Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எதிரிகளும் பாராட்டும் அண்ணா!

முக்கனியின் சுவையிருக்கும் அண்ணா பேச்சில்

முத்தமிழும் குடியிருக்கும் அவரின் நாவில்

நக்கலுடன் நகைச்சுவையும் நடனம் ஆடி

நதிநீராய்ப் புரண்டுவரும்! ஆரி யத்தின்

மிக்கபெரும் இழிவுகளைச் சாடும்! நாட்டின்

மேன்மையெலாம் எடுத்துரைக்கும்! மெய்ம்மை பேசும்!

எக்குறையும் இல்லாத தலைவர் அண்ணா!

எதிரிகளும் பாராட்டும் இமயம் அண்ணா!

 

கண்மூடிப் பழக்கமெலாம் மண்ணாய்ப் போகக்

கருத்துகளை விதைத்திட்டார்! கடமை மற்றும்

கண்ணியத்தை ஒருங்கிணைந்த கட்டுப் பாட்டைக்

காத்திடவே கற்பித்தார்! தொண்டர் கூட்டம்

வண்டாகப் பின்தொடரும் எழுச்சி தந்தார்!

வையமெலாம் வாழ்கின்ற தமிழ ருக்கே

அண்ணனவர் எந்நாளும்! தமிழி னத்தின்

அரசியலும் வரலாறும் ஆனார் அண்ணா!

 

தென்புலத்துக் கதிரவனாய் ஞாலம் போற்றும்

திராவிடத்தின் ஒளிவிளங்காய்ப் பெருமை சான்ற

மன்னவர்தம் புகழரங்கில் தோய்ந்து வாழ்ந்த

மாத்தமிழாய் அண்ணாவும் பிறந்தார்! மாறாப்

பொன்னெழுத்தில் பொறிக்கின்ற புதுமை ஞாலம்

புகழார்ந்த தமிழகத்தில் படைத்தார்! தூய

அன்பெடுத்துத் தொடுத்தளித்த முத்தா ரத்தை

அன்னைதமிழ் அணிகலனாய்ப் பெற்றாள் இங்கே!

 

விண்முட்டப் பார்க்கின்ற அறிவுக் குன்றம்

விரிகதிராய் ஒளிநல்கி இருளைப் போக்கும்!

பண்கட்டிப் பாடுகின்ற இதழி ரண்டும்

பைந்தமிழிற் தேன்சொட்டி மகிழ்வைத் தேக்கும்!

கண்கட்டி விடப்பட்ட தமிழி னத்தைக்

கைப்பிடித்து அழைத்துநல்ல வழியைக் காட்டப்

பண்பாட்டுத் தமிழ்மரபாய்ச் சிலிர்த்து வந்தார்!

பகைநடுங்கித் தமிழ்நாட்டில் ஓடிற் றன்றோ! w