Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஏதேனும் ஒரு முக்கியத்துவமற்ற எண்ணத்திற்குக் கொடுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் தான் ஓ.சி.டி. நோயின் பிரதான பிரச்சினை.

நம் மனதில், எந்த நேரமும் பல்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும். அதில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட எண்ணம், நம்மையும் அறியாமல் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும்போது அந்த எண்ணத்தை நாம் கவனிக்கத் தொடங்குவோம் அல்லவா? அப்படி நமது கவனத்தைப் பெறும் எண்ணம் முக்கியத்துவத்தையும் பெற்றுவிடுகிறது.

ஒரு எண்ணத்தை முக்கியமான எண்ணமாக மனம் கருதத் தொடங்கும்போது, அது தொடர்பான அடுத்தடுத்த செயல்பாடுகள் மனதால் முடுக்கிவிடப்படும்.

உதாரணத்திற்கு, எந்த வேலையும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருக்கிறோம், நம் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நம்மையும் அறியாமல் இந்த எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென நேற்றுச் செய்திருக்க வேண்டிய வேலை ஒன்றை இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. உடனடியாக மனம் அந்த எண்ணத்தைக் கவனிக்கத் தொடங்குகிறது, அது என்ன வேலை, எப்போது முடிக்க வேண்டும், முடிக்கவில்லையென்றால் என்னவெல்லாம் ஆகும் என்பன போன்ற எண்ணங்கள் சங்கிலித்தொடர் போல அதையொட்டித் தோன்றிக்கொண்டிருக்கின்றன. உடனடியாக அதை முடித்து விடலாம் என முடிவு செய்து நாம் செயல்படவும் தொடங்குகிறோம்.

இப்போது கவனித்துப் பாருங்கள். ஏராளமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஓர் எண்ணம் முக்கியத்துவம் பெறுகிறது, உடனடியாக மனம் அந்த எண்ணத்தை நோக்கி மட்டும் கவனத்தைக் குவிக்கிறது, அந்த எண்ணம் சங்கிலித்தொடர் போல பல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது, உடனடியாக நாம் அதை நோக்கிச் செயல்படவும் தொடங்குகிறோம். இயல்பாக இப்படித்தான் நாம் ஒவ்வொரு செயலிலும் இறங்குகிறோம்.

ஓ.சி.டி. நோயைப் பொறுத்த வரை, எந்தக் காரணமுமில்லாமல், எந்தவித உடனடித் தேவையுமற்ற  எண்ணமொன்று, மனதின் அதிகப்படியான கவனத்தைப் பெற்றுவிடுகிறது, அதனால் மனம் தனது அத்தனை செயல்பாட்டையும் நிறுத்திவிட்டு அந்த எண்ணத்தின் மீது மட்டும் கவனத்தைக் குவிக்கிறது, அதையொட்டிய எண்ணங்களும், செயல்களும் சங்கிலித்தொடர் போல விரிகின்றன.

உதாரணத்திற்கு, அமைதியாக யோசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென “கேஸ் ஸ்டவ் வெடிக்கப்போகிறது, போய் உடனே அது சரியாக அணைக்கப்பட்டு இருக்கிறதா என்று பார்” என ஓர் எண்ணம் வருகிறது. பொதுவாக நாம் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டோம். ஒருவேளை இது அப்சசனாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக அந்த எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனடியாகச் சமையலறைக்குப் போய் சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். சரியாகத் தான் இருக்கிறது என்று நன்றாகத் தெரிந்தாலும் கூட, திரும்பத் திரும்ப அதைச் சோதனை செய்துகொண்டேயிருக்க மனம் கட்டளையிட்டுக் கொண்டிருக்கும், ஒரு திருப்தி வரும் வரை, இந்தக் கட்டளைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டேயிருக்கும், அதுவரைக்கும் சோதனை செய்துகொண்டேயிருப்போம். இதுதான் ஓ.சி.டி. என்னும் நோய்.

ஓ.சி.டி.யின் முதன்மையான பண்புகள்:

  • எந்தவிதச் சிறப்புமற்ற ஓர் எண்ணம் பெறும் அதிகப்படியான கவனம்.
  • ஒரு செயலைச் செய்து முடிக்கும்போது கிடைக்கவேண்டிய செய்துமுடித்த திருப்தி உடனடியாகக் கிடைக்காமல் இருப்பது.

இந்த இரண்டு பண்புகளையும் மூளையின் லிம்பிக் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய பகுதியே ஒருங்கிணைக்கிறது.

அதாவது மனம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும்,  ஒரு செயலைச் சரியாக செய்து முடித்து விட்டோம் என்ற திருப்தியையும் மூளையின் லிம்பிக் சிஸ்டம் என்ற பகுதியே கொடுக்கிறது.

லிம்பிக் சிஸ்டம் முக்கியமென்று கருதும் எண்ணத்தை நரம்பியல் இணைப்புகள் வழியாக மூளைக்குத் தெரியபடுத்தும். மூளை அந்த எண்ணத்திற்கான பதில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய உந்துதல்களை லிம்பிக் பகுதிக்கு அனுப்பும், அந்த எண்ணத்தின் பொருட்டு பதில் நடவடிக்கைகளைச் செய்து முடித்தவுடன் லிம்பிக் சிஸ்டம் செய்துவிட்டோம் என்ற தகவலை மூளைக்கு அனுப்பி, மூளையின் உந்துதல்களைக் கட்டுப்படுத்தும்.

இந்த லிம்பிக் சிஸ்டத்தின் செயல்பாட்டில் ஏற்படும் சமநிலையின்மையின் விளைவாக இந்த இரண்டு செயலும் பாதிக்கப்படுவதால், தேவையற்ற ஒன்று அதிகப்படியான கவனம் பெறலாம், அது தொடர்பான தொடர் உந்துதல்களை மூளை கொடுக்கலாம். அதைச் செய்து முடித்துவிட்ட தகவலை மூளைக்கு உடனே அனுப்பாமல் லிம்பிக் சிஸ்டம் தாமதப்படுத்தலாம், அதனால் அந்தச் செயலுக்கான உந்துதல் தொடர்ச்சியாக அந்தச் செயலை திருப்பித் திருப்பிச் செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கலாம். இதுதான் ஓசிடியில் நடக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஓ.சி.டி. என்பதற்கான காரணம் உடலியல் இயக்கத்தைப் பொறுத்ததே. அதாவது இந்த நோய் வெளிப்புறத்தில் சந்திக்கும் பிரச்சினைகளினாலோ, வெளியுலகச் சிக்கல்களினாலோ ஏற்படுவதில்லை. மாறாக, உடலில் குறிப்பாக மூளையின் குறிப்பிட்ட பகுதியின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் தான் வருகிறது.

ஓ.சி.டி. நோய் வருவதற்கான காரணமாக பொதுவாக நாம் நினைப்பது போல, சிறு வயதில் வளர்ந்த விதமோ, பெற்றோர்களின் வளர்ப்போ, சந்தித்த இழப்புகளோ, பிரச்சினைகளோ, கடந்து வந்த அதிர்ச்சிகளோ என எதுவும் காரணம் இல்லை என்பதை முதலில் உணரவேண்டும். சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள், வன்கொடுமைகள் போன்றவையெல்லாம் கூட ஓ.சி.டி.க்குக் காரணம் என்ற பொதுவான நம்பிக்கையிருக்கிறது, ஆனால், இன்று வரை அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

ஓ.சி.டி. என்ற நோய், மரபணுக்களில் ஏற்படும் கோளாறுகளினாலும், நரம்பியல் ரசாயனங்களின் சமநிலையின்மையாலும் ஏற்படுகிறது.

மரபணுக்கள் குறைபாடு:

ஒரு குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் சிதைவு காரணமாக அந்த மரபணு தவறான தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது. அதன் விளைவாக தவறான சமிக்ஞைகள் கொடுக்கப்பட்டு தேவையில்லாத எண்ணங்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

இந்த மரபணுச் சிதைவு பல காரணங்களால் ஏற்படுகின்றன. பெற்றோர்களிடம் இருந்து சிதைவடைந்த மரபணுவைப் பெறுவதன் வழியாக இருக்கலாம் அல்லது கர்ப்ப காலத்திலோ, அதற்குப் பிறகான காலத்திலோ தன்னிச்சையாக மரபணு சிதைவடைவதன் மூலமும் பாதிக்கப்படலாம்.

அதனால் மரபணுக் குறைபாடு என்றால், அது பெற்றோரிடமிருந்துதான் வரவேண்டும் என்ற அவசியமில்லை. குடும்பத்தில் யாருக்கும் ஓ.சி.டி. நோய் இல்லாத சூழலிலும் கூட, தன்னிச்சையாக ஏற்படும் சிதைவினால் கூட குறிப்பிட்ட மரபணு பாதிக்கப்படலாம்.

ஓ.சி.டி. நோய்க்கான மரபணுக் கோளாறைப் பெற்றவர்களுக்கு சிறு வயதிலிருந்தே அதன் அறிகுறிகள் மிகச்சிறிய அளவில் வெளிப்பட்டு கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, அதிகமாக நகம் கடிப்பது, கண் சிமிட்டுவது, முகத்தசைகளை வித்தியாசமாகச் சுழிப்பது, தனது பொருள்களை யாருடனும் பகிராமல் இருப்பது, சில வித்தியாசமான உடல் பாவனைகளைச் செய்வது போன்றவையெல்லாம் ஓ.சி.டி. நோய்க்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.

நோய்த் தொற்று:

குழந்தைப் பருவத்தில், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்னும் பாக்டீரியா நோய்த் தொற்றுக்கு ஆளாகும் சிலருக்கு பெரியவர்களாகும் போது ஓ.சி.டி. வரலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. அதிகப்படியான காய்ச்சல், தொண்டை வலி, மூட்டு வலி போன்றவையெல்லாம் இந்த நோய்த் தொற்றின் அறிகுறிகள். அதனால் ஓ.சி.டி. நோய் வந்தவர்களுக்குச் சிறு வயதில் இந்த அறிகுறிகளுடன் நோய்த் தொற்று வந்திருக்க வாய்ப்புண்டு. இந்த நோய்த் தொற்றினால் உருவாகும் சில நோயெதிர்ப்புப் புரதங்கள் மூளையின் குறிப்பிட்ட செல்களை அழிப்பதால் கூட லிம்பிக் சிஸ்டம் பாதிக்கப்பட்டு ஓ.சி.டி. வரலாம் என ஆய்வுகள் சொல்கின்றன.

மரபணுக்கள் குறைபாடு, நோய்த் தொற்று, நரம்பியல் இணைப்புகளில் கோளாறு, மூளை ரசாயனங்களின் சமநிலையின்மை போன்றவை ஓ.சி.டி. நோய்க்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஓ.சி.டி. நோய்க்கானசிகிச்சை என்பது நரம்பியல் கோளாறுகளைச் சரி செய்வதும், ரசாயன சமநிலையின்மையைச் சீர்படுத்துவதை நோக்கியும் இருக்கின்றன.

(தொடரும்…)