Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் கழகம் உருவான நாள் ஆகஸ்ட் – 27-பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்

திராவிடர் கழகம் சீர்பெற்றோங்குமே!

சேலம் நகரில் சிறிதெனத் துளிர்த்த

ஆலின் வயது எண்பத்தி இரண்டு!

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும்

தன்பெயர் மாற்றிய சரித்திர நிகழ்வது!

ஞாலம் போற்றும் நாத்திக இயக்கம்

காலம்  கனியத் தோன்றிய தன்று!

தமிழினப் புரவலர் தந்தை பெரியார்

தமிழரின் மானம் தகைமை காக்க

உரிமை மீட்க உன்னதம் சேர்க்கத்

திராவிடர் கழகம் தொடங்கிய நாளிது!

ஆரியப் பார்ப்பார் ஆதிக்க மகற்றும்

காரியஞ் செய்யக் கழகம் பிறந்தது!

 

சாதிய நோயைச் சாய்த்தழித் தகற்ற

வேதியப் புரட்டை வீழ்த்திப் புதைக்க

ஆண்களுக் கீடாய் அனைத்தும் வேண்டிப்

பெண்களுக் குரிமை பெற்றுக் கொடுக்கத்

தெருவினில் நடக்கச் சேர்ந்துண வுண்ணக்

கருத்துடன் கல்வி கற்றிட வைக்க

வேலையில் பங்கை மீட்டெடுத் தளிக்கத்

தன்மா னத்தைத் தமிழர் காக்கத்

திண்ணம் கொண்ட திராவிடர் கழகம்

வண்ணத் தோடு வந்து பிறந்தது!

 

தந்தை பெரியார் தலைமை ஏற்றுச்

செந்தமிழ் நாடு செழித்தது பின்பு!

இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ச்சி!

செந்தமிழ் எழுத்தைத் திருத்திய புரட்சி!

சாதியைக் காக்கும் சட்டம் எரிக்க

வீதியில் திரண்ட வீரர்கள் கூட்டம்!

இடவொதுக் கீட்டை இல்லா தாக்கத்

தடங்கல் செய்த தீர்ப்பை யெதிர்த்து

இடியொலி யாக எதிர்த்தார் பெரியார்

படிந்தது ஒன்றியம்! பிறந்தது திருத்தம்!

மதராஸ் என்னும் மாநகர் பெயரே

மாநிலப் பெயராய் வைத்ததை எதிர்த்துத்

தமிழர் வாழும் தமிழர் நாட்டைத் தமிழ் நாடென்று மாற்றச் சொன்னார்!

கருவரை யுள்ளே கால்பதிப் பதற்கு

இறந்திடும் வரையில் இடைவிடா முயற்சி!

 

தந்தை பெரியார் தடத்தில் நடந்து

வந்தார் பின்னே மணியம்மை யாரே!

பெரியார் பின்னே திராவிடர் கழகம்

இருக்கா தென்னும் ஆருடம் பொய்க்க

வலிமை கொண்டு வளர்ந்தது இயக்கம்!

அழியாப் புகழார் அன்னையின் தொண்டால்!

பெரியார் கூட செய்யாமல் விட்ட

இராவண லீலா நடத்திக் காட்டி

இராமன் பொம்மையில் எரியை மூட்டித்

திராவிடர் மானம் காத்தார் அன்னை!

 

வீர மணியம்மை மறைந்த பின்னாலே

வீரமணி வந்தார்! வெற்றிகள் தந்தார்!

மண்டல் அறிக்கை மன்றினில் ஏற

கண்ட களங்கள் கணக்கி லடங்கா!

பிற்பட் டோர்க்கு ஒன்றிய அரசில்

பெற்றுத் தந்தார் வேலையில் பங்கை!

அறுபத் தொன்பது விழுக்கா டென்பது

அரசியல் சட்டம் அரியணை கொண்டது!

சமூக நீதித் தலைநக ராக

சென்னையை மாற்றிய சீரறி வாளர்!

மானமிகு வென்னும் மாண்பொளிர் சொல்லைத்

தானமாய் அளித்த தலைவர் அவரே!

அறுபது ஆண்டு ஆசிரியப் பணியால்

பெருமையும் புகழும் பெற்றது விடுதலை!

தமிழர்க் குழைக்கும் தன்னல மறுப்பர்

தமிழர் தலைவர் தகைசால் தமிழர்

வீர மணியாரின் தலைமையிலே

திராவிடர் கழகம் சீர்பெற் றோங்குமே! l