Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மில்லியன் டாலர் கேள்வி

கே: குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் வழக்குரைஞர் செய்யும் வாதம் பற்றித் தங்கள் கருத்து என்ன?

– வி.பாலன், திருவள்ளூர்

: தமிழ்நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரரான ஆளுநர் மூலம் தி.மு.க. அரசுக்கு கடந்த பல ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டு வரும் தொல்லை; நடத்தும் அதிகார அத்துமீறல் நடைமுறைகள் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க உச்சநீதிமன்றம் காலக் கெடு தந்ததைத் திசை திருப்பிடவே இப்படி ஓர் அரசியல் ஏற்பாடு. இதற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தக்க வகையில் விளக்கமும் விடையும் தருகிறார்.

அரசமைப்புச் சட்டம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இவற்றையே மதிக்காமல், ‘குறுக்கு வழி’யில் இதனைச் செயலற்றுப் போகச் செய்யும் தந்திரம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

கே: ஆம்புலன்ஸுக்கு எதிராய் மனிதநேயமற்று அரசியல் செய்யும் எடப்பாடி பழனிச்சாமியின் செயல் பற்றித் தாங்கள் கூறவிரும்புவது என்ன?

– க.சதீஷ், சென்னை

: ‘விடுதலை’  26.8.2025இல் அறிக்கையில் இது சம்பந்தமாக விரிவாக உள்ளதைப் படித்தால், தக்க விளக்கமும் விடையும் கிடைக்கும்.

கே: அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை பினராயி விஜயன் அழைத்திருப்பதையும், அதைப் பி.ஜே.பி.எதிர்ப்பதையும் அமைச்சர்களை முதல்வர் அனுப்புவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

– த.ராஜ்காந்த், ஓசூர்

: வாக்கு வங்கி அரசியலின் விசித்திரங்களாகப் பார்க்கிறோம்!

கே: உக்ரைன் போர்நிறுத்தம் குறித்து அக்கறை காட்டும் அமெரிக்க அதிபர், பாலஸ்தீனத்தின் (காசா) மீதான மனிதநேயமற்ற தாக்குதலுக்குத் துணை நிற்பதன் மர்மம் என்ன?

– ம.சண்முகம், சேலம்

: நோபல் பரிசுக்காக சுய வேட்பாளராகி உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமான் பதிலளிக்க வேண்டிய மில்லியன் டாலர் கேள்வி இது!

கே: பதவிப் பறிப்பு மசோதா நிறைவேறாமல் முறியடிக்க என்ன செய்ய வேண்டும்? நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுத் தீர்வுபெற முடியுமா?

– ரா.சுரேகா, தேனி

: உச்சநீதிமன்றம் – மக்கள் மன்றம் மூலம் தான் இறுதிப் பரிகாரம் கிடைக்கும்! எதேச்சதிகாரிகளை வரலாறு குப்பைத் தொட்டியில் போடுவது வழமை தானே!

கே: தெருநாய்கள் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் திருத்தப்பட்ட தீர்ப்பு சரியா? ஏணையில் உள்ள குழந்தைக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் நாய்களால் ஏற்படும் பாதிப்பை அலட்சியப்படுத்தலாமா?

– யா.செல்வம், கிருஷ்ணகிரி

: மனிதநேயம் காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமா? – நாய்ப்பாசம் முக்கியமா?  இனிமேல் கொசு, மூட்டைப்பூச்சி, பாம்பு முதலிய விஷ ஜந்துக்களின் பாதுகாப்புக்குக்கூட வழக்குப்போடும் மனிதர்கள் (?) மலிந்து விடுவார்கள் போலும்!

கே: பஞ்சாப் முதல்வரை அழைத்து காலைச் சிற்றுண்டித் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதலமைச்சரின் செயல் அரசியல் நல்லிணக்கத்திற்கும், பஞ்சாப் மாணவர்கள் நலனுக்கும் பயன்படும் என்பதால், ஒரு கல்லில் இருமாங்காய் என்ற முதல்வரின் ஆளுமைத்திறன் வியப்புக்குரியதல்லவா?

– மோ.எழிலரசி, காட்டுப்பாக்கம்

: நம்முடைய முதலமைச்சரின் சிறந்த அரசியல் அணுகுமுறை, மற்ற சக முதலமைச்சர்களை மதித்து, கொள்கைப் பார்வையோடு ஒருங்கிணைக்கும் அரிய நடப்பு எல்லாம் வியக்கத்தக்கது மட்டுமல்ல; பாராட்டி வாழ்த்தப்பட வேண்டிய ஒன்றும் ஆகும்!

கே: விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாகக் கொண்டாட மகாராட்டிரா அரசு முடிவு செய்திருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதுதானே?

– வெ.செந்தில், கோவளம்

: அரசமைப்புச் சட்டத்தைப் பச்சையாக மீறிய, ‘ஹிந்து’ ராஷ்டிரம்தான் எங்கள் ஆட்சி என்று பிரகடனப்படுத்தும் ஒரு வகையான எதேச்சதிகாரச் செயல். முன்பு பிள்ளையார் அரசியல் திரைமறைவில் அங்கே திலகர் காலம் தொடங்கி நடந்தது.
இப்போது முக்காடு அகன்றதும் முழு வெளிச்சத்துடன் அரசமைப்புச் சட்ட அவமதிப்பு கொடி கட்டிப் பறக்கிறது – அந்த மாநிலங்களில்.