தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து, அதன் கொள்கைகள் என்னென்னவென்று அறிவித்தாரோ அந்தக் கொள்கைகளை ஈடேற்றும் வீரத்தளபதிகளாக சுயமரியாதை இயக்கத்தொண்டர்கள் இருந்தனர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தின் மீது உறுதி ஏற்று பதவி ஏற்பது போல, தந்தை பெரியார் முன் சுயமரியாதை இயக்க வீரர்கள் உறுதியேற்று தங்கள் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதி ஒட்டுகளைத் துறந்தனர். ஆதிக்க ஜாதி என்று கருதப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும் தன் சொந்த ஜாதியினர் பகைக்குள்ளாகி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போரிட்டு வென்றனர். கொள்கையே வாழ்வியல் முறையாகக் கொண்ட அரும்பெரும் தளபதிகள் எஸ்.இராமச்சந்திரன், ஊ.பு.அ.சவுந்திரபாண்டியன், அறிஞர் அண்ணா, பாவலர் பாலசுந்தரம், ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆகியோர் தந்தை பெரியார் பிறந்த மாதமான செப்டம்பரில் பிறந்த சிறப்புக்குரியவர்கள். நமது இயக்க இளைஞர்கள் கற்க வேண்டிய இந்த சுயமரியாதை சுடரொளிகளின் தொண்டைக் காண்போம்.
சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ்.இராமச்சந்திரன்:
செப்டம்பர் – 16 – 1884 சிவகங்கைச் சீமையில் பிறந்த எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் தளபதிகளில் முதன்மையான தளபதியாகத் திகழ்ந்தவர். எதற்கும் அஞ்சாத எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தாலுகா போர்டு தலைவராய்ச் செயல்பட்டு வந்த நேரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில், இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பானுக்காவது உத்தியோகம் கொடுப்பதில்லை என்று உறுதியேற்ற சுயமரியாதை வீரர்.
தேவகோட்டைக்கு அருகிலுள்ள இரவுசேரிநாட்டில் ஆதிக்க ஜாதியினருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஜாதி மோதல் ஏற்பட்டது. அப்போது, ஆதிதிராவிட ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த அந்தக் கிளர்ச்சி மோதலாக வளர்ந்துவிட்ட நிலையில், எஸ். இராமச்சந்திரன் அவர்கள் உயிரைத் துச்சமெனக் கருதி, கலவரப் பகுதிக்குச் சென்று இருபிரிவு மக்களையும் அழைத்து அமைதியை ஏற்படுத்திய வீரர்.
சிவகங்கைச் சீமை மன்னர் சத்திரங்களில் பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும் கல்வி வழங்கப்பட்ட நிலையை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மாணவர்களும் கல்வி பெறும் உரிமையைப் பெற்றுத்தந்த பெருமைக்குரியவர்.
வழக்குரைஞரான இராமச்சந்திரன் அவர்கள் நீதிமன்றத்தில் தண்ணீர்ப் பானைகளில் கடைபிடிக்கப்பட்ட ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து அனைவரும் தண்ணீர் அருந்தும் உரிமையைப் பெற்றுத்தந்த பெருமகனார் ஆவார்.
செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாம் சுயமரியாதை இயக்க மாநாட்டில், பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப்பட்டங்களைத் துறக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து, இன்று முதல் ராமச்சந்திரன் சேர்வையாகிய நான் இராமச்சந்திரன் எனப் பிரகடனப்படுத்தி வரலாற்றில் நிலைத்தவர் நம் இராமச்சந்திரன்!
நீதிக்கட்சி அமைச்சரவையில் பதவியேற்க முதலமைச்சர் முனுசாமி அழைத்தபோது அதனை மறுத்து, இயக்கப் பணியாற்றிய ஏந்தல் இராமச்சந்திரன் அவர்கள் தனது 48 ஆம் அகவையில் அதாவது 26.02.1933 அன்று முடிவெய்தினார்.
“சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ்.இராமச்சந்திரன் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய்விட்டோம். நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன் திடுக்கிட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தோழர் ராமச்சந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெருநஷ்டமேயாகும்” என ‘குடிஅரசு’ நீண்ட அறிக்கையை வெளியிட்டது.
(‘குடிஅரசு’ – துணைத் தலையங்கம் – 05.03.1933)
இயக்க வளர்ச்சிக்கு உடல்- பொருள் – ஆவியை ஈந்த உத்தமர் ஊ.பு.அ.சவுந்திரபாண்டியன்:
மதுரை மாவட்டம் பட்டிவீரன் பட்டியில் 1893 செப்டம்பர் 15 ஆம் நாள் பிறந்த சவுந்தரபாண்டியன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து, ஜாதி மறுப்புத் திருமணங்கள், விதவை மறுமணம் பலவற்றை செய்து வைத்து, தீவிர இயக்கத் தொண்டாற்றினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக இருந்தபோது, ஆதிதிராவிடர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.
1929 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17, 18 நாள்களில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். தலைவரை முன்மொழிந்து தந்தை பெரியார் ஆற்றிய உரையில், “இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கயிருக்கிற நாடார் அவர்களைப் பற்றிச் சொல்ல வருவது என்பது பகலில் சூரியனைக் காட்டுவதற்குத் தீவட்டி பிடிப்பது போலாகும். அவர் சுயமரியாதைக் கொள்கைகளில் மூழ்கியவர்; அக்கொள்கைகளை மனப்பூர்த்தியாக ஒப்புக்கொண்டு ஒழுகுகின்றவர்; மற்றவர்களும் இக் கொள்கைகளை ஏற்று நடப்பதற்குத் தன்னுடைய உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தஞ்செய்து தொண்டு செய்வதற்குத் தயாராயிருக்கிறார் என நான் மனப்பூர்வமாகச் சொல்லுகின்றேன். அப்பேர்ப்பட்ட பெரியார் நமக்குக் கிடைத்தது நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு அறிகுறி” என்று குறிப்பிட்டார்.
சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக சவுந்திரபாண்டியன் அவர்களை நியமித்த அறிவாசான் பெரியார், தன்னைத் துணைத் தலைவராக அறிவித்துக் கொண்டார் என்றால், சவுந்திரபாண்டியன் அவர்களது இயக்கத்தொண்டு எத்தகையது என்பதை உணரலாம்.
குடும்பத்துடன் சிறையேகிய கொள்கைப் பாவலர் பாலசுந்தரம்:

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சி எனும் சிற்றூரில் செப்டம்பர் – 15 – 1909 அன்று பிறந்த பாலசுந்தரம் தனது 26 ஆம் அகவையில் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து தொண்டாற்றினார்.
பாவலரும், எழுத்தாளரும், பேச்சாளருமான பாலசுந்தரம் அவர்கள் இயற்றிய பராசக்தி நாடகம்தான் பின்னர் திரைப்படமாக வெளிவந்து பெரும் புகழ் ஈட்டியது.
1938 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பாவலர் பாலசுந்தரம் தனது பேச்சாற்றலால் மக்களை அணிதிரட்டினார். பாவலர் பாலசுந்தரம் மீது வகுப்பு வெறுப்பு குற்றம்சாட்டி இராஜகோபாலாச்சாரி ஆட்சி வழக்குத் தொடுத்தது. இந்தி எதிர்ப்புப் போரில் வாழ்விணையர் பட்டு, கைக்குழந்தையான மகன் தமிழரசனோடு சிறை யேகிய பாவலர் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். தன் குடும்பத்துடன் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்த வீரரானார் நம் பாவலர். தமிழ் அரசு, தென்சேனை, வாழ்வு ஆகிய இதழ்களை நடத்தி சிறந்த இதழாளராகவும் விளங்கிய பாவலர் பாலசுந்தரம் திராவிடர்கள் பின்பற்ற வேண்டிய பல்கலைவாணர் ஆவார்.
பதிப்பாசிரியர் ஈ.வெ.கிருஷ்ணசாமி:

செப்டம்பர் – 28 – 1877 அன்று பிறந்த தந்தை பெரியார் அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் சுடர்களான குடி அரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய இதழ்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்து இயக்கத் தொண்டாற்றினார். இயக்க ஏடுகள் வீசிய புரட்சிகரக் கருத்துகளால் சிறையேகினார் கிருஷ்ணசாமி அவர்கள். இயக்கத்தின் இதழ் ஆசிரியத் தொண்டில் தன்னை இணைத்துக்கொண்டு ஈகம் செய்த ஈ.வெ.கி. அவர்களின் தொண்டைப் போற்றுவோம்.
(சுடர் பரவும்…)







