சுதந்திரம் பெற்றடைந்து 77 ஆண்டுகள் கடந்த போதும் தற்போது தான் உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்
பட்டுள்ளது.
“இரு பார்ப்பனர்களுக்கு இடையே பிரச்சனை என்றால் அந்த வழக்கை விசாரிக்கும் பார்ப்பன நீதிபதி நடுநிலையோடு நடந்துகொள்கிறார், அதுவே ஒரு தரப்பினர் பார்ப்பனராகவும் மற்றொரு தரப்பினர் பார்ப்பனரல்லாதவராகவும் இருந்தால் வழக்கை விசாரிக்கும் பார்ப்பன நீதிபதி பார்ப்பனர்களின் பிரதிநிதியாகவே மாறிவிடுகிறார். எனவேதான் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறேன்” என்றார் தந்தை பெரியார் .
தந்தை பெரியாரின் தொடர் போராட்டங்களால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஓரளவு சமூக நீதி கடைபிடிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதையே தற்போது சமூகநீதி என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள், ஆனாலும் கூட, பிற்படுத்தப்பட்ட மக்களின் 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தில் – உச்ச நீதிமன்றப் பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாமல் இலாவகமாகத் தவிர்த்தே வந்தார்கள் பல முற்போக்கான உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்.
தற்போது வாராது வந்த மாமணிபோல் வந்துள்ள தலைமை நீதிபதி அவர்கள் அரசியல் சட்டம் வழங்கியுள்ள 27% இட ஒதுக்கீட்டை நடை
முறைப் படுத்தியுள்ளது போற்றுதலுக்குரியது.
இதன் மூலம் OBC பிரிவினர் 1500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புப் பெறுவர், SC/ST பிரிவினர் 650க்கும் மேற்பட்டோர் இடம் பெறுவர் என்பது மகிழ்ச்சிக்குரியது.
உச்சநீதிமன்றப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர் முதல் பதிவாளர் வரையிலான நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கி இந்தியாவின் சமூக நீதித் தளத்தில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் உச்ச நீதிமன்ற மாண்பமை நீதிபதி திரு. B.R. கவாய் அவர்கள்.
இது, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்டியலினப்பழங்குடியினருக்கான (SC/ST) இடஒதுக்கீடுகளைத் தொடர்ந்த அறிவிப்பாகும்.
மேலும், மாற்றுத் திறனாளிகள், மேனாள் ராணுவத்தினர், மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சார்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
இந்த முக்கிய முடிவு, உச்சநீதிமன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சேவை மற்றும் நடத்தை விதிகள், 1961இல் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 3ஆம் தேதி வெளியான அறிவிப்பின் கீழ், இந்திய அரசியலமைப்பின் ஆர்டிகிள் 146(2)இல் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி B.R.கவாய் சாத்தியப்படுத்தியுள்ளார்.
இந்த மாற்றம், நீதித்துறையில் சமத்துவம் மற்றும் சமூக நீதி நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னேற்றம் என்றால் அது மிகையல்ல.
நந்தி விலகவில்லை;
சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கழித்து விலக்கி
யிருக்கிறார் மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் – மாண்பமை நீதிபதி அவர்களுக்குக் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார் ஆசிரியர் – அதன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதும் வரவேற்கத்தக்கது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு! l





