மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் அய்ந்தாவது மாடியின் ஒரு பகுதியில் மின் நூலகம் என்று பெயர் போடப்பட்டிருந்தது. உள்ளே சென்றால் அங்கு நூல்கள் எதுவும் இல்லை. 44 கணினிகள் வரிசையாக 4 வரிசைகளில் போடப்பட்டு இருந்தன.எல்லாக் கணினிகளுக்கு முன்னாலும் இளம் வயது ஆண்களும், பெண்களும் அமர்ந்து இருந்தனர். சிலர் கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும் தலையணி ஒலிவாங்கி (ஹெட்செட்) அணிந்திருந்தனர். நான் உள்ளே சென்றவுடன், “மின் நூலகத்தில் வாசகராக நீங்கள் பதிந்து இருக்கிறீர்களா?” என்று மின் நூலகத்தின் நூலகர் கேட்டார். “இல்லை” என்று சொன்னேன். இதில், உறுப்பினராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது, ஒரு படிவத்தைக் கொடுத்து இதனை நிரப்பி, உங்கள் செல்பேசி எண்ணைக் கொடுத்து நீங்கள் உறுப்பினராக ஆகலாம் என்றார்.
நாம் அறிவோம், மின் நூலகம் என்பது இணையதளத்தின் வழியாக நாம் பயன்படுத்தும் நூலகம். நூலகங்களில் நூல்களை எடுத்துப் படிப்பதுபோல இணையத்தின் வழியாக, புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்கும் நூலகம். இதில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. இதில் இலவசமாக நூல்களை நமக்கு அளிக்கும் மின் நூலகங்கள் இருக்கின்றன. கட்டணம் கட்டிப் பயன்படுத்தும் மின் நூலகங்களும் இருக்கின்றன.
இங்கு இருக்கும் மின் நூலகம் என்பது போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்று நூலகர் சொன்னார். ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்குக் கட்டணம் ஏதும் இல்லை. நீங்கள் உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து இந்த மின் நூலகத்தில் உறுப்பினர்களாக ஆகிக் கொள்ளலாம் என்றார். முதலில் நானும் என்னோடு வந்திருந்த எனது மகன்
சொ.நே.அன்புமணியும் அங்கு உறுப்பினர்களாக ஆனோம்.
என்னிடம் நூலகர், உங்களோடு இந்தக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மின் நூலகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 4015 என்றார். அப்போது ஓர் இளைஞர் வந்தார். தனது செல்பேசி எண்ணை அங்கு இருக்கும் பதிவேட்டில் பதிவு செய்தார்.கொஞ்ச நேரம் பொறுங்கள் என்று நூலகர் அவரிடம் சொல்லிவிட்டு, ஏற்கனவே ஒரு கணினியில் அமர்ந்து இருந்தவரிடம் உங்கள் நேரம் முடிந்துவிட்டது,அடுத்தவருக்குக் கணினி கொடுக்க உதவுங்கள் என்றார். சரி என்று சொன்ன அவர் கொஞ்ச நேரத்தில் எழுந்துகொள்ள, புதிதாக வந்தவர் அங்கு அமர்ந்து கணினியில் படிக்க ஆரம்பித்தார்.
மொத்தம் இந்தக் கலைஞர் நூற்றாண்டு மின் நூலகத்தில் 44 கணினிகள் இணைய இணைப்போடும், தலையணி ஒலிவாங்கி வசதியோடும் இருக்கின்றன. இந்த மின் நூலகத்தின் உறுப்பினர்கள் இந்தக் கணினிகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு மணி நேரம் என்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது. போட்டித்தேர்வுகள் சம்பந்தப்பட்ட இணையதளங்கள், யூ டியூப்கள் இந்த மின் நூலகத்தில் கிடைக்கின்றன.கையில் கொண்டு வரும் எதையும் இந்தக் கணினியில் பதிவேற்றம் செய்யமுடியாது. எல்லா இணையதளங்களுக்குள்ளும் செல்ல இயலாது. போட்டித் தேர்வுகளுக்கு என்றே தனியான மின் நூலகமாக இந்த நூலகம் செயல்படுகின்றது என்று அந்த நூலகர் குறிப்பிட்டார்.
வீட்டில் இருக்கும் சொந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து நூலகத்தில் படிக்கும் வசதியை கலைஞர் உருவாக்கினார். சொந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்து படிக்கும் அறை என்பது எளிய வீட்டுப் பிள்ளைகளுக்காக. எளிய பின்னணியில் இருந்து வரும் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகளுக்கு, அவர்கள் இருக்கும் சூழல் என்பது பெரும்பாலும் படிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தும் சூழலாக இருக்கும். மின் விசிறி போன்ற வசதிகளோ நல்ல மின் விளக்கு வசதிகளோ இல்லாத சூழலாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவ மாணவியர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்தப் புத்தகங்களைக் கொண்டுவந்து படிக்கும் அறையைப் பயன்படுத்துவார்கள் என்ற அற்புதமான யோசனையோடு டாக்டர் கலைஞர் அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்தமாக நூல்களைக் கொண்டு வந்து படிக்கும் அறையை உருவாக்கினார்கள்.
மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் சொந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து படிக்கும் அறை இருக்கிறது. அதில் இடம் பிடிப்பதற்குக் கடுமையான போட்டி இருக்கிறது. குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து, நல்ல மின் விளக்கு வசதியோடு மணிக்கணக்கில் உட்கார்ந்து தங்கள் பாடப் புத்தகங்களையும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களைப் படிப்பவர்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.
‘சிகரம் தொடு’ என்ற தலைப்பில் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், இந்தச் சிகரம் தொடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடம் நடத்துகிறார்கள்; தாங்கள் எப்படி வெற்றிபெற்றோம் என்பதைப் போட்டித்தேர்வு மாணவ, மாணவிகளோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அப்படி பகிர்ந்து கொள்கிறவர்கள், தாங்கள் போட்டித் தேர்வுக்குத் தயார் செய்தபோது பயன்படுத்தி – உதவிய இணைய தளங்களை, யூ டியூப் செயலிகளைக் குறிப்பிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டித் தேர்வு மாணவ மாணவிகள் அத்தனை பேர் வீட்டிலும் கணினி வசதியோ இணைய வசதியோ இருப்பதில்லை. அப்படி இருப்பவர்களை மனதில் கொண்டு, சமூக நீதிக்கான சரித்திர நாயகர், திராவிட மாடல் அரசின் நாயகர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் போட்டித் தேர்வுகளுக்கான மின் நூலகம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செயல்படுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எப்போதும் திராவிட இயக்கம் என்பது இல்லாமல் இருப்பவர்களைப் பற்றிச் சிந்திக்கும் இயக்கம். அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எப்பாடுபட்டாவது கல்வியைக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கும் இயக்கம். புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் கிடைக்கும் அறிவு, வசதி என்பது அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் இயக்கம். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாக் கூட்டங்கள், திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன. எங்களைப் போன்றவர்கள் அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதும், பங்கு கொள்ளும் போதும் நூற்றாண்டுகளுக்கு முன் நமது திராவிடச் சமுதாயம் இருந்த நிலைமைக்கும் இன்றைக்கு இருக்கும் நிலைமைக்குமான வேறுபாடு மடுவுக்கும் மலைக்குமான வேறுபாடாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். நாம் மானமும் அறிவும் பெற்றதற்கான அடிப்படை நமக்குக் கிடைத்த கல்வி; அந்தக் கல்வியைக் கற்கவேண்டும் என்னும் ஊக்கத்தை ஊர்தோறும் படிப்பகத்தின் வாயிலாக விதைத்த – பரப்பிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் உழைப்பால் கிடைத்திருக்கும் கலைஞர் நூற்றாண்டு மின் நூலகம் போன்ற நூலகங்கள் பல இடங்களிலும் உருவாகட்டும்.கல்வி என்னும் தீப்பந்தம், ஜாதி என்னும் மடமையை, அடிமை – ஆண்டான் என்னும் அக்கிரமத்தைச் சுட்டுப் பொசுக்கும் தீப்பந்தம். அந்தக் கல்வியும், இணையக் கல்வியும் தரும் மின் நூலகங்கள் நோக்கி நம் பிள்ளைகள் வருவதற்கு நாம் வழிகாட்டுவோம். அந்த ஏற்பாட்டைச் செய்து தந்திருக்கும் திராவிட மாடல் அரசைப் போற்றுவோம்! உளமாரப் பாராட்டுவோம்! w





