1.கே : பெரியாரிடம் நீங்கள் கண்ட குறையாக எதையாவது குறிப்பிடுவீர்களா?
– க.பாண்டியராசன், சிவகாசி.
ப : 95 வயது வரை மட்டுமே வாழ்ந்தார் என்பது நமக்கேற்பட்ட குறை! அக்குறையும் அவருடையது அல்லவே!
2.கே: பெயருக்குப் பின்னால் ஜாதியை நீக்கிய தந்தை பெரியாரை, இராஜாஜி ‘‘நாயக்கர்’’ என்றே கடைசிவரை அழைக்க அனுமதித்தது ஏன்? அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று கூறாதது ஏன்?
— கே. தமிழ்நதி, தென்காசி.
ப : அந்தக் காலத்திலேயே நாயக்கர், நாயுடு, முதலியார் என்று அழைக்கப்பட்டனர். அந்தத் தோரணையில் அழைத்திருக்கக் கூடும். 1927-லேயே தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டார் தந்தை பெரியார். 1929 செங்கல்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் அதையே தீர்மானமாக்கி உலகுக்கும் அறிவித்துவிட்டார். அதில் ராஜாஜிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? இன்றும் கூட, சிலர் எழுதும் போது (இங்கும், வடநாட்டிலும்) அவரை ஜாதிப் பெயரைச் சொல்லியே குறிப்பிட்டு, தங்கள் வன்மத்தைக் காட்டிக்கொள்கின்றனர். இந்த வன்மங்களெல்லாம் வரலாற்றின் முன் நிலைப்பதில்லை.

3.கே: ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களின் பதவித் துறப்பு பற்றி தங்கள் கருத்து என்ன?
– சு.நாதன். அறந்தாங்கி.
ப : ஆர்.எஸ்.எஸ்சுக்கும், பிரதமர் மோடிக்கும் தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும்போதே பகலில் மாநிலங்களவையை நடத்திய அதன் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர், அன்று இரவே உடல்நிலையைக் காரணம் காட்டிப் பதவி விலகுகிறார். நாகரிகமாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்
பினாலும், ஒன்றிய அரசிடமிருந்து பதில் இல்லை. எந்த நாடகமாக இருந்தாலும் முடிவுக்கு வந்து
தானே ஆக
வேண்டும்! பார்ப்போம்.
4.கே: சத்தீஷ்கர் மேனாள் முதல்வர் பூபேஷ்பாகேலின் மகன் கைது செய்யப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பாசிசப் போக்குதானே?
– கு. எழிலரசன், பாபநாசம்.

ப : ஒன்றிய அரசின் அதிகாரத் திரிசூலங்கள் (சி.பி.அய், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை) மீது உச்சநீதிமன்றம் பல முறை கண்டனங்களைத் தெரிவித்துவிட்டது. எதுவும் காதில் விழாத மாதிரியே, மிரட்டி விலைக்கு வாங்குதல் அல்லது பழிவாங்குதல் ஆகியவற்றுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஜனநாயக விரோதப் போக்கே- பாசிசப் போக்கே!
5.கே: ‘இந்தியா’ கூட்டணியை ‘இந்தி’ கூட்டணி என்று ‘தினமலர்’ எழுதுவதன் திமிர்த்தனம் எந்த வகை?
-ஹெச்.முகேஷ், குடியாத்தம்.
ப : அவாளுக்கு வேண்டுமென்றால் ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளும் ஆக்குவார்கள். வேண்டாமென்றால் பெருமாளுக்கே நாமமும் போடுவார்கள். இந்த நாமகரணம் எல்லாம் அவாளுக்குச் சர்வ சாதாரணம்!
6.கே: உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையை உயர்த்த தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?
– வை. தரங்கினி, செய்யாறு.

ப : இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றிய அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டின்படி (ஓபிசி-27%, எஸ்.சி/எஸ்.டி-22.5%) உரியவர்களுக்கு இடம் வழங்கப்பட்டாலேயே பெரும் மாற்றம் நிகழும். தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலம் என்று இந்தக் காலத்தை நிறுவுவோம் என்று நம்முடைய முதலமைச்சர் சூளுரை ஏற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாரே!
7.கே: கீழடி அறிக்கையில் அதன் தொன்மைக் கால அளவைக் குறைக்கச் சொல்லும் ஒன்றிய அரசின் செயல் அப்பட்டமான ஆரிய ஆதிக்க வெளிப்பாடல்லவா?

– ஆர்.புருஷோத்தமன், அரக்கோணம்.
ப : வேத காலமே மூத்தது என்று கதையளந்து கொண்டிருந்தவர்கள், அறிவியல் ஆதாரத்துடன் தொல்லியல் தரவுகள் கிடைத்த கீழடியைத் தங்கள் காலடியில் போட்டு மிதிக்கலாம் என்று கருதுகிறார்கள். சுயமரியாதை மிக்க பெரியார் மண்ணாம் தமிழ்நாடு இதை ஒருபோதும் அனுமதிக்காது! வரலாறு என்பது ஒரு விஞ்ஞானம்.- அதை மாற்றவோ, மறைக்கவோ
முடியாது!





