Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தீ மிதிப்பது ஆண்டவன் அருளா? அறிவியலா- சிகரம்

ழே கிடக்கும் ஒரு சிறு நெருப்புத் துண்டை மிதித்தால்கூட ‘சுரீர்’ எனச் சுடுகிறதே! அப்படியிருக்க, அவ்வளவு பரந்த நெருப்பில் நடந்து செல்லும்போது சுடவில்லையே! எதனால்?

ஒரு சிறு ஊசி கையில் குத்தினால்கூட அவ்வளவு வலிக்கிறதே! ஆனால், தடித்த பெரிய கம்பியை அலகு குத்திக் கொள்கிறார்
களே! ஏன் வலிக்கவில்லை?

“கடவுள் அருள்தான் இவற்றிற்கெல்லாம் காரணம் என்பதுதான் நம் மக்களில் பலரின் நம்பிக்கை. ஆனால், இது உண்மையா? இல்லவே இல்லை.

நான் இப்படிச் சொன்னவுடன், பெரும்பாலானவர்களுக்கு நான் கூறுவதில் நம்பிக்கை ஏற்படாது.

அவ்வளவு நெருப்பில் நடந்தும் சுடவில்லை; அவ்வளவு பெரிய கம்பி குத்தியும் வலிக்க வில்லை. இதற்குக் கடவுள் அருள் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? கண்ணால் பார்க்கிறோமே, கடவுள் அருளை நம்பாமல் இருக்க முடியுமா? என்றே எண்ணுவார்கள்.

எனவே, இவையெல்லாம் கடவுள் அருளால் அல்ல என்பதை இங்கு விளக்க வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழ்நாட்டைக் காட்டிலும் மலேசியா போன்ற நாடுகளில் தீ மிதிப்பதும், அலகு குத்திக் கொள்வதும் மிக மிக அதிகம் என்பது மட்டுமல்ல, மிகக் கொடுமை!

அப்படிப்பட்ட மலேசியா நாட்டிலிருந்து, தீ மிதி, அலகு குத்திக் கொள்வது சம்பந்தமாக விளக்கம் கேட்டு எனக்கு ஒரு கடிதம் வந்தது.

அக்கடிதத்தில், அந்த நாட்டின் சைவ சித்தாந்த வித்தகர் புலவர்மணி முரு.பழ.இரத்தினம் அவர்கள் தீமிதி மற்றும் அலகுக் காவடி குறித்துக் கூறியிருந்த கருத்துகளை (‘தமிழ்நேசன்’ நாளிதழில் வெளிவந்தது) எனக்கு அனுப்பி அதுபற்றி எனது கருத்தைக் கேட்டிருந்தார்.

தீமிதி, அலகுக் காவடி குறித்துப் புலவர் மணி கருத்தையும் அதற்கு நான் அளித்த விளக்கத்தையும் சுருக்கமாக இங்கு முதலில் கூறிவிட்டு, மேற்கொண்டு உண்மைக் காரணங்களை விளக்க விரும்புகிறேன்.

புலவர்மணி அவர்களின் கருத்து:

“சாமி வருவது மருளே அன்றி அருள் அல்ல. உண்மையான பக்தர்களுக்குச் சாமி வராது. முழுமுதற்பொருளான இறைவன் சாமி ஆட்டத்திற்கு ஒருபோதும் வருவதில்லை. நரம்பு நோயுள்ள சிலருக்கு மனம் ஒருவித மருள் நிலையை அடைகிறது. இந்த நிலை உண்டானதும் அக்கினிக் குழியில் இறங்கினாலும் வேறு காரியங்கள் செய்தாலும் அவர்கள் வலியை உணர்வதில்லை. நரம்புகள் மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் உடலும் இதனால் பாதிக்கப்படாமல் இருக்கிறது. இதனால்தான் நெருப்புக் கொப்பளங்கள் அவர்கள் உடலில் தோன்றுவதில்லை.

மனம் உடலை ஆள்வதால் குறிப்பிட்ட ஒரு கால அளவு உடல் தாக்குறாமல் நிற்கிறது. மனத்தின் பேராற்றலைப் பற்றி நாம் அறியாததால் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு வியப்படைகிறோம். மருள் நிலை எல்லார்க்கும் வருவதில்லை. நரம்புக் கோளாறு உடைய சிலருக்கே வரும். அவர்கள் வலி, வேதனையின்றிச் சில செயல்களைச் செய்ய முடியும். உடலும் பாதிக்கப்படாமல் இருக்கும். ஆடுவோர் தம்மை அறியாமலே மருள் நிலைக்குச் செல்வதால், அவர்கள் மருள் தீர்ந்ததும் இங்ஙனம் செய்தது இறை அருள் என்று நினைக்கின்றனர்.

சரியான மருட்சி நிலை ஏற்பட்டு விட்டால் தீயில் சிறிது நேரம் நிற்கவும் நடக்கவும் ஆடவும் ஓடவும் முடியும். சிறிது சந்தேகம் தோன்றி னாலும் போதும், மனம் அறிவு நிலைக்குத் தாவிவிடுமாதலால், சூடு தாக்கி வேதனை உண்டாகும். சரியான மருள் நிலை உண்டாகி விட்டால், எந்தச் சந்தேகமும் ஏற்படாது.

மனம் குருட்டுத்தனமாக உணர்ச்சிவயப்பட்டு ஒன்றில் உறையுமானால் அதற்கு மருள் என்றுபெயர். மருள் வயப்பட்ட மனம் உடலைத் தன் பிடிக்குள் சிறிது நேரம் வைத்துக்கொள்ள முடியும். இதனால் வலி உணர்வு இல்லாமல்போகிறது. புறவுடலும் சிறிது நேரம் பாதிக்கப்படாமல் தாக்குப்பிடிக்கிற வல்லமையைப் பெறுகிறது. அந்த அளவிற்கு நரம்புகள் முறுக்கேறிஎதிர்த்து நிற்கின்றன” என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட புலவர்மணியின் கருத்துகளில் ஒன்று தெளிவாகிறது. தெய்வ நம்பிக்கையுள்ள புலவர்மணி அவர்களே, தீமிதி, அலகு குத்துதல் போன்றவை தெய்வ அருள் காரணமாக அல்ல என்பதை ஒத்துக் கொள்கிறார்; இவர் மட்டுமல்ல, வாரியார் போன்றவர்களும் தீ மிதிப்பதும், அலகு குத்திக் கொள்வதும் கடவுள் அருளால் அல்ல என்றே கூறுகின்றனர். அதை இக்கட்டுரையின் பிற்பகுதியில் கூறுகிறேன்.

சரி, புலவர்மணி அவர்கள் கூறுவதுபோல தீ மிதிக்கும்போது சுடாமல் இருப்பதற்கு ‘மருள்’ காரணமா? அல்லது அறிவியல் ரீதியான காரணங்கள் உண்டா?

மருள் நிலை என்பது மனோ தத்துவப்படி ஓரளவு உண்மைதான் என்றாலும், தீமிதி மற்றும் அலகு குத்துதல் போன்ற செயல்கள் செய்
வதற்கு முழுக்க முழுக்க மருள் நிலையே காரணம் என்று கூறுவது சரியல்ல.

தீ மிதிக்கின்றவர்கள் அனை வரும் மருள் நிலையை அடைந்தவர்கள் அல்லர். ஆயிரத்தில் ஒருவர்இலட்சத்தில் ஒருவர் வேண்டுமானால் மருள் நிலையில் மிதிக்கின்றவர்கள் இருக்கலாம்.

மருள் நிலையில்தான் தீயில் இறங்க முடியும்என்றால் தன் (சுய) நினைவில் திராவிடர் கழகத் தொண்டர்கள் எவ்வாறு தீயில் இறங்குகிறார்கள்? அலகு குத்திக் கொள்கிறார்கள்? இவை யாவும் கட்டாயம் ஒப்பிட்டுச் சிந்திக்கப்பட வேண்டியவை.

நெருப்பு சுடாமல் இருப்பதற்கான அறிவியல் காரணம் என்ன?

தீச்சட்டி ஏந்துதல்:

தீச்சட்டி ஏந்துகின்ற பக்தர் ஒருவர் ஒரு சட்டியில்தான் நெருப்பைப் போட்டு ஏந்துகிறாரே தவிர, வெறுங்கையில் (உள்ளங்கையில்) நெருப்பை ஏந்துவதில்லை.

அருளால் அல்லது மருளால் நெருப்பு சுடாது என்றால், வெறுங்கையில் ஏன் நெருப்பை  ஏந்துவதில்லை? குறுக்கே ஒரு மண்சட்டி ஏன்? இங்குதான் சிந்திக்க வேண்டும்.

வெறுங்காலால் நெருப்பின் மீது நடப்பதாகக் கூறுகின்றவர்கள் வெறுங்கையில் நெருப்பை ஏந்த முடிவதில்லையே ஏன்?

வெறுங்கையில் நெருப்பை ஏந்தினால் நெருப்பு ஒரே இடத்தில் (உள்ளங்கையில்) நிலைத்து நிற்கிறது. அதனால், நெருப்பு கையைச் சுட்டுப் புண்ணாக்கும். ஆகையால்தான் நெருப்பை வெறுங்கையில் ஏந்த யாரும் முன் வருவதில்லை.

உள்ளங்கையில் ஒரு கரண்டி நெருப்பை அள்ளி வைத்தால் எந்தப் பக்தனாலும் வைத்திருக்க முடியாது.

நெருப்பைச் சட்டியில் வைத்து, அடியில் சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகைச் சாற்றைத் தடவியும் கையில் வேப்பிலைக் கொத்தை வைத்துக் கொண்டும் தீச்சட்டி எடுக்கிறார்கள்.

பக்தியால் நெருப்பு சுடுவதில்லையென்றால், வெறுங்கையில் நெருப்பை ஏந்துவார்களா? முடியுமா? நிச்சயமாக முடியாது.

வாயில் சூடம் போட்டு விழுங்குவதைக்கூடபக்தியால், அருளால்தான் என்று சிலர் எண்ணுகின்றனர். எரிகின்ற சூடத்தை நாக்கில் போட்டு உடனே வாயை மூடிக்கொள்வார்கள். பார்க்கின்றவர்கள் நெருப்பை விழுங்கிவிட்டதாக எண்ணுவார்கள். ஆனால், உண்மை அதுவல்ல; வாயை மூடியவுடன்சூடம் அணைந்துவிடும். காற்று இருந்தால்தான் நெருப்பு எரியும். எனவே, வாயை மூடியதும் சூடம் அணைந்து விடுவதால் வாயைச் சுடுவதில்லை.

தீ மிதி தத்துவம்:

நெருப்புக் குழியில் இறங்கும்போது நெருப்பில் எந்த இடத்திலும் கால்கள் நிலைத்து நிற்பதில்லை. இடம் மாறிக் கொண்டேயிருக்கிறது. விரைந்து மாறிக்கொண்டேயிருக்கிறது. ஆகையால் காலில் சூடு ஏறுவதற்கோ, கால் புண்ணாவதற்கோ வாய்ப்பில்லை. தீ மிதிக்கும்போது, அதிக அளவில் பரப்பப்பட்டுள்ள நெருப்பில்தான் நடப்பார்கள். நெருப்பு அதிக அளவில் பரப்பப்
பட்டிருப்பதோடு, சமமாகப் பரப்பப்படுதல், அதன்மீதுள்ள சாம்பலை அறவே நீக்குதல் போன்ற காரணங்களால் சுடாமல் இருக்கிறது.

ஒரு தனி நெருப்புத் துண்டு தரையில் கிடக்கும்போது அதை மிதித்தால் காலைச் சுட்டுவிடும்; புண்ணாகி விடும். ஆனால், அதிகப் பரப்பில் நெருப்புத் துண்டுகள் பரப்பப்படும்போது கால் எந்த ஒரு நெருப்புத் துண்டிலும் ஆழப் பதிவதில்லை. அதனால் சுடுவதில்லை. ஒரே இடத்தில் கால் நிலைத்து நின்றால்
அதிக நெருப்புப் பரப்பப்பட்டிருந்தாலும் சுட்டுவிடும். எனவே, விரைந்து நடந்து கொண்டே இருக்கவேண்டும்.

அடுப்படியில் பெண்கள் நெருப்புத் துண்டை விரலால் எடுத்துப் போடும்போது தணலாக இருக்கும் நெருப்பைத்தான் எடுத்துப் போடுவார்களே தவிர, நீறுபூத்த நெருப்பை (மேலே சாம்பல் படிந்த நெருப்புத் துண்டை) விரலால் எடுக்க மாட்டார்கள். காரணம் என்ன?

நீறு பூத்த நெருப்பின் மீது உள்ள வெண்ணிற மென்மையான சாம்பல் அதிகச் சூட்டுடன் இருக்கும். அதைத் தொட்டால் கையில் ஒட்டிக் கொள்ளும். இது விரலைச் சுட்டு கொப்பளிக்கச் செய்து விடும். நீறுபூத்த நெருப்பை விரைவாக விரலால் எடுத்துப் போட்டாலும் சுட்டு விடும். எனவே, நீறுபூத்த நெருப்புத் துண்டை விரலால் எடுக்க முடியாது. நீறுபடியாத தணலான நெருப்புத் துண்டை விரலால் எடுக்க முடியும்.

தீ மிதிப்பதும் இந்த அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. தீ மிதிப்பதற்கு முன்பு தீக்குழியில் சில ஏற்பாடுகள் செய்தாக வேண்டும்.சமமாக வெட்டப்பட்ட ஒரு குழியில் (குழியின் ஆழம், குறைவாகக் கூட இருக்கலாம்) விறகுக்கட்டைகளைப் போட்டு எரிப்பர். கட்டைகள் நன்றாக எரிந்து தணலாக மாறிய பிறகு,அவற்றை அடித்து நொறுக்கிச் சமப்படுத்து
வார்கள். அதாவது நெருப்பின் மேல்மட்டம் மேடுபள்ளம் இல்லாமல் சமப்படுத்தப்படும். பிறகு முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள்.

சாம்பல் அகற்றப்பட்டு, நெருப்புத் தணலாகச் சமபரப்பில் இருக்கும் நிலையில், பக்தர்கள் அதன்மீது விரைந்து வேகமாக நடந்து செல்வார்கள். இதனால் காலில் அதிகச் சூடு ஏறுவதில்லை.

ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து நடக்க வேண்டியது கட்டாயமாகும். ஒரு நெருப்புத் துண்டை உள்ளங்கையில் போட்டு, இந்தக் கைக்கும் அந்தக் கைக்கும் விரைவாய் மாற்றினால் நெருப்புச் சுடாது. அது ஒரே கையில் நிலையாக இருந்தால் சுட்டுவிடும். எனவே, நெருப்பில் விரைந்து நடக்க வேண்டும். விரைவாய் நடந்தால் சுடாது.

மென்மையான சாம்பலை நீக்காமலும் நெருப்பைச் சமமாகப் பரப்பாமலும், மெதுவாக நெருப்பில் நடந்து, அல்லது நெருப்பில் நின்று யாரும் தீ மிதிக்க முடியாது.

புலவர் மணி கூறுவதுபோல, மருள் நிலையில்இருந்தால்கூட நீறுபூத்த மேடு பள்ளமான நெருப்பில் நின்றோ மெதுவாக நடந்தோ யாராலும் தீ மிதிக்க முடியாது.

எனவே, மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் தீயில் இறங்கி நடக்கிறார்களே தவிர, அருள், மருள் போன்ற காரணங்களால் அல்ல.

உளவியல் அடிப்படையில் நோக்கின் ஒரு காரணத்தை மட்டும் கூறலாம். அதாவது ஆழ்ந்த நம்பிக்கையுடன் அல்லது மன உறுதியுடன் நெருப்பின் மீது செல்லும்போது நெருப்பின் சூடு அவர்களுக்கு அதிகம் தெரிவதில்லை. அதுவும், மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தீயில் நடக்கும்போது மட்டுந்தான்.

எனவே, தீ மிதிப்பதும், அலகு குத்திக் கொள்வதும் மேற்கண்ட அறிவியல் காரணங்களினாலே தானே தவிர, மற்றபடி கடவுள் அருளாலோ அல்லது மருளாலோ அல்ல. நான் கூறியுள்ளபடி அறிவியல் காரணங்களால் இது செய்யப்படுவதால்தான், திராவிடர் கழகத்தார் கடவுள் இல்லை என்று சொல்லித் தீ மிதிக்கிறார்கள்.

முதுகில் கொக்கி மாட்டித் தேர், கார் இழுத்தல் செய்கிறார்கள். அருளோ, மருளோ காரணம் என்றால் இவர்களால் இவற்றைச் செய்ய முடியாதல்லவா?

ஆணிச் செருப்பு:

காவடி எடுக்கும்போது சிலர் ஆணிச் செருப்பில் ஏறி நடப்பார்கள். ஆணிச் செருப்பு என்பது மரத்தால் செய்யப்பட்ட செருப்பில், ஆணிகள் நெருக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஆணிகளில் மேல் முனைகள் கூராக இருக்கும். அதாவது கால் வைக்கும் பரப்பு, கூரிய ஆணிகளை நெருக்கமாகக் கொண்டதாக இருக்கும்.

மேலும், கூர்முனைகள் அனைத்தும் ஒரே மட்டமாக உயரம் குட்டை இல்லாமல் இருக்கும். நெருக்கமாகவும் இருக்கும். அந்த ஆணிச் செருப்பைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும்போது காலில் ஆணி குத்துவதில்லை. காரணம் ஆணிகள் கூர்மையாக இருந்தாலும் கூர்முனைகள் சமபரப்பிலும் நெருக்கமாகவும் அதிக அளவிலும் இருப்பதுதான். தனியாக ஒரே ஒரு கூர் ஆணி மட்டும் நீட்டிக்கொண்டிருந்தால் அது காலில் ஏறிவிடும்.

காரணம், ஒரே ஒரு கூர் ஆணி மட்டும் நீட்டிக்கொண்டு இருந்தால் நமது எடை முழுக்க ஒரே ஆணியில் அமுக்கப்பட்டு காலினுள் ஆணி ஏறிவிடும். சம உயரத்தில் நிறைய ஆணிகள்
இருக்கும்போது நமது எடை எல்லா ஆணிகளிலும் சமமாகப் பகிர்ந்து போகிறது. எந்த ஓர் ஆணியிலும் கால் ஆழப் பதிவதில்லை. ஏதாவது ஓர் ஆணி நீட்டி நின்றாலும் காலில் ஏறிவிடும். ஆணிகள் சமப்பரப்பில் இருப்பதால் காலில் ஏறுவதில்லை. மற்றபடி ஆணி குத்தாததற்குக் கடவுள் அருள் காரணம் இல்லை.

கடவுள் சக்தியால் சுடுவதில்லையென்றால், தீ மிதிக்கும்போது நெருப்பில் விழுந்து பலர் இறக்கிறார்களே அது ஏன்?

ஆக, தீ மிதித்தல், ஆணிச் செருப்பில் நடத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் எல்லாம் அறிவியல் காரணங்களுக்கு உட்பட்டே செய்யப்படுகின்றனவே தவிர, கடவுள் சக்தியால், பக்தியால் அல்ல. இவை கடவுள் சக்தியால்தான் செய்யமுடிகிறது என்பதை கடவுள் நம்பிக்கையுள்ள வாரியார் போன்றோரே ஏற்பதில்லை.

வாரியார் கருத்து:

மலர், இளநீர், சர்க்கரைக் காவடிகள் எடுத்து, தூய்மையான ஆண்டவனை வழிபட வேண்டும். மாறாக தீ மிதித்தல், அலகு குத்துதல் செய்யக்கூடாது.

அன்பினாலே நிகழுகின்ற அந்நிகழ்ச்சிக்குப் பயங்கரமாகவும், நாவில் வேல் குத்திக் கொள்வது, தேர் உருட்டுவது இவையெல்லாம் வேண்டத்தகாதது. எப்படியோ நம் நாட்டில் புல்லுருவி மாதிரித் தோன்றிவிட்டது.

மருளாடி எடுப்பது, வேல்குத்தி எடுப்பது, சின்னச் சின்ன ஊசி குத்தி எடுப்பது, நீண்ட அலகுகளைக் குத்துவது என்பதெல்லாம் நமது  பக்திக்கு, அன்பு நெறிக்குப் புறம்பானது.

(1982ஆம் ஆண்டு திரு.வாரியார் அவர்கள், மலேசியா இந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் சி.மு. பொன்னையாவின் கேள்விக்கு மலாக்காவில் நடந்த ஒரு கலந்துரையாடலில் மேற்கண்டவாறு பதில் கூறினார்கள்). l