Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலைஞர் எனும் இலக்கியவாதி – வெற்றிச்செல்வன்

மேனாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ஓர் அரசியல் வாதியாகப் பொதுமக்கள் அறிந்து வைத்துள்ள அளவிற்கு ஓர் இலக்கியவாதியாக அறிந்திருக்கவில்லை. திரைப்படங்களின் வசனகர்த்தாவாக அவர் அறியப்பட்டிருப்பதை விதிவிலக்காகக் கூறலாம். அவருடைய வாழ்நாள் முழுவதும் அவர் வகித்திருந்த பதவிகளைக் காட்டிலும் இலக்கியவாதியாக இயங்கிய நாள்களே அவரது அயர்வைப் போக்குவனவாக இருந்தன. அவரது எழுத்துப் பணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “இந்தப் பதவியே போனாலும்கூட அவர் கையிலே இருக்கின்ற பேனா இந்த நாட்டைச் சுழன்றடிக்கின்ற சூறாவளியாக இயங்கும்” என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

தன்னுடைய 14 வயதில் எழுதத் தொடங்கிய கலைஞர் நினைவு உள்ள வரையில் எழுதிக் கொண்டே இருந்தார். 16 நாவல்கள், 29 நாடகங்கள், 76 சிறுகதைகள், 210 கவிதைகள், 46 கட்டுரை நூல்கள், 4051 கடிதங்கள், 75 திரைக்கதை வசனங்கள், நெஞ்சுக்கு நீதி 6 பாகங்கள், ஒரு பயண நூல், திருக்குறள் உரை, குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, தாய்க்காவியம் என அவர் எழுதிக் குவித்தவை ஏராளம்.

திராவிட இயக்கத்தின் வாயிலாக உருவாகிய இலக்கியத்தை வெறும் பிரச்சார இலக்கியம் என்று குறை கூறுபவர்கள், அதன் சமூக, சமத்துவ நோக்கத்தை உணராதவர்களே! தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற பெருமிதங்கள் கலந்த வரலாறு கலைஞரின் படைப்புகளில் மிளிர்வதைக் காணலாம். அதைவிட அதிகமாக, அன்றைய சமூகத்தின் அவலங்களைப் படம்பிடித்துக் காட்டியது அவரது பேனா முனை.

கலைஞரைப் பொதுமக்களிடம் அதிகமாகக் கொண்டு சேர்த்தது அவருடைய திரைக்கதை வசனங்கள்தாம். தந்தை பெரியாரின் ’குடிஅரசு’ அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவருக்குக் கோவை ஜூபிடர் நிறுவனம் தயாரிக்கவிருந்த ராஜகுமாரி திரைப்படத்திற்கு வசனம் எழுத அழைப்பு வந்தது. தொடர்ந்து சில படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த கருணாநிதிக்கு, ’பராசக்தி’ திரைப்படம் மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுத்தது. திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கருத்துகளை எளிதாக மக்களுக்குக் கடத்தும் ஆற்றலைக் கலைஞர் பெற்றிருந்தார். அவரது வசனங்களில் சங்க இலக்கியத்தின் சாரம் மட்டுமின்றி, பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் வரைக்குமான வரிகள் பயணப்பட்டிருந்தது அவருடைய ஆழ்ந்த வாசிப்பைப் புலப்படுத்தும். இயக்கம் சார்ந்த பரப்புரைக்குத் திரைப்படங்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட காலம் அது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது திராவிட இயக்கம்.

1938ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது கலைஞர் எழுதிய கவிதை அவருடைய முதல் கவிதையாக நமக்குக் கிடைக்கிறது. இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளைப் படைத்தவர் கலைஞர். அவற்றுள் பெரும்பாலானவை கவியரங்கக் கவிதைகள். புறநானூற்றுப் பாடல்களைப் புதுக்கவிதையாக ஆக்கிட முனைந்தவர் கலைஞர். ’ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே’ என்ற காக்கைபாடினியாரின் புறநானூற்றுப் பாடலை, அதன் வீரியம் குறையாது புதுக்கவிதையில் படைத்திருப்பார். பேரறிஞர் அண்ணா மறைந்தபோது அவர் எழுதிய கவிதை இரங்கல் இலக்கியத்தின் உச்சம்.

கடித இலக்கிய வரலாற்றிலும் பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு தனது முத்திரையைப் பதித்தவர் கலைஞர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியிருக்கிறார். தான் பள்ளியில் படிக்கும்போதே தான் நடத்தி வந்த தமிழ் மாணவர் மன்றத்தின் திறப்பு விழாவிற்கு வருமாறு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதியவர். “உடன்பிறப்பே” என்னும் தலைப்பில் அவர் எழுதிய கடிதங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோதைவிட, ஆட்சியில் இல்லாதபோது தொண்டர்களுக்கும் தலைமைக்கும் இடையே பெரியதொரு இணைப்புப் பாலமாக விளங்கின.

கலைஞரின் சிறுகதைகளிலும் அவருடைய சமுதாய நோக்கம் வெளிப்படுவதைக் காணலாம். தொழிலாளர்களின் துயரம் (தப்பி விட்டார்கள்), சிறுபான்மையினர் நலன் (அணில் குஞ்சு), மூடநம்பிக்கை ஒழிப்பு (சங்கிலிச்சாமி) ஆகிய பல்வேறு கருப்பொருள்களைத் தமது சிறுகதைகளில் கையாண்டிருக்கிறார்.

“குழந்தையின் கனவுகள் முள்ளிலே இருக்கும் ரோஜாவைப் பறிப்பது போலிருக்குமே தவிர, தேனீக்களை அழித்து விட்டுத் தேனடையை எடுத்துக் கசக்கிப் பிழிவதைப் போலிருக்காது” என்பன போன்ற சொல்லாடல்கள் நிரம்பியவை கலைஞரின் நாவல்கள். கலைஞரின் நாவல்களைச் சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம். முன்னது, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு ஆகியவற்றைப் பேசின என்றால் பின்னது, தமிழரின் பெருமிதங்களான பண்பாட்டு அடையாளங்களைப் பறைசாற்றுவதாக இருந்தன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுப்பதில் கலைஞர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவருடைய திருக்குறள் மீதான அக்கறை, தொல்காப்பியத்தின் மீதான பற்றுதல் ஆகியன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். கண்ணகியும், பூம்புகாரும் அவரது எழுத்துலக வாழ்க்கையில் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கையிலும் தொடர்ந்தன. திராவிட இயக்கம் மறுத்து வந்த அடையாளத்திற்கு எதிரான ஒரு மாற்றுப் பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற கலைஞரின் தீராத வேட்கையை அவரது படைப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

அண்மையில் தமிழ்நாடு அரசு கலைஞரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி இருக்கிறது, இதன்மூலம் கலைஞரின் எழுத்துகள் பரவலாக பதிப்பிக்கப்படுவதும், அதன்மூலமாகப் பலரால் வாசிக்கப்படுவதும் சாத்தியமாகியுள்ளது. நூற்றாண்டு காணும் தமிழ் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, க.அன்பழகன், தி. ஜானகிராமன் ஆகியோரது படைப்புகளை வெளியிட்டுள்ளது. அவ்வகையில் “கலைஞரின் படைப்புலகம்” என்ற தலைப்பில் எழுத்தாளர் இமையம் முயற்சியில் கலைஞரின் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்தம் படைப்புகள் தலைப்பு வாரியாகத் தொகுக்கப் படுவதும், அவற்றை மீள்வாசிப்பிற்கு உட்படுத்துவதும் இன்றைய தலைமுறையினருக்குக் கடந்தகால வரலாற்றை நினைவு படுத்துவதாக இருக்கும்.