1.கே: பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்வது சரியா? முதலாமாண்டுப் பாடம் நடத்தாமல் இரண்டாம் ஆண்டுப் பாடத்தையே நடத்த வழி செய்யுமே! இதனால் முதலாமாண்டுப் பாடம் புறக்கணிக்கப்பட்டு, அப்பாடங்களின் அறிவை மாணவர்கள் இழக்க நேரிட்டு, போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும்போது அதன் பாதிப்பு ஏற்படுமல்லவா?
– த.எழிலரசி, புதுக்கோட்டை.
ப: தங்களது பயமும் கவலையும் ஏற்கத்தக்கது அல்ல. முதலாம் ஆண்டுப் பாடமும் இரண்டாம் ஆண்டுப் பாடமும் ஒரு தொடர்தான். உதாரணமாக B.A., Honours வகுப்பில் மூன்றாண்டு. அதன் இறுதி பல்கலைக்கழகப் பட்டத் தேர்வுகள் மூன்றாம் ஆண்டு இறுதியில் தான். மூன்று ஆண்டு பாடத்திலும் இணைந்து தான் இறுதிப் பொதுத் தேர்வு (Final public examination). இதனால் பாதிப்பு ஏதும் வராது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., வரை படித்து வருகிறார்களே! தேர்வைக் கண்டு சலிப்பும் வெறுப்பும்தான் ஏற்படுகிறது. மூன்றாம் ஆண்டு, அய்ந்தாம் ஆண்டு, எட்டாம் ஆண்டு, பத்தாம் ஆண்டு, பதினொன்றாம் ஆண்டு, பன்னிரண்டாம் ஆண்டு என்று தேர்வுகள் திணிக்கப்படுவது, மாணவர்களுக்கான தண்டனை தான். முன்பு பத்தாம் வகுப்பு (SSLC) பிறகு 12ஆ-ம் வகுப்பு தேர்வுகள். இந்த இரண்டு தேர்வுகளிலும் எந்தச் சிக்கலும் கிடையாது. போட்டித் தேர்வுகளுக்கும் பிளஸ் டூ படிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத நிலை தானே உண்மை. பிறகு எப்படி பாதிக்கும்? முன்பு எஸ்.எஸ்.எல்.சி., பத்தாம் வகுப்பு செலக் ஷன் (வடிகட்டல்) முன்பு இருந்தது. அதில் சிலரை வகுப்புத் தேர்வு மூலம் நிறுத்தி வைத்தனர். இதை மனுதர்ம ஆசிரியர்களின் ‘பன்னாடை முறை’ என்று ‘விடுதலை’யும், ‘திராவிடர் கழகமும்’ தொடர்ந்து எழுத்துப் போர் நடத்தி வெற்றி கண்ட வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். முன்பு பிளஸ்டூ தான் ஒரே தேர்வு. பின்பு புகுத்தப்பட்டது தான் பதினொன்றாம் வகுப்புத் தேர்வு. அதையும் அறிந்து கொள்க.

2.கே: விநாயகர் சதுர்த்தி விழாவில் முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் விடுக்கும் அழைப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– வை.காமராஜ், தென்னார்க்காடு.
ப: இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் எப்படிப்பட்ட வீண் விதண்டாவாதி என்பதையே காட்டும் மதவெறிக் கேள்வி இது! எதில் கலந்து கொள்ள வேண்டும், எதில் கலந்து கொள்ளக் கூடாது என்கிற உரிமை முதலமைச்சருடையது. அது சரி, பிள்ளையார் – விநாயகர் சதுர்த்தி தமிழ்நாட்டில் கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்கு முன் உண்டா? வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்தான் விநாயகர் என்பதை தன் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார் – ஆத்திகரான கல்வி அறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். இதற்கு இந்து முன்னணித் தலைவரின் பதில் என்ன? இறக்குமதிக் கடவுள்தான் என்ற கூடுதல் தகவலை அறியட்டும்!

3.கே: உச்சநீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் மீது வழக்குத் தொடர்ந்து, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த தீர்ப்பு பெறமுடியாதா?
– கே.குகநாதன், பாப்பான்சாவடி.
ப: நீங்கள் விரும்புவது போல அது அவ்வளவு எளிதா? நீதிப் போக்கு எப்படி இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது!
4.கே: ‘‘தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தற்போது ஆட்சி செய்கிறார்கள். கலைஞர் இப்படி அனுமதிப்பாரா’’ என்று உயர்நீதிமன்ற நீதிபதியின் விமர்சனம் சரியா? இதுமுதல்வரின் ஆளுமையைச் சிதைப்ப தாகாதா?
– சே.மேகலா, சேலம்.

ப: சரி இல்லை என்று அந்த நீதிபதிக்கே அடிஷனல் அட்வகேட் ஜெனரல் வழக்குரைஞர் ரவீந்திரன் தெளிவுபடுத்தி, இந்த வரம்பு மீறிய வம்பு கருத்திற்கு வாய் அடைப்பை ஏற்படுத்தியுள்ளார். அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வழிகாட்டுவதற்குத் தானே அரசால் நியமிக்கப்படுகிறார்கள். அது எப்படி தவறாகும்?
5.கே: இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மட்டும் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம்செய்ய தனிச் செயல் திட்டம் வகுப்பீர்களா?ஒத்த நோக்குடையவர்களை ஒருங்கிணைத்தால் நல்ல விளைவு கிடைக்குமல்லவா?
– அய்.கலைமதி, தஞ்சாவூர்.
ப: நல்ல யோசனை. யோசித்து முடிவெடுப்போம்!
6.கே: புத்தி சுவாதீனம் இன்மையால் இராமன் வாலியைக் கொன்றான் என்று வைரமுத்து கூறியதற்கு, பா.ஜ.க. மாநிலச் செயலர் கண்டனம் தெரிவித்துள்ளதோடு,
இராமன் சோழர்களின் முன்னோர் என்று கூறியுள்ளதைப் பற்றி தங்கள் கருத்து?
– க.சதீஷ், விருதுநகர்.
ப: அபத்தமும், அறியாமை + மதவெறியும் சேர்ந்த கூட்டுக் கலவை அது!
7.கே: மனைவியின் சமையல், உடை பற்றி கணவன் விமர்சிப்பது குற்றமல்லஎன்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து ஏற்புடையதா?
— வி.அபிஷேக், தக்கலை.
ப: பல நீதிபதிகள் பழைமையில் ஊறியுள்ளதன் வெளிப்பாடு இது!





