நீண்ட நேரம் உறக்கம் வராமலிருந்த ரகுவரன் சற்று நேரத்திற்கு முன்புதான் உறங்க ஆரம்பித்தார்.
அப்போது அவன் வீட்டுக்கு அருகில் இருந்த கோயிலில் இருந்த ஸ்பீக்கர் அலறியது.
“மாங்காடு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு… என ஆரம்பித்து இந்த ஒலிபெருக்கியைக் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கிய மாயவேல் மகன் மணிசுந்தரத்திற்குப் பூரண அருள் கிடைக்கட்டும்” என்று சொல்லி வாழ்த்தியபின், தற்போதைய நேரம் இரவு மணி இரண்டு என்று சொன்னது அந்த ஒலிபெருக்கி.
அதைத் தொடர்ந்து சில நிமிடங்கள் வரை பக்திப் பாடல் ஒன்றையும் ஒலிபரப்புச் செய்தது.
“இரவு இரண்டு மணிக்கு இந்தச் சாமியிடம் யார் டைம் கேட்டது? எவனே ஒருவன் தன் சுய விளம்பரத்திற்காக ஒலிபெருக்கியைக் கோயிலுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டான். மணிக்கு ஒருமுறை அவன் பெயரைச் சொல்லிவிட்டு, அதற்குப் பிறகே நேரம் சொல்வதைப் போல் பதிவு செய்துவிட்டார்கள்; என்று முனகிய படியே மறுபடியும் தூங்க முற்பட்டார்.
அவனால் தூங்க முடியவில்லை. பக்கத்துத் தெருவில் இருக்கும் மற்றொரு கோயிலிலிருந்து ஒலிபெருக்கி அலறியது.
அதிலும் இதுபோலவே உபயதாரர் பெயரைச் சொல்லி வாழ்த்தி, பாட்டுப் போட்டபின் நேரத்தைச் சொல்லியது.
“ஒரே நேரமாகவும் இல்லை. நேரமும் வித்தியாசப்படுது. ஒரே தொல்லையாப் போச்சே. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்” என்று எண்ணினார்.
இரவில் தூக்கம் கெட்டுப் போனதால் காலையில் மிகவும் துன்பப்பட்டே படுக்கையை விட்டு எழுந்தார். எழுந்தவுடனேயே கோயிலில் பாடல்கள் போட ஆரம்பித்துவிட்டார்கள். கோயிலுக்கு அருகிலேயே வீடு இருப்பதால் பாட்டுச் சத்தத்திற்கு இடையில் மற்றவர்களுடன் பேசுவதே சிரமமாக இருந்தது.
எவனோ ஒருவன் ஒலிபெருக்கிக் கருவியில் ‘பென்டிரைவ்’ என்னும் சாதனத்தைச் செருகிவிட்டுப் போய்விடுகிறான். துன்பப்படுவது பக்கத்தில் இருக்கும் மக்கள் அல்லவா?
“சரியான காட்டுமிராண்டிகள்”, எனத் திட்டியபடியே எழுந்தார் ரகுவரன்.
அவரது துணைவி காவேரிக்கும் சரியான தூக்கம் இல்லைதான்.
“இந்தக் காட்டுமிராண்டிகளால் நம்ம தூக்கமும் கெடுது. சொன்னா எவன் கேட்கிறான்? நாம் என்னவோ கடவுளுக்கு எதிரியாக சித்திரிச்சி நமக்குத் தொல்லை கொடுக்கிறானுங்க. எந்த நாட்டிலேயும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காது. தூக்கம் இல்லாட்டி பல நோய்கள் வரும்”, என்று எரிச்சலுடன் சொன்னார் ரகுவரன்.
“எவ்வளவு நேரம் தூங்கினால் நல்லது?” என்று கேட்டார் காவேரி.
“காவேரி, ஆண்களைவிட பெண்கள் தான் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்படுகிறார்களாம். மன உளைச்சலால் நிலையற்ற தூக்கமின்மை ஏற்படும். இது சில வாரங்களில் சரியாயிடும். தீவிரமான தூக்கமின்மை ஏற்பட்டால் இது ஆறு மாதம் வரை கூட நீடிக்கலாம். ஆனால், நாள்பட்ட தூக்கமின்மை ஆண்டுக் கணக்கில் நீடிக்கலாம். மனஅழுத்தம், பயம் போன்றவையே இதற்குக் காரணம். கடும் இரைச்சலால் நமக்கு நிலையற்ற தூக்கமின்மை ஏற்படுகிறது. இரவு நேரத்தில்ட “மெலடோனின்” என்கிற ஹார்மோன் சுரக்கிறதாம். அதுதான் நமது தூக்கம், விழிப்பு நிலைகளைக் கட்டுப்படுத்துகிறதாம். பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் 10 முதல் 15 மணி நேரமும், 5 முதல் 15 வயது வரை உள்ளவர்கள் 8 முதல் 10 மணி நேரமும், 16 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் 7 மணி நேரமும், 30 முதல் 50 வயது வரை உள்ளவங்க 6 மணி நேரமும், 50 வயதுக்கு மேற்பட்டவங்க 8 மணி நேரமும் மருத்துவப்படி அவசியம் தூங்க வேணுமாம். சரியாய் உறங்காவிட்டால் நினைவுத் திறனும் குறையும். உடலும் குண்டாகும்”, என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் ரகுவரன்.
“நினைவுத் திறனும் குறையுமா!”, என்று வியப்புடன் கேட்டார் காவேரி.
“ஆமாம் காவேரி. நெதர்லாந்து என்பது வடமேற்கு அய்ரோப்பிய நாடு. அங்கு ‘குரோனிங்கன்’னு ஒரு பல்கலைக்கழகம் இருக்கு. அங்கு பணிபுரியும் பேராசிரியர் ராபர்ட் ஹாவகி என்பவர் இதை ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளார். தூக்கத்தைத் தள்ளிப் போடுவது, கொஞ்ச நேரமே தூங்குவது போன்றவற்றால் நினைவாற்றல் குறையுமாம். அப்புறம் உடம்பும் குண்டாகும்‘னு சொன்னேன் அல்லவா! அது எப்படின்னா தூக்கம் கெட்டுப்போனா நம்மோட பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ‘லெப்டின்’ என்கிற ஹார்மோன் அளவு குறையும். அப்புறம் பசி உணர்வைக் அதிகமாகத் தூண்டும் ‘கெர்லின்’ என்கிற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.
இதனால் நாம் அதிகமாகவே சாப்பிடு
வோம். உடலும் குண்
டாகும், நீரழிவு நோயும் உண்டாகும்.”
இதைக் கேட்ட காவேரி,
“உங்களுக்கும் வர வர நினைவாற்றல் குறைஞ்சிகிட்டுத்தானே இருக்கு? தூக்கமும் உங்களுக்கு கெட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்” என்றார்.
“ஆமாம் காவேரி. கோயிலில் ‘ஸ்பீக்கர்’ வச்சதிலேயிருந்து தூக்கம் கெட்டுப் போச்சுதான். இதுக்கு ஏதாவது செய்ஞ்சே ஆகணும். ஊர்ப் பஞ்சாயத்தில் சொல்வோம். இல்லாட்டி போலீசில் புகார் கொடுக்க வேண்டியதுதான். நாம பக்தர்கள்தான். சாமி கும்பிட்டுக் கிட்டுத்தான் இருக்கோம். ஆனால், யாரும். மத்தவங்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாதல்லவா? அது சரி, காவேரி. நீ மட்டுமென்ன? உனக்கும்தான் ஞாபகமறதி அதிகமாயிடுச்சு.”
“உண்மைதானுங்க. நானும் கோயிலுக்குப் போய்கிட்டுதாங்க இருக்கேன். விடமுடியலை. இப்ப நீங்க நிறைய செய்திகளைச் சொன்னீங்க. இதையெல்லாம் எப்படி நீங்க தெரிஞ்சிக்கிட்டீங்க.”
“இதென்ன கேள்வி காவேரி? நான் செய்ற வேலையே புத்தகம் விக்கிறதுதானே? பழைய புத்தகங்களையும், படங்களையும் வாங்கி பிளாட்பாரத்தில் போட்டு வித்துக்கிட்டு இருக்கேன். சும்மா இருக்கும் போதெல்லாம் நல்ல புத்தகங்களை எடுத்துப் படிக்கிறேன். அதனால்தான் எல்லாத்துக்கும் என்னால் பதில் சொல்ல முடியுது.”
எல்லாவற்றையும் கேட்ட காவேரி திடீரென,
“இந்த மாசம் தேர்த்
திருவிழா வருதாச்சே”, என்றார்.
“ஆமாம் காவேரி. தேர் அசைந்து அசைந்து வர்றதைப் பார்க்க ஆசையா இருக்கும். அதே நேரத்தில் உண்டு கொழுக்கிற சிலரை தேர் மேல உட்கார வைத்து இழுத்துக்கிட்டுப் போறது கொடுமைதான். இதுக்கெல்லாம் முடிவு கட்டணும். ஆனாலும் பக்தி கண்ணை மறைக்கும். தேர்த்திருவிழாவில் எனக்கும் பழைய, புதிய புத்தகங்கள், படங்கள், சாவிக் கொத்துகள் எல்லாம் நிறையவே விற்பனையாகும். காலேஜில் படிக்கிற என்னோட பொண்ணு அறிவுச்செல்விக்கு விடுதிக் கட்டணம் அனுப்ப வேணுமே? அதுக்குப் ‘புத்தகம் விற்றால்தானே பணம் கிடைக்கும்? நம்ம அரசாங்கம் பெண் பிள்ளைங்க படிக்க எவ்வளவோ உதவி செய்யுது. கல்விக் கட்டணம் இல்லை. ஆனாலும் மத்த செலவுகளுக்குப் பணம் அனுப்பித்தானே ஆகணும்,” என்று பேச்சை முடித்தார் ரகுவரன்.
தேர்த் திருவிழா தொடங்கியது. ரகுவரன் வழக்கமான இடத்தில் புத்தகங்களைப் பரப்பி வைத்தான். கூடவே ‘லேமினேஷன்’ செய்யப்பட்ட படங்கள், சாவிக்கொத்துகள் போன்ற பொருள்களையும் வைத்தான். தெருவோரத்தில் பெரியதும், சிறியதுமாகப் பல கடைகள் இயங்கின. தேரைப் பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ரகுவரனுக்கு விற்பனையும் அதிகரித்தது. மிகவும் அரிதான பழைய புத்தகங்களைப் பலர் வாங்கிச் சென்றனர். சாமி படங்கள், தலைவர்கள் படங்
கள் அதிக அளவில் விற்பனையாயின.
எல்லாமே நன்றாகச் சென்று கொண்டிருந்த வேளை
யில் திடீரென பத்து பேர் அடங்கிய கும்பல் ரகுவரன் கடைமுன் வந்து நின்றது.
அவர்களை ஏறிட்டு நோக்கினார் ரகுவரன். அவர்கள் தலையில் காவித் துண்டைக் கட்டியிருந்தனர். கைகளில் பல வண்ணக் கயிறுகள் காணப்பட்டன. காவி உடையிலும் இருந்தனர்.
“என்ன வேணும்?”, என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் ரகுவரன்.
“என்ன வித்துகிட்டு இருக்க?” என்று கோபத்துடன் கேட்டான் ஒருவன்.
“புத்தகம், படங்கள் எல்லாமே வித்துக்கிட்டு இருக்கேன்” என்றார் ரகுவரன்.
“அதெல்லாம் சரி, இது என்ன படம்?”, என்று ஒரு படத்தைக் காட்டிக் கேட்டான் மற்றவன்.”
“அது தந்தை பெரியார் படம். ஏன் கேட்கிறே?” பதில் சொன்னார் ரகுவரன்.
“நெத்தியில் பட்டை போட்டிருக்கே. உன் பேரு என்ன? யார் நீ? நடக்கிறது தேர்த்திருவிழா. சாமி தேர் மேல் வலம் வர்றாரு. நீ இந்தப் படத்தைப் போட்டு வித்துக்கிட்டு இருக்கியே, என்ன நெனைச்சிக்கிட்டு இருக்க? ஒழுங்கு மரியாதையா ஈ.வெ.ரா. படங்களை எடுத்து மூட்டை கட்டு. இல்லாவிட்டால் நடக்கிறதே வேற” என்று மிரட்டினான் ஒருவன்.
அவர்களில் சிலர்
தமிழைத் திக்கித் திக்கிப்
பேசியதிலிருந்து அவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது.
உள்ளூரைச் சேர்ந்த சிலர் அவர்
களை அழைத்து வந்திருந்தனர்.
ரகுவரனுக்குக் கடும் கோபம் வந்தது.
“ஏன் பெரியார் படம் விற்கக்கூடாது
என்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“அவர் நம்ம மதத்துக்கு விரோதி. சாமியே இல்லை‘ன்னு சொன்னவரு. அதனால் அவர் படத்தை விற்கக் கூடாது. சொன்னா கேளு”, என்று மீண்டும் மிரட்டினான் ஒருவன்.
“டேய்… இது பெரியார் மண்! கடவுள் இல்லைன்னு சொன்னவர்தான் பெரியார். ஆனால், அதை மட்டும் சொல்லவில்லை அவர். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலேயும் பெரியாரால் பயனடைஞ்சவங்க இல்லாமல் இருக்க முடியாது. இந்தத் தேரைப் பார்க்க வந்தவங்க எல்லோருமே பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவங்கதான். தமிழ்நாடு இன்னைக்கு எல்லாத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக மாறியிருக்கக் காரணமே பெரியார்தான். அதோ, அங்க பாருங்க. பெரியார் சிலை இருக்கு. அதில் கடவுள் இல்லை என்கிற வாசகமும் இருக்கு. ஆனாலும் சிலைக்குப் பக்கத்திலேயே நிறைய மக்கள் நின்றபடியே தேரை வேடிக்கை பார்க்கிறாங்க. இதுதாண்டா தமிழ்நாடு. போய் வேலையைப் பாருங்கடா,” என்று அவர்களை எச்சரித்தார் ரகுவரன்.
அப்போது அங்கே மக்களும் கூட்டமாகக் கூடிவிட்டார்கள். அங்கு நடப்பதைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்தனர்.
“இவன் ஏதோ கதை சொல்றான். ஈ.வெ.ரா. படங்களை எடுத்து கிழிங்கடா”, என்று கத்தினான் ஏற்கனவே தகராறு செய்த ஒருவன்.
அப்போது வீறுகொண்டு எழுந்தார் ரகுவரன்.
“டேய்!எங்களுக்குத் தன்மானத்தையும் சுயமரியாதையையும் ஊட்டியவர் பெரியார். பெரியார் ஒரு சகாப்தம். தமிழ் மக்களின் அடையாளம். பெரியார் மீது கை வைத்துப் பார்! உங்களுக்குப் புத்திமதி சொல்லி அனுப்ப நினைச்சேன். ஆனா அது முடியாது போலிருக்கு. ‘பிசிக்கலாகவும்’ உங்களை எனக்கு ‘டீல்’ பண்ணத் தெரியும். ஆனால், அது தேவையில்லை என நினைக்கிறேன். இதுநாள் வரைக்கும் நானும் சாமி பக்தியோடத்தான் இருந்தேன். இனிமே அது வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். மரியாதையா ஓடிடுங்க. போலீஸ் மூலமா உங்களை சட்டத்தின்முன் நிறுத்துவேன்.”
அவரது கர்ஜனையைக் கேட்டு வெலவெலத்
துப் போனது அந்தக் காவிக்கூட்டம்.
அதேநேரம் அங்குக் குழுமிய மக்கள் நடப்பது என்னவென்பதை அறிந்து அவர்களை விரட்டியடித்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் பலரும் பெரியார் படங்களை மறவாமல் ரகுவரனிடம் வாங்கியும் சென்றனர். l





