டு விடுதலை அடைந்த பின்பு, துவக்கத்தில் இருந்து இன்றுவரை, பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினரின் கைப்பிடியில் உச்சநீதிமன்றம் இருந்துவருகிறது
பல்வேறு சமூக அமைப்புகள் உயர் நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் பெண்கள், தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து வருகின்றன.
ஓய்வு பெற்ற மற்றும் பதவியில் உள்ள 246 உச்சநீதிமன்ற நீதிபதிகளில், வெறும் எட்டு பெண் நீதிபதிகளே இருந்துள்ளனர்.
இந்த எட்டு பெண் நீதிபதிகளில், கடந்த பத்தாண்டுகளில் அய்வர் நியமிக்கப்பட்டுள்ளனர் – இதே காலகட்டத்தில் 25 ஆண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 17 நிலவரப்படி, உயர் நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் உள்ள 1,113 நீதிபதிகளில் 80 பேர் மட்டுமே பெண்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்து ஜார்ஜ் எஃப். காட்போயிஸின் *இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள்* என்ற புத்தகத்திலே, 1950-1989 காலகட்டத்தில், உச்சநீதிமன்றத்தில் 92.2% ஆண் பார்ப்பனர்கள் மற்றும் பிற முன்னணி ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்று நீதிமன்றப் பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டிருந்தார்
. இதற்கு ஒரு சான்றாக, 47 இந்திய தலைமை நீதிபதிகளில் இரண்டே இரண்டு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் முன்பு இருந்தார். தற்போதுபி.ஆர்.கவாய் பதவியில் உள்ளார். இதில் வியப்பு என்னவென்றால், இத்தனை ஆண்டுகளாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெறும் இரண்டே இரண்டு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதிகள் மட்டுமே வந்துள்ளனர்.
அரசமைப்புச் சட்டம் அல்லது வேறு எந்தச் சட்டமும் உயர் நீதித்துறையில் எந்தவொரு பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கு குறைந்தபட்சத் தகுதிகளை அரசமைப்புச் சட்டத்தின் 124ஆம் பிரிவின் கீழ் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கு 217ஆம் பிரிவின் கீழ் மட்டுமே வழங்குகிறது.
பொதுவாக நீதிபதிகளின், நியமனத்திற்கான அளவுகோல்கள் இன்றும் பெரும்பாலும் மாறாமலேயே உள்ளன, அவை: i) வயது மற்றும் மூப்பு; ii) திறமை மற்றும் நேர்மை; iii) நல்ல ஆரோக்கியம்; iv) அரசமைப்பின் மீதான ஆழ்ந்த அனுபவம்; v) ஜாதி;vi) குடும்பப் பின்னணி; vii) மதம்; மற்றும் viii) பிராந்திய பிரதிநிதித்துவம். அண்மையில் மட்டுமே பாலினம் ஒரு நியமன அளவுகோலாக உருவாகியுள்ளது. இவற்றின் அடிப்படையில் உயர் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட வேண்டும்.
இட ஒதுக்கீட்டால் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் திறன் பாதிக்கப்படும் என்ற பழைய பல்லவியே இன்றும் உயர் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான முதன்மை வாதமாய் உள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான வாதம் மிகவும் வலுவானது. 70க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நீதித்துறையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
உயர் நீதித்துறையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குப் போதுமான அளவு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால், அவர்களின் உரிமைகள் தானாகவே குறைகின்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்வேறு தரப்பு மக்களைப் பாதிக்கும் சட்டத்தின் இறுதி வார்த்தையாகும். எனவே, நாட்டின் சட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நீதிபதிகள் சமுகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இனத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மிகவும் பிரதிநிதித்துவமான நீதித்துறை, ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் தொடர்பான அழுத்தமான பிரச்சினைகளுக்குப் புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும். மிகவும் பிரதிநிதித்துவமான நீதித்துறை, சமநிலையான நீதித்துறையாகவும் இருக்கும்,
இது அரசமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினம் தொடர்பான விஷயங்களில், வெளிப்படையான, திறந்த மற்றும் பரந்த விவாதத்தை ஊக்குவிக்கும்.
இந்தச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த ஒரு நீதிபதி, அவர்களின் சமூகங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம். நீதித்துறையில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இருப்பது ஆண் நீதிபதிகளிடையே உணர்வுபூர்வமான புரிதலை ஏற்படுத்தும்.
நீதித்துறையில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக மற்றொரு வாதம், இந்தச் சமூகங்களைச் சேர்ந்த இளையோர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். இவை அனைத்தையும், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் தரத்தைச் சமரசம் செய்யாத, நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் அடைய முடியும்,
நீதிபதிகள் நியமனம்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் கொலீஜியம் அமைப்பு மூலம் நியமனங்கள் செய்யப்படுகின்றன. இந்த நியமனங்களில் இதுவரை நேரடியாக இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படவில்லை. அதாவது, தாழ்த்தப்பட்ட (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிரிவினருக்குக் குறிப்பிட்ட சதவிகித இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை.
இருப்பினும், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. நாட்டின் சமூகப் பன்முகத்தன்மையை நீதித்துறை பிரதிபலிக்க வேண்டும் என்பதால், நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க. மேனாள் மாநிலங்களவை உறுப்பினர். பி.வில்சன், உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கொண்டுவர ஒரு தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது நினைவில் இருக்கலாம்.
இந்த மசோதா, மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தாழ்த்தப்பட்ட பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்கிறது.
கீழமை நீதிமன்ற நியமனங்கள்
மாநில அளவிலான கீழமை நீதிமன்றங்களில் (மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் போன்றவை) நீதிபதிகள் நியமனங்கள் பெரும்பாலும் மாநில பொதுப் பணித் தேர்வாணையங்கள் அல்லது உயர் நீதிமன்றங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளில், மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. அதாவது, மாநில அரசின் இட ஒதுக்கீட்டு விதிகள் SC, ST, OBC மற்றும் பிற பிரிவினருக்குப் பொருந்தும்.
நீதித்துறை ஊழியர் நியமனங்கள்
நீதிமன்றங்களில் உள்ள ஊழியர் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார். அதன்படி, உச்ச நீதிமன்ற ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்ட (SC) பிரிவினருக்கு 15% மற்றும் பழங்குடி இனப் (ST) பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் நேரடி ஆட்சேர்ப்பு இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் போலவே இந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.
இது உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர் நியமனங்களில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடாகும்.
உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் நேரடியாக இட ஒதுக்கீடு இல்லை. இருப்பினும், இதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.
நீதிமன்ற ஊழியர் நியமனங்களில் (அனைத்து
மட்டங்களிலும், உச்ச நீதிமன்றம் உட்பட) இடஒதுக்கீடு உள்ளது. நீதித்துறையில்
பன்முகத்தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன, எதிர்காலத்தில் உயர் நீதித்துறை நியமனங்களிலும் இட ஒதுக்கீடு செய்வது தொடர்பான சட்டம் கொண்டுவர
வாய்ப்புள்ளது.





