Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு – 367

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தொடக்க விழா!- கி.வீரமணி

தந்தை பெரியார் பிறந்த நாளில் (17.9.2007) திருவரங்கம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தோம். திருச்சியில் ‘விடுதலை’ இதழின் இரண்டாம் பதிப்பைத் தொடங்கி வைத்தோம். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் ‘விடுதலை’ செய்திப் பிரிவுக்கு வந்து கணினிப் பிரிவைத் தொடங்கி வைத்தார். அச்சிடப்பட்ட முதல் பிரதியை நாம் வெளியிட, அமைச்சர் நேரு பெற்றுக் கொண்டார். ‘விடுதலை’ ஏட்டின் வரலாற்றில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ பல்வேறு எதிர்நீச்சல் களைப் போட்டு வளர்ந்து வந்ததாகும். பல பத்திரிகைகள் தங்களது பதிப்புகளைக் குறைத்து, வந்த நிலையில் ‘விடுதலை’ புதிய பதிப்பைத் தொடங்கியது. இன்று வரை திருச்சிப் பதிப்பும் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் தொடங்கப்பட்ட ‘விடுதலை’ இரண்டாம் பதிப்பின் முதல் பிரதியை ஆசிரியரிடமிருந்து கே.என்.நேரு பெற்றுக் கொள்கிறார்.

அந்நிகழ்விற்குப்பின் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் தமிழ்நாடு மகளிர் ஆணையமும் இணைந்து நடத்திய தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உரையாற்றினோம். இந்த நிகழ்வில் ஒன்றிய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி அவர்கள் பங்கேற்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கு.ம.ராமாத்தாள். அவர்கள்
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தின்
ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

அன்று இரவு புலவன்காட்டில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று சிலையினைத் திறந்து வைத்தோம். இந்த ஊர் நம் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் பிறந்த ஊர். அடிப்படை வசதிகள் அற்ற குக்கிராமம். விழாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கல்வித் தந்தை துளசி அய்யா, வீ.கே.யென்.கண்ணப்பன்எல்.கணேசன் எம்.பி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்,  பேராசிரியர் நல்.ராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

ஆசிரியருடன் புலவன்காட்டில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பெருமக்கள்

பெரியார் திடலில் பெரியார் குரல் (voice of periyar) வானொலியை 18.09.2007  அன்று தொடங்கினோம். கல்வியாளர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார். அது பெரியார் பண்பலை (Periyar FM) என்னும் பெயரில் செயல்பட்டு வருகிறது.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், ராமன் ஒரு புராணக் கதாபாத்திரமே தவிர, வரலாற்றுப் பாத்திரம் அல்ல என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். இந்துத்துவ அமைப்புகளின் வெறிக் கூச்சல் காரணமாக  இந்திய அரசின் தொல்லியல் துறையால் அந்த அதிகாரிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

இது குறித்து கருத்துத் தெரிவித்த கலைஞர் அவர்கள், “ராமன் எப்படி பாலம் கட்ட முடியும்? ராமன் என்பது புராணக் கதாபாத்திரமே தவிர, வரலாற்று மனிதன் இல்லை. ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து பாலத்தைக் கட்டினான் என்று ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் வழக்கம் போல் காலித்தனத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். வட இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பெங்களூரில் கலைஞர் அவர்களின் மகள் செல்வி அவர்கள் வீட்டைத் தாக்கினார்கள். இதற்குக், கடும் கண்டனம் தெரிவித்தோம்.

‘பெரியார் குரல்’ (voice of periyar) இணைய வானொலி தொடக்க விழா

ஆர்.எஸ்.எஸ். காலித்தனத்தை அடக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தொல்லியல் துறை அதிகாரிகள் பணி நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், சேதுக் கால்வாய்த் திட்டத்தை வலியுறுத்தியும் சென்னையில் 19.9.2007 அன்று எமது தலைமையில் ஒர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டாக்டர் சர்.அண்ணாமலை அவர்கள் பிறந்த நாள் மற்றும் தமிழ் வளர்ச்சி மன்ற விழா

அதில் கலந்து கொண்டு மத நம்பிக்கை பூஜை அறையில் இருக்க வேண்டும் மக்கள் வளர்ச்சிப் பணிகளில் தலையிட அனுமதிக்கக் கூடாது என்று முழக்கமிட்டோம். மறுநாள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டாக்டர் ராஜா சர்.அண்ணாமலை அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் அய்ந்தாம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மன்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினோம்.

வை.நடேசன் படத்தைத் திறந்து வைக்கிறார் ஆசிரியர்

ஹிந்துத்துவ அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவரும் பாரதிய ஜனதா கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் கலைஞரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்று 22.09.2007 அன்று மதக் கட்டளை பிறப்பித்தார். இப்படி ராமன் பற்றிய உண்மையைச் சொன்னதற்காக கலைஞர் தலையைச் சீவுவோம், நாக்கை அறுப்போம் என்று கூறிய ஆசாமிகளைக் கைது செய்யவேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் செப்டம்பர் 28ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் தஞ்சையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தோம். அந்தத் தலை
வெட்டித் தம்பிரான்களைக் கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் (25.9.2007) திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனக் கூட்டமும், 28ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன.

22.9.2007 அன்று காலை தஞ்சை பெரியார்பெருந்தொண்டர்கள் டி.நாராயணசாமி, மும்பை சி.என்.கிருஷ்ணன் ஆகியோருக்கு 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பாராட்டினோம். அன்று மாலை ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் வை.நடேசன் படத்திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, அடுத்த நாள் மேற்கு தாம்பரத்தில் திண்டிவனம் மாவட்டத் தலைவர் க.மு.தாஸ் அவர்களின் மகள் தா.கண்மணி – ஜெகன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தோம்.

க.மு.தாஸ் மகள் இணையேற்பு நிகழ்வு

சேதுக்கால்வாய்த் திட்டத்திற்காக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் 24.9.2007 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றோம்.

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் செப்டம்பர் 24 அன்று காலையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிலும் மாலை பெரியார் மருந்தியல் கல்லூரிக் கட்டிடத்
திற்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்றோம்.இவ்விழாவில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர்ராதிகா செல்வி, அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர்
பங்கேற்றனர். அடுத்த நாள் தஞ்சையில் கலைஞர்தலையை வெட்டவேண்டும் என்ற ராம்விலாஸ்வேதாந்தியைக் கைது செய்யக் கோரி நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம்.

தஞ்சை பெரியார் பெருந்தொண்டர்கள் டி.நாராயணசாமி, மும்பை
சி.என்.கிருஷ்ணன் ஆகியோருக்கு 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தொடக்கவிழா 29.08.2007 அன்று நடைபெற்றது.நம் அறக்கட்டளை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக
இது அமைந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

காலை 10 மணி அளவில் நடைபெற்ற தொடக்க விழா விற்கு துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக வேந்தர் என்கிற முறையில் நாம் தலைமையேற்றோம்.  பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுத் தலைவர் சுகதேவ் தொராவாட் வாழ்த்துரை வழங்கினார்.

ஒன்றிய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழ்நாடு அமைச்சர்கள் கோ.சி.மணி, டாக்டர் க.பொன்முடி,
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.என்.எம். உபயத்துல்லா, மதிவாணன், மற்றும் யுஜிசியின் துணைத் தலைவர் மூல்சன் சர்மா, இந்திரா காந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் வி.என்.ராஜசேகரன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் உரையாற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்

முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில்,

என்னுடைய அன்புக்குரிய இளவல் வீரமணி அவர்களும், இந்தப் பல்கலைக்கழகத்தை நடத்துகின்றவர்களும், துணை வேந்தர், இணை வேந்தர் என்று அத்தனை பேரும் என்னைப் பாராட்டினீர்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரு படி மேலே போய் – ஒரு படி அல்ல -ஒரு மலை உச்சி அளவுக்கு மேலே போய் வீரமணி அவர்கள் என் பேரால் ஒரு பல்கலைக்கழகமே வைக்க வேண்டுமென்றெல்லாம் இங்கே சொன்னார் அது வேறு விஷயம். ஆனால், என்னுடைய நாக்கைத் துண்டிக்கவேண்டும் என்று சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பாராட்டுகின்ற வீரமணி அவர்களையும் நான்காணுகிறேன். என்னுடைய தலையைக் கொய்திட வேண்டுமென்று கூறுகின்ற யாரோ ஒரு வடநாட்டுச் சாமியாரையும் நான் கேள்விப்படுகிறேன். நான் அதற்கெல்லாம் பயப்படவில்லை. “தலைதனைக் கொண்டு போய் தம்பி கை கொடுத்து விலைதனைப் பெற்றுன் வறுமை நோய் களையே” என்று சென்னதையும் படித்திருக்கிறேன். நான் என்னுடைய தலைக்கு நல்ல விலை கிடைக்குமேயானால், அது தங்கமோ, வைரமோ, வைடூர்யமோ, மரகதமோ, மாணிக்கமோ அதைப் பெற்றுக் கொள்ளட்டும்.

பல்கலைக் கழகத் தொடக்க விழாவில் நினைவுப் பரிசை ஆசிரியரிடமிருந்து டாக்டர் கலைஞர் பெற்றுக்கொள்கிறார்

எனக்குள்ள கர்வமெல்லாம் ஆகா, இந்தச் சாதாரண சதையாலான தலை, எலும்பாலான சதை எவ்வளவு பொன் பெறுகிறது என்பதைக் கேள்விப்பட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், அதிலே உள்ள தத்துவங்களை நீங்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டிற்காக ஒரு திட்டம் வேண்டுமென்று கேட்டால், அவன் தலை இருக்கக் கூடாது, அறுத்தெறிய வேண்டும் என்று சொல்லுகின்ற அளவிற்கு தகாதபோக்கு இன்றைக்கு நாட்டிலே வளர்ந்திருக்கிறது. அது சட்ட ரீதியாக சரியா அல்லவா என்பதை வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்; நல்ல அரசு பார்த்துக் கொள்ளும்; நாட்டிலே அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்று நினைப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், இந்தப் பெரிய திட்டத்தை நாம் கைவிட்டுவிடக்கூடாது. கைவிட்டு விடமுடியாது. அதற்காக நடைபெறுகின்ற கிளர்ச்சிகள் அறவழியில் நடைபெறப் போகின்றகிளர்ச்சிகள் எல்லாம் நம்முடைய ஆதரவோடு வெற்றி பெற வேண்டும். அந்தக் கிளர்ச்சிகள் வெற்றி பெற்றால்தான் – அந்த அறப்போர் வெற்றி பெற்றால்தான் – நம்முடைய உள்ளம் திறந்து காட்டப்பட்டதாக அர்த்தம். தமிழ்நாடு எதற்கும் தயாராக இருக்கிறது. வன்முறைக்கல்ல, அறவழியில் நாம் அடைய வேண்டிய விஷயங்களை, அடைய வேண்டிய சாதனைகளை அடைந்தே தீர வேண்டுமென்ற அந்த ஓர் உண்மையை உரைப்பதற்கு பாலு பேசியதும், அதைத் தொடர்ந்து நான் சொன்னதும் பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை என்னுடைய நெஞ்சில், நினைவில் என்றென்றும் நிற்கக்கூடிய கருத்து. இதை என்னுடைய முயற்சியினால் கொண்டு வரப்பட்டது என்று சொன்னார்களே, அல்ல. என்னுடைய முயற்சி எப்போது – ஒரு கிணற்றில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தேங்கி அது மேலே கையளவுக்கு வந்து, பாத்திரம் போட்டு அதை மொள்ளுகிற அளவிற்கு அது வந்தால்தான் சுலபமாக மொள்ள முடியும். அப்படி இந்த வல்லத்திலே கிணறு வெட்டி, ஊற்றெடுத்து, அந்த ஊற்றுத் தண்ணீரைக் கிணற்றின் மேல் மட்டம் வரை கொண்டு வந்து வைத்தவர் என்னுடைய அருமைத் தம்பி வீரமணி அவர்கள். அந்தத் தண்ணீரைத் தான் நானும், அர்ஜுன் சிங் அவர்களும் டெல்லியிலே பேசி முடிவெடுத்து இங்கே பல்கலைக்கழகமாக உங்கள் முன்னால் தோன்றச் செய்திருக்கிறோம்.

இந்தப் பல்கலைக்கழகத்திலே பயிற்சி பெறுகின்ற மாணவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், பெரியார்-மணியம்மை என்கின்ற அந்த இரண்டு பெயர்களின் மீதும்; அவர்கள் சொன்ன கொள்கைகளின் மீதும் எவ்வளவு பற்றுள்ளவர்களாக அந்த மாணவிகள் இருக்கிறார்கள் என்பதை நான் இங்கேயும் புரிந்து கொண்டேன், யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என்பதை அங்கேயிருந்து வருகின்ற ஒலியின் மூலமாக என்னால் தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவிகள் எங்கே இருக்கிறார்கள், மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அந்த மாணவிகள் போட்ட கோஷங்கள் (மாணவிகள் முழக்கம்) இதைத்தான் சொன்னேன், எப்படிப் போட்டீர்கள் என்று முதலில் சொல்ல முடியவில்லை. இவை எல்லாம் எவ்வளவு ஆர்வத்தை, எவ்வளவு உணர்ச்சியை எங்களுக்கு உண்டாக்குகின்றன. இதற்கு என்ன காரணம் என்றால், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உருவானது என்பதிலே எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறதோ, அவ்வளவு மகிழ்ச்சி இந்த மாணவச் செல்வங்களுக்கும் இருக்கிறது. இந்த மாணவச் செல்வங்களைப் பெற்றவர்களுக்கும் இருக்கும்.

நாங்கள் பெரியார் ஆட்சிக்குக் காரண கர்த்தாக்கள் என்றால், பெரியாருடைய மாட்சிக்குக் காரணகர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.

நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு
வருகிறேன். திராவிடர் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே ஊடல் ஏற்பட்டு, ஏன் பேச்சு
வார்த்தைகூட இல்லாத சூழ்நிலை ஏற்பட்ட
போதெல்லாம் கூட அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்கின்ற ஒரு நிலையைப்போல், நான் அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவன். ஏனென்றால், அப்படி எட்டிப் பார்த்தது சதிக் குணத்தால் அல்ல. துர்க்குணம் என்பார்களே, அந்தக் குணத்தால் அல்ல. எட்டிப் பார்த்ததுநாம் அந்த வீட்டைத் தாய்வீடாகக் கொண்டவர்களாயிற்றே, அந்தத் தாய்வீட்டில் நடக்கின்ற காரியங்களை
யொட்டித்தானே நம்முடைய வீட்டிலும் செயல்பாடு
கள் நடைபெறவேண்டும் என்பதற்காக, சுருக்கமாகச் சொன்னால் – புரியும்படி சென்னால் அதைப் பார்த்து நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதற்காக எட்டிப் பார்த்ததுண்டு (கைதட்டல்). அது ஒன்றும் அல்ல; பள்ளிக்கூடத்திலே சொல்
வார்களே, ‘காப்பியடிப்பது’ என்று, அதைப் போன்றதல்ல. இப்படி காப்பியடிப்பது தவறல்ல.

என்னுடைய வயதைவிட, ஓரிரு வயது – மூன்று, நான்கு வயது வீரமணி அவர்கள் இளையவராக இருக்கலாம். ஆனாலும், அவர் எங்களைவிட அதிகமாக பெரியாரிடத்திலே பக்கத்திலே இருந்து பழகியவர். ஆனால், நாங்கள் பெரியாரிடத்திலே கற்பதற்காகப் பெற்றிருந்த வாய்ப்பைவிட அதிக வாய்ப்பைப் பெற்றவர் அவர். எந்த ஒரு பிரச்சினையும், ஒரு கடுகளவுப் பிரச்சினையாக இருந்தாலும், மலை போன்ற பிரச்சினையாக இருந்தாலும், கடல் அளவுப் பிரச்சினையாக இருந்தாலும் அதைப்பற்றி அருகிருந்து விவாதிக்கின்ற அந்த அருமையான வாய்ப்பை எங்களைவிட அதிக காலம் – இன்னும் சொல்லப்போனால் அறிஞர் அண்ணாவைவிட அதிகக் காலம். அந்த வாய்ப்பை அவர் பெற்றிருந்த காரணத்
தால்தான், பெரியாருடைய எண்ணங்களை
யெல்லாம் நாட்டில், சமுதாயத்தில் செயல்படுத்த
வேண்டும் என்று எண்ணுகிறார். அவர் எண்ணு
வதை வெற்றியாக்கிட வேண்டும் என்று நாங்கள்
விரும்புகின்றோம். அந்த எண்ணங்கள் வெற்றி
பெற்றால்தான் இந்தச் சமுதாயம் மானமுள்ள சமுதாயமாக வாழ முடியும்.

இந்த அருமையான முயற்சிக்கு வித்திட்ட, இதையொரு பெரிய தருவாக வளர்த்த, என்னு
டைய அருமை இளவல் வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் மறைந்தாலும்கூட இன்னும் ஆயிரம் ஆண்டு காலம், வள்ளுவரைப் போல், அவர் வாழக்கூடிய அளவிற்கு பெரியாருடைய
பெயரை தமிழகத்திலே நிலை நிறுத்திய
அந்தப் பெருமை, எங்களைவிட அதிகமாக
வீரமணி அவர்களைத்தான் சேரும். எனவே,
அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை
வழங்கி இந்த அளவில் விடைபெறுகிறேன்.

(29.09.2007 சனியன்று காலை தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தொடக்க விழாவிற்குத் தலைமையேற்று தொடங்கி வைத்து டாக்டர் கலைஞர் ஆற்றிய பேருரை)
– ‘
விடுதலை’, 30.9.2007

(நினைவுகள் நீளும்…)