Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்து மதத்தின் பொதுமை என்பது பார்ப்பன மேலாதிக்கமும் தீண்டாமையுமே- வை. கலையரசன்

அண்மையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு தமிழில் வழிபாடு, தமிழில் குடமுழுக்கு கேட்டு  போராடிய சத்தியபாமா அம்மையாருடன் சென்ற தமிழ் ஓதுவார்களையும் அவர்களைத் திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்ப்பன கும்பல் தாக்கியுள்ளது!

ஓர் இந்து பெண் இந்து மத கோயிலின் வழிப்பாட்டுத்தளத்தின் விழாவில் இந்து கடவுளை வாழ்த்திப் பாடியதற்காக தாக்கப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக தமிழ் கடவுள் முருகன் எனக் கூவிய இந்து முன்னணி, பிஜேபி சங்கிக் கும்பல் குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால்  திருப்பரங்குன்றத்தில் கலவரம் நடத்துவது மட்டுமே ஆர்.எஸ்.எஸ் பிஜேபி இந்து முன்னணி கும்பலின் நோக்கம்!

மற்றபடி அறுபடை வீடு முருக பக்த மாநாடு எல்லாம் கலவரத்திற்கு அடியாள் சேர்ப்பதற்கு மட்டுமே…

இந்த குடமுழுக்கு விழாவில் யாகசாலைகள் திறக்கப்பட்டு 200 பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தில் பாராயணம் செய்தார்கள். தமிழிலும் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டதற்காகத்தான் பார்ப்பனர்களால் தாக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் நீதிமன்றமும் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையும் அவ்வாறு நடைபெறும் என்று உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் தான் சங்கிப் பார்ப்பனர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்.

உத்திரப்பிரதேசத்தில் எட்டவா என்ற மாவட்டத்தில் ஒரு கோவில் திருவிழா. ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து பணம் போட்டு நடத்துகிறார்கள். உ.பியில் இந்து மத புராணங்களை ஆகா, ஒகோவென்று பேசி கதாகாலட்சேபம் செய்வதற்கு பேர் போனவர் முகுந்த் மணி யாதவ். இவர் சுமார் 15 ஆண்டுகளாக பட்டிதொட்டியெங்கும்  மிக எளிமையாகவும், நகைச்சுவையாகவும் எளியோர்களும் ரசிக்கும்படி கதாகாலட்சேபம் செய்து வருகிறார்.

அவ்வாறு கதாகாலட்சேபத்தைச் செய்யும் போதே, ”நீ யார்? உன் ஜாதி என்ன?” என கூட்டத்தில் இருந்தவாறே குரல் எழுப்பி உள்ளனர். ”இப்போது இந்தக் கேள்வி இங்கு அவசியம் இல்லாதது” என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில், அவரது பெயரிலேயே ‘யாதவ்’ என ஜாதி பெயர் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால், பார்ப்பனர்கள் விடவில்லை.

பிறகு முகுந்த் மணியையும் அவரது உதவியாளர் சந்த் சிங்கையும் அழைத்துச் சென்று மொட்டை அடித்து மீசையை வழித்து விட்டு, முகத்தில் காலால் அழுத்தி விட்டு சிறுநீர் கழித்துள்ளனர். ”பிராமணர் அல்லாதவங்க கதா காலட்சேபம்  செய்தால் தீட்டு. அந்த தீட்டைத் தீர்க்கவே இந்த சிறுநீர் அபிஷேகம்” எனக் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து முகுந்த்மணி சிங் அளித்த புகாரில், “எனது சமூகம் என்னவென்று கேட்டு நான் பிராமணர் இல்லை என்று உறுதி செய்த பிறகு அக்கும்பல் என்னைத் தாக்கியது. என்னிடம் இருந்த ரூ.25,000 ரொக்கம் மற்றும் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டது” என்று கூறியுள்ளார்.

இது குறித்து அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்தச் சம்பவத்தில்  சங்கராச்சாரியார் அவிமுஸ்தேஸ்வரானந்த், ”கதா காலட்சேபம் செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு” எனப் பேசியுள்ளார். மேலும் அவர் பிராமணர் என்று கூறி ஏமாற்றியதாக காவல் துறையினரிடம் பார்ப்பனர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பெயரிலேயே ஜாதிப் பெயர் ஒன்று இருக்கும் நிலையில் அவர் எப்படி ஏமாற்றி இருக்க முடியும் என்று அவர்களைப் பார்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை.

இதே ஆண்டில் மற்றொரு சம்பவமும் அரங்கேறியது. மத்தியப் பிரதேசம் ஜபல்பூரின் பனாகர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ரைபுரா பகுதியில் உள்ள கல்மாபதி தேவி கோயிலில் ‘‘சிறீமத் பாகவத பிரசங்கம்’’ நடத்தப்பட்டது.

பிப்ரவரி 24 முதல் தொடங்கிய இந்தக் காலட்சேபம் நிகழ்ச்சியில், மறுநாள் (25.02.2025) கல்லூரி மாணவியும், புராணக்கதைகளைச் சொல் நயத்துடன் கூறும் ராதா ஸ்வரூப் தேவிகா கிஷோரி என்ற பெயரில் அறியப்படும் தேவிகா படேலை காலட்சேபம் நடத்திட அழைத்திருந்தனர்.

இதுவரை எல்லா அழைப்பிதழ்களிலும் அவர் ராதாஸ்வரூப் கிஷோரி என்றே இருந்ததால் எல்லோரும் அவரைப் பார்ப்பனர் என்றே நினைத்து பகவத் கீதையைப் படிக்க அவரை அனுமதித்தனர்.

இந்த நிலையில் அவரது கோவில் பிரசங்கத்தின் இந்த நிகழ்ச்சிக்கு தேவிகா படேல் என்று ஜாதிப்பெயரோடு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அன்று மாலை அவர் பிரசங்கம் செய்ய மேடை ஏறியபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள் ‘‘நீ சூத்திரப் பெண், எப்படி மேடை ஏறலாம்?’’ என்று கேட்டு அவரைத் தள்ளிவிட்டனர். அவர்
அமர்ந்திருந்த இருக்கையில் எண்ணெய் ஊற்றிவிட்டனர்.

மேலும், அந்தக் கும்பல் ‘‘காலட்சேபம் நடத்த வேண்டுமெனில், பிராமணர் குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டும் அவர்கள்தான் மேடை ஏறி இருக்கையில் அமர்ந்து பிரசங்கம் செய்யமுடியும்.

உன்னைப் போன்ற சூத்திரப் பெண் தரையில் உட்கார்ந்து கேட்கவேண்டுமே தவிர, பார்ப்பனர்கள் அடங்கிய மேடையில் ஏறி தீட்டாக்கக்கூடாது’’ என்று கூறி அவரை அவமானப்படுத்தி விரட்டினர்

ஸநாதன தர்மத்தின்படி இருக்கையில் அமர்ந்து காலட்சேபம் செய்ய புராணங்களின் அறிவு மட்டுமின்றி ‘‘பிராமண’’ ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறினர். கோவில் நிருவாகம் இது தொடர்பாக எந்தக் கருத்தும் கூறவில்லை.

‘இந்துக்களே ஒன்று சேர்வீர்’ என்று இந்து முஸ்லிம் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் குரல் கொடுப்பவர்கள், மற்ற நேரங்களில் பார்ப்பனர் அல்லாதாரைப் பற்றி அவர்களின் நினைப்பு என்ன? அதுதான் பார்ப்பனரல்லாதார் ஒருவர் கதாகாலட்சேபம் நடத்திய போது, பார்ப்பனர்கள் அவரைத் தாக்கியது மூலம் அம்பலமாகியிருக்கிறது.

‘பஞ்சமர்களைத் தூர நில்’ என்று சொல்லுவதற்குக் காரணம் பிறப்பின் அடிப்படையில் அவர்களோடு ஒன்றியிருக்கும் புனிதமற்ற தன்மை. உலகத்தில் உயர்ந்த வகை சோப்பினால் குளிப்பாட்டினாலும், அணிமணிகளால் அலங்கரித்தாலும் பஞ்சம மக்கள்மீது பரம்பரையாக பிறப்பின் அடிப்படையிலான நிலை என்பது மிகவும் அசுத்தமான, அருவருப்பான நிலையாகும்’ (Filthy Inheridity) என்று சொன்னவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் (‘The Hindu Ideal’ Page 230)

இப்படி சொன்னவர் தான் ஜெகத்குரு என்று அழைக்கப்படுகிறார்.

செய்வது ஆன்மிகப் பணியானாலும் அது அனைவருக்கும் பொதுவானதல்ல என்பது தான் இந்துத்துவ வருண தர்மத்தின் கோரமுகம்.

எனவே இந்து மதத்திற்கான ஓர்மை அல்லது பொதுமை என்பது பார்ப்பன மேலாதிக்கமும் ஜாதி தீண்டாமையும் தான்..

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா இடத்திலும் இருப்பது பார்ப்பன மேலாதிக்கமும் ஜாதிய ஒடுக்குமுறையும்
தான் இந்து மதத்தில் தலைதூக்கியுள்ளது. இந்த மூன்று சம்பவங்களையும் உரத்து சிந்தித்து பார்ப்பனர் அல்லாத மக்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்; தீர்வு காண வேண்டும். l