓ.சி.டி. பற்றி முந்தைய அத்தியாயத்தில் விளக்கிய ஒன்றை மீண்டும் ஒருமுறை இங்கு சொல்கிறேன். அப்போதுதான் அதை எதிர்கொள்ளும் வழியைக் கொஞ்சம் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஓ.சி.டி. நோயைப் பொறுத்த வரை மூன்று வகைகள் இருக்கின்றன:

  1. திரும்பத் திரும்ப ஏதாவது எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் வகை (Predominantly Obsession)
  2. கட்டுப்படுத்த முடியாமல் திரும்பத் திரும்ப ஏதேனும் செயல்களில் ஈடுபட்டுகொண்டிருக்கும் வகை (Predominantly Compulsion)
  3. கட்டுப்படுத்த முடியாத எண்ணங்களும், செயல்களும் என இரண்டும் கலந்த வகை (Mixed)

இப்படிப்பட்ட அப்சசிவான எண்ணங்கள் கொடுக்கும் பதற்றம் ஒருவரை நிலைகுலைய வைக்கிறது.  அதுவும் இந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப வரும்போது இந்தப் பதற்றமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் இந்தப் பதற்றத்தைச் சமாளிக்க முடியாத நிலைக்கு ஒருவர் செல்கிறார். அந்த நேரத்தில் ஏதாவது ஒரு செயலைச் செய்ய மனம் தூண்டுகிறது, அந்தச் செயலுக்கும், எந்த எண்ணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், அதைச் செய்யச் சொல்லி மனம் கொடுக்கும் தொடர் உந்துதல் காரணமாக அந்தச் செயலைச் செய்யும் போது அந்தப் பதற்றம் குறைந்து தற்காலிகமாக ஓர் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது.  இந்தச் செயல்களைத் தான் கம்பல்சன் என்று சொல்கிறோம். ஒருவர் இந்தக் கட்டாயச் செயல்களைச் செய்வதன் விளைவாக அதீத பதற்றத்திலிருந்து சற்று நேரம் ஆசுவாசம் கொள்கிறார். இந்தக் கட்டாயச் செயல்கள் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது என உணர்ந்துகொள்ளும் ஒருவர் எப்போதெல்லாம் அப்சசன் பதற்றத்தைக் கொடுக்கிறதோ அப்போதெல்லாம் இந்தக் கட்டாயச் செயலை திரும்பத் திரும்பச் செய்கிறார்.

உதாரணமாக,

  • “தனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும்” என்ற எண்ணம், பல எண்ணங்களுக்கிடையே ஓர் எண்ணமாக ஒரு தாய்க்கு வந்து போகிறது.
  • ஆனால், அந்தத் தாயால் மற்ற எண்ணங்களைப் போல இந்த எண்ணத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை
  • ஏன் நமக்கு இப்படி ஓர் எண்ணம் வந்தது எனக் கவலைப்படுகிறார்
  • இனிமேல் இப்படிப்பட்ட எண்ணம் வரக்கூடாது என நினைக்கிறார்
  • தன்னையும் அறியாமல் அந்தத் தாய் அந்த எண்ணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் அந்த எண்ணம் மீண்டும் வருகிறது
  • மீண்டும் அந்தத் தாய் கவலைப்படுகிறார், தனது குழந்தைக்கு உண்மையில் ஏதாவது ஆகிவிடுமோ எனப் பயப்படுகிறார்
  • நான் ஏன் இப்படி யோசிக்கிறேன் என கவலைப்படுகிறார், தனது கவனத்தை வேறு எதிலாவது திருப்ப முயற்சிக்கிறார்
  • அந்தத் தாயையும் அறியாமல் அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் மனதில் நிறைகிறது
  • மனம், தனது கவனத்தை மற்றவற்றில் இருந்து முழுமையாகத் திருப்பிக்கொண்டு இந்தக் குறிப்பிட்ட எண்ணத்தில் மட்டும் குவிக்கிறது
  • அந்த எண்ணம் திரும்பத் திரும்ப வருகிறது, அப்சசனாக மாறுகிறது
  • தன் குழந்தைக்கு உண்மையில் ஏதோ ஆகப்போகிறது என பதற்றப்படுகிறார், அந்தப் பதற்றம் அவரை நிலைகுலைய வைக்கிறது, உட்கார முடியவில்லை, இங்கும் அங்கும் நடக்கிறார், மூச்சு வாங்குகிறது, கை நடுங்குகிறது, இதயம் படபடவென அடிக்கிறது
  • அப்போது திடீரென எங்கிருந்தோ இன்னொரு எண்ணம் அவருக்கு வருகிறது, “அதோ அந்த ஸ்விட்ச் இருக்கு பார், அதை ஒரு முறை ‘ஆன்’ செய்து ‘ஆஃப்’ செய், உன் குழந்தைக்கு எதுவும் ஆகாது”. அந்தச் செயலுக்கும், குழந்தைக்கும் ஒரு தொடர்புமில்லை எந்தத் தர்க்க ரீதியான விளக்கமும் அந்தச் செயலில் இல்லை, ஆனால், அதை யோசிக்கும் நிலையில் அந்தத் தாய் இல்லை.
  • உடனடியாக எழுந்து ஓடிப்போய் அந்த ஸ்விட்ச்சை ‘ஆன்’ செய்து ‘ஆஃப்’ செய்கிறார்.
  • பதற்றம் குறைகிறது, மூச்சு இயல்புக்கு வருகிறது, மனம் நிதானத்திற்கு வருகிறது. ஒரு பெரிய ஆசுவாசம் கிடைக்கிறது.
  • கொஞ்ச நேரம் நிம்மதியாக அமர்கிறார்.
  • சற்று நேரம் கழித்து திரும்பவும் அந்த எண்ணம் வருகிறது “உன் குழந்தைக்கு ஏதோ ஆகப்போகிறது”
  • அந்த எண்ணம் வந்த அடுத்த நொடி, எழுந்து ஓடிப்போய் திரும்பவும் அந்த அந்த ஸ்விட்ச்சை ‘ஆன்’ செய்து ‘ஆஃப்’ செய்கிறார்
  • நிதானத்திற்கு வருகிறார்.

“உன் குழந்தைக்கு ஏதோ ஆகப்போகிறது” என்று திரும்பத் திரும்ப வரும் எண்ணம் தான் அப்சசன்.

எழுந்து போய் ஸ்விட்சை ‘ஆன்’ செய்து, ‘ஆஃப்’ செய்யும் அந்தச் செயல் தான் கம்பல்சன்.

இது தான் அப்சசிவ் கம்பல்சிவ் டிசார்டர் என்ற ஓ.சி.டி.

ஓ.சி.டி.யைப் பொறுத்தவரை இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன:

  1. தேவையற்ற எண்ணங்களுக்கு நாம் கொடுக்கும் அதீத முக்கியத்துவம்
  2. பதற்றத்தை மட்டுப்படுத்த நாம் கையாளும் பொறுத்தமற்ற நடவடிக்கைகள்

ஓர் எண்ணத்திற்கு நாம் ஏன் அதீத முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோம்?

அந்த எண்ணம் நம்மைப் பதற்றப்படுத்தும் போது அதீத முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோம்.

எப்போது ஓர் எண்ணம் நம்மைப் பதற்றப் படுத்துகிறது?

அந்த எண்ணம் ஏதேனும் ஓர் ஆபத்தைச் சுட்டிக்காட்டும்போது நம் மனம் பதற்றமடைகிறது.

இந்த இரண்டு பதில்களும் முக்கியமானவை. ஏனென்றால், நாம் மனதில் நினைப்பதாலேயே சில விஷயங்கள் நடந்துவிடும் என, சில நேரங்களில் நாம் நினைப்பதுதான் அந்த எண்ணம் முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம்.

உதாரணத்திற்கு, “தன்னுடைய குழந்தைக்கு ஏதாவது நடக்கப்போகிறது” என்ற எண்ணம் வருவதாலேயே அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆகப்போவதில்லை. ஆனாலும் அந்தத் தாய்க்கு தனது மனதில் நினைப்பது நடந்துவிடுமோ என்ற பயம் வருகிறது, அதனால் அந்த எண்ணத்தை அவர் கட்டுப்படுத்த நினைக்கிறார் அதனால் அந்த எண்ணம் முக்கியத்துவம் பெறுகிறது.

அப்சசனை எதிர்கொள்ள நீங்கள் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியவை:

  • உங்கள் மனதில் வரும் எண்ணங்கள் அனைத்தும் நீங்கள் உண்மையில் விரும்பி நினைப்பதில்லை
  • ஏராளமான எண்ணங்கள் உங்கள் விருப்பங்களையும் மீறி தன்னிச்சையாக வருகின்றன
  • அதனால் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கெல்லாம் நீங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை
  • உங்களையும் மீறி வரும் எண்ணங்களுக்கு நீங்கள் காரணமாக முடியாது
  • அதே போல, எண்ணம் என்று வருவதாலேயே அது உண்மையில் நடந்து விடும் என்பது கிடையாது.
  • அதாவது, யோசிப்பதனாலேயே ஒன்று நடந்து விடும் என்று அர்த்தம் கிடையாது.

இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து கொண்டால், தேவையற்ற எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறையும். முக்கியத்துவம் பெறாத எண்ணங்கள் மனதின் கவனத்தைப் பெறாது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் பார்த்துக் கவலைப்படாத, பயப்படாத எண்ணங்கள் அனைத்தும் உங்கள் மனதில் நீடித்து நிலைப்பதில்லை. அதே நேரத்தில் நீங்கள் கட்டுப்படுத்த முயலும் எண்ணங்கள் உங்கள் மனதிலேயே தங்கிவிடும்.

(தொடரும்)