Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடத்தால் வீழ்ந்தோமா

50 ஆண்டுகால திராவிட ஆட்சிக் காலத்தில் எல்லாம் சீரழிந்து விட்டது, நாசமாய்ப் போய்விட்டது, மாற்றம் வேண்டும் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் ஊடக சங்கிகளையும், போலித் தமிழ் தேசிய சொங்கிகளையும் சந்திப்பது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்று.

இந்தத் திருட்டு நரி ஊளையை ஆரம்பித்து வைத்தது யாரென்று கூர்ந்து கவனித்தால் கடைசியில் ஒரு பார்ப்பனச் சங்கியிடம் போய் நிற்கும். 50 ஆண்டு கால திராவிட அரசியல் எப்படித் தோற்றது? அல்லது அதற்கான ஏதாவது புள்ளி விவரங்கள் உண்டா?

இந்தக்  கேள்வியைக்  கேட்டால், பெரியார் தமிழ் விரோதி, கருணாநிதி குடும்பம், ஈழத்தமிழர் படுகொலை, “அய்யோ அம்மா” என்று கூக்குரல் போட்டு விட்டு ஓடி விடும் பலரைத் தொடர்ந்து நாம் பார்க்கிறோம்.

குறிப்பாக போலித் தமிழ் தேசியம் பேசும் பலர், திராவிட அரசியல் மீதான வன்மத்தைப் பரப்புவது தங்கள் அரசியல் இருப்புக்காகவே தவிர, அரசியல் கருத்தாக்கத்திற்கு அல்ல.

எந்தப் புள்ளி விவரங்களும் இல்லாமல் கடந்த 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தமிழ்நாடு அடைந்திருக்கிற முன்னேற்றங்களைப் பற்றிய எந்த சுய சிந்தனையும் இல்லாமல் இளம் தலைமுறை மீது ஒரு கற்பிதம் தொடர்ந்து திணிக்கப்படுகிறது.

பாலாறும், தேனாறும் ஓடிக்கொண்டிருந்த தமிழ்நாடு கடந்த 50-60 ஆண்டுகளில் திராவிட அரசியல் பிச்சை எடுக்க வைத்துவிட்டது போன்றதொரு தோற்றத்தை உருவாக்குவதில் தொடர்ந்து இந்துத்துவ பார்ப்பனீய சங்கிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டே இருந்தார்கள்; இருப்பார்கள்.

இப்போது ஈழ அரசியலை முன்வைத்து திராவிட அரசியல் வரலாற்றின் மீது வன்மம் கக்கும் போலித் தமிழ் தேசியர்கள் பார்ப்பனர்களின் அந்த வேலையை எளிதாக்க அவர்களோடு கைகோத்து இருப்பதையும் நம்மால் அறிய முடியும்.

தமிழ்நாட்டு அரசியல், ஈழ விடுதலை இயக்க அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; ஈழ மக்கள் மீதான நேசம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.

அந்த உறவுக்கு நாங்களே முழு உரிமை பெற்றவர்கள் போலப் பேசும் போலித் தமிழ் தேசியர்களின் கூட்டத்தை, பெரும்பான்மையான ஈழ மக்களே காலப்போக்கில் உணர்ந்து விட்டார்கள் என்பது சற்று ஆறுதல் தருகிறது.

எனவே, தமிழ் ஈழ விடுதலைப் போர் என்கிற அரசியல் தளத்தை முன்வைத்துப் பேசப்படுகிற திராவிட இயக்க எதிர்ப்பு இயக்கங்களை நாம் விலக்கி வைப்போம்; தமிழ் ஈழ விடுதலைப் போர் பல்வேறு முகாந்திரங்களைக் கொண்டது, அதன் உள்ளடக்கம் வெறும் தமிழ்நாட்டு அரசியலை மய்யமாக வைத்து நிகழ்ந்த ஒன்றல்ல.

பல்வேறு தளங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், உலக அரசியலில் முதலாளித்துவ நாடுகளோடு இலங்கை கொண்டிருந்த நெருக்கமான உறவு, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் நிலவிய பார்ப்பனீய வலதுசாரி அரசியல், இலங்கை மற்றும் ஈழத்தின் நிலவியல் முக்கியத்துவம் என்று பல காரணிகள் உள்ளடங்கி இருக்கிற ஈழ விடுதலை இயக்கத்துக்குள் திராவிட உள்ளீடுகள் மறுக்க இயலாதவை மட்டுமல்ல, தவிர்க்கவும் இயலாதவை என்பது உண்மை.

அதுகுறித்து நாம் பலமுறை பேசியிருக்கிறோம், கடந்த 50-60 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை ஈழ விடுதலையை முதன்மையாக வைத்து விவாதிப்பது எந்த வகையிலும் நேர்மையான ஒன்றல்ல. ஆகவே, அந்த விவாதத்தை நாம் வேறோரு தளத்தில் வைத்துக் கொள்ளலாம்.

இப்போது நாம் திராவிட அரசியல் இயக்கங்களின் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களைப் பார்ப்போம். இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் வளர்ச்சி குறித்த பல்வேறு புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

பொருளாதார அறிஞர்கள், சமூக ஆய்வாளர்கள் என்று பல தரப்பினரால் தகுந்த தரவுகளோடு மெய்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தப் புள்ளி விவரங்கள் போலித் தமிழ் தேசியர்களுக்கு எப்போதும் வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடியது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை, கீழ்க்கண்ட அலகுகள்தாம் முடிவு செய்கின்றன.

1) தொழில்துறை

2) உள்கட்டுமான அமைப்பு

3) சாலைப் போக்குவரத்து

4) அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு

5) அடிப்படைக் கல்விக் கட்டமைப்பு

6) பொது விநியோகக் கட்டமைப்பு

7) குழந்தைப் பேறு மருத்துவம்

8) தனி மனித வருமானம்

கடந்த 50-60 ஆண்டுகளில் தமிழ்நாடு மேற்கண்ட 8 புள்ளிகளிலும் எப்படி வளர்ந்திருக்கிறது, ஏனைய மாநிலங்களை விட எப்படியெல்லாம் சாதனைகள் படைத்திருக்கிறது என்பது திராவிட எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கிற பார்ப்பனீய சங்கிகளுக்கும், அவர்களுக்கு காவடி எடுக்கிற சூத்திர சங்கிகளுக்கும், முட்டுக் கொடுக்கிற தமிழ் தேசிய சங்கிகளுக்கும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

முதல் பிரிவான பார்ப்பனீய‌ சங்கிகளுக்கு இது நன்றாகத் தெரிந்த விஷயம், ஆனாலும் தனது தனித்த ஆதர்ஷ வேடமான புனிதன் மற்றும் மேலானவன் என்கிற வேஷம் தமிழ்நாட்டில் திராவிட இயக்க அரசியலால் கலைக்கப்பட்டதால் பிட்டத்தில் அடிபட்ட நரிபோல அவர்கள் தொடர்ந்து ஊளையிடுவார்கள்.

இரண்டாமவர் “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி” ஆகி, பார்ப்பனீய சங்கிகள் செய்வதைப் போலவே செய்து, தன்னை தலையில் இருந்து பிறந்தவனாகப் பாவனை செய்யும் பெருமுயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவருக்கு உண்மைகள் தெரியாது,

பார்ப்பனீய சங்கியால் அவிழ்த்து விடப்பட்ட பொய் மூட்டைகளைச் சுமந்தபடி இருக்கும் இந்த இரண்டாம் வகை திராவிட எதிர்ப்பாளர்களை தரவுகளோடு உண்மையைச் சொல்லி நம்மால் மாற்ற இயலும்.

மூன்றாம் வகையான புதிய போலித் தமிழ் தேசிய சங்கிகள் உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள், அரசியல் அரிச்சுவடியே அறியாத இந்த இளம் தலைமுறைக்குத் தெரிந்தது எல்லாமே சமூக இணையதள அரசியலும், கருணாநிதி குடும்ப வெறுப்பு அரசியலும், ஈழ விடுதலைப் போரின் கடைசிக் காட்சிகளால் வேயப்பட்ட ஒரு மாய அரசியலும் மட்டும்தான். இவர்களைப் பீடித்திருப்பது ஒரு வகையான நோய் என்பதால் கவனத்தோடு கையாள்வதும், மீட்பதும் தலையாய கடமை.

1) தொழில்துறை :

இந்தியப் பொருளாதாரத்தில் ஏறத்தாழ 5 இல் 1 பங்கு தமிழ்நாட்டினுடையது, பெருந்தொழில்கள் 10-15, பெருந்தொழில் சாராத நடுத்தர தொழில்கள் ஏறத்தாழ 1000 அளவிலும், சிறு குறு தொழில்கள் சேர்ந்து ஏறத்தாழ 15000-20000 வரையில் கடந்த 50 ஆண்டுகளில் வேரூன்றி இருக்கின்றன.

தொழில்துறையில் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் மகாராட்டிராவில் மும்பையில் இருந்து புனே வரைக்குமான  Industrial Corridor தான் தொழில்களின் மய்யம், மகாராஷ்டிராவில் மும்பையையும், புனேவையும் தவிர்த்து பெருநகரங்கள் இல்லை.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவைத் தவிர எந்தவொரு நகரத்தின் பெயரையாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மும்பை மற்றும் புனே நகரங்களை ஒட்டிய தொழில் மண்டலங்களை நீக்கி விட்டால் மகாராஷ்டிரா ஒரு பழங்குடி மாநிலமாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு.

தமிழ்நாடு அப்படி இல்லை, தமிழ்நாட்டில் நான்கு மூலைக்கும் ஒரு பெருநகரமுண்டு, பெருநகரங்களை இணைக்கும் வழியெங்கும் தொழில் மண்டலங்கள் உண்டு, பெருந்தொழில் மண்டலங்களை ஒட்டி இருக்கும் உள்வழித்தடங்களில் உதிரிப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்சார்ந்த நிறுவனங்கள், உற்பத்தி நிலையங்கள், அதனைச் சார்ந்து இயங்குகிற கிராமங்கள், மனிதர்கள் என்று இந்தக் கட்டமைப்பு பரவலானது மட்டுமில்லை; வலிமையானதும் கூட.

1919 ஆம் ஆண்டு ஆங்கில அரசு துவக்கி வைத்த இரட்டை ஆட்சி முறையை இந்தியாவெங்கும் காங்கிரஸ் மறுதலித்த நேரத்தில் நீதிக்கட்சி அதில் பங்குபெற்ற காலகட்டத்தில் இருந்து உருவான வளர்ச்சி  இது. முதன்முதலாய்ப் பள்ளிகளில் உணவு கொடுத்துக் கல்வியை வளர்த்த நீதிக்கட்சியின் காலத்தில் இருந்து துவங்குகிற திராவிட இயக்கங்களின் வளரச்சி இது.

இந்தத் தொழில் வளர்ச்சியின் பின்புலத்தில் இருப்பது ஒன்றும் ராஜராஜ சோழனும் அவரது தந்தையாரும் அல்ல; ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துக் கட்டப்பட்ட திராவிட அரசியலின் உழைப்பு, திட்டங்கள், தொழிற்பேட்டைகள், தொழில் முனைவோருக்கான கடன்திட்டங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், சிறப்புக் குழுக்கள், புதிதாக உருவாக்கப்பட்ட துறைகள், துறை சார்ந்த அலுவலகங்கள் என்று மிகப்பெரிய திட்டமிடலும், செயல்திட்டங்களும் இவற்றுள் அடக்கம். இவற்றை நிகழ்த்திக் காட்டியது திராவிட இயக்கம். இவற்றின் மூலமாக ஒரு புதிய மக்கள் திரளை சமூகப் பொருளாதார விடுதலை பெற்றவர்களாக மாற்றிக் காட்டியது திராவிட இயக்கம்.

2) உள்கட்டுமான அமைப்பு:

தமிழ்நாட்டின் சாலைகளில் எந்தத் திசையில் நீங்கள் பயணம்செய்தாலும் ஒவ்வொரு 30 கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒரு சிறு நகரத்தை அடைந்து விடுவீர்கள்.

அந்த 30 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மக்களின் அரசு அலுவலகத் தேவைகளை, வேலைவாய்ப்புத் தேவைகளை, தொழில் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் உள்கட்டுமான வசதிகள் அந்தச் சிறு நகரத்தில் இருக்கின்றன.

புதிய தொழில் வாய்ப்புகளை அளிக்கும் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்திப் பார்க்கும் தொழில் முனைவோர், சார்பு நிலைக் கிராமப் பணியாளர்களின் பொருளாதார மண்டலமாக இந்தச் சிறு நகரங்கள் இருக்கின்றன.

வங்கிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள் ஒன்று பெருநகரச் சாயல் கொண்ட சுயசார்புப் பொருளாதார மண்டலமாக இந்தச் சிறு நகரங்கள் தொடர்ந்து இயங்குகின்றன. இவை கடந்த 50-60 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நகரங்கள் – திராவிட ஆட்சியாளர்களால் திட்டமிடப்பட்டுச் செதுக்கப்பட்ட நகரங்கள்.

இத்தகைய ஒரு நெருக்கமான நகரமைப்பு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை, குஜராத், மகாராஷ்டிரா போன்ற வளர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகிற மாநிலங்களில் கூட இத்தகைய நகரக் கட்டுமான அமைப்புகள் இல்லை.

இன்றைக்கும் மின்சார வசதி இல்லாத இந்தியக் கிராமங்கள் பல இருக்கும் சூழலில் 1970 களிலேயே மின்சாரத் தன்னிறைவை எட்டிய மாநிலம் தமிழ்நாடு. மின்சாரத்தையும் அதன் உற்பத்திக் கட்டுமானத்தையும் உருவாக்கியது முப்பாட்டன் முருகன் அல்ல; திராவிட இயக்கத் திட்டமிடலாலும், அதன் தலைவர்களாலும் தான் உருவானது.