உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதருக்குள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதரின் இயல்பறிந்து செய்யப்படுகிறது.
மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண வேண்டும் என்ற ஆசை எழுவது மனிதருக்கு இயல்பு. என்ன நடக்கப் போகிறது என்பது மனிதருக்கு முன்கூட்டியே தெரிவதில்லை. எனவே, வாழ்வில் நடக்கப் போவதை அறிந்து கொள்வதில் எல்லோருக்கும் இயல்பாகவே ஆசை அதிகம்.
எனவே, நடக்கப் போவதை அறிவிக்கிறேன் என்று யாராவது கூறியவுடன் ஆவலோடு அங்குச் செல்கிறார்கள். அதற்காகச் செலவிடவும் தயாராக இருக்கிறார்கள். இந்த மனநிலையைப் பயன்படுத்திக் காசு பறிக்கக் கையாளப்பட்ட யுக்தியே ஜோதிடம்.
இவ்வாறு நான் கூறியவுடன், “ஜோதிடம் என்பது மற்ற மூடநம்பிக்கைகளைப் போல அல்ல; அது அறிவியல் சார்ந்தது. கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித நடவடிக்கைகளுக்கும் தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில் கணிக்கப்படுவதே ஜோதிடம்” என்று சிலர் கூறுகின்றனர்.
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அமைந்துள்ள கிரகங்களின் நிலைக்கேற்பவே, அக்குழந்தையின் வாழ்க்கை அமைகிறது என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம்.
இத்தத்துவம் சரியென்றால், ஜோதிடம் என்பதும் சரி – உண்மை. இத்தத்துவம் தவறு என்றால் ஜோதிடம் என்பதும் தவறு – பொய்.
ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கின்ற கிரகங்களின் நிலைக்கு ஏற்பவே, அக்குழந்தையின் வாழ்க்கை அமையும் என்றால், அதே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இருக்கிறதா என்றால் இல்லை.
ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து போகிறது. அப்படியென்றால் அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் இறந்து போகவேண்டும். அவ்வாறு இறந்து போகின்றனவா?
ஒரு நொடிப் பொழுதில் உலகில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற குழந்தை இறந்தால், ஜோதிடத் தத்துவப்படி, அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்து போக வேண்டும். ஆனால் அவ்வாறு இறந்து போகின்றனவா? இல்லையே!
அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தையின் வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இருக்கிறதா? இல்லையே!
மேலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் வாழ்ந்து, ஒரே நேரத்தில் இறக்கின்றனவா? இல்லையே!
பிறக்கின்ற நேரத்தில் இருக்கின்ற கிரக நிலைக்கேற்பவே வாழ்நாள் அமையும் என்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற நாய், பன்றி, ஈ, கொசு, யானை, சிங்கம் இவற்றின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? இருக்கின்றதா? இல்லையே! கிரகங்கள் விலங்கு, பறவை, புழு, பூச்சிகளையும்தானே பாதிக்கும்?
பிறக்கின்ற இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுவர். அப்படியே பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறக்கின்ற அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி வாழ்கின்றனவா? இல்லையே!
எனவே, ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமே பொய் என்பது புரிகிறதல்லவா? அடிப்படையே பொய் என்றால், அதன் மீது புனையப்படும் மற்ற ஜோதிடக் கணிப்புகள் அனைத்தும் அசல் பொய்தானே?.
மேலும், கிரகங்களின் இயக்கத்திற்கும், மனித வாழ்க்கை அமைவதற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் அறிவியல் சார்ந்தது என்றும் நம்பப்படுவது எவ்வளவு அறியாமை!
“நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்!” என்று, பிறக்கின்ற நேரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு பிதற்றலானது! நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
அறிவியல் உண்மைப்படி சூரியன் இடம்பெயராமல் தன்னில்தானே சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிடம் சூரியன் இடம் பெயர்வதாகக் கூறுகிறது. அப்படியிருக்க ஜோதிடத்தின் அடிப்படையே தவறு; அறிவியலுக்கு முரண். எனவே, சோதிடம் அறிவியல் அல்லவே.
மேலும் இப்போது புதுப்புதுக் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படியிருக்க 9 கிரகங்களை மட்டும் வைத்து ஜோதிடம் சொல்வது எப்படிச் சரியாகும்? ஆக கிரகங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாத ஜோதிடம் மோசடியல்லவா? பொய் அல்லவா? சிந்திக்க வேண்டுமல்லவா?
இனி, ஜோதிடத் தத்துவப்படியே, சோதிடக் கணிப்பு சரியா என்பதை ஆராய்வோம்.
பிறந்த நேரம் எது?
பிறந்த நேரத்தை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதால் ஜோதிடத்திற்கு அடிப்படை, பிறந்த நேரமேயாகும். ஆனால், பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருக்கிறதா?
பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியும் நேரமா? குழந்தை முழுவதும் வெளியில் வந்த நேரமா? அல்லது தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுத் தாயின் தொடர்பு விடுபட்ட நேரமா? அறுவைச் சிகிச்சையெனில், வயிற்றைப் பிளந்து வெளியே எடுத்த நேரமா? அப்படி பிளந்து எடுப்பது இயற்கைக்கு முரண் என்பதால் அதற்கு ஜாதகம் பொருந்தி வராதே! அப்படிப்பட்ட குழந்தைகள் தானே இன்று அதிகம். அக்குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பது எப்படிச் சரியாகும்?
குறைப் பிரசவத்தில் கருவியில் வைத்திருக்கிறார்களே, அதில் பிறந்த நேரம் எது? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா? அல்லது கருவியை விட்டு வெளியே எடுக்கும் நேரமா? எது? இப்படி பிறந்த நேரம் எது என்பதிலே குழப்பம் இருக்கும்போது, பிறந்த நேரம் என்பது எது?
லக்னம் மற்றும் நட்சத்திரக் கணக்கு:
ஜோதிடம் என்பது நேரம், கிழமை, தேதி, மாதம், வருடம், லக்னம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட லக்னத்தில் நட்சத்திரத்தில் நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.
ஒரு லக்னத்திற்கு 41/2 முதல் 51/2 நாழிகை வரை கால அளவு. ஒரு நட்சத்திரத்திற்கு 60 நாழிகை.
உதாரணமாக விருச்சிக லக்னத்திற்கு 51/4 நாழிகை அதாவது 126 நிமிடம். சுமார் இரண்டு மணி நேரம். அந்த இரண்டு மணி நேரத்தில் நாட்டில் எத்தனை நூறு குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் வாழ்வு ஒரேமாதிரியாக அமையுமா? அமைவதில்லையே!
அந்த நேரத்தில் பிறந்த ஒரு சில குழந்தைகள் இறந்து, மற்ற குழந்தைகள் உயிருடன் இருந்தாலே ஜோதிடம் பொய்யென்றாகி விடும் அல்லவா?
முரண்பாடான நம்பிக்கை:
பிறக்கின்ற நேரத்தில், கிரகங்கள் இருக்கின்ற நிலைக்கேற்பத்தான் வாழ்க்கை என்றால், கடவுளுக்கும், விதிக்கும், பூர்வ ஜென்ம பலன்களுக்கும் என்ன வேலை?
பிறந்த நேரக் கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால், நாம் பிறந்தபோதே நமது வாழ்வு இப்படித்தான் என்று தீர்மானம் ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் பிரார்த்தனை ஏன்? கணக்கற்ற முயற்சிகள் ஏன்? இவற்றால் அதை மாற்ற முடியுமா?
பிறந்த போதே நம் வாழ்வு இப்படித்தான் அமையப் போகிறது என்று தீர்மானம் ஆகிவிட்ட பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் நேரங்காலம் பார்த்து ஏன் காரியம் செய்ய வேண்டும்? இராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி இவற்றை ஏன் பார்க்க வேண்டும்?
இவற்றைப் பார்த்து நடந்தால் நமது வாழ்வு மாறி விடுமா? மாறிவிடும் என்றால், பிறந்த நேரத்தின்படி வாழ்வு அமையும் என்ற ஜோதிட நம்பிக்கை தவறாகி விடாதா?
கிரகத்தின் நிலைக்கேற்ப வாழ்வு அமையும் என்றால் விதியை நம்பக் கூடாது; பூர்வ ஜென்ம பலனை நம்பக்கூடாது; கடவுளை நம்பக்கூடாது.
காரணம், கிரக நிலைப்படிதான் வாழ்வு என்றால் கடவுளுக்கு நம் வாழ்வில் என்ன பங்கு? ஒன்றும் இல்லையே!
ஜோதிடத்தையும் நம்பி, கடவுள், விதி, பிறவி இவற்றையும் நம்புவது முரண்பட்ட நிலையாகும்.
இப்படிச் சொன்னால், சிலர் சாமர்த்தியமாக, கடவுள் பூர்வஜென்ம பலனுக்கு ஏற்ப நம் விதியை அமைத்து அதற்கேற்ற கிரகச் சூழ்நிலையில் நம்மைப் பிறக்கச் செய்கிறான்; அந்த விதியை நம் கையில் ரேகையாகப் பதித்து வைத்திருக்கிறான் என்று கூறி, கடவுள் நம்பிக்கையோடு ஜோதிட நம்பிக்கையையும் இணைத்து முடிச்சுப் போட்டுப் பேசுவர்.
மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவ்வாறு கூறியும் உள்ளார்.
“ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப்பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னர் அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரகநிலையில் பிறக்க வேண்டும் என்று கடவுளே தீர்மானித்து அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்ப துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சிபுரிந்து வருகிறார்” என்று மதுரை ஆதீனகர்த்தர் கூறுகிறார். (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம்-1, பக்கம்-118, 119)
முற்பிறவி கர்மவினைக்கேற்ப கடவுள் அமைக்கும் விதியின்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்ற கடவுள் கோட்பாட்டிற்கு, பிறக்கும் கிரக நிலைக்கேற்ப ஒருவர் வாழ்வு அமையும் என்ற ஜோதிடக் கோட்பாடு முரண் என்பதால் இரண்டையும் இணைத்து அவர் கூறியுள்ள கருத்து முற்றிலும் தவறு ஆகும்.
கிரகங்கள் சார்ந்த ஜோதிடத்தையும், கர்ம வினைக்கு ஏற்ப கடவுள் தீர்மானிக்கும் விதி நம்பிக்கையையும் இணைப்பது தப்பு. இரண்டும் முரண். ஜோதிடத்தை நம்பினால் கடவுளை மறுப்பதாகும். கடவுளை நம்பினால், அவர் தீர்மானிக்கும் விதியை நம்பினால் சோதிடத்தை நம்புவது முரண்? வாழ்வை கடவுள் தீர்மானிக்கிறாரா? கிரகங்கள் தீர்மானிக்கின்றனவா? பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா?
(தொடரும்)





