கடவுள் நம்பிக்கை என்பது அறிவியல் வளர்ச்சியும், பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லாத காலத்தில் உலக அளவில் ஏற்பட்ட ஒன்று. காரணம் புரியாதவற்றுக்குக் கடவுளே காரணம் என்று அனுமானித்தனர்.
இரவு – பகல் வருவது, உடல்கள் திட்டமிட்டு இருப்பது, குழந்தைகள் உருவாவது, குழந்தை வயிற்றுக்குள் வளர்வது, இறப்பு ஏற்படுவது, காற்று, இடி, மின்னல், வானில் சூரியன் மற்றும் நிலவு போன்றவை இருப்பது, சூரியன் தோன்றி மறைவது, நிலவு தேய்ந்து வளர்வது போன்றவற்றைப் பார்த்தவர்கள் இவற்றுக்குக் காரண கர்த்தா இருக்க வேண்டும்; அதுவே கடவுள் என்று எண்ணினர்.

ஆனால், அறிவியலும் அறிவும் வளர வளர இவையெல்லாம் இயற்கையாய் இருப்பது என்றும், பரிணாம வளர்ச்சியால் உருவாவது என்றும் தெரியத் தொடங்கியது. கடவுள் தண்ணீரை நிலத்துக்கடியில் படைத்திருந்தால், ஏன் எல்லா இடங்களிலும் தண்ணீரைப் படைக்கவில்லை? சில இடங்களில் தண்ணீர் 100 அடியிலும், சில இடங்களில் தண்ணீர் 1000 அடியிலும் ஏன் படைக்கப் படவேண்டும்? இரவில் ஒளிர நிலவைக் கடவுள் படைத்திருந்தால், ஏன் எல்லா நாள்களிலும் நிலவு ஒளி தரும்படி படைக்கவில்லை? ஒருவர் மாற்றுத் திறனாளியாகவும் இன்னொருவர் பார்வை மாற்றுத் திறனாளியாகவும் ஏன் படைக்கப்பட வேண்டும்? ஒருவர் குட்டையாகவும், ஒருவர் உயரமாகவும் ஏன் படைக்கப்பட வேண்டும்? பிறந்தவுடன் ஏன் குழந்தை இறக்க வேண்டும்? என்பன போன்ற சிந்தனைகள் வளர வளர, கடவுள் என்று எதுவும் இல்லை என்ற எண்ணமும் வளர்ந்தது.
என்றாலும் பெரும்பாலான மக்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவரும் நம்பிக்கையை விட முடியாமல், அச்சத்தின் காரணமாக, தங்களுக்கு எந்தக் கேடும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் காரணமாக கடவுளை நம்புகின்றனர்; வணங்குகின்றனர்.

கடவுள் நம்பிக்கை ஏற்பட்டதன் விளைவாக, ‘நம் வாழ்க்கை கடவுளால்தான் எனத் தீர்மானிக்கப்படுகிறது. நல்லது கெட்டது கடவுளாலே அளிக்கப்படுகிறது. எனவே, கடவுளை வணங்கி, கடவுளுக்குப் பூஜை சடங்குகள் செய்து நன்மை பெற முடியும்’ என்று நம்பினர்.
இப்படி ஏற்பட்ட கடவுள் நம்பிக்கையும் வழிபாடுகளும் நாள் செல்லச் செல்ல ஆதிக்கச் சக்திகளுக்குக் கருவியாகப் பயன்பட்டன. மக்களை அடக்கி அடிமைப் படுத்தி, தாழ்த்தி, அவர்களைக் கட்டுக்குள் வைக்க, தங்கள் கட்டளைக்கு ஏற்பச் செயல்பட கடவுள் நம்பிக்கையைக் கட்டமைத்தனர்.
கடவுள்தான் நம்மைப் படைக்கிறார்; அவர் எழுதுகின்ற விதியின் படியே நம் வாழ்க்கை அமைகிறது; நாம் போன பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இப்பிறவி வாழ்க்கை அமைகிறது; ஒருவரை உயர்ந்தவனாகவும், இன்னொருவனைத் தாழ்ந்தவனாகவும் கடவுளே படைக்கிறார். எனவே, உயர்ந்த ஜாதியாகக் கடவுளால் படைக்கப்பட்டவர்களுக்கு, தாழ்ந்த ஜாதியில் பிறந்தோர் அடிமை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கடவுள் பெயரால் உருவாக்கினர்.

‘நாங்கள் முதலாளியாக இருப்பதற்கும், ஆட்சியாளர்களாக இருப்பதற்கும், நீங்கள் தொழிலாளியாக – வேலைக்காரர்களாக இருப்பதற்கும் நாங்கள் சென்ற பிறவியில் செய்த புண்ணியமும், நீங்கள் சென்ற பிறவியில் செய்த பாவமுமே காரணம்’ என்று மக்கள் மத்தியில் ஆழப் பதித்தனர்.

இப்படிப்பட்ட எண்ணத்தையும், கருத்தையும் மக்கள் மனதில் ஆதிக்கவாதிகள் ஆழப் பதித்ததால், தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு, ‘தங்கள் தாழ்வு நிலைமைக்குச் சுரண்டும் ஆதிக்கவாதிகளே காரணம்’ என்ற எண்ணம் ஏற்படாமல், தங்கள் தலைவிதி, கடவுள்இட்ட கட்டளை என்று சமாதானம் அடைந்து, கொடுமைக்கு எதிராய்க் கொதித்தெழாமல் அடங்கினர்.
தங்கள் ஆதிக்கமும், உயர்வும் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட கடவுள், விதி, பிறவி நம்பிக்கைகள் பெரிதும் பயன்படுவதால் அதை மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை நிறுத்தவும் வளர்க்கவும் கடவுள் சார்ந்த மூட விழாக்கள், மூடச் சடங்குகள், மூட வழிபாடுகளை உருவாக்கினர். அந்த விழாக்கள், சடங்குகள், வழிபாடுகள் தொடர்ந்து நடக்க, அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் நடக்கும்படி வழிபாட்டு முறைகளை உருவாக்கினர்.

கடவுளுக்குக் கல்யாணம், தேர்த்திருவிழா, உற்சவம், அபிஷேகம், அர்ச்சனை, தீமிதி என்று பலவற்றை உருவாக்கி, அவற்றை ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்யும் முறையை உருவாக்கினர்.
தீபாவளி, சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை, கிருஷ்ணஜெயந்தி, இராமநவமி, சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், கார்த்திகை தீபம், மகரவிளக்கு, மாசி மகம், ஆணித் திருமஞ்சனம், சித்திரா பவுர்ணமி, பங்குனி உத்திரம், மார்கழி தரிசனம், அமாவாசை விரதம், கிரிவலம், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, மண்டலாபிஷேகம், புஷ்பப் பல்லாக்கு, தீர்த்தவாரி என்று பலவற்றை உருவாக்கி, மக்களைத் தொடர்ந்து மூட நம்பிக்கையிலேயே மூழ்கியிருக்கும்படி திட்டங்களை வகுத்தனர்.

ஆண்டு முழுவதும் தொடர்ந்து இது போன்ற விழாக்கள், சடங்குகள், பூஜைகள் என்று நடப்பதால் மக்கள் மரபு வழியாக, தலைமுறை தலைமுறையாக அதைத் தொடர்ந்து செய்வதை ஒரு வழக்கமாக – கடமையாகக் கொண்டு செய்து வருகின்றனர்.
அறிவியல் வளர்ச்சி உச்சத்திற்குச் சென்றாலும், கல்வி வளர்ச்சி பெருகினாலும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல், ஆட்டு மந்தையைப் போல, எந்த விதச் சிந்தனையும் இன்றி கண்ணை மூடிக் கொண்டு இவற்றை ஒரு கடமையாகச் செய்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட மூடச் செயல்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டு விட்டதால், இவற்றிலிருந்து மக்கள் விடுபடாமல் இவற்றைச் செய்து விடுகின்றனர்.
இளைய தலைமுறை அறிவியல் சிந்தனை விழிப்புணர்வு காரணமாக இவற்றில் ஆர்வம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக, இச்செயல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்கிற நோக்கில், காலத்திற்கு ஏற்ப புதுப் புது வடிவங்களில் இவற்றை உருவாக்கிச் செயல்படுத்த முற்படுகின்றனர்.

அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி மூட நம்பிக்கைகளை முழுவீச்சில் பரப்ப, புதிய புதிய செயல் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர். கணினி (Computer) கண்டுபிடிக்கப்பட்டதும் அதைப் பயன்படுத்தி ஜாதகம் பார்க்கும் முறையை உருவாக்கினர்.
திரைப்படத் துறையைப் பக்தியை பரப்பப் பயன்படுத்தினர். அறிவுக்கு ஒவ்வாத புராணக் கதைகளை எல்லாம் திரைக் கதைகளாக்கி, கவர்ச்சியாக, மக்களை ஈர்க்கும் வகையில் மூட நம்பிக்கையை வளர்த்து வருகின்றனர்.
தொலைக்காட்சிகளையும் மூடநம்பிக்கைகளை வளர்க்க முழுமையாகப் பயன்படுத்துகின்றனர். இராமாயணக் கதையைக் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு, கவர்ச்சியாகத் தயாரித்து, தொலைக்காட்சியில் இந்தியா முழுவதும் எல்லா மொழிகளிலும் ஒளிபரப்பி மக்களை மாயையில் கட்டிப் போட்டனர். அதன் விளைவால் இராம பக்தியை ஆழமாகப் பதியச் செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கும், பி.ஜே.பி ஆட்சிக்கு வரவும் அது பெருங்காரணமாக அமைந்தது.
இன்றைக்கும் கங்கையில் குளித்தல், கும்பமேளா என்று கோடிக்கணக்கான மக்களைக் கூட்டி, அதை தொலைக்காட்சியில் நேரடியாகக் காட்டி, மக்களிடையே மூட நம்பிக்கை குறையாமல் வளர்த்து வருகின்றனர்.

கிருஷ்ணஜெயந்தி என்னும் பெயரில் இந்தியா முழுவதும் அறிவுக்கு ஒவ்வா கிருஷ்ண லீலைகளைக் கவர்ச்சியாகக் காட்டி மூடத்தனத்தை வளர்க்கின்றனர்.
புதுப்புது விழாக்களை உருவாக்கி
மக்களை மடையராக்கல்
‘அட்சய திருதியை’ என்று ஒன்றை உருவாக்கி, அன்றைக்குப் பொன்னகை வாங்கினால், பொன் நிறையச் சேரும் என்று ஒரு நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி, அதை ஊடகங்கள் வழி விளம்பரம் செய்து, அன்றைக்கு நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களை நகைக்கடையில் குவியச் செய்து, கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். அட்சய திருதியையில் நகை வாங்கியவர்களுக்கு நகை அதிகமாயிற்றா? அதைச் சிந்திக்கக் கூட விடாமல் அடுத்த மூட நமபிக்கையைப் பரப்புகின்றனர்.
இவர்கள் அட்சய திருதியை கொண்டாடிய பிறகு, பவுன் விலை விண் முட்ட உயர்ந்து ஒரு கிராம் கூட வாங்க முடியாமல் ஏழை மக்கள் ஏங்கித் தவிக்கும் அவலம்தான் உருவாகியுள்ளது. என்றாலும், விடாது அந்த நம்பிக்கையை ஆண்டுதோறும் மக்கள் மத்தியில் உருவாக்கி, நகைக்கடையில் கூட்டம் சேர்க்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன் இப்படி ‘அட்சய திருதியை’ என்ற ஒன்று செல்வாக்குப் பெறவில்லை. இன்றைக்கு இச்செல்வாக்கு விளம்பரத்தால் வந்தது.
செயற்கையாக மவுசு உருவாக்கல்
முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்ல ஆட்களே இருக்காது. திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் கிரிவலம் வர ஆரம்பித்தவுடன் அது விளம்பரப்படுத்தப்பட்டு, இன்றைக்கு இலட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் என்று மலையைச் சுற்றும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
முழு நிலவன்று மலையைச் சுற்றி வந்தால் என்ன நன்மை கிடைக்கிறது என்று சிந்திப்பதில்லை. ஆதிக்கவாதிகள் மக்களைச் சிந்திக்கவும் விடுவதில்லை.
50 ஆண்டுகளுக்கு முன் சபரிமலைக்குச் செல்லும் ஆட்கள் மிகக் குறைவு.நூற்றுகணக்கில்கூட தமிழ்நாட்டிலிருந்து செல்ல மாட்டார்கள். நம்பியார் என்ற திரைப்பட நடிகர் விரதம் இருந்து சென்று வருவது விளம்பரப்படுத்தப்பட்ட பின் மற்றவர்களும் செல்ல ஆரம்பித்து இன்று லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிலை வளர்ந்து விட்டது.
அத்திவரதன் என்று ஒன்று தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாத நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதத்தில் அதை விளம்பரப்படுத்தி புதுப் புதுப் பொய்களை ‘மகிமை’ என்ற பெயரில் பரப்பி, அத்திவரதனுக்கு மவுசு உண்டாக்கி காஞ்சிபுரத்தில் இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டிக் கூத்தடித்தனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வருவது. ஆனால், தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்ட பின் லட்சகணக்கான மக்கள் குவியத் தொடங்கி விட்டனர்.
ஆக, விற்கப்படும் பொருள்கள் எப்படி விளம்பரக் கவர்ச்சியால் மவுசு பெறுகின்றனவோ, அவ்வாறே கடவுளுக்கும் விளம்பரத்தால் மவுசு உண்டாக்கி, பக்தியை வணிகமயமாக்கி வருகின்றனர். இதன் மூலம் மக்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி வணிகர்களும், அரசியல்வாதிகளும் ஆதாயம் பெறுகின்றனர்.
காலத்திற்கேற்ப கடவுள் உருவாக்கம்
மக்கள் எதையும் நம்புகிறார்கள், எதைச் சொன்னாலும் செய்கிறார்கள் என்ற உளவியலை, பலவீனத்தைப் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி புதிது புதிதாய் காலத் தேவைக்கு ஏற்ப கடவுள்களை உருவாக்கும் மோசடியும் இப்பொழுது முழு வீச்சில் நடக்கிறது.
பாஸ்போர்ட் விநாயகர், விசா கணேசர்
விநாயகர் எப்படி உருவாக்கப்பட்டார் என்று விநாயகர் புராணம் கூறுகிறது. அதுவே அறிவுக்கு ஒவ்வாத அபத்தம். அப்படியிருக்க, இப்பொழுது காலத்
தேவைக்கேற்ப புதிது புதிதாய் விநாயகரை உருவாக்குகிறார்கள்.
அயல்நாடுகளுக்குச் செல்வோர் இப்போது அதிகரிப்பதால். அதை வைத்துச் சுரண்ட ‘பாஸ்போர்ட் விநாயகர்,’ ‘விசா கணேசர்’ என்று புதிய விநாயகர்களை உருவாக்கி அந்த விநாயகரை வழிபட்டால் பாஸ்போர்ட், விசா ஆகியவை எளிதில் கிடைக்கும் என்று ஒரு மூட நம்பிக்கையைப் பரப்புகின்றனர். அதற்கான கோவில்களைக் கட்டிச் சுரண்டுகின்றனர்.
‘‘பிள்ளையையே கடவுளும் சாமியாரும் கொடுக்கிறார்கள்’’ என்று நம்பித் திரியும் மக்களுக்கு இதை நம்புவதில் எந்தத் தடையும் இல்லை.
சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் விஞஞானிகள் திருப்பதி எழுமலையானுக்குப் படையல் போடும் கேவலம் இந்நாட்டில் இருக்கிறது என்றால், பாமர மக்களை ஏமாற்றுவது எளிதாகி விடுகிறது.
கருங்காலி மாலை
மக்கள் எளிதில் ஏமாறுவார்கள், அதுவும் அதிர்ஷ்டம், இராசி, மந்திரசக்தியால் மகிமை என்று கூறிவிட்டால் ஆட்டுமந்தைகள் போல் அணிவகுத்துச் சாய்வர் என்று நன்றாய்ப் புரிந்து வைத்திருப்பதால் தற்போது கருங்காலி மாலை விற்பனை கோடிக் கணக்கில் நடக்கிறது.
கருங்காலி என்பது ஒரு மரம். அக்காலத்தில் கோடு போடப் பயன்படுத்தும் உருளைத் தடி அதில் செய்வர். அது இயற்கையில் கருப்பாய் இருக்கும். இந்த மரத்தில் செய்யப்பட்ட மாலையை அணிந்தால், எல்லா நன்மைக்களும் ஓடி வந்து சேரும் என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதால் படித்தவன் முதல், பாமரன் வரை வாங்கி மாட்டிக் கொண்டு அலைகிறார்கள்.
கருங்காலி மாலை அணிந்தால் என்ன நன்மை கிடைத்தது, அணிந்தவர்கள் வாழ்வு உயர்ந்துவிட்டதா? ஆதாரம் உண்டா? அப்படியென்றால் அந்த மாலையை மாட்டிக் கொண்டு எல்லோரும் நல்ல வளர்ச்சியை, நன்மையைப் பெற்று விடலாமே! சிந்திக்க வேண்டாமா?
மந்திரத் தகடு
இது சக்தி வாய்ந்த கடவுள் முன், சிறந்த யோகியால் மந்திரிக்கப்பட்ட தகடு. இதைக் கட்டிக் கொண்டால் கேடு நீங்கி,நன்மை சேரும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். போட்டி
போட்டுக் கொண்டு அதை வாங்குகிறார்கள். தகடு விற்பவர்கள் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறார்கள். மந்திரத்தால் எல்லாம் நடக்கும் என்றால், நாட்டுக்கு ராணுவம் தேவையில்லையே!
நோய் தீர்க்கும் கடவுள்கள்
ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கடவுளை உருவக்கி வைத்துள்ளனர். எப்படி கண் மருத்துவர், பல் மருத்துவர், தோல் மருத்துவர் என்று துறைவாரியாக மருத்துவர்கள் உள்ளனரோ, அப்படி துறைவாரியாக ஒரு கடவுளைப் பிரித்து வைத்துச் சுரண்டுகின்றனர்.
‘வயிற்று வலியா இந்தக் கடவுளிடம் போ,’ ‘கண் நோயா… அந்தக் கடவுளிடம் போ’ என்று பட்டியல் போட்டு பத்திரிகைகளில் சேதி வெளியிடுகின்றனர். இதை வெளியிட்டுக் காசு பார்க்கவும் பத்திரிகைகள் நாட்டில் உள்ளன.
கடவுள் நோய் தீர்த்தால் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் எதற்கு? மருத்துவப் படிப்பு எதற்கு? நீட் தேர்வு மோசடி எதற்கு? சிந்திக்க வேண்டாமா? சிந்திக்கக் கூடாது என்பதற்காகத்தான் புதிது புதியதாய் மூடச் செய்திகளைத் தீவிரமாய்ப் பரப்பி மக்களை மடமையிலே மூழ்கச் செய்கின்றனர்.
கந்த சஷ்டி கவசம்
மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் காக்க வேண்டும் என்று கந்தனை வேண்டுவதே கந்த சஷ்டிக் கவசம்.
இது கடவுளையே கேவலப்படுத்தும் செயல். தூய்மையான பக்தன் என்றால் கடவுளிடம் ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள மாட்டான். ‘கடவுளுக்குத் தெரியும்; அவர் காப்பார்’ என்று நம்புவான்.
‘எனக்கு இதைச் செய்; அதைச் செய், இதைக் காப்பாற்று அதைக் காப்பாற்று’ என்று கடவுளிடம் வேண்டுவது கடவுளைக் கேவலப்படுத்துவதல்லவா? கடவுளுக்குத் தெரியாதா? இப்படியே காப்பாற்ற வேண்டினாலும் ‘என்னைக் காப்பாற்று, என் உடலை நலமாக வை’ என்று வேண்டினால் போதாதா? மாறாக ஒவ்வொரு உறுப்பையும் சொல்லி கந்தனுடைய ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைக் காக்க வேண்டும் என்பது கடவுளை மதிப்பதாகுமா?
‘ஆலிவ் மரம்’ என்று ஒரு ஆங்கிலக் கதை உண்டு. இரண்டு பக்தர்கள் ஆலிவ் மரக் கன்றைத் தனித்தனியே நடுகிறார்கள். ஒரு பக்தன் தன் மரக்கன்றுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு ‘கடவுளே இதைக் காப்பாற்று’ என்று கூறிவிட்டு, தன் கடமையைத் தினமும் செய்கிறான். இன்னொரு பக்தன் ஒரு ஆலிவ் மரக்கன்றை நட்டு விட்டு, ‘கடவுளே இப்பொழுது மழையைக் கொடு! இப்பொழுது வெயிலைக் கொடு!’ என்று ஒவ்வொரு நாளும் அதற்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறான், இறுதியில் கடவுளிடம் பொறுப்பை விட்டவன் மரக்கன்று முழுமையாக வளர்ந்து தழைத்தது. ‘இதைக் கொடு அதைக்கொடு’ என்று வேண்டியவன் நட்டு வைத்ததோ பட்டுப்போயிற்று என்று அக்கவிதை கூறுகிறது. இது கடவுள் நம்பிக்கையாளர்கள் எழுதிய கதைதான்.
அதன்படி பார்த்தாலும் கந்த சஷ்டிக் கவசம் கடவுளுக்கும், கடவுள் பக்தனுக்கும் பெருமை தருவதல்ல என்பது தானே! அப்படியிருக்க, கந்த சஷ்டிக் கவசம் பாட மாநாடு நடத்துவது ஏற்புடையதா? உரியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்தைக்
கவனத்தில் கொள்க!
ஆசிரியர் கூறுவது போல மக்களும், அரசும், அறநிலையத் துறையும் அரசியல் சட்டம் வகுத்துக் காட்டி யுள்ள குடிமக்கட்கான கடமையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அறிவியல் மனபான்மையை வளர்த்து மக்களைப் பகுத்தறிவு வழியில் செலுத்த வேண்டும். அறிவுக்கு ஒவ்வாதவற்றை அகற்ற வேண்டும். நம்பிக்கை என்ற ஒரு வாதத்தை வைத்து சமுதாயத்தை – அதன் வளர்ச்சியை – செழிப்பைக் கெடுக்கக்கூடாது.
ஆதிக்க சக்திகள், மதவெறியர்கள்,ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கூட்டங்கள், சமத்துவத்தை – சம உரிமையை எதிர்ப்பவர் கள், வெறுப்பவர்கள் எல்லாம் ஏன் மூட நம்பிக்கையை முனைந்து பரப்புகிறார்கள் என்பதை மக்களும் அரசும் ஆழமாகக் கருத்தில் கொள்ளவேண்டும். மூட நம்பிக்கைகளை வளர்ப்பதன் மூலம், நிலை நிறுத்துவதன் மூலம் மக்களை எழுச்சி கொள்ள விடாமல் செய்யலாம், மூட நம்பிக்கைகள் மூலம் கடவுள் நம்பிக்கையை வளர்த்து, அதன் மூலம் மத வெறியை வளர்த்து, வர்ண பேதத்தினை வளர்த்து, பழைய ஸனாதனச் சட்ட முறைகளை நடப்புக்குக் கொண்டு வந்து விட நினைக்கிறார்கள். கடவுள், மதப் பற்றை ஊட்டுவதன் மூலம் மதவாதக் கட்சியான பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தி விடலாம்; பிற மாநிலங்களின் ஆட்சியைத் தக்க வைக்கலாம். என்று திட்டம் தீட்டுகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள கோவில்களைப் புனரமைத்தல் என்ற பெயரில் கிராமத்தின் உள்ளே இந்து முன்னணி போன்ற அமைப்புகள் நுழைகின்றன. அவற்றுக்குக் கருப்புப்பண முதலைகளின் நிதி வாரி இறைக்கப்படுகிறது.
மலைவாழ் மக்கள், பழங்குடியினர் பகுதியில் அவர்களின் பண்பாட்டு வழக்கப்படியான ‘வழிபாட்டுக்குக் கோயில்களை அமைத்துத் தருகிறோம்’ என்று பரப்பி, அவர்களை வளைக்கப் பார்க்கிறார்கள்.
புதிய, புதிய விழாக்களை சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு நடத்துகின்றன. பெண்களைக் குறிவைத்து விளக்கு பூஜைகள், வரலட்சுமி விரதம் என்று பார்ப்பனர்கள் மட்டுமே நடத்தி வந்த நிகழ்ச்சிகளைப் பரவலாக்குகின்றனர். பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கூட்டுகின்றனர்.
கோயில் திருவிழாக்களே ஜாதிப் பிரச்சினைகள் முளைவிட்டுக் கிளம்ப அடிப்படைக் காரணமாக இருக்கின்றன என்பதறிந்து அங்கே ஆர்.எஸ்.எஸ். கூடாரம் கட்டுகிறது.
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என்று சமூகநீதித் திசையில் திராவிட இயக்க ஆட்சி நடைபெற்று வந்தாலும், அதன் பலனை மதத்தின் பெயரால் மடைமாற்றத் தீவிரமாகச் செயல்படுகிறது இந்துத்துவா.
எனவே, மக்களும் அரசும் இதில் விழிப்போடிருந்து மூடநம்பிக்கை வளர்க்கும் முயற்சியையும், கடவுள் பெயரால் மதவெறி வளர்க்கும் முயற்சியையும் அதன் லிளைவாக ஜாதிப் பிரிவினைகள் பிரச்சினைகள் தீவிரமாவதையும் முளையிலேயே தகர்க்க வேண்டும். மதவாதச் சக்திகளின் மறைமுகச் செயல் திட்டத்தைப் புரிந்து, மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். பக்தர்களைக் கவர வேண்டும் என்ற முனைப்பில் மதவெறிக் கூட்டத்தை வளர்த்து விடக் கூடாது. மக்களும் விழிப்போடிருந்து அறிவு வழிச் செல்ல வேண்டும்.





