Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு 366 அய்யம்பேட்டையில் துரை. சக்ரவர்த்தி நினைவிடம் திறப்பு விழா!-கி.வீரமணி

சிங்கப்பூரில் இருந்து 22.8.2007 அன்று திரும்பியவுடன் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை, இணை வேந்தர் வீகேயென். கண்ணப்பன் அவர்களும் நிதித்துறைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் ச.ராசரத்தினம் மற்றும் நிருவாகக் குழு உறுப்பினர்களான வழக்குரைஞர் கோ.சாமிதுரை, பொறியாளர் சுந்தர்ராஜுலு, டாக்டர் மீனாம்பாள், துணைவேந்தர் டாக்டர் நல்.ராமச்சந்திரன் ஆகியோருடன் சென்று சந்தித்து பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆவதற்குப் பெரிதும் உதவிய அவருக்கு நன்றி தெரிவித்தோம். எளிய முறையில் தொடங்கிய பெரியார் கல்வி நிறுவனங்கள் மக்கள் பல்கலைக்கழகமாகப் பரிணமித்து வளர்ந்தது சாதாரணமானதல்லவே !

முதலமைச்சர் கலைஞருடன் சந்திப்பு
– நன்றி தெரிவிப்பு

ஆந்திர மாநிலம் அய்தராபாத் நகரில் 26.8.2007 அன்று மக்கள் கூடி பொழுதுபோக்கி இளைப்பாறும் நகரின் மய்யப் பகுதியான லும்பினி தோட்டம் என்று புத்தர் நினைவாக அமைக்கப்பட்ட பூங்காவில் திடீரென்று குண்டு வெடித்து 42 பேர் இறந்த துயரச் செய்தி நம் நெஞ்சை உலுக்கியதோடு, உறைய வைத்துவிட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, இதற்கு மூல காரணம் மதவெறியும் அது பெற்றெடுத்த தீவிரவாதமும் தான் காரணம் என்பதை விளக்கி, மத போதைக்கு ஆளாகி இப்படி உலகத்தின் மானுட சமுதாயத்தையே அழிக்கத் துடியாய்த் துடிக்கும் மதவெறியர்களைக் கண்டித்தோம்.

ஆத்தூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

அன்று காலை திருவண்ணாமலையில் மாவட்டத் தலைவர் பட்டாபிராமன் அவர்களுடைய மகன் ப.மதிவாணன் – மா.விஜயலட்சுமி ஆகியோர் இணையேற்பு நிகழ்வினை நடத்தி
வைத்தோம். பின்னர் ஆத்தூரில் நடைபெற்றபெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் வகுப்புகளைநடத்தி மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினோம். ஆத்தூரில் அன்று இரவு
நடைபெற்ற பெரியார் திரைப்பட நூறாம் நாள்வெற்றி விழாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுஉரையாற்றினோம். இவ்விழாவில் அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டினோம். சேலம் மாவட்டம் முழுதும், பெரியார் திரைப்படத்தின் வெற்றிக்கு உதவியவர் வீரபாண்டியார்.

மறுநாள் (28.8.2007) புறப்பட்டு, டெல்லி சென்றோம். அங்கு டெல்லி பெரியார் மய்யத்தின் பணித் தோழர்கள் விமான நிலையத்தில் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர். புது டெல்லி சென்றிருந்த நாம் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தோம். பின்னர் மறுநாள் மேனாள் ஒன்றிய அமைச்சர் டி.பி.யாதவ் அவர்களையும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜுன் சிங் அவர்களையும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களையும் சந்தித்து உரையாடினோம். பின்னர் ஒன்றிய கப்பல் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பாலு அவர்களும், ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.இராசா அவர்களும் எம்மைச் சந்தித்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

வீரபாண்டியாருக்கு நினைவுப் பரிசு வழங்கும் ஆசிரியர்

தஞ்சையில் 30.8.2007 அன்று அனைத்துக்கட்சி, அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் சந்தித்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இயக்குநர் பேராசிரியர் மு.அசோக்குமார் அவர்களது மகன் ஆனந்தபிரபு – சுரேகா ஆகியோர் இணையேற்பு விழாவை காலை 11 மணியளவில் ஒரத்தநாட்டில் நடத்தி வைத்தோம்.

அன்று இரவு சிதம்பரம் வட்டம் பூந்தோட்டம்கிராமத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாபொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்புச் செயலாளர் பேராசிரியர்பூ.சி.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சோ.கணபதி தலைமை வகித்தார். எழுத்தாளர்
மஞ்சை வசந்தன், பேராசிரியர் உதயன் ராமநாதன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் வே.மாணிக்கவாசகம், மாநில மாணவர் அணி அமைப்பாளர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பூந்தோட்டம் கிராமத்திற்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. அய்க்கிய நாடுகள் சபையின் கலாச்சார அமைப்பு இந்தக் கிராமத்தை வெகுவாகப் பாராட்டி இருக்கிறது. கோயில் இல்லாத ஊரில் குடியிருந்து நல்ல முறையில் கல்வி கற்று நல்ல பணியில் பலர் இருக்கின்றனர்.

ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களுடன் சந்திப்பு சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுடன் சந்திப்பு

இக்கிராமத்திற்கு ஒருமுறை தந்தை பெரியார் பேச வந்தார். அக்கூட்டத்திற்கு அண்ணாவும் வருவதாக இருந்தது. தந்தை பெரியார் முன்கூட்டியே வந்து விட்டார். கூட்டம் தொடங்கியது. பெரியார் 3 மணி நேரத்திற்கு மேலாகப் பேசினார். ரயில் தாமதம் காரணமாக பெரியார் பேசிய பிறகே அண்ணா வர நேர்ந்தது. அண்ணா வந்தவுடன் தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து இப்பொழுது அண்ணா அவர்கள் பேசுவார், என்று அறிவித்தார். அண்ணா அவர்கள் அதன் பிறகு ஒரு மணி நேரம் பேசினார். எப்போதும் தந்தை பெரியார் தான் கடைசியில் பேசுவார். ஆனால், பெரியார் மூன்று  மணி நேரம் பேசிய பின் அண்ணா பேசிய நிகழ்ச்சி இந்த ஊரில் நடைபெற்றது. இந்நிகழ்வைச் சுட்டிக்காட்டி உரையாற்றி, கிராமத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் கல்வெட்டைத் திறந்து வைத்தோம். அந்தக் கல்வெட்டில் சுயமரியாதைச் சுடரொளிகள்   பொன்.கோவிந்தசாமி, பூ.அ.கொடைஅரசன், பூ.அ.வரதராசன், பூ.இரத்தின வேணுகோபால்,கலைமாமணி பூ.ச.தட்சிணாமூர்த்தி ஆகியோரது பெயர்கள் பதிக்கப் பெற்றிருந்தன. மறுநாள் (31.08.2007) திருப்பத்தூர் புனித இருதயக் கல்லூரியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினோம். மாலை ஏலகிரியில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றோம்.

யு.ஜி.சி. தலைவருடன் சந்திப்பு

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டு விழா 3.9.2007 அன்று நடைபெற்றது.தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மொய்தீன்கான் ஒளிச்சுடரை ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். பெரியார் புரா சார்பில் கிராம ஊராட்சித் தலைவர்
களுக்கான சிறப்புக் கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினோம்.

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டு விழா

5.9.2007 அன்று காலை திராவிடர் கழகத்தின் தஞ்சை நகர மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி ராஜகோபால் அவர்களின் பேத்தியும் நகர்மன்றத் தலைவர்  தேன்மொழி – ஜெயகோபால் ஆகியோர் மகளுமான ஜெ.ஹேமலதா – வழக்குரைஞர் இரா.சரவணகுமார் ஆகியோர் இணையேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தோம். வழக்குரைஞர் சரவணகுமார் அவர்களும் நம் இயக்கச் செயல்பாட்டாளர். நீடாமங்கலம் அருகில் உள்ள மூவர்கோட்டை என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். மாணவர் பருவம் முதல் திராவிடர் கழகத்தில் – குறிப்பாக பெரியார் சமூகக் காப்பணியில் – செயல்பட்டு வரும் தோழர். இந்தத் திருமணத்தில் அமைச்சர்கள் கோ.சி.மணி, எஸ்.என்.எம்.உபயத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அன்று மாலை அய்யம்பேட்டையில் துரை. சக்ரவர்த்தி நினைவிடம், பெரியார் படிப்பகம் மற்றும் எம்(கி.வீரமணி) பெயரில் அமைந்த நூலகக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்று துரை.சக்ரவர்த்தி நினைவிடத்தைத் திறந்து வைத்தோம். அங்கு அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையினை அமைச்சர் கோ.சி.மணி திறந்து வைத்தார். நூலகக் கட்டடத்தினை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களும், பெரியார் படிப்பகத்தை எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்களும் திறந்து வைத்தனர். அய்யம்பேட்டை பகுதியில் சுயமரியாதைக் கருத்துகள் பரவிட அந்தக் காலம் தொட்டு உழைத்திட்ட பெரியார் பெருந்தொண்டர்கள் கோவிந்தன், அய்யாறு, லோகவனம் இப்ராஹிம், காஜாமைதீன், முத்துசாமி, அய்யம்பெருமாள், மூர்த்தி, கண்ணன், முருகையன், கலியபெருமாள், கந்தசாமி ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவர்கள் படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஜெ.ஹேமலதா-வழக்குரைஞர் இரா.சரவணகுமார் ஆகியோர் இணையேற்பு நிகழ்ச்சி

மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் அவர்களின்  மகன் கார்க்கி – ராணி சந்திரா ஆகியோரின் இணையேற்பு விழாவை மதுரையில் 7.9.2007
அன்று நடத்தி வைத்தோம். அடுத்த நாள் திருச்சியில் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் முக்கியத் தீர்மானங்களை நிறை வேற்றினோம்.

விருதுநகரில் 9.9.2007 அன்று கழகப் பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் அவர்களின் பேரனும் தோழர் புகழேந்தி மகனுமான பு.பிரபு – ஆர்.தங்கநவீனா ஆகியோரின் இணையேற்பு விழாவை நடத்தி வைத்தோம். அன்று இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் ஆகியவற்றைப் பரப்பும் உரிமை இன்றைக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளது என்றும், இதை அன்றைய காலகட்டத்தில் சுயமரியாதைப் பிரச்சார இயக்கக் கருத்தாகப் பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார் என்றும் விளக்கி உரையாற்றினோம்.

10.9.2007 அன்று அப்போதைய அலகாபாத்உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சிறீவத்சவா என்னும் பார்ப்பன நீதிபதி அப்பட்டமான இந்துத்துவாவாதி. பி.ஜே.பி ஆட்சிக்காலத்தில் பதவிக்கு வந்தவர்.தேவை இன்றி அரசின் மதச் சார்பின்மைக்கருத்துக்கு எதிராக பகவத் கீதையை தேசியஅறநெறி நூலாக அறிவிக்கவேண்டும் என்றுகூறினார். இதனைக் கடுமையாகக் கண்டித்து,பெண்களையும் பார்ப்பனர் அல்லாதமக்களையும் இழிவுபடுத்தும் கீதைக்குப்பார்ப்பனிய வர்ணாசிரம சிந்தனையுடன் இப்படி வக்காலத்து வாங்குவதா
என்று கண்டனம் தெரிவித்து சம்பந்தப்பட்ட நீதிபதி மீது இம்பீச்மெண்ட் கொண்டு வரவேண்டும் என்று கூறி 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தோம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்செப்டம்பர் 13 அன்று காலை கல்லல் ஒன்றிய தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி ரேவதி அவர்களது மகள் நிலவு நாச்சியாருக்கும் நியூட்டன் திருவாசகத்திற்கும் மணவிழாவை நடத்தி வைத்தோம்.

அய்யம்பேட்டையில் துரை.சக்ரவர்த்தி நினைவிடம் திறப்பு விழா

அன்று மாலை காரைக்குடி கலைஞர் தமிழ்ச்சங்க விழாவில் பங்கேற்றோம்.

மானமிகு வீ.குமரேசன் இல்லத் திருமணம்

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் தலா 3.5% இட ஒதுக்கீடு அளிக்க வழி வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசு 15.9.2007 அன்று நிறைவேற்றியது. நீண்டகாலமாக இந்தக் கருத்தினைத் திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இதற்கு நான்கு நாட்களுக்கு முன் ஆகஸ்ட் 11ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் கூட இதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயல்பாகவே சமூகநீதியிலும் சிறுபான்மையினர் நலத்தின் மீதும் அக்கறையுள்ள திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான டாக்டர் கலைஞர் அவர்கள்
அண்ணா பிறந்தநாள் பரிசாக இதை அறிவித்திருந்தார். அதற்கு நம் நன்றியையும் பாராட்டையும் அவருக்குத் தெரிவித்திருந்தோம்.

பு.பிரபு – தங்கநவீனா மணவிழா மணவிழா (அருப்புக்கோட்டை)

( நினைவுகள் நீளும் )