Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இழிவைத் துடைத்தெறிவோம் !- முனைவர் கடவூர் மணிமாறன்

மூடத் தனங்கள் முதுகில் கமந்தேநம்

பீடிழந்தோம்! பண்டைப் பெருமை உயர்மாண்பை

மண்ணுள் புதைத்துமே மாய்கின்றோம்! வாழ்வினில்

கண்ணியம் எல்லாமும் காற்றில் பறந்தோட

இல்லாத ஒன்றை இருப்பதாய் நம்பவைத்தே

பொல்லாங்கு செய்தே பொழுதைக் கழிக்கின்றோம்!

கோத்திரம் என்றும் குலஉயர்வு தாழ்வென்றும்

சாத்திரம் என்றும் சடங்கென்றும் ஏய்ப்போரால்

சூத்திரப் பட்டத்தை ஏற்றுப் பழகிவிட்ட

ஆத்திகப் போக்கில் அடங்கியே மெய்மறந்தோம்!

சிந்திக்க மாட்டாதார் சீற்றம் மிகக்கொண்டு

வெந்துயர் நல்குவதால் வெம்பித் தவிக்கின்றோம்

தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும்

நந்தம் கலைஞரும் நாம்மதிக்கும் ஆசிரியர்

அய்யாவும் போற்றும் அறிவியக்கச் சிந்தனையை

மெய்யாக ஏற்றிருந்தால் மேன்மை விளைந்திருக்கும்!

வாழும் வகையறியோம்! வஞ்சகர் தீங்குணரோம்

சூழும் பகைவரின் சூதினால் வன்மத்தால்

தாழும் நிலைகண்டும் தன்மதிப்பை எண்ணாமல்

பாழும் மடமையெனும் சேற்றுள் புதையுண்டோம்!

நல்லநாள் ராசிபலன் சோதிடத்தை நம்பியே

இல்லாப் பழிகளையும் ஏற்று மயங்குகிறோம்!

வீழ்த்தவே எண்ணுகிற வெங்கொடுமை ஆரியத்தால்

ஊழ்வினையை நம்பி உருக்குலைந்தோம்! முன்பிருந்த

சீர்த்தி இழந்தோம்! சிறுமைத் துயர் நீங்க

நேர்த்திக் கடனென்று நீண்ட மலையேறி

நெஞ்சம் மகிழ்வோம்! அலகுகுத்தித் தீமிதிப்போம்!

அஞ்சியே வாழும் அவலம் மிகப்பெற்றோம்!

காவடிகள் தூக்கிக் கடும்பசிக்கே ஆட்படுவோம்!

ஏவல் அடிமையென என்றும் இருப்பதிலே

இன்பமே காணும் இழிவைத் துடைத்தெறிவோம்

துன்பம் களைவோம் துணிந்து. l