நடிப்புத் துறையின் புரட்சி வீரர் என்.எஸ்.கே (மறைந்த நாள் 30.08.1958)
நாடகக் கலை என்றால் என்ன? ஆட்டமும் பாட்டமும் இரசபாவமும் என்று மாத்திரம் முடியுமானால், மொழிக் கிளர்ச்சியின் நிழலில் இதைப் புகுத்த வேண்டிய அவசியமே இல்லை. மொழிக் கிளர்ச்சி என்பது மொழியினால் மொழியாளர்களது நற்பழக்கம், வழக்கம், அவர்களது மேன்மை, விடுதலை, முற்போக்கு, சுயமரியாதை முதலிய காரியங்களுக்கு நாடகக் கலையில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர்களது மானத்திற்கும் சுதந்திரத்திற்கும் ஏற்பட்டிருந்து வரும் கேடுகள் நீங்குவதற்கும் மொழியைப் பயன்படுத்தவும், அதற்கேற்ற, அதற்குப் பயன்படக்கூடிய மொழியை வளர்க்கவுமேயாகும் என்பது பெரியார் எண்ணம்.

தந்தை பெரியாரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் தன் நடிப்புக் கலையின் மூலம் தமிழர்களை மான உணர்ச்சி பெறச் செய்தவர்தான் நகைச்சுவை அரசர்
என்.எஸ்.கிருஷ்ணன்.
1908 நவம்பர் 29ஆம் நாள் நாகர்கோயிலில் (ஒழுகினசேரியில்) பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், 1958 ஆகஸ்ட் 30ஆம் நாள் முடிவெய்தினார். 8 வயதில் நடிகரான நம் கலைவாணர் தன் நடிப்புத் திறத்தாலும், தன் கலையின் மூலமாக மக்களுக்கு அள்ளி வீசிய பகுத்தறிவுக் கருத்துகளாலும், தனது கொடை உள்ளத்தாலும் கலைத்துறையில் உச்சம் தொட்டு, 49ஆம் வயதில் நம்மை விட்டு உடலால் மறைந்தார்.
‘குடிஅரசு’ என் குரு :
‘‘நான் பள்ளியில் பாடங்கள் படித்து அறிவு பெற்றவனல்லன். நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இடையிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ பத்திரிகையை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டிப் படிப்பேன். ‘குடிஅரசு’தான் என் குரு என்று சொன்னால் அது தவறாகாது’’ என்றார் கலைவாணர்.
‘குடிஅரசு’ ஏட்டைக் கலைவாணர் பற்றிக்கொண்டதால், கலைவாணரைப் பகுத்தறிவு பற்றிக்கொண்டதன் பயனாய், தன் நடிப்பில் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் புகுத்தினார். அந்த அறிவுச் சரவெடிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வெடித்துக்கொண்டே இருக்கும்.
காலத்துக்கும் அழியாத பகுத்தறிவுப் பாடல்கள் சில:
1936இல் வெளிவந்த ‘சதிலீலாவதி’ என்ற படம்தான் கலைவாணர் நடித்த முதல் திரைப்படம். எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா போன்றோருக்கும் இதுதான் முதல் திரைப் படம். ஆனால் “மேனகா” என்ற திரைப்படம் தான் கலைவாணர் நடித்து முதலில் வெளி வந்த திரைப்படம். இரண்டு படங்களுமே சமூக கருத்தாக்கங்களைக் கொண்ட படங்களாகவே இருந்தன.
‘சதிலீலாவதி’ படத்தில் கலைவாணர் முட்டை உணவைச் சாப்பிட்டுக் கொண்டே, சாராயம் குடிப்பது போல ஒரு காட்சி வரும். படத்தில் பார்ப்பனர் தோற்றத்தில் வரும் கலைவாணர் சாராயத்தைக் கந்தர்வ பானம் எனக் கூறிக்கொண்டே ருசித்துக் குடிப்பார். ஆதி பார்ப்பனர்கள் யார் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக இப்படி ஒரு காட்சியை நுணுக்கமாக வைத்திருப்பார். திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளுக்கு இணையாக தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டும் வசனங்களை, பாடல்களைத் துணிச்சலாக கலைவாணர் பேசினார், பாடினார்.
அதற்கு சில உதாரணங்களைச் சொல்ல வேண்டும். ‘இன்பவல்லி’ என்ற திரைப்படத் தில் கலைவாணர் பஞ்சாங்கத்தைக் கிழிக்கும் ஒரு காட்சி.
“மந்திரத்தின் பெயரைச்சொல்லி மாயக்காரர் தான் தந்திரமாய் செய்த ஏட்டை – கிளியே தாட்சண்யம் பார்க்காமல் கிளி(ழி)யே”
– இந்தப் பாடலைப் பாடிக் கொண்டே பஞ்சாங்கத்தைக் கிழித்தார் கலைவாணர்.
அதிக அளவில் வறுமையும் பஞ்சமும் நிலவிய
அந்த காலகட்டத்தில் கூட சிலைகளுக்குப் பாலும்
பழமும் கொண்டு அபிஷேகம் செய்வதில் பஞ்சம் இருக்கவில்லை. “மங்கையர்கரசி” என்ற படத்தில் இதையும் தனது பாடல் மூலம் கேள்விக்கு உட்படுத்தினார்.
“பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார் பால் இல்லை என்று சிசு பதறுவதைப் பார்”
என, பச்சிளம் குழந்தைகள் பால் இல்லாமல் இருக்கும்போது கல்லுக்குப் பால் அபிஷேகம் தேவையா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்தார்.
அதேபோல 1939ஆம் ஆண்டில்
“திருநீலகண்டர்” என்றொரு படம் வந்தது. இந்தப் படத்தில் கலைவாணரும் நடிகர்
டி.எஸ்.துரைராஜும் காமன் கதை சொல்லும் காட்சி. டி.எஸ்.துரைராஜ் கதை சொல்லத் தொடங்கும்போது, சரஸ்வதி பிரம்மாவின் நாவில் இருப்பதாகவும், கதை சொல்ல அவள் துணை நிற்க வேண்டுமாயும் பாடுவார். உடனே கலைவாணர் அதற்கு ஒரு எதிர்ப்பாட்டு பாடுவார்.
“மறையவன் நாவில் அவள் உறைவது நிஜமெனில் மலஜலம் கழிப்பது எங்கே? எங்கே?”
இப்படி பகுத்தறிவுக் கேள்விகள் கலை வாணரின் நகைச்சுவை காட்சிகளில் வெடித்துக் கிளம்பின.
‘‘சின்ன வயசிலே… கன்னித் தமிழிலே..
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறாயே வேட்டு
கல்வி கற்றுத் தேறாமுன்னம்
கவி எழுதிட வருமா?
கட்டுக்கதைகளை விட்டுத் தள்ளு
குட்டு வெளிப்படுமே!’’ என்று பாடினார். இன்னும் ஏராளமாய் சொல்லிக்கொண்டே போகலாம்.
நாம் சொல்வதை விட நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் நகைச்சுவை அரசரைப் பற்றிப் படம்பிடித்துக் காட்டியதைப் பார்ப்போம்:
இசைத்துறை, சினிமா – நாடகத்துறையில் புராண இதிகாசக் கதைகளுக்கு உயிரூட்டுவதால் இசையையும் சினிமாவையும் தந்தை பெரியார் கடுமையாக விமர்சித்தார். அவற்றுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார். ஆனால், அதே காலத்தில் நாடகக் கலையில் மலர்ச்சியை ஏற்படுத்திய கலைவாணரை மனமாரப் புகழ்ந்தார் பெரியார் அவர்கள்.
பெரிய புரட்சியாளர் என்.எஸ்.கிருஷ்ணன்:
‘‘நமது நகைச்சுவை அரசு கிருஷ்ணன் அவர்கள் ஒரு மேதாவி, அதோடு அவர் ஒரு வள்ளல் என்றும் சொல்ல வேண்டும். அவர் தன்னால் கூடிய அளவுக்கு மேல் பொதுநலத்துக்கு உதவி வருகிறார். இம்மாதிரியான பொதுநலத்துக்கு நடத்தும் கச்சேரிகளுக்கு அவர் வழக்கமாக வாங்கும் அளவைவிட மிகக் குறைந்த அளவுக்குச் சென்று அதை நடத்திக் கொடுக்கிறார். அவர் சமீபத்தில் சென்னையில் நடந்த சந்திரோதயம் நாடகத்தில் பேசும்போது, ‘‘நான் ஏராளமாகப் பணம் சம்பாதித்தேன். ஆனால், அதில் பெரும் பாகம் பொதுநலத்துக்கு உதவி விட்டேன். அதாவது பல லட்சம் ரூபாய் சம்பாதித்தேன். இப்போது அரை லட்ச ரூபாய் சுமார் தான் என்னிடம் இருக்கிறது. மற்றவை பொதுநலத்துக்கு உதவி வந்தேன்.’’ என்று சொன்னார். அந்த முறையிலேயே நமது கழகத்துக்கும் உதவி இருக்கிறார்.
இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்று சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், நாடகத் துறையிலும், கலைத்துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தியிருக்கிறார்.
எவனொருவன் தன்னலமில்லாமல், பயம் இல்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு, ஒரு புரட்சி வீரனும் ஆவான் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக்காட்டாகும். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியும், திராவிட மக்கள் சார்பாக எனது பாராட்டுதலும் வணக்கமும் உரியதாகுக.
முக்கலை திருத்தச் சரித்திரத்தில் கிருஷ்ணன் பெயர் பொன்னினால் பொறிக்கப்படும். நாடு முன்னேற்றமடைவதற்குக் கிருஷ்ணன் போன்ற அறிஞர்
களும், பகுத்தறிவுப் புலவர்களும் காரணம் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வளவு பெரிய புரட்சிகரமான காரியம் செய்யவும் அதில் வெற்றி பெறவும் நம் கிருஷ்ணனுக்கு அபார சக்தி ஒன்றும் இல்லை. ஆனால், அவரிடம் ஏதாவது அபார சக்தி இருக்கிறது என்றால் அவருக்குத் தன்னலம் இல்லை; பண ஆசை பிசாசுக்கு அவர் மனம் அடிமைப்படவில்லை; மற்றவர்கள் என்ன சொல்வார்கள் எ ன்ற கவலை அவருக்கு இல்லை.
(‘குடிஅரசு’ சொற்பொழிவு
– 09.09.1944)
பூமாலையாலல்ல பொன்மாலையால் பாராட்டு:
கிந்தனார் நாடகத்தைப் பாராட்டுவதன் அறிகுறியாக நகைச்சுவை அரசு என்.எஸ் கிருஷ்ணன் அவர்களுக்கு பூமாலை சூட்டுவதற்குப் பதிலாக பொன்மாலையைச் சூட்டி, பொன் பதக்கத்தையும் திராவிடர் கழகம் சார்பாகத் தந்தை பெரியார் அணிவித்தார்.
திரையில் இன்று பேசப்படும் பகுத்தறிவுக் கருத்துகளுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணனே ஆவார். பகுத்தறிவு உள்ளவரை புரட்சி நடிகர் என்.எஸ்.கே. வாழ்வார்.
– சுடர் பரவும்





