Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நாம் யார் என்பதை உணரத் தொடங்கியுள்ளோம். நம்மால் உலகையே பாதுகாக்க முடியும். விரைவில் உலகையே வழி நடத்துவோம். இதற்காக வேதத்தை உலகெங்கும் பரப்பிட வேண்டும்” என்று  வேதம் ஓதிக்கொண்டிருந்த வேலையிலிருந்து, வேதம் ஓதுகிறவர்களைப் பாதுகாப்பதற்காக  தமிழ்நாடு ஆளுநராக ஆர்.எஸ்.எஸ்.ஸால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் பார்ப்பனர்களால் நடத்தபட்ட “வேத சம்மேளனம்” நிகழ்வில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். மேலும் வேதங்கள் மூலமாக நாடு ஒருங்கிணைக்கப்பட்டது என்றும், பாரத நாடு மட்டுமே உலகில் அறிவு, ஆன்மிகம் போன்றவற்றை வேதம் மூலமாகக் கண்டறிந்து, வேதங்கள் மூலமாகவே இந்த நாடு ஒருங்கிணைக்கப்பட்டது என்றும் பாரத சனாதன மரபின் மாபெரும் தெய்வப்புலவர் என்று திருவள்ளுவரைச் சொல்லும் அளவிற்கு அவருக்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டிருகிறார்.

உண்மையில் அவர்கள் யார் என்பதை உணர்ந்து உலகுக்குச்  சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்தான். அவர் சொல்கிறார்,

“இவர்கள் நாவிலே இராமனையும் – கைகளிலே கூர் வாளையும் வைத்திருப்பார்கள். யோகிகளைப் போன்று பேசுவார்கள். ஆனால், கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பார்கள். ஆனால், விலங்கிலும் கேவலமாக மனிதனை நடத்துவார்கள். இவர்களுடன் சேராதீர்கள். இவர்கள் மிகக் கொடிய வஞ்சனையாளர்கள். எறும்புக்குச் சர்க்கரை உணவிடுவார்கள்; ஆனால், இங்குள்ள மனிதர்கள் குடிப்பதற்கு –  நீரெடுக்கத் தடை விதிப்பார்கள். இவர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்.” அதனால்தான் ஆளுநர் ரவி மட்டுமல்ல, அவரின் முன்னோடிகள் முயற்சிசெய்தும் அவர்களுடனான தொடர்பை வைத்திருக்காமல் ‘GET OUT’ சொல்கிறது தமிழ்நாடு.

ஆளுநர் பதவிக்கான அதிகாரங்களைப் பொம்மைத் தன்மை செய்து  அரசமைப்பை வழங்கிய அம்பேத்கரின் சொல்லில் இருந்துதான் ஆளுநர் ரவியை அணுக வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்ய மக்களால் அனுமதிக்கப்படாத மாநிலங்களையெல்லாம் ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்து வருகிறது. ஒன்றிய பாஜகவின்  எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் ஆட்சி செய்யும்  மாநிலங்களுக்கான ஆளுநர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை அரசு நிருவாகத்தில் தலையிட்டு, அவர்கள் கொண்டுவரும் திட்டங்களைத் தடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆட்சி, காலத்தை ஒன்றுமில்லாமல் கடத்துவது. ஆனால், ஆளுநர் ரவிக்கு கூடுதலாய் பொறுப்பை, கொடுத்து அனுப்பி இருக்கிறது பாஜக.

தந்தை பெரியாரின் தீவிரமான இந்துத்துவ மறுப்பு அரசியல் கொண்டாடப்படும் தமிழ்நாட்டில் எவ்வளவுதான் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி கோப்புகளை நிறுத்திவைத்து ஆளும் திராவிட மாடல் அரசுக்கு தொந்தரவு கொடுத்தாலும் இங்கே காலூன்ற முடியவில்லை என்பதற்குக் காரணம், சமூகநீதிச் சித்தாந்தத்தில் ஆழ வேரூன்றி இருக்கிறது தமிழ்நாடு என்பதால்தான். எனவே, அதில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ். சிறப்பு வேலைத் திட்டத்துடன் செயல்பட்டு வருபவர்தான் ஆளுநர் ரவி. 3000 தீட்சித பார்ப்பனர்களின் ஒருவர் கூட தீயில் இறங்கி பக்தியை மெய்ப்பிக்காதபோது பிறப்பில் தாழ்ந்தவன் என்பதால் நந்தனாரைத் தீயில் இறங்கச் செய்த ஸனாதனச் செயலை மறைத்து 100 பறையர்களுக்குப் பூணூல் அணிவித்து புனிதப் படுத்துவதாகவும், வேத மறுப்பு இயக்கம் நடத்திய வடலூர் ராமலிங்க வள்ளலாரை சனாதனத்தின்  அடையாளமெனப் பொய் பேசுவது இவ்வாறாக சுற்றித் திரிந்து வருகிறார். ஆனால் உண்மையில் அவர் யார் என்பதை பார்ப்பனர்கள் மட்டும் கூட்டமாய்க் கலந்து சமஸ்கிருதத்தில் ஓதிய வேத சம்மேளன  நிகழ்வில் காட்டிவிட்டார்.

கடவுள் படைப்புகளை உருவாக்கினார்; அந்தப் படைப்புகளின் ஒவ்வொரு அங்கத்திலும் வேதங்கள் இருக்கின்றன; 1000 ஆண்டுகளுக்கு முன்பே உருவான வேதங்கள் மூலம் நித்திய அறிவைக் கொண்டு ரிஷிகள் நாட்டை வழிநடத்திச் சென்று இருக்கின்றனர். நமது பாரதம் வேதங்களின் தயாரிப்பாகும். வேதங்கள் தான் நம் நாட்டின் தாய் என்கிறார்.

வேத பிராமணர்கள் வழிநடத்திய ஆட்சி எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதற்கு, நால்வர்ண அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ராம ராஜ்யம் பார்ப்பனர்களின் ராஜ்யமாக இருந்ததற்கான சான்றாக சம்பூகன் என்ற சூத்திரனின் தலை வெட்டப்பட்டதே சாட்சி என்கிற அண்ணல் அம்பேத்கர்,

“ராமன் சம்பூகனுக்குக் குறைவான தண்டனையை அளிக்கவில்லை. அதனால் தான் வேதம் ஓதுகிற சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும், வேதம் ஓதப்படுவதைக் கேட்கின்ற சூத்திரனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் கடுமையான தண்டனைகளை மனுஸ்மிருதி விதித்திருக்கிறது” என்கிறார்.

இப்படி இருக்கும் போது பாரதம் மட்டுமின்றி உலகின் அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என வேதங்கள் சொல்லுகின்றன என்று பொய் பேசித் திரிகிறார் ஆளுநர் ரவி.

ராம ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதற்காகவே நாட்டைக் காவிமயமாக்கும் திட்டத்திற்கு ஆளுநர்களைக் கூட்டுச் சேர்த்து வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். திட்டம் நால்வர்ண அமைப்பு முறையை பாதுகாப்பது; அதைத்தான் உலகமே பின்பற்றப் போகிறது என்கிறார் ரவி.

“இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது நால்வரும் அமைப்பை மீண்டும் வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என நம்புகிறவன் எதிர்பார்க்கிறவன் பிறவி முட்டாளாக தான் இருக்க முடியும்” என்கிறார் அம்பேத்கர். வேதங்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லுகிற ஆளுநர் ரவியை அம்பேத்கர் முட்டாள் என்கிறார்.

உண்மையில் வேதங்கள் பிராமணர்களின் வாழ்நாள் பாதுகாப்பு காப்புறுதிகள். அதனால்தான் வேதங்களைப் போற்றி விழா எடுக்கிறார்கள்; வேத பார்ப்பனர்கள் புகழ்ந்துரைக்கிறார்கள். பெரும்பான்மை ஹிந்துக்களை அடக்கி ஆள்வதற்கு வேதங்களின் தலைமைத்துவத்தைத் தமதாக்கி நம்ப வைத்ததே பார்ப்பனியத்தின் சூழ்ச்சிகளில் முதன்மையானது.

பார்ப்பனியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆறு. அவை,

  1. பல்வேறு வகுப்புகளுக்கு இடையே உள்ளபடி நிலைப் படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்.
  2. சூத்திரர் மற்றும் தீண்டத்தகாத மக்களை முழுமையாக ஆயுதமற்ற மக்களாய் ஆக்குதல்.
  3. சூத்திரர் – தீண்ட தகாத மக்களுக்கு கல்வியை முற்றிலும் தடை செய்தல்.
  4. சூத்திரர் – தீண்டத்தகாதவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருந்து முற்றிலும் தடை செய்தல்.
  5. சூத்திரர் – தீண்டத் தகாதவர்கள் சொத்து வைத்திருப்பதையும் சேகரிப்பதையும் தடை செய்தல்.
  6. பெண்களை அடக்கி அடிமை நிலையிலும் தொண்டூரில் நிலையிலும் வைத்திருத்தல்.

ஏற்றத்தாழ்வுதான் பார்ப்பனியத்தின் அதிகாரப்பூர்வக் கொள்கையாகும் என்று பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

நாம் வேதங்களில் இருந்து பிரிந்து விட்டோம் என்று பாரதம் மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது என்று சொல்லும் ஆளுநர் ரவியின் நம்பிக்கை என்பது ராமராஜ்யம் ஆட்சியைத் தொடரும் நரேந்திர மோடியின் ஆட்சியின் மீதுதான்.

பார்ப்பனர்கள் கொண்டிருப்பதாக –  அம்பேத்கர் சொல்லும் மேலே சொன்ன கோட்பாடுகளைத் தான் உலகெங்கிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிறார் ரவி. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள சமத்துவ சுதந்திர ஜனநாயக சட்ட மாதிரிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தையே பார்ப்பனர்கள், பாசிச பாஜக சக்திகள் இப்போது வரை மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, நால்வர்ண வேதங்களை உலகெங்கிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார். உலக நாடுகள் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் முன்னேற்றம் தடைபட்டதற்கும் உள்ள வேறுபாடு மாற்றவே முடியாதபடி அவர்கள் செய்து வைத்திருந்த வேதங்கள் தான் என்கிறார் அம்பேத்கர்.

பாரதம், தேச பக்தி என்று கூறும் மோடி முதல் ஆளுநர் ரவி வரை ஹிந்துத்துவ அமைப்பின் தலைவர்களின் உண்மை முகத்தைப் பார்ப்போம்.

(தொடரும்)