Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

செப்டம்பர் மாதம் -ஆறு.கலைச்செல்வன்

மதி, என்னடா கையில்  பெரிய பார்சல் வைச்சிருக்க… கேக் போலத் தெரியுது.  என்ன விசேஷம்?” என்று ஒரு பூங்காவிற்குள் நுழைய இருந்த இளங்கோவன் தற்செயலாகச் சந்தித்த மதியழகனைப் பார்த்துக் கேட்டான்.

மதியழகனும் இளங்கோவனும் நண்பர்கள்.  இளங்கோவன் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன்.  மதியழகன் ஊருக்கு வந்த இளங்கோவன் தற்செயலாக நண்பனைப் பார்த்துக் கேட்டவுடன், மதியழகனும் நண்பனுடன் சேர்ந்து பூங்காவிற்குள் நுழைந்து ஓரிடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டனர்.

“இளங்கோ, உன்னைப் பார்த்தது  மிகவும் மகிழ்ச்சியா இருக்கு.  இன்று செப்டம்பர் ஒன்றாம் தேதியல்லவா? என் பெண் குழந்தைக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள்,  அதனால்தான் பிறந்த நாள் கேக் வாங்கிட்டுப் போறேன். நீயும் வாயேன்” என்று தன் நண்பனை அழைத்தான் மதியழகன்.

“உன் பெண் குழந்தைக்கு  என் நல் வாழ்த்துகள்.  என்ன பெயர் வைச்சிருக்க?” என வினவினான் இளங்கோவன்.

“சதாஸ்ரீன்னு பெயர் வைச்சிருக்கேன் இளங்கோ”

“சதாஸ்ரீ ன்னா என்ன பொருள் மதியழகா?”

ஆனால், அதற்குப் பொருள் தெரியவில்லை மதியழகனுக்கு.

“பொருள் தெரியாமல் பெயர் வைக்கலாமா? பொருள் விளங்கும்படி நல்ல தமிழில் பெயர் வைத்திருக்கலாமே!  சரி, சதா என்பதற்காவது பொருள் தெரியும் தானே?” என்று கேட்டான் இளங்கோவன்.

“இளங்கோ, நான் உன்னைப் போல் அதிகம் படிக்கவில்லை.  விவசாயியாக மாறி விட்டேன். இருந்தாலும் சொல்கிறேன், சதா ஊர் சுற்றிக்கிட்டு இருக்கியே என்றால் எப்போது பார்த்தாலும் ஊர் சுற்றிக்கிட்டு இருக்கியே என்பது தானே பொருள்!”.

“ஆமாம் மதி. ஸ்ரீ என்ற வட சொல் நமக்கு எதற்கு? ‘திரு’ என்ற சொல் இருக்கும் போது வட சொல் தேவையா?  “எப்போதும் செல்வம்” என்பதை திருமகள் என்று கூட பெயர் வைக்கலாம்.  யோசித்துப் பார்”, என்று சொன்ன இளங்கோவன் பிறந்த நாள் கேக் பற்றி மேலும் பல செய்திகளையும் சொன்னான்.

“கேக் வகைகள் பலவற்றிலும் அதிக அளவு சர்க்கரை, கொழுப்பு இருக்கும்.  அதனால் உடல் பருமனாக உள்ளவர்களும் நீரிழிவு மருத்துவப் பயனாளிகளும் கேக் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.  அது மட்டுமல்ல மதியழகா, அதில் கவர்ச்சியாக நிறமூட்டுவதற்காக இரசாயன நிறங்களும், சுவையைக் கூட்ட சுவையூட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.  உன் பெற்றோர் பல்வேறு குறைபாடுகள் உள்ள மருத்துவப் பயனாளிகள்தானே!  அவர்களுக்குக் கொடுக்காதே”, என்று சில தகவல்களைச் சொன்னான் இளங்கோவன்.

‘சரி’, என்று பதிலளித்த மதியழகன் தொடர்ந்து பேசினான்.  “என் மகள் பிறந்த மாதமும் நேரமும் நல்லதா என்று தெரிய வேணும். அதற்காக சோதிடரையும் பார்க்க இருக்கேன்”, என்றான்.

“மதியழகா, அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காதே!  செப்டம்பர் மாதத்தில் உன் மகளுக்குப் பிறந்த நாள் வருவது மிகச் சிறப்பு தான்.  அது உனக்கும் தெரியும்தானே”

“ம்… தெரியும்.  அய்ந்தாம் தேதி ஆசிரியர் தினம்”

“உண்மைதான் மதியழகா, ஆனால், உண்மையான ஆசிரியர் நாள் ஜனவரி மாதம் 3 ஆம் தேதிதான்” என்றான் இளங்கோவன்.

“ஏன் அப்படி?” என்று கேட்ட மதியழகனுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தான் இளங்கோவன். அப்போது பூங்காவில் நடைப் பயிற்சியில் இருந்த சிலர், இவர்கள் பேசிக் கொள்வதைக் கண்டு சற்றே நின்று கவனித்தனர்.

“சாவித்திரிபாய் புலே என்ற பெண்மணிதான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.  இவர் மராட்டிய மாநிலத்திலுள்ள நைகான் என்ற சிற்றூரில் 1831 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் நாள் பிறந்தார்.  இவரது கணவர் மகாத்மா ஜோதிராவ் புலே ஆவார்.  இருவரும் இணைந்து கல்விப் பணி செய்தனர்.  இவர் 1848 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்தபின் அதே ஆண்டில் 9 பெண் பிள்ளைகளுடன் ஒரு பள்ளியைத் தொடங்கினார்.  இதை மதவாத, ஜாதியவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.  சாவித்திரிபாய் புலே மீது மலத்தையும் சேற்றையும் வீசினர்.  இப்படியெல்லாம் துன்பப்பட்டு ஆசிரியர் பணி செய்தவர் சாவித்திரிபாய் புலே. அவர்பிறந்த நாளே ஆசிரியர் நாள்.”

“அப்போ ஜனவரி மாதம் 3 ஆம் தேதியைத் தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டுமா?” என்று கேட்டான் மதியழகன்.

அதே நேரத்தில் இவர்களது உரையாடலைக் கேட்ட பலரும் அங்கே கூடிவிட்டனர்.  அவர்கள் உரையாடலைக் கேட்டனர்.

“ஆமாம். ஆசிரியர் தினம் என்று சொல்லாமல் ஆசிரியர் நாள் என்று தமிழில் சொல்ல வேண்டும்”, என்று அறிவுறுத்தினான் இளங்கோவன்.

பிறகு அவனே தொடர்ந்து பேசினான்.  “செப்டம்பர் 5ஆம் தேதி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளாகும்.

இந்த நாளை  நாம் மறக்கலாகாது.  1872 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்னும் ஊரில் பிறந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் வழக்கறிஞராகவும் தொழில் செய்தார்.  பிறகு 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள்”சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தையும் பதிவு செய்தார்.  சொந்தமாகக் கப்பலையும் வாங்கினார்.  பிறகு அரசியலிலும் இணைந்து விடுதலைக்காகவும் பாடுபட்டார். அது மட்டுமல்ல, இவர் தந்தை பெரியாரிடம் மிகவும் நட்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.  சமூக நீதியை வலியுறுத்தி, ஜாதி சமயமற்ற தலைவராகவும் விளங்கினார்.  அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் பிறந்த நாள் செப்டம்பர் 5.  அந்தத் தேதியில் அவரை நாம் நினைவு கூர்தல் வேண்டும்”.

சுற்றியிருந்தவர்களும் கேட்குமாறு உரத்த குரலில் பேசியதைக் கேட்ட அவர்கள் கைதட்டி இளங்கோவன் பேச்சை வரவேற்றனர்.

“இளங்கோ, நீ நிறைய படிக்கிறதால முக்கியமான செய்திகளைச் சொல்கிறாய்.  அவை பற்றி அறிய எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருக்கு.  எனக்கு அறிவியல் பாடம் மட்டுமே  பிடித்த பாடமாக இருக்கு.  ஏதேனும் புதுசா கண்டுபிடிக்கவும் ஆசையா இருக்கு”, என்றான் மதியழகன்.

“அது மிகவும் நல்லதுதான் மதி.  அறிவியல் விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் சமூக விஞ்ஞானியாகவும் இருக்க வேண்டும்.  அதிகம் படிக்க விரும்புவதாகச் சொன்னாய் அல்லவா!

மக்களுக்குக் கல்வி அறிவு மிகவும் முக்கியம்.  செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் உலக எழுத்தறிவு நாளாகும்.

“ஆமாம் இளங்கோ. நீ சொன்ன பிறகுதான் தெரிய வருகிறது. மறதிதான் காரணம்.  அதுபற்றி எனக்கும் இங்குக் கூடியுள்ளவர்களுக்கும் சொல்” என்றான் மதியழகன்.

அங்குக் கூடியிருந்தவர்களும் அவன் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தனர்.

“1966 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி உலக எழுத்தறிவு நாளாகக் கொண்டாடப்படுகிறது.  இந்தத் தேதியில் தான் எழுத்தறிவின்மையைப் போக்குவதற்காக ஈரான் தலை நகரான டெக்ரானில் யுனெஸ்கோ ஒரு மாநாட்டை நடத்தியது.  ஒரு நாடு முன்னேற, கல்வி அவசியம்.  தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் 82.9 சதவிகிதமாகும்.  இதுவே உத்தரப்பிரதேசத்தில் 73 சதவிகிதமாகவும், பீகாரில் 70.9 சதவீகிதமாகவும் உள்ளதாம்.  இதையெல்லாம் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த நிலையை, சில பெரிய பதவி வகிக்கும் சிறுமதியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்தரங்கில் பேசுவது போலவே பேசினான் இளங்கோவன்.  பல இளைஞர்களும் அங்குக் கூடி அவன் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தனர்.

அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மேலும் பல கேள்விகளைக் கேட்டான் மதியழகன்.

“செப்டம்பர் மாதத்திற்கு வேறு என்ன சிறப்புகள் உண்டு இளங்கோ?”.

“செப்டம்பர் 15 ஆம் நாள் ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்டிய பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.  அவரது பேச்சாற்றல், எழுத்தாற்றல் கண்டு உலகமே வியந்தது.  தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர்.  தமிழ்நாடு அவரால் தலை நிமிர்ந்தது.  அவர் பெரியாரின் அணுக்கத் தொண்டர்; சிறந்த பகுத்தறிவாதி.  கடவுள்களின் லீலைகளையெல்லாம் அம்பலப்படுத்தியவர்,” என்று சற்று உரக்கவே பேசினான் இளங்கோவன்.

“அவரது ஆங்கிலப் புலமைக்கு எடுத்துக்காட்டு கூற முடியுமா?” என்று கேட்டான் மதியழகன்.

“நிறைய இருக்கிறது.  ஒன்றை மட்டும் சொல்கிறேன்.  அண்ணா அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த மாணவர்கள் அவரை நோக்கி, A,B,C,D  என்ற நான்கு எழுத்துகளும் வராத நூறு ஆங்கில வார்த்தைகளைக் கூற முடியுமா? என்று கேட்ட போது அண்ணா ஆங்கிலத்தில் ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரை கூறி, நூறை  ‘hundred’  என்று சொல்லாமல்  ‘STOP’  என்று சொல்லி முடித்தாராம்.

இவ்வாறு இளங்கோவன் கூறியவுடன் சுற்றிக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் கை தட்டி வரவேற்றனர்.

இளங்கோவன் மேலும் பேசினான்,

“செப்டம்பர் 16 ஆம் நாள் உலக ஓசோன் நாள்.  சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியின் மீது விழாமல் பாதுகாப்பது ஓசோன் படலமாகும்.  இந்தப் படலத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவே ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் நாள் உலக ஓசோன் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.  ஓசோன் படலம் இல்லை என்றால் பூமியில் எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும்.

இளங்கோவன் தொடர்ந்து பேசினான்.

எப்படி ஓசோன் படலம் புவியைக் காக்கிறதோ, அது போலவே செப்டம்பர் 17 ஆம் நாள் உலக மக்களைப் பகுத்தறிவாளர்களாகவும், சுயமரியாதைக்காரர்களாகவும், ஜாதி, மதங்களை ஒழித்து அனைத்து மக்களும் சமம் என்று கூறி, மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று எடுத்துரைத்த தந்தை பெரியார் பிறந்த நாளாகும்.  அவர் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கே தலைவர்.  அவரது பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது.  தன் வாழ்நாள் முழுவதும் சூத்திர இழிவை நீக்கி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் எனப் போராடிய ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார். ‘அவருடன் இருந்த  காலமே எனக்கு வசந்த காலம்’  என பேரறிஞர் அண்ணா எழுதியுள்ளார்.  பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பாக அவரது சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகள் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. அவர் மறைந்து 52 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவர் பெயரைக் கேட்டாலே மதவாதிகளும், சனாதனவாதிகளும் அஞ்சி நடுங்குகின்றனர்.  செப்டம்பர் மாதச் சிறப்புகளில் தலையாய சிறப்பு 17 ஆம் தேதியாகும்.

இளைஞர்கள் பக்கம் பார்வையைத் திருப்பியபடியே பேசிய இளங்கோவனின் பேச்சை அனைவரும் கேட்டு உண்மையை உணர்ந்தனர்.

பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

மதியழகனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

“உன் மூலம் நான் மட்டுமல்ல, பலரும் உன் கருத்துகளைக் கேட்டுப் பயனடைந்தனர்.  மிகவும் மகிழ்ச்சி இளங்கோவன். இன்னும் ஏதேனும் சிறப்புகள் உண்டா ?”, என்று கேட்டான் மதியழகன்.

“திராவிட இயக்கத்தின் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் பிறந்த நாள் (1893), தி.மு.க. தோன்றிய நாள் (1949),  உடுமலை நாராயணகவி (1899 ), சார்லஸ்  பிராட்லா (1833), பகத்சிங் (1907),  ஆகியோரின் பிறந்த நாள்களும் செப்டம்பரில் தான் வருகின்றன.  மேலும் பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களும் 1877 ஆம் ஆண்டு செப்டம்பரில் தான் பிறந்தார்”, என்று சொல்லிய இளங்கோவன் மதியழகனைப் பார்த்து,

‘இப்போ சொல்லு, உன் மகள் செப்டம்பரில் பிறந்தது பற்றி என்ன நினைக்கிறாய்”. என்று கேட்டான்.

“மிகவும் பெருமைப்படுகிறேன்”, என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் மதியழகன். w