Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியரின் அணுகு முறையில் அணிவகுக்கும் மகளிர் !- திருப்பத்தூர் ம.கவிதா

தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’ என்னும் நூலை வெளியிட்டு உரையாற்று கையில், “எல்லாரும் என்னை ஆசிரியர் என்று அன்போடு அழைக்கிறீர்கள், நான் ஆசிரியருக்
குப் படிக்கவில்லை. ஆனால், இதோ இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்ததால் நான் ஆசிரியர்; என்றாலும் நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்”என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் முத்தாய்ப்பாகச் சொன்னார்.

ஆசிரியரின் எழுத்துகளைப் படிப்பதும் ஆசிரியரைப் பின்தொடர்வதும் தந்தை பெரியாரை அறிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

எனில், ஆசிரியரையே பாடமாகப் படித்தால்?

‘ஆசிரியர் ஆராய்ச்சி’ என்றொரு ஆராய்ச்சியே செய்தால்?

தோண்டத் தோண்ட அனுபவப் புதையல்கள் அள்ளிக் கொண்டு போக முடியும் அல்லவா?!

அதிலும் மகளிரை ஊக்கப்படுத்துதல், மகளிரைப் பாராட்டுதல், மகளிர் உரிமை முழங்குதல் என்பனவற்றோடு ஆசிரியர் அய்யா அவர்களின் அணுக்கத் தொடர்பை ஆராய்ச்சி செய்வதில் வாழ்நாளின் பேரின்பம் ஈட்ட முடிகிறது.

அந்த வகையில் இயக்க மகளிரின் 54 நேர்காணல்களை ஒருங்கிணைத்து அவர்கள் வாழ்வின் வீரதீர சாரத்தைப் பிழிந்து, வி.சி. வில்வம் அவர்களால் தொகுத்துத் தரப்பட்ட – ‘கொள்கை வீராங்கனைகள்’ எனும் நூல் 6.7.2025 அன்று மன்னார்குடியில் வெளியிடப்பட்டது.  இந்நூல் பன்னூறு அரிய செய்திகளை இத்தளத்தில் நாம் ஆராயும் பொருட்டு தன்னுள் தாங்கி வெளிவந்திருக்கிறது.

“பெண்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரவேண்டும் என ஆசிரியர் அடிக்கடி வலியுறுத்துவார்கள். தஞ்சாவூரில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டிற்கு, வீட்டில் உள்ள பெண்களை அழைத்துவரவில்லை என்றால் அய்ந்து ரூபாய் அபராதம் என்று கூட ஆசிரியர் அறிவித்தார்கள்” என்று காரைக்குடி தி.ஜெயலட்சுமி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எப்போதும் மகளிர் நலன் குறித்த சிந்தனை ஆசிரியரின் சொல்லிலும் எழுத்திலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

“ஒவ்வொருவரின் திறமைகளையும் அறிந்து பாராட்டுவதும் அங்கீகரிப்பதிலும் ஆசிரியருக்கு இணை ஆசிரியர்தான். அதுமட்டுமல்ல; எனது தந்தையார் மறைந்த 15ஆம் நாளில் மகளிர் சுற்றுப்பயணம் ஒன்று தொடங்கியது. அதில் பங்கேற்க அம்மா புறப்பட்டு விட்டார். அதற்குக் காரணமாக இருந்தவர் நமது ஆசிரியர் அவர்கள்” என்று உருக்கமாக, பெண்ணாகரம் மலர்விழி அவர்களும் கூறினார்கள். பட்டியல் இப்படி நீண்டு கொண்டே போகிறது.

ஆசிரியரால் தெளிவும், ஊக்கமும், உயர்வும் பெற்ற பெண்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர். அவர்கள் பெற்ற பயன்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“ஆண் தோழர்கள் கூட சில நேரங்களில் அதிகபட்சமாக – மிகையாகப் பேசுவார்கள். ஆனால், மகளிர் தோழர்கள் அதிகப் பெரும்பாலும்
இயல்பானவர்கள். அவர்களது வார்த்தைகள் நம்மை நெகிழ்வுறச் செய்கின்றன. எங்கள் தலைவர் என்கிறார்கள், எங்கள் அண்ணன் என்கிறார்கள், தந்தை போன்றவர் என்கிறார்கள், அவர்தான் ஆறுதல் என்கிறார்கள், அவர்தான் எங்கள் நம்பிக்கை என்கிறார்கள், நான் இன்னும் சாகாமல் இருப்பதற்கு இந்தக் கொள்கையும் தலைவரும் தான் காரணம் என்கிறார் அப்பெண்களில் ஒருவர்… இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது” என்றே  வியக்கிறார்.

மகளிரின் உள்ளத்தில் இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துவது என்பது எளிதாக எவராலும் முடியாதது. அது ஆசிரியரால் மட்டுமே முடிகிறது!

தான் மட்டுமல்ல, தன் கிராமமே (சோழங்கநல்லூர்) ஆசிரியர் அய்யாவின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதை சரஸ்வதி அவர்கள் குறிப்பிடுகிறார்.

எங்கள் கிராமத்தில் பெரும் கலவரம் ஒன்று எழுந்தது. கிராமமே செய்வதறியாவது திகைத்து நின்றது. அந்த நேரத்தில் உடனடியாக எங்கள் கிராமத்திற்கு ஆசிரியர் வந்தார். யாரும் பயப்பட வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆறுதல் கூறி அமைதிப்படுத்தி சுமுகமான நிலையை ஆசிரியர் கொண்டு வந்தார். எந்தப் பலனும் இல்லாமல் ஒருவர் இப்படிச் செய்வாரா? என கிராம மக்கள் வியந்தனர். கிராம மக்களுக்கு மருத்துவ வசதி இல்லாமல் இருந்தது.  மோசமான உடல்நிலை என்றால் கட்டில் மேல் படுக்க வைத்து தூக்கிக்கொண்டு போவார்கள். கிராம மக்கள் ஆசிரியரிடம் விண்ணப்பம் செய்தோம். உடனடியாக மருத்துவமனை கட்டிக் கொடுத்தார்கள். ‘சோழங்கநல்லூர் என் தாய் வீடு’ என ஆசிரியர் கூறியதை எங்களால் மறக்கவே முடியாது”  என்கிறார்.

“பிறர் நிலையிலிருந்து நின்று உணர்தல்” என்பது ஆசிரியர் அவர்களுடைய ஆகச்சிறந்த அணுகுமுறை என்பதால், தான் சந்திக்கும் மகளிர் ஒவ்வொருவரின் நிலையிலிருந்தும் சிந்தித்து அவர்களை ஊக்கப்படுத்துதல் என்பது அவரின் இயல்பிலேயே ஊறி இருக்கிறது என்றால் மிகையல்ல! அவருடைய வாழ்வியல் அணுகுமுறை அதுவரை ஆத்திக வாழ்வில் இருந்த மகளிருக்கும் பெரும் மாற்றங்களைத் தந்து முழுப் பகுத்தறிவு நாத்திகக் கொள்கை வாழ்வுக்கு அவர்களை நெறிப்படுத்தித் தயாரித்து
இருக்கிறது என்றால், அதற்கெல்லாம் ஆசிரியரின்கொள்கைக் குடும்பப் பாசமும், அன்பான பண்பும், வழிகாட்டலுமே காரணம் ஆகும்.

உங்கள் கணவர் நாத்திகர்; சாமி கும்பிட மாட்டார் என உறவினர்கள் கூறினர், “பரவாயில்லைநல்ல குணமுடைய மனிதராக அவர் இருக்கிறார், அது போதும்” என ஒருவர் கூறியிருக்கிறார். திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் வரை ஆன்மிகவாதியாக இருந்திருக்கிறார். இப்படியான சூழலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அமெரிக்காஅவர்களது இல்லத்திற்குச் செல்கிறார்கள். அங்கு ஆசிரியரின் அறிவார்ந்த உரையாடல்அணுகுமுறை இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. தேடித் தேடிப் படிக்கத் தொடங்குகிறார். இன்று இணையர்கள் இருவரும் (சோம.இளங்கோவன் சரோஜா இணையர்) பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள்.  இலால்குடி அருகே நடராஜபுரம் எனும் குக் கிராமத்தில் பிறந்து அமெரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நோயியல் துறையில் பயின்று பின்பு மூளை நோயியல் படிப்பை இரண்டு ஆண்டுகள் முடித்து சிகாகோ மருத்துவமனையில் பணிபுரியும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். ஆசிரியரின் அணுகு முறையால் தாம்பெற்ற தெளிவைத் தம் சுற்றத்திற்குத் தெளித்துக் கொண்டு இருக்கிறார்.

இப்படியாக பல மகளிரை இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் பங்காற்றும் அளவிற்கு ஆசிரியரின் அணுகுமுறை விளக்க விளக்க விரிகிறது…

“நான் கடவுள் நம்பிக்கை உள்ள பெண். அதுவும் ஸ்ரீ ராம ஜெயத்தை நாள்தோறும் எழுதி வந்தேன். நானும் இணையர் ஜெயராமன் அவர்களும் திருமணம் செய்ததை பெற்றோர்கள் ஏற்கவில்லை. அதனால் ஆதரவற்ற நிலை மற்றும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

நிகழ்ச்சிகளுக்கு மகளிர் தலைமை ஏற்க செய்ய வேண்டும் என்கிற ஆசிரியரின் வேண்டு கோளுக்கிணங்க, “இந்தக் கூட்டத்திற்கு மட்டும் நீங்கள் தலைமை ஏற்கவும். பிறகு கொள்கையை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்” என என் இணையர் ஜெயராமன் கூறினார்.

“மரியாதைக்குரிய கூட்டத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி அவர்களே” என்ற ஆசிரியரின் வார்த்தையைக் கேட்டவுடன் நான் இயக்கத்திற்கு வந்துவிட்டேன். நிகழ்ச்சி முடிந்து வரும் போது ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்கு வாழ்த்துக் கூறினார்கள். ஒரு பெரும் நிகழ்ச்சியில் மகளிரைத் தலைமை ஏற்க வைத்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதையும் வரவேற்று, அதற்கும் வாழ்த்து கூறுவார்களா என்று எண்ணி வியந்து, இந்த இயக்கம் தான் நமக்கு வேண்டும் என்று உறுதி பூண்டு அன்று எடுத்த முடிவு தான் இன்று வரை தொடர்கிறது” என்று ஈரோடு தந்தை பெரியார் சிலையின் முன் மாலை மாற்றி, பதிவுத் திருமணம் செய்து கொண்ட கழகத்தின்  மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி  அவர்கள் கூறுவது, ஆசிரியரின் உழைப்பிற்கும் மகளிர் தோழர்கள் மீது அவர் காட்டும் மரியாதைக்கும் பரிவுக்குமான வெற்றியாகும். பெரியாரின் வாழ்நாள் மாணவன் என்று அவர் சொல்கின்ற சொற்களின் மேல் கட்டப்பட்ட  கோட்டையாகும்!