20.8.2025 அன்று நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவினால் முன்மொழியப்பட்டுள்ள 130 ஆம் இந்திய அரசியல் சட்டத் திருத்த மசோதா – ஜனநாயகத்திற்கான சவப்பெட்டியை ஆயத்தப்படுத்தி, சர்வாதிகார (அதிபர்) யதேச்சாதிகார ஆட்சியை மறைமுகமாகச் செயல்படுத்தும் ஒரு புதிய ஏற்பாடாகும்!
எனவே, அதை எதிர்த்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆட்பட்டுள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்திலேயே தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது, காலத்தால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக – இந்திய அரசியல் சட்டப் பாதுகாப்புக்கான – முதல் முழக்கமாகும்!
நஞ்சுகளில் இப்போது ஒரு வகை புதிய வகை நஞ்சு உலா வருகிறது!
முந்தைய நஞ்சு – கொடுத்தவுடன் ஆளைச் சாகடிக்கும்; சவப் பரிசோதனையில் நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்ட விஷயம் வெளியே வர வாய்ப்பு உண்டு.
ஆனால், இந்தப் புதுவகை நஞ்சு, நேரிடையான நஞ்சாக இல்லாமல், உடல் உறுப்புகளை மெல்ல மெல்ல, ஆனால், ஒவ்வொரு உறுப்பையும் செயல்பட விடாது, மனிதர்களைச் சில மாதங்களிலேயே மரணமடையச் செய்யும்; வெளியில் உள்ளவர்களோ, ஏதோ ‘இயல்பான மரணம்தான்’ என்றே கருதக்கூடும்; கொடுக்கப்பட்ட நஞ்சு மெல்லக் கொல்லும் முறை (Slow Poisoning) வெளியில் தெரியாமலேயே போய்விடும்.
அந்த ரகத்தைச் சேர்ந்த அரசியல் கொடுஞ் சட்ட மசோதாதான் 130 ஆம் அரசியல் சட்டத் திருத்தம்.
விசாரணைக் கைதியாக 30 நாள்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி தானாகவே பறிபோகும் என்பது, நீதி வழங்கும் தத்துவத்திற்கே கூட எதிரானது மட்டுமல்ல; இயற்கை நீதி (Natural Justice) என்பதற்கும்கூட எதிரான பச்சை அநீதியான கருப்புச் சட்டமாகும்.
மசோதாவில் குறிப்பிடப்படும் பதவியாளர்கள்மீது அழிவழக்குப் பதியப்பட்டு, பொய்ப் புகார்கள் ஆனாலும்கூட – ‘ரிமாண்டு’ 15 நாள்கள் காவல், அடுத்த ரிமாண்ட் நீட்டல், அடுத்த 15 நாள்கள் என்று ஆக்கப்பட்டாலே, 30 நாள்கள் ஆகி, அவர்களது பதவிப் பறிப்பு உடனே செயல்படுத்தப்படும் என்பது நியாயமானதா?
ஒருவர்மீது எந்த வழக்குப் போடப்பட்டாலும், குற்றம் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும் வரையில், அவர் ‘குற்றம்’ சுமத்தப்பட்டவரே தவிர, குற்றம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, தண்டனை உறுதியாக வழங்கும்வரை, அவர் நிரபராதிதான்; குற்றவாளி அல்ல. அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல; சிவில், கிரிமினல் சட்ட விதிமுறைகளுக்கேகூட, இவர்கள் முன்வைத்துள்ள சட்டம் முற்றிலும் முரணாகும்.
இவர்கள் ஆட்சியில் தண்டிக்கப்பட்டு, தண்டனை நிறுத்தத்தால் எம்.பி., தேர்தலில் நின்று வென்ற கதை மறந்துவிட்டதா? அது எந்த வகை நீதி?
வாக்கு வங்கி தங்களுக்குச் சாதகமில்லாத நிலையில், மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களையெல்லாம் சிறிதும் ‘லஜ்ஜை’ இல்லாமல் – கூச்சநாச்சமின்றி, அமைச்சர்களாக ஒன்றிய அரசில் நியமிப்பது ஒருபுறம்; மறுபுறம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்கள் ஆதரவு பெற்று ஜனநாயகப் பதவியில் அமர்ந்தவர்களைக் குறுக்கு வழியில் இப்படிப் பதவி நீக்கம் செய்து, ‘நானே ராஜா; நாங்கள் வைத்ததே சட்டம்’ என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கூட்டணி முன்மொழியுமானால், அவர்களது கூட்டணிக் கட்சிகளையும், நிரந்தர அடிமைகளாக்கிட இது ஒரு மிரட்டல் ஆயுதம் என்பதை அவர்கள் மறந்து, தலையாட்டிப் பொம்மைகளாகித் தலையாட்டினால், இம் மசோதா சட்டமானால், அவர்களையும்கூட பதம் பார்க்கும்!
‘‘தீ கடைசி வீட்டுக்குத்தான்; என் வீட்டில் அல்ல’’ என்று நினைக்கும் ‘புத்திசாலிகள்’ (?) நிலைதான் – இதனை ஆதரிக்க முன்வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவுக் கட்சிகளுக்கும் என்பதை நிதான புத்தியுடன் கவனித்து, ஜனநாயகத்தைப் பிழைக்க வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!
அரசியல் சட்டக் கர்த்தாக்கள் தந்த அடிப்படை உரிமைகளைப் பகற்கொள்ளைபோல் பறிப்பதே இப்புதிய கருப்பு மசோதா!
நாடு முழுவதும் இதனை எதிர்த்துக் கண்டனக் குரல் – பொங்கும் கடலாய்க் குலுங்கிட – அதில் மசோதா கொண்டு வந்தவர்களின் முயற்சி முற்றாகத் தோற்கடிக்கப்பட ‘‘மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரப் புயல்’’ தொடங்கப்படவேண்டியது அவசரம், அவசியம்!





