Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதைச் சுடர் ஒளியாய் தந்தை பெரியார்!-மஞ்சை வசந்தன்

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் புகழ்பெற்ற வரி நூற்றுக்கு நூறு மெய்யாகி வருகிறது! பெரியார் சொல்லாததில்லை என்ற அளவிற்குக் குவிந்து கிடக்கும் அவரது பல்துறைச் சிந்தனைகள் உலகெங்கும் இன்று பரவி வருகின்றன. பெரியார் உலகமயமாகிறார் என்ற தமிழர் தலைவரின் கணிப்பு கண்முன்னே மெய்யாகிறது.

கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கானா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என்று பல நாடுகளில் அவரது சிந்தனைகள் பரவி வருகிறது; பின்பற்றப்படுகிறது.

1929ஆம் ஆண்டே மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கும், 1931-32ஆம் ஆண்டு புறப்பட்டு எகிப்து, கிரீஸ், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளுக்கும் சென்று 1932இல் நாடு திரும்பினார். பின்னர் 1953-1954இல் பர்மா, மலேயா, சிங்கப்பூருக்கும் தந்தை பெரியார் பயணம் மேற்கொண்டு தம் சிந்தனைகளைப் பரப்பியதோடு. பதியம் போட்டுவிட்டும் வந்தார். அவை இன்று துளிர்விட்டு வளர்ந்து கிளைபரப்பி பலன்தந்து நிற்கின்றன.

தந்தை பெரியாருக்குப் பின் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தொடர்ச்சியாகக் கொள்கைப் பயணங்களை மேற்கொண்டு தந்தையின் தத்துவங்களைப் பரப்பி வருவதுடன், அங்கு அமைப்புகளாக அவை செயல்பட பல்வேறு திட்டங்களை மேற்கொள்கிறார். அதன்படி புதிய புதிய அமைப்புகள் செயல்படுகின்றன. 1994 முதல் உலக நாத்திகக் கூட்டமைப்பான iheu என்னும் அமைப்பில் திராவிடர் கழகம் இணைந்து உலக நாத்திகர் மாநாடுகளை நடத்தி வருகிறது.

தந்தை பெரியாரின் சிந்தனை பற்றிய  ஆய்வுகள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்திலும், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், மலேயா பல்கலைக்கழகத்திலும் ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக் கழகத்திலும் நடத்தப்படுகின்றன.

சிங்கப்பூரில் திரு.இராஜேஷ்ராய் அவர்களும், பாலையன் கிருபானந்தகுமார் அவர்களும், கேம்பிரிட்ஜில் லட்சுமி அவர்களும் ஆய்வு செய்துள்ளனர்.

பெரியாரின் சிந்தனைகளைப் பரப்பும் விழாக்கள், ஆய்வு செய்யும் மாநாடுகள் சிகாகோ, வாஷிங்டன், வர்ஜினியா, கலிபோர்னியா, ஃபிரிமாண்ட், சான்லூஸ் போன்ற உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்றவண்ணம் உள்ளன.

சிங்கப்பூரில் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்:

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அரசு ஆணை மூலம் நடைமுறைப்படுத்தினார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசும் தன்னாட்டில்
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை  நடைமுறைப்படுத்தியது.

2014இல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தமிழர் தலைவர் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்து, தெற்காசியாவில் பெரியார் சிந்தனைத் தாக்கங்கள் பற்றி ஆய்வுரை நிகழ்த்தச் செய்தது.

அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தில் பெரியார் பற்றிய ஆய்வுரைகள்; அமெரிக்காவில் விசுவநாதன் பெர்க்லியஸ், ஸ்வீடனில் அனிதா டெயில் என்ற அம்மையார் தந்தை பெரியாரைப் பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மேத்யூ பாக்ஸ்தர் ஆய்வு செய்துள்ளார்.

வாஷிங்டனில் பெரியாருக்கு விழா!

அமெரிக்காவில்1994ஆம் ஆண்டு பெரியார் பன்னாட்டமைப்பு தொடங்கப்பட்டு அது அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளிலும், அய்ரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில் தளத்தைப் பதித்து நிற்கிறது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் வாஷிங்டனில் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, பெரியாரின் கருத்துகள் பரப்பப்படுகின்றன. இங்கர்சாலின் கருத்தோடு தந்தை பெரியாரின் கருத்து ஒத்துப் போவது பற்றி பெரிதும் வியந்தனர்.

மார்கெரட் டவ்லி என்ற அமெரிக்கப் பெண்மணி தன் முழுநேரப் பணியாகத் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.

ஆப்பிரிக்காவில் பெரியார் அமைப்பு

பெரியார் ஆப்பிரிக்க அமைப்பு (PAF) என்ற பெயரில் கானா தலைநகர் அங்காராவில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெண்களின் மேம்பாட்டை முதன்மை இலக்காகக் கொண்டு இது செயல்படுகிறது. உலகிலே பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்து அவர்களுக்காகத் தொண்டாற்றியவர் பெரியார் என்பதாலும், பெரியார் என்னும் பட்டத்தையே பெண்கள்தான் தந்தார்கள் என்பதாலும், அவர் பெயரால் பெண்ணுரிமைக்கு அமைப்பு என்பது பொருத்தம்தானே! பெரியாரின் பிறந்த நாளின்போது சிறப்பாக விழா கொண்டாடப்பட்டு, பெண்களின் சொத்துரிமைக்கு பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

சுயமரியாதை பன்னாட்டு மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

ஜெர்மனியில்…

ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு முதல் மாநாடு ஜூலை 27, 28 & 29 – 2017 ஆகிய நாள்களில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இது பன்னாட்டளவில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாடு ஆகும்.

27.07.2017 பிற்பகல் 3.00 மணிக்கு மாநாட்டுத் தொடக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் நிகழ்விற்குத் தலைமை ஏற்க, இங்கிலாந்து நாட்டின் Croydon  நகராட்சியின் துணை மேயர் நிகழ்வைத் துவக்கி வைத்தார், பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர்கள், டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சித்தாநந்தம் போன்றோர் பாராட்டுரை வழங்கினர்.

28.07.2017 இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சி 9 மணிக்குத் தொடங்கியது.

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர், பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் வரவேற்புரையாற்ற, 29.07.2017 மூன்றாம் நாள் விருது வழங்கும் விழா காலை 10.00 மணிக்குத் தொடங்கியது.  இந்த நிகழ்வில், டாக்டர். இலக்குவன் தமிழ் டாக்டர் சோம.இளங்கோவன் ஆகியோர் அறிமுகவுரையாற்றினார். டாக்டர் சித்தாநந்தம் அவர்கள் பாராட்டுரை வழங்க, மரியாதைக்குரிய துணைமேயர் மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கப்பட்டது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அமெரிக்கா மேரிலேண்டில்…

அடுத்த மாநாடு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 21, 22 தேதிகளில் அமெரிக்கா மேரிலாண்டில் நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு பெரியார் மய்யமும், (Periyar International, USA) அமெரிக்க மனிதநேயர் சங்கமும் (American Humanist Association) சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தினர்.

மாநாட்டின் இரண்டு நாட்களும் திராவிடர் கழகத்தின் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார். பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் வழங்கப்படும் 2019ஆம் ஆண்டுக்கான ‘சமூகநீதிக்கான வீரமணி விருது ஜெர்மனி நாட்டைச் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க மனிதநேயர் சங்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, 2019ஆம் ஆண்டுக்கான ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதை (2019 Humanist Lifetime Achievement Award) அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் வழங்கினார்.

டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் ராய் ஸ்பெக்ஹார்ட் ஆகியோர் வரவேற்றனர். முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அறிமுக உரை ஆற்றினார்.

முற்பகல் நிகழ்வில் பிலிப் மொல்லர் (ஜெர்மனி), ரெப்.ஜாமி ரஸ்கின் (அமெரிக்கா), டோனி வேன் பெல்ட் (அமெரிக்க பெண்ணிய அமைப்பு) வீ.குமரேசன் (பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம், வல்லம் தஞ்சாவூர்) முனைவர் ரியான் பெல் (மதச்சார்பற்ற மாணவர் கூட்டமைப்பு) ஆகியோர் உரையாற்றினர்.

பிற்பகல் நிகழ்வில் முனைவர் உல்ரிக் நிக்லஸ் (ஜெர்மனி), முனைவர் மாதிவி போட்லுரி, ஆர். ஆலன், கிளாரா ஆர்தர் மற்றும் அருள் வீரமணி ஆகியோர் உரையாற்றினர். கோ.கருணாநிதி (அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) ‘சமூகநீதிச் சவால்கள்’ குறித்துப் பேசினார். முனைவர் ஆர்.பிரபாகரன், டெப்பி ஆலன் (அமெரிக்க மதசார்பின்மை அணி) ஆகியோர் உரையாற்றினர்.

இரண்டாம் நாள்  முற்பகல் நடைபெற்ற அமர்வில் சுயமரியாதை மனிதநேயம் (Self Respective Humanism) பற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார். தமிழ்ப் பேராசிரியர் அமெரிக்கா அறிஞர் ஜார்ஜ் எல்.ஹார்ட் ‘செவ்வியல் தமிழில் சுயமரியாதை’ எனும் தலைப்பிலும், முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் ‘மனிதநேயமும் திராவிட இயக்கமும்’ எனும் தலைப்பிலும், எழுத்தாளர் ப.திருமாவேலன் ‘மனிதநேயமும், பெரியாரும்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.

முனைவர் ஸ்வென் வொர்ட்மேன் (ஜெர்மனி) டெப்பி கோடார்டு ஆகியோர் மனிதநேயத் தத்துவம்பற்றி உரையாற்றினார்.

தமிழ் அமர்வின் தொடக்கவுரையினை கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகம்) வழங்கினார். கலந்துரையாடலை ப.திருமாவேலன், நாஞ்சில் பீட்டர் குழுவினர் நடத்தினர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன், ‘மனிதநேயமும் சமூகநீதியும்’ எனும் தலைப்பிலும், ப.திருமாவேலன் ‘தமிழ் தேசியமும் பெரியாரும்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.

ஆங்கில அமர்வில் அமெந்தா பாப்பெய், முனைவர் கேரி பெர்ஜ் – கிராஸ், பிரெட் எட்வர்டுஸ், சோனிஜா டேவிஸ் ஆகியோர் மனிதநேயச் செயல்பாடு பற்றிப் பேசினர். மாநாட்டின் நிறைவாக, ஆங்கிலத்தில் பிரெட் எட்வர்ட்ஸ் உரைக்குப் பின்னர் ‘எதிர்காலம்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிறைவுரை ஆற்றினார்.

கனடாவில்…

சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் சுயமரியாதை மூன்றாம் மாநாடு கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நூற்றாண்டு கல்லூரி மய்யத்தில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துரையினை ஒளியிழையில் பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவரது வாழ்த்துச் செய்தி முதல் நாள் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

முதல் நாள் நிகழ்ச்சியின் தொடக்க உரையினை தமிழர் தலைவர், சென்னை – பெரியார் திடலில் இருந்து காணொலி மூலம் வழங்கிச் சிறப்பித்தார்.

கனடா மனிதநேயர் அமைப்பின் மனிதநேயர் மார்ட்டின் பிரித் வரவேற்றுப் பேசினார். அருள்செல்வி பாலகுரு இணைப்புரை வழங்கினார்.

மாநாட்டில் பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர், ‘நாத்திக நட்புறவு’ ஏட்டின் ஆசிரியர் ஹேமந்த் மேத்தா, டொராண்டோ மனிதநேயர் சங்கத்தின் ரிச்சர்ட் டெவுசெட், பேராசிரியர் வீ.அரசு, கனடா மனிதநேயர் அமைப்பினைச் சார்ந்த சிருஷ்டி ஹூக்கு, பேராசிரியர் முனைவர் எஸ்.சிவசேகரம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

ஜாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும். சரியான புரிதலே பாதி சிகிச்சையாகும். தந்தை பெரியாரின் சிந்தனை பற்றி அறிஞர் அண்ணா கூறியது; “நூற்றாண்டுகள் பலவற்றை ஒரு குப்பியில் அடக்கும் செயல்’’ – “Putting Centuries into a capsule”.. எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலையாகும். ஜாதியினை ஒழித்திட தமிழ் இலக்கியம் கூறும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் மனப்பான்மை மக்களிடம் பெருகிட வேண்டும். அத்தகைய மனிதநேயப் பெருக்கத்திற்கு இந்த பன்னாட்டு மாநாட்டு முடிவுகள் கொண்டு செல்லப்பட வேண்டும். மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ இவ்வாறு தமிழர் தலைவர் தமது தொடக்கவுரையின் போது கூறினார்.

சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் 25.9.2022 அன்று காலை (கனடா நேரப்படி) 9 மணி அளவில் தொடங்கியது.

அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொருளாளர் அருள்செல்வி வீரமணி வரவேற்பு உரையாற்றினார். முதல் நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் சுருக்கமாக எடுத்துரைத்தார். தொடக்க உரையாளரின் அறிமுகத்தினை பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் வழங்கினார்.

அமெரிக்க – சியாட்டல் வாழ் அறிஞர் தாமஸ் ஹிடோஷி புரூக்ஸ்மா, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர், கனடா நாட்டு ஆய்வு விசாரணை அமைப்பினைச் சார்ந்த லெஸ்லி ரோசன் பிளட், டொராண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் மறைதிரு. சந்திரகாந்தன், பேராசிரியர் அரசு செல்லையா, சிறீகதிர்காமநாதன், தமிழ்நாட்டின் திராவிட சிந்தனையாளர் மய்யத்தின் புகழ் காந்தி ஆகியோர் உரையாற்றினர்.

நண்பகல் உணவிற்குப் பின் முதல் நிகழ்வாக ‘திராவிட இளைஞர்களின் நகைச்சுவை’ எனும் அமர்வில் இளங்கதிர் இளமாறன் மற்றும் நிகில் முனியப்பன் நிகழ்ச்சியினை வழங்கினர்.

அடுத்து இன்றைய ‘இளைஞர்கள் சமூகநீதி- பெரியார் ஓர் உத்வேகம்” எனும் தலைப்பின் திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.

கனடா நாடாளுமன்ற உறுப்பினரும், மாநாடு நடைபெற ஆவன செய்திட்ட ஈழத் தமிழருமான கேரி ஆனந்த சங்கரி மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்.

டொராண்டோ மனிதநேய சங்கத்தினர் ஆங்கிலத்தில் நடத்திய மாணவர் கலந்துரையாடலிலும், தமிழில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், தமிழ்நாட்டிலிருந்து சென்ற பேராளர்கள் பேசினர்.

இறுதியாக நிகழ்ச்சியினைத் தொகுத்து, நிறைவுரையினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் ஆற்றினார்.

இரண்டாம் நாளான நிறைவு நாள் நிகழ்ச்சிகளின் முதன்மை உரையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார்கள்.

ஆக்ஸ்ஃபோர்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.

பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுக்கப் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்தப் படத்திறப்பு விழா!

பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளமாக, அவருடைய படத்தைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவுடைய அடையாளம் மட்டுமல்ல; உரிமையின் அடையாளம் இது! மனித உரிமையின் அடையாளம்! உலக அடையாளம்! அப்படிப்பட்ட பெரியாரின் படம் இங்கு திறக்கப்படுவது என்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாகும்!

ஓர் இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய பெருமை!

இங்கிலாந்தில் இருக்கின்ற செயின்ட் அந்தோணி கல்லூரியும், பெல்லியோல் கல்லூரியும் இணைந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி!

நினைத்துப் பார்க்கிறேன்…

1983 செப்டம்பர் 21ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டியில், மானமிகு ஆசிரியர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் கலந்து கொண்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. அது நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்குப் பிறகு, இன்றைக்கு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது!

தந்தை பெரியாருக்கு மிக மிகப் பிடித்த சொல் என்ன என்று கேட்டீர்கள் என்றால், சுயமரியாதை!

“உலகத்தில் எந்த அகராதியைக் கொண்டுவந்து காட்டினாலும், இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாது” என்று சொன்னார் தந்தை பெரியார்.

“ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிவிட்டால், அவன் வெற்றி பெற்றிடுவான்” என்று சொன்னார்.

அதுமட்டுமல்ல, “உலகத்திலேயே உயிரைக் கொடுத்துப் பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதைதான்” என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னார்.

மனிதனின் சுயமரியாதையைக் காக்கத்தான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.

அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, இந்த மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களால் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியும், மனநிறைவும் நான் பெறுகிறேன்.

பெரியாரியம் என்றால் என்ன என்று யாராவது கேட்டால்…

அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய அடிப்படைகள் என்னவென்றால்,

சுயமரியாதை

பகுத்தறிவு

சமதர்மம்

சமத்துவம்

மானுடப்பற்று

இரத்த பேதமில்லை

பால் பேதமில்லை

சுய முன்னேற்றம்

பெண்கள் முன்னேற்றம்

சமூகநீதி

மதசார்பற்ற அரசியல்

அறிவியல் மனப்பான்மை

என்று பெரியாரியத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்து விரிந்த அறிவுக்கடலான அவருடைய சிந்தனைகளை உள்வாங்க, இந்த அறிமுகம் நிச்சயம் பயன்படும்!

இந்தச் சிந்தனைகளின் அடிப்படையிலான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாக, ஆறு குறிப்புகளை, ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதினார்.

பெரியார் கொள்கை,
உலகளாவிய கொள்கை!

அவற்றை நான் சொல்லவேண்டும் என்றால்,

முதலில், சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்வும் இருக்கக் கூடாது.

இரண்டாவது, ஏழை, பணக்காரன்ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாப் பொருளும்,பூமியும் எல்லோருக்கும் சரிசமமாக இருக்கவேண்டும்.

மூன்றாவது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும்.

நான்காவது, ஜாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை இல்லாத மனித சமூக ஒற்றுமை நிலவ வேண்டும்.

அய்ந்தாவது, அனைத்து மனிதரும் உழைத்து அதன் பயனை அனைவரும் சமமாகப் பயன்படுத்தவேண்டும்.

ஆறாவது, யாரும் எதற்கும் அடிமை ஆகாமல், அவரவர் அறிவு – ஆராய்ச்சி –  உணர்ச்சி – காட்சி ஆகியவற்றுக்கு இணங்கி நடத்த முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் பொதுவான கருத்தியல்கள்! அதனால்தான் பெரியார் கொள்கை, உலகளாவிய கொள்கை என்று சொல்கிறோம்.