Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் தேசபக்தி வேடம்! வினோதம்!-மஞ்சை வசந்தன்

இந்த ஆண்டு விடுதலை நாளின் போது ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட ஒரு படம் இந்திய அளவில் பெரும் பிரச்சனையை உருவாக்கியது. காந்தி, நேரு போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி, சாவர்க்கரின் படத்தை முதன்மைப்படுத்தி, அவர்தான் விடுதலைப் போராட்ட வீரர், தேசபக்தர் என்பது போல தூக்கிப் பிடித்துக் காட்டினர்.

ஒன்றிய அரசின் செயல் உண்மைக்கு மாறானது; பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட்டு அடிமைகளாய் இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களாய்க் காட்டுவது மோசடியானது என்பதை ஆதாரப்பூர்வமாக நாட்டு மக்களுக்குக் காட்ட வேண்டியது கட்டாயம் என்பதால், அதைத் தெளிவாக இங்கு விளக்கியுள்ளோம்.

ஹெட்கேவரின் தேசபக்தி?

ஹெட்கேவர் ஒரே நேரத்தில் இந்து மகா சபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றினார். இப்படி இரட்டை உறுப்பினர் முறைக்கு எதிராய் 1934இல் காங்கிரசில் எதிர்ப்பு வலுக்கவே இரட்டை உறுப்பினர் முறை தடை செய்யப்பட்டது.

காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லையென்று அறிவித்துக் கொண்ட இவர், 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தார்.

இந்த மோசடி நாடகத்திற்குக் காரணம் என்ன என்பதை பிஷிகர் என்பவர் தனது “சங்நிர்மதா” என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஆயிரக்கணக்கானவர்கள் சிறைச்சாலைக்குப் போகும் நேரத்தில் நீ மட்டும் பதுங்கிக் கொண்டிருக்கிறாயே; இது வெட்கக்கேடல்லவா? என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியாமல் தான் – காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டார்.”

(மேற்கண்ட நூல் – பக்கம் 30)

காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லையென்று கூறியவர், இப்படி அதற்கு எதிராய் அந்த இயக்கத்தில் நிர்ப்பந்தத்தின் காரணமாய்ப் பங்கு கொண்டு நாடகமாடியதை வைத்து இவரை ‘தேசபக்தர்’ என்றும், ‘சுதந்திர போராட்ட வீரர்’ என்றும் கூறுவது தப்பான திரிபுவாதமாகும்.

அதுமட்டுமல்ல; காந்தியாரின் கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லையென்று  வாதாட இதைப் பயன்படுத்தவும் செய்தனர்.

இவர் காந்தியார் இயக்கத்தில் இருந்தது, சிறைக்குச் சென்றது எல்லாம் ஓர் ஏமாற்று என்பதை, மராட்டிய மாநிலத்தில் முதல் ஆர்.எஸ்.எஸ்.தலைவராக இருந்த ஜி.எம். ஹட்டார், “ஆர்.எஸ்.எஸ்சும், நேதாஜியும்” என்ற தலைப்பில், ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ இதழில் எழுதிய (07.10.1979) கட்டுரையில் உறுதி செய்துள்ளார்.

“ஹெட்கேவர் காந்தியார் இயக்கத்தில் இருந்தார் என்பதும், சிறைக்குச் சென்றார் என்பதும் உண்மைதான். ஆனால், இதை வைத்துக்கொண்டு, அவர் மக்கள் கிளர்ச்சியை விரும்பினார் என சொல்லமுடியாது; காந்தியாரின் திட்டத்தை ஆதரித்தார் என்றும் சொல்லிவிடமுடியாது.

மற்ற தேசபக்தர்களைப் போல, தமக்கும் மக்கள் இயக்கத்தில் நம்பிக்கையுண்டு என்று காட்டிக் கொள்வதற்கும் தானும் சிறைச் செல்ல அஞ்சமாட்டேன் என்பதை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குமே அவர் காந்தியார் இயக்கத்தில் பங்கேற்றார்” என்று தெளிவாக ஓர் ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூறியுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஹெட்கேவர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டு சிறை சென்று 1922இல் விடுதலையாகி வெளியில் வந்தவுடனே காந்தியாரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். காந்தியார் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி, இஸ்லாமியருடனான மோதலுக்குத் திட்டம் தீட்டினார். அதன் விளைவாய் நாக்பூர், மண்டைக்காடு உள்பட பல இடங்களில் கலவரங்கள் நடந்தன.

1923இல் நாக்பூரில் மசூதி முன் ஊர்வலம் நடத்தினால், கலவரம் வெடிக்கும் என்று திட்டம் தீட்டிச் செயல்படுத்தியவர் ஹெட்கேவர்தான். இஸ்லாமியர்களை மோதலுக்கு வலிய அழைக்கும் வகையில் மசூதி முன் முழக்கங்களை எழுப்பச் செய்தார். ஆனால், இஸ்லாமியர்கள் இவர்களது சதிக்குப் பலியாமல் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தனர்.  இந்தக் கலவரத் திட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் டாக்டர் மூஞ்சேயும், ஹெட்கேவருமே ஆவர். 1925இல் ஆர்.எஸ்.எஸ். துவங்கப்படுவதற்கு முன்னே இதைச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வன்முறையில் நம்பிக்கையுள்ளவர். எனவே, தனது ஆதரவாளர்களுக்கு உடற்பயிற்சி, குஸ்தி போன்றவற்றில் பயிற்சியளிக்க அமைப்பை உருவாக்குகிறார். இவருக்கு இவற்றில் பயிற்சி உண்டு. வைதீகப் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், வர்ணாஸ்ரம தர்மத்தில் வெறிகொண்டு நின்றார். ஹிந்து சனாதன வெறியும், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பும், கலவரங்கள் மூலம் தங்கள் அமைப்பை வளர்க்கும் முனைப்பும் கொண்ட இவர் காந்தியின் சீடராக எப்படியிருக்க முடியும் என்பதை நன்கு சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முதலில் சாவர்க்கர் சூட்டிய பெயர் “ஹிந்து ஸ்வயம் சேவக்” என்பதுதான். ஆனால், அதை மறுத்து ஹெட்கேவர்தான் “ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்” என்று பெயர் சூட்டுகிறார். வன்முறை, கலவரம் மூலமே தங்கள் அமைப்பை வளர்க்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றவர்கள், அதை மறைக்கத் தங்கள் அமைப்பு ஒரு சேவை அமைப்பு, ஒரு உடற்பயிற்சி அளிக்கும் அமைப்பு, ஒரு கலாச்சார அமைப்பு என்ற கருத்தை உருவாக்க இச்செயல்பாடுகளைச் செய்துவருகின்றனர். இது இவர்கள் உண்மையான செயல் திட்டங்களை வெளியுலகத்திற்குத் தெரியாமல் மறைப்பதற்கான ஓர் ஏற்பாடேயாகும்.

ஆக, ஹெட்கேவரின் செயல்பாடுகள் அனைத்தும் முகமூடிச் செயல் திட்டங்கள் என்பதோடு மோசடிச் செயல்திட்டங்களுமாகும்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை மோசடி

காந்தியைக் கொன்றவன் கோட்சே. கோட்சே ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று எல்லோரும் கூறியபோது, அதை ஆர்.எஸ்.எஸ். மறுத்தது. கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல என்று வாதிட்டனர். ஹிந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்.சும் தனித்தனி அமைப்பாக இயங்கினாலும் இரண்டும் ஒன்றுதான். ஹிந்துத் தீவிரவாதிகளுக்கு நிறைய மோசடி முகமூடிகள் உண்டு. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தேவைக்கு, ஒவ்வொரு நேரத்தில் அவர்கள் பயன்படுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்ட இன்னும் சில அமைப்புகள் உண்டு. அவை வெவ்வேறு பெயரில் இயங்கினாலும், எல்லா அமைப்புகளும் ஒரே கொள்கை, ஒரே நோக்குக் கொண்டவைதாம். பல பெயர்களில் பல அமைப்புகளாக இயங்குவது, சிக்கல் வரும்போது தப்பித்துத் தங்களைக் காத்துக் கொள்வதற்கான ஒரு மோசடித் தந்திரம்தான்.

காந்தியைக் கொன்ற நேரத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல, அவர் ஹிந்து மகாசபையைச் சேர்ந்தவர் என்று கூறி ஆர்.எஸ்.எஸ். தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. இதுபோன்று பல ஏமாற்று வேலைகள் ஆர்.எஸ்.எஸ்.வரலாற்றில் உண்டு. என்றாலும் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஹிந்து மகாசபையின் தலைவர்
என்.பி.கார்வே இதுபற்றிக் கூறுவதைப் பாருங்கள்.

“இந்து மகாசபைக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் அமைப்பு ரீதியாகத் தொடர்பு உண்டு; மிக அழுத்தமான தொடர்புகளும் உண்டு. இரண்டு அமைப்புகளுக்கும் ஒரே இலட்சியம்தான். இரண்டும் பாரதீய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவையே என்று அறிவித்தார். (அர்ஜன் – ஆங்கில வாரஏடு 08.01.1950)

சாவர்க்கர் தேசபக்தரா?

1883ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி மகாராஷ்டிராவில் நாசிக் அருகில் உள்ள பாகர் என்னும் ஊரில் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தார் வினாயக் தாமோதர் சாவர்க்கர். இவரது அண்ணன் கணேஷ் என்று அழைக்கப்பட்ட பாபாராவ். இவரது தம்பி பெயர் நாராயண்.

இவருக்கு 10 வயது இருக்கும்போதே பம்பாயில் ஒரு மதக்கலவரம் நடப்பதைக் கேள்விப்பட்டு, தன்னுடன் 10 மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்று அங்கு மசூதிகள் மீது கற்களை எறிந்தனர். ஜன்னல்களை உடைத்தனர். எதிர்த்த இஸ்லாமிய சிறுவர்களைப் பேனாக் கத்தியால் திருப்பித் தாக்கினர். ஆக, சாவர்க்கரின் இளமைப் பருவமே மதவெறியுடனும், மோதல்களுடனும் தொடங்கியது. வாலிபப் பருவத்திலே அபிநவ் பாரத் என்ற இரகசிய அமைப்பைத் தொடங்கினார்.

அதன்பின், லண்டனுக்கு பாரிஸ்டர் படிப்புப் படிக்கச் சென்றதால், அந்த அமைப்பின் பொறுப்பை அவரது அண்ணன் பாபாராவ் ஏற்றார்.

அந்த அமைப்பு, இரகசியமாய் வெடிகுண்டு தயாரித்தல், ஆயுதங்கள் தயாரித்தல் செய்தது. அது கண்டுபிடிக்கப்பட்டதால், பாபாராவ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதன்பின், 1909 ஜூன் 8இல் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இச்செய்தியை இலண்டனில் இருந்த சாவர்க்கர் கேள்விப்பட்டு. தன் அண்ணனைக் கைது செய்த பிரிட்டிஷ் அதிகாரி கர்சான் வில்லியைக் கொலை செய்ய முடிவு செய்தார். தனது நெருங்கிய நண்பரான திங்காரா என்ற மாணவரிடம் கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார். திட்டமிட்ட சில நாள்களில் (01.07.1909இல்) இலண்டனில் உள்ள இம்பீரியல் இன்ஸ்ட்டியூட்டுக்கு அதிகாரி கர்சான் வில்லி வந்தார். திங்காராவும் அங்குச் சென்றான். திங்காராவின் தந்தையும், கர்சான் வில்லியும் நண்பர்கள். அதனால், கர்சானுக்கு திங்காராவை நன்கு தெரியும். அந்தப் பழக்கத்தில் அவனிடம் கர்சான் வந்து கைகுலுக்கினார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கர்சானை அய்ந்து முறை சுட்டான். கர்சான் இரத்தம் பீறிட சாய்ந்து இறந்தார். கர்சானைக் காப்பாற்ற ஓடிவந்த டாக்டர் கோவாஸ்லால் என்பவரும் சுடப்பட்டு இறந்தார்.

சாவர்க்கரின் அண்ணன் பாபாராவுக்குத் தண்டனை விதித்த நாசிக் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் மற்றும் மாவட்ட நீதிபதியாகவும் இருந்த எம்.டி.ஜாக்சனும் சுட்டுக் கொல்லப்பட்டார். சாவர்க்கரின் சீடரான ஆனந்த் கான்கரே, தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஜாக்சனைச் சுட்டுக் கொன்றான்.

கொலைகள் சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் சாவர்க்கர்தான் கொலைகளுக்குத் திட்டம் தீட்டியவர் என்று 1910இல் உறுதி செய்யப்பட்டது. அதனால், சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட கப்பலில் கொண்டு செல்லப்பட்டபோது, மார்செ என்ற இடத்தில் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்ற நிலையில், கப்பலிலிருந்து குதித்து, கடலில் நீந்தி பிரெஞ்சு நாட்டிற்குச் சென்று அடைக்கலம் கேட்டார். ஆனால், அங்கு கைது செய்யப்பட்டு, 04.07.1911 அன்று அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு கொலைகளுக்கும் சேர்த்து 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

வீரசாவர்க்கரா?

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலே கருணை மனு போடத் தொடங்கினார். கொலை செய்யும்போது மற்றவர்களைச் செய்யச் சொல்லி, தான் தப்பித்துக் கொண்ட கோழையான சாவர்க்கர், தண்டனை பெற்று அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தான் மட்டும் விடுதலை பெற மன்னிப்புக் கடிதம் எழுதினார். இவருக்குப் பெயர் ‘வீர’சாவர்க்கராம்? எப்படிப்பட்ட வீரர் பாருங்கள்!

இதில் ஒரு முக்கியச் செய்தி என்னவென்றால், இரண்டு முறை தன்னை மன்னித்து விடுதலை செய்யும்படி கடிதம் எழுதியதை அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன் அண்ணனிடம் கூடத் தெரிவிக்காமல், தான்மட்டும் தப்பித்துக்கொண்டால் போதும் என்று, தான் மன்னிப்புக் கடிதம் எழுதியதை இரகசியமாகவே வைத்துக்கொண்டார். அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த எத்தனையோ பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும், மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலை வேண்டவில்லை. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மன்னிப்பு மடல் எழுதத் தொடங்கிவிட்டார் இந்த “வீரர்” சாவர்க்கர்.

அவர் ஆங்கில அரசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் மிகவும் நகைப்பிற்குரியது.

“அரசு எம்மை விடுதலை செய்தால் நாங்கள் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பிரிட்டிஷாருக்கு ஆதரவாக, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராய்ப் போராடுவோம். எனவே, விடுதலை செய்யுங்கள்” என்று எழுதியிருந்தார். இது எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள். இஸ்லாமியர்கள் இந்தியாவைக் கைப்பற்றிவிடாமல் தடுக்க விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.  இதே சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிடவேண்டும் என்ற சுயநலத்தில் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். (Although I knew that it had no deeper root in their heart than the selfish longing to be free) ஆக, அவருக்கு விடுதலையாகி விடவேண்டும் என்ற சுயநல முனைப்பு மட்டுமே இருந்தது புலப்படுகிறது. மற்றபடி நாட்டுப் பற்றோ, நாட்டு விடுதலையோ அவரது இலக்கு அல்ல. மதவெறியும், இஸ்லாமியர் வெறுப்பும், வன்முறையும், கொலை செய்வதும்தான் அவரது செயல்திட்டங்கள் என்பது நன்றாக வெளிப்படுகிறது. அவர் சிறைச்சாலையிலேயே இஸ்லாமியர்களை ஹிந்துக்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது இதை உறுதி செய்கிறது.

சாவர்க்கரை உயர்த்திப் பிடித்து எழுதும் மஜும்தார் என்பவரே சிறையில் சாவர்க்கர் நடந்துகொண்ட மோசடிச் செயலைச் சுட்டிக்காட்டுகிறார்.

இரகசியமாக மற்ற கைதிகளை வேலைநிறுத்தம் செய்யத் தூண்டிவிட்டு, இவர் மட்டும் (சாவர்க்கர் மட்டும்) வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் தப்பித்துக் கொள்வார். காரணம் கேட்டால், “நான் ஈடுபட்டால் என்னைத் தனிமைச் சிறையில் போட்டுவிடுவார்கள்.  அதன் பின் எனக்குக் கடிதம் எழுதும் உரிமைகூட இருக்காது. பிறகு கைதிகளின் உரிமைக்காக எப்படிப் போராட முடியும்?” என்று பதில் கூறி மோசடியாக ஏமாற்றினார். ஒரு தேசபக்தர் இப்படி நடந்து கொள்வாரா? சாவர்க்கர் எப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே சிறைச்சாலையில் இருந்த சர்தார் சோகன்சிங், பிரிதிவிசிங் போன்றோர் பல நாள்கள் உண்ணாமல் இருந்து போராட்டம் நடத்தி, தனிமைச் சிறையில் வாடினர். அவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சாவர்க்கரின் அற்பத்தனம் பளிச்சிடும்!

மற்றவர்களைப் போராடத் தூண்டிவிட்டு, தான் மட்டும் ஒதுங்கிக்கொண்டு நல்லவர் போல் நடித்த சாவர்க்கருக்கு அதற்குரிய பலன் கிடைத்தது. அந்தமான் சிறையிலிருந்து, இந்தியாவிலுள்ள இரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். இந்தியச் சிறைக்கு மாற்றப்பட்ட பின்னரும் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை. ஆங்கில அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைவதைத் தொடர்ந்து செய்தார்.

சாவர்க்கரின் அடிமை சாசனம்:

“பல்வகையிலும் நல்லெண்ணமும் கருணையும் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை விடுதலை செய்யுமானால், அரசியல் சட்ட வகையான முன்னேற்றத்திற்கும், ஆங்கிலேய அரசாங்க விசுவாசத்திற்கும் மிக உறுதியான ஆதரவாளனாக மட்டுமே இருப்பேன். இந்த விசுவாசம்தான் முன்னேற்றத்துக்கான நிபந்தனை.  மேலும், அரசியல் சட்டவகையான மார்க்கத்திற்கு நான் மாறி வந்துள்ளது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு காலத்தில் என்னைத் தங்களது வழிகாட்டியாகப் பார்த்து வந்த, வழி தவறிப் போன இளைஞர்களை மீட்டுக் கொண்டுவரும். எந்தவகையில் நான் அரசாங்கத்திற்குப் பணிபுரிய வேண்டும் என்று அது விரும்புகிறதோ அதற்குத் தகுந்தபடி நான் பணிபுரிவேன்.”

(24.11.1913இல் உள்துறை அதிகாரி ரெஜினால்ட் கிராட்டோக்குக்கு சாவர்க்கர் எழுதிய கடிதம்)

1924ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி, ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதினார். உலகத்திலே ஒரு கடைந்தெடுத்த கோழை சாவர்க்கர் என்பதை இக்கடிதம் காட்டியது.

அக்கடிதத்தின் முதன்மையான செய்தி, “என் மீது மிகவும் நியாயமான விசாரணை நடந்தது; எனக்குத் தரப்பட்ட தண்டனையும் மிகவும் சரியானது என்பதை இதன்மூலம் நான் ஒப்புக் கொள்கிறேன். கடந்த காலங்களில் நான் ஈடுபட்ட, ஈடுபாடு கொண்டிருந்த வன்முறை நடவடிக்கைகளை நான் உளமார வெறுக்கிறேன். சட்டத்தையும், அரசமைப்பையும் மதிக்கிற ஒரு குடிமகனாக, என்னால் முடிந்தமட்டும் உயர்த்திப் பிடிப்பேன். அது என் கடமை. என்னை அனுமதித்தால் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை அமல்படுத்தப் பாடுபடுவேன்” என்பதாகும்.

(ஏ.ஜி. நுரானி எழுதிய “சாவர்க்கரும் இந்துத்துவாவும்” என்ற நூல்)

இப்படி ஒரு கோழையை வரலாற்றிலே பார்க்கமுடியுமா? பகத்சிங் தூக்கிலிடப்படும் நிலையில் எழுதிய கடிதங்களைப் படித்துப் பார்த்தால் சாவர்க்கர் எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழி என்பது தெளிவாய் விளங்கும்!

இப்படி ஆங்கில ஆட்சியாளர்களிடம் தன்னை அவர்களின் விசுவாசி போல காட்டிக் கொண்டு கடிதங்களை எழுதிய சாவர்க்கருக்கு அதற்குரிய பலன் கிடைத்தது.

சாவர்க்கரின் கடிதத்தை ஏற்று பிரிட்டிஷ் அரசு, சில நிபந்தனைகளுடன், அவரை விடுதலை செய்தது. ‘வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. இரத்தினகிரி மாவட்ட எல்லைக்குள்ளே தங்கியிருக்க வேண்டும்’ என்று அரசு நிபந்தனை விதித்தது.

இந்த நிபந்தனைகளைப் பின்பற்றி, “1942இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்து கொள்ளாது ஹிந்து சனாதனிகள், ஆங்கில அரசுக்கு ஆதரவாக பணிக்குச் செல்லவேண்டும்” என்று அறிக்கைவிட்டார் சாவர்க்கர்.

(ஃபிரண்ட்லைன், 01.12.1995 –
ஏ.ஜி. நுரானி)

ஆனாலும், ஆங்கில அரசின் நிபந்தனைகளை முழுமையாகப் பின்பற்றாமல், அதிலும் மோசடி செய்தார்.

இந்தியாவின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் மதக் கலவரம் நடந்ததைப் பற்றி, சாவர்க்கர் மராத்தா பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார். எனவே, ஆங்கில அரசு அதுபற்றி விளக்கம் கேட்டது. உடனே பதறிப்போன சாவர்க்கர் 06.04.1925இல் அரசுக்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதினார். “சுயராஜ்யம் பற்றி நான் எழுதவில்லை. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்து மன்னிப்புக் கடிதம் எழுதினார். இது அவரது நான்காவது மன்னிப்புக் கடிதம்.

ஆனால், ஆங்கில அரசு அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், சாவர்க்கர் தனது கட்டுரையில் சுயராஜ்யம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டார்.

இப்படிப்பட்ட அப்பட்டமான கோழைதான் வீர சாவர்க்கரா? இவர்தான் விடுதலைப் போராட்ட வீரரா? இப்படிப்பட்ட வரை விடுதலைப் ‘போராளியாக’ ஆர்.எஸ்.எஸும், பி.ஜே.பி.யும் தூக்கிப் பிடிப்பது எவ்வளவு பெரிய மோசடி!

தேசியக் கொடியை ஏற்க மறுத்தவர்கள்:

தேசியக் கொடியின் நடுவில் உள்ள அசோகச் சக்கரம் அவர்களுக்கு வெறுப்பானது. அசோகர் இவர்களின் சித்தாந்தங்களுக்கு எதிரானவர் என்பதால்தான் அந்த வெறுப்பு. 1947ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி, இந்திய அரசியல் நிர்ணய சபை, இப்போதுள்ள தேசியக் கொடியை ஏற்றுக்கொண்டது. இவ்வாறு ஏற்கப்பட்ட ஒருவாரத்தில் அதாவது ஜூலை 29ஆம் தேதி சாவர்க்கர், இந்தத் தேசியக் கொடியை ஏற்கமுடியாது என்று அறிக்கை விடுத்தார்.

“நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹிந்துஸ்தானத்தின் தேசியக் கொடியாக இதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. ஹிந்துஸ்தானத்தின் ஒரே கொடி காவிக்கொடிதான்.”

(Historic Statements by V.D.Savarkar,  Page 205-206)

வரலாற்று உண்மை இப்படியிருக்க, ஒரு பக்கம் சாவர்க்கரை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அவரது சித்தாந்தங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு, மறுபக்கம் அவரால் மறுக்கப்பட்ட தேசியக் கொடியையும் போற்றுவது, கொண்டாடுவது எவ்வளவு பெரிய மோசடி என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! இவர்கள் எவ்வளவு சாதுரியமாக – தந்திரமாக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இதுவே சரியான சான்று!

பாகிஸ்தான் பிரிவினைக்கு முதலில் முழங்கியவர்கள்:

“இந்தியா என்பது ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என்ற இரண்டு இனங்கள் வாழும் தேசம் என்பதால், இந்தியா ஒரே தேசமாக இருக்க முடியாது. இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று, ஹிந்து தேசம்; மற்றொன்று முஸ்லிம் இந்தியா” என்று முழங்கியவர் சாவர்க்கர்.

(இந்து ராஷ்டிரா தர்ஷன் – பக்கம்-26)

சாவர்க்கர் இப்படி முழங்கிய பிறகுதான் (இரண்டு ஆண்டுகள் கழித்துதான் 1939) ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தியாவைச் சிதைக்க விதைபோட்ட, வெறுப்பைத் தூண்டிய இவர்கள் இன்று தேச ஒற்றுமை, அகண்ட பாரதம் என்று பேசுவது மோசடியல்லவா?

கோல்வால்கரின் மோசடி:

1906ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் பிறந்த கோல்வால்கர் பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி., (விலங்கியல்) பட்டம் பெற்று, அப்பல்கலைக்கழகத்திலேயே ஆசிரியராகப் பணியாற்றி, 1933இல் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பணியாற்றினார்.

1937இல் ஆர்.எஸ்.எஸ். தொடர்பிலிருந்து விலகி, சர்காச்சியில் இருந்த அகந்தஞானந் சாமியாரிடம் சென்று இவரும் தாடிவளர்த்துச் சாமியாரானார். அதன்பிறகு, ஹெட்கேவர் இறக்கும் தறுவாயில் அவர் அழைப்பை ஏற்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவருக்கு மூத்தவர்களாக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கத்திற்கு அதிகம் உழைத்த அப்பாஜி ஜோஷி, கேஷவ் ஆப்தே, தாதாராவ் பார்மத் ஆகியோருக்கு தலைமைப் பொறுப்பு தரப்படவில்லை. வி.டி.சாவர்க்கர், நாராயண சாவர்க்கர் போன்ற முதல்நிலை ஊழியர்களும் புறக்கணிக்கப்பட்டனர்.

கோல்வால்கர் தேர்வு ஒரு மர்மம்:

மராட்டிய மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். உருவாக அடித்தளமிட்ட காசிநாத் பாண்டே, லிமாயி, கேல்கர் போன்றவர்களும் புறக்கணிக்கப்பட்டு, சாமியாரிடம் இருந்த கோல்வால்கரை, ஹெட்கேவர் ஏன் தேர்வு செய்தார் என்பது இன்றளவும் மர்மமாகவுள்ளது. ஆர்.எஸ்.எஸ். என்றாலே மர்மக் கூடாரம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ‘We or our Nationhood Defined’ என்ற அவரது நூலின் மூலமே இவர் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு அறிமுகமானார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸின் மிக முக்கியமான இந்த நூலை இவர் உருவாக்கியது மிகப்பெரிய மோசடி. இந்த நூலில் உள்ள கருத்துகள் இவரது சொந்தக் கருத்துகள் அல்ல. இதை தன்னையும் அறியாமல் கோல்வால்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.

1963இல் வி.டி.சாவர்க்கரின் 80ஆம் பிறந்தநாளையொட்டி விழா மே 15ஆம் தேதி பம்பாயில் நடந்தபோது, ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களிடம் கோல்வால்கர் பேசியபோது இந்த உண்மையைக் கூறினார்.

“நான் இந்நூலின் கருத்துகளை, சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா (Hindutva) என்ற நூலிலிருந்து எடுத்து எழுதினேன். சாவர்க்கரின் நூல்தான் எனக்குப் பாடப் புத்தகம். ‘We or our Nationhood Defined’ என்ற நூலில் நான் சொன்ன கருத்துகள் சாவர்க்கர் எழுதிய கருத்துகள்தான். மேலும் சாவர்க்கர் மராட்டிய மொழியில் எழுதிய ‘ராஷ்டிர மீமான்சா’ (Rashtra Mimansa) என்ற நூலில் உள்ள கருத்துகளைச் சுருக்கி, இந்தியில் மொழிபெயர்த்தேன்” என்று ஒப்புக்கொண்டார்.

இது ஓர் அறிவுத் திருட்டு, அறிவு மோசடியல்லவா? இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிதான் ஆர்.எஸ்.எஸி.ன் சித்தாந்தக் கர்த்தாவாக ஏற்றுப் போற்றப்படுகிறார். இது அதைவிட பெரிய மோசடி!

இதையெல்லாம்விட பெரிய மோசடி, கோல்வால்கர் கூறிய இந்த உண்மையை எந்த ஆர்.எஸ்.எஸ். ஏடும் வெளியிடவில்லை. அவர் பேசியபோது பதிவு செய்யப்பட்ட ஓர் ஒலிநாடா தான் இந்த மோசடியை உலகுக்கு வெளிக்காட்டியது. ஒலிநாடாவில் கோல்வால்கரின் பேச்சைப் பதிவு செய்தவர் தனஞ்செய்கீர். இவர்தான் சாவர்க்கரின் வரலாற்றை எழுதியவர். இந்த வரலாற்று நூலில் 527ஆம் பக்கத்தில் இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சாவர்க்கரின் நூல் பிரபலமாகவில்லை, அந்நூலைக் காப்பியடித்து கோல்வால்கர் எழுதிய நூல் பிரபலமாகிவிட்டது. மோசடிகளே முதலிடம் பெறுகின்றன; உண்மை ஒதுக்கப்படுகிறது என்பதற்கு இது சரியான எடுத்துக்காட்டு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவு தந்த கோல்வால்கர்:

பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெளியேறும்வரை பிரிட்டிஷாருக்கு முழு ஆதரவு அளித்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற கோவால்கரிடம் பிரிட்டிஷ் ஆட்சி முடியப்போகிறது. ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வாய்விட்டுச் சிரித்த கோவால்கர், “பிரிட்டிஷார் ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவார்கள் என்று நம்புகிறீர்களா? அறிவில்லாத இந்நாட்டு மக்களிடம், பேதைகளிடம் (nincompoop) ஆட்சியைக் கொடுத்தால் இரண்டு மாதங்கள் கூட அவர்களால் சமாளிக்க முடியாது. இவர்கள் மீண்டும் பிரிட்டிஷாரிடம் மண்டியிட்டு, தயவுசெய்து, ஆட்சியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். எனவே,
ஆர்.எஸ்.எஸ். தன் பணியை எப்போதும் போல செய்து கொண்டிருக்கும்” என்று ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்.

(“ஆர்.எஸ்.எஸ்”- டி.ஆர்.கோயல் – பக்கம் 9)

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தியபோது, காங்கிரஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது, வெள்ளையர்களை எதிர்க்காமல், காங்கிரஸை ஆதரிக்காமல், ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்தினார் கோல்வால்கர்.

அதுமட்டுமல்ல, ‘பிரிட்டிஷார் இராணுவத்துக்கு ஆள் சேர்த்தபோது, அதற்குப் பேருதவி செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்’. பல ஹிந்து இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்தனர். மேலும்,
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு வேண்டிய எந்திரங்களை வழங்கும் காண்ட்ராக்ட் எடுத்தனர்.

1943இல் கிழக்கு வங்கத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது, அங்கு இருந்த உணவுப் பண்டங்களை எடுத்துச் சென்று பிரிட்டிஷ் இராணுவத்திற்குக் கொடுத்து மக்களை மேலும் பஞ்சத்தில் தவிக்கவிட்டனர். தங்களுக்கு காண்டிராக்ட் வழங்கிய பிரிட்டிஷ் ஆட்சிக்கு நிறைய பொருள் உதவியும் செய்தனர்.

‘பம்பாய்’ கவர்னரிடமிருந்து ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நன்னடத்தைச் சான்றுகள் பெற்றனர். கோல்வால்கர் உள்பட பல
ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு கவர்னர் நன்னடத்தைச் சான்றுகள் வழங்கினார். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கோல்வால்கர் கலந்து கொள்ளாது ஒதுங்கியிருந்தார். போராட்டங்களை ஆதரிக்கவில்லையென்று நற்சான்றும் பெற்றார்.’

(‘Four Faces of Subversion’ – டிரேவர் டிராய்பர்க், பக்கம்-27)

அதுமட்டுமல்ல, அப்போது பிரிட்டிஷார் போட்ட உத்தரவுகளை எல்லாம், மறுக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு ஆதரித்தார். ஆர்.எஸ்.ஸில் இருந்த இராணுவ அமைப்பைக் கலைத்துவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதுடன், அதை மறுக்காமல் ஏற்று, உடனடியாக இராணுவ அமைப்பைக் கலைத்துவிட்டு, இராணுவ உடையை மாற்றி, தனது தொண்டர்களுக்கு காக்கிச் சட்டைக்குப் பதிலாக, வெள்ளை உடையும், பூட்ஸ்க்குப் பதிலாக கேன்வாஸ் செருப்பும் அணியச் செய்தார். பெல்ட்டையும் மாற்றினார்.

இப்படிப்பட்ட பிரிட்டிஷ் அடிமைகள்தான் தேசபக்தர்களைப் போல மோசடி நாடகம் ஆடுகிறார்கள்.

வாஜ்பேயி செய்த தேசத் துரோகம்:

1942ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் வாஜ்பேயி கலந்து கொண்டார். அவரோடு பலரும் கலந்துகொண்டனர். அப்போது நடந்த வன்முறைச் சம்பவத்தால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வாஜ்பேயியும் சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்த வாஜ்பேயி, தன்னுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட மற்றவர்களின் பெயர்ப் பட்டியலைப் போலீசாரிடம் கொடுத்துவிட்டு, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடுதலையானார்.

இந்தச் செய்தியை பம்பாயிலிருந்து வெளிவரும் ‘பிளிட்ஸ்’ ஏடு (26.01.1974) ஓர் நீண்ட கட்டுரையாக வெளியிட்டது. வாஜ்பேயின் சகோதரர் பாஜ்பாய் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தக்கட்டுரை வாஜ்பேயி செய்த தேசத் துரோகத்தைத் தெளிவாக விளக்கியுள்ளது.

இக் கட்டுரையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் வழக்குத் தொடுத்தனர். ஆனால், வாஜ்பேயி வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டு கட்டுரையை எதிர்க்கவில்லை. விசாரணைக்குப்பின் இந்த மானநஷ்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூடாரத்தில் ‘நல்லமனிதர், நேர்மையானவர்’ என்றெல்லாம் கூறப்படும் வாஜ்பேயி அவர்களின் நிலையே இதுவென்றால் மற்றவர்கள் பற்றிக் கூற வேண்டுமா?

இந்திய விடுதலைப்போரில் இணையற்ற தியாகங்கள் செய்த பகத்சிங், வ.உ.சி. போன்றவர்கள் இருக்க, கபட நாடகம் ஆடியவர்களை விடுதலைப் போரின் தியாகச் சுடர்களாகத் தூக்கி நிறுத்துவது எப்படிப்பட்ட மோசடி!

மன்னிப்புக் கடிதங்கள் எழுதி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அடிமைசாசனம் எழுதித் தந்த சாவர்க்கரை விடுதலைப் போரின் நாயகராகக் காட்டுவது மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை; பகத்சிங், வ.உ.சி. போன்றவர்களுக்குச் செய்யும் துரோகம்.

ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து அவிழ்த்து விடப்படும் செய்திகள் எல்லாமே புனைச் சுருட்டு, பொய், திரிபு, தில்லுமுல்லுகள்தான்.

தமிழிலிருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட சமஸ்கிருத்தை மூலமொழி, மூத்த மொழி என்று திரிப்பதும், பிளாஸ்டிக் சர்ஜரி, குளோனிங், ஆகாய விமானம் இவற்றுக்கெல்லாம் நாங்கள்தான் மூலகர்த்தர்கள் என்று புராணக் கதைகளை வைத்துப் பொய் சொல்வதும்,

அயல்நாட்டிலிருந்து பிழைக்கவந்த ஆரியர்கள்தான் இந்த நாட்டின் பூர்வீகக்குடிகள் என்று கூச்சநாச்சமே இல்லாமல் கூறுவதும் இவர்களது பிறவிப்புத்தி. அதே அடிப்படையில், இந்த விடுதலைப் போரின், உண்மையான வீரத்தளகர்த்தகர்களைப் புறந்தள்ளி போலிகளைத் தூக்கிநிறுத்திப் புகழ்பாடுவதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, இன்றைய இளைஞர்கள் மேற்கண்ட உண்மைகளை ஊன்றிக் கற்று, எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி, மோசடிக் கருத்துகளை முற்றாக அம்பலப்படுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும். w