Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தலையில் தேங்காய் உடைக்கும் வேண்டுதல்- சிகரம்

திருச்சி மாவட்டம் குளித்தலை வட்டம். மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில் ஓர் அதிர்ச்சியூட்டும் அடிமுட்டாள்தனமான வேண்டுதல் நிறைவேற்றப்படுகிறது.

திருவிழாவின் இரண்டாம் நாள் ஆண்களும் பெண்களும் வயதானவர். வாலிபர்கள் என்ற வித்தியாசமின்றி அதிகாலையிலேயே காவிரியில் குளித்துவிட்டு வந்து கோயிலுக்கு முன்னால் அமர்ந்து கொள்கிறார்கள்.

அம்மன் முன்பாகத் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதே இந்த வேண்டுதல். பூசாரியின் கையால் தேங்காய் உடைக்கப்பட வேண்டும் என்பது அய்தீகம்.

“பூசாரிகளே! சீக்கிரம் குளிச்சிட்டு வாருங்கள், இங்கு தாசில்தார் மற்றும் பெரிய போலீஸ் ஆபீசருங்க எல்லாம் உங்களுக்காகக் காத்திருக்
காங்க” என்று அறிவிப்பு விடுகிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

வாட்டசாட்டமான நான்கு இளைஞர்கள் புடைசூழ சாமியாடியபடியே வருகிறார் பெரியசாமி என்னும் பூசாரி.

பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருக்கும் ஒரு பகுதியிலிருந்து தலையில் தேங்காய் உடைக்க ஆரம்பிக்கிறார் பூசாரி. முன்னால் செல்லும் இரு இளைஞர்கள் தேங்காய் உடைக்கப்படப்போகும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

அந்தப் பக்தர்கள் கண்களை மூடிப் பல்லைக் கடித்தபடி இருக்கும் நிலையில், பூசாரி சாமியாடியபடியே கையிலிருக்கும் தேங்காயை எடுத்து ‘மடேர்’
என்று தலையில் அடிக்கிறார். சிதறிப்போய் விழும் தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்கிய படியே எழுந்து கோயிலைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அந்தப் பக்தர் போக, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்கிறார் இன்னொருவர்.

இப்படியே சளைக்காமல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் தேங்காயை உடைக்கிறார் பூசாரி, தேங்காய் உடையாமல் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தால் இரண்டாவது முறையாக தேங்காய் உடைக்கப்படுகிறது.

ரத்தம் வருவது கண்டு பதறியபோது. “அது ஒண்ணுமில்லை; தெய்வக் குத்தம்தான் காரணம்; இல்லைன்னா அவுங்க சுத்தமா வந்திருக்க மாட்
டாங்க” என்று ஒருவர் விளக்கம் கொடுத்தார்.

வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இளைஞர் மூவர் இருந்தனர். அவர்களை விசாரித்தபோது.

”நாங்க மூணு பேரும் பெங்களூர்ல ஒரு ‘ஸாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட்’ கம்பெனி வச்சிருக்கோம். போன மாசம் அமெரிக்காவில் ஒரு கம்பெனிக்கு ‘கொட்டேஷன்’ கொடுத்திருக்கோம், அந்த ‘ஆர்டர்’ எங்களுக்கே கிடைக்கணும்னு அம்மன்கிட்ட வேண்டிக்கிட்டுத்தான் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ள இங்கே வந்திருக்கோம்” என்றனர்.

இப்படித் தலையில் தேங்காய் உடைப்பதால் பின்னால் ஏதும் பாதிப்பு வருமோ என்கிற சந்தேகத்துடன் திருச்சியில் பிரபல மருத்துவர் வ.ஜெயபாலைச் சந்தித்துக் கேட்டபோது, “இப்படி தேங்காய் உடைக்கிறது மட்டுமில்லை;தீ மிதிக்கிறது. அலகு குத்தறது. அங்கம் புரள்வது எல்லாமே ‘வில்பவர்’தான். கடவுள்மேல் அவர்களுக்குள்ள நம்பிக்கையால் அந்த ‘வில்பவர்’அவங்களுக்குக் கிடைக்கிறது. கராத்தே வீரர்கள் செங்கல் உடைப்பதும், சர்க்கஸ்காரர்கள் ‘டியூப் லைட்’ மீது புரள்வதும் கூட இதன் அடிப்படை
யில்தான் எனவே. அது வேண்டுதலாகட்டும் அல்லது நாம் செய்யும் எந்தவொரு காரியமாகட்டும் முழு ஈடுபாடும் மன உறுதியும் நிச்சயம் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்குத் தலையில் ரத்தம் வருவது கூடத் தோல் காயந்தான், மண்டைஓட்டில் எந்தப் பாதிப்பும் இருக்காது” என்றார் அவர்.

(‘தமிழன் எஸ்ஸ்பிரஸ்’ வார இதழில் 4-10. செப்டம்பர் 1996. 21ஆம் பக்கத்தில் வெளியான செய்திக் கட்டுரையின் பகுதியே மேலே உள்ளது)

‘இது ஒரு விநோத வேண்டுதல்’ என்று ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ தலைப்பிட்டிருக்கிறது. இது விநோத வேண்டுதல் இல்லை: விபரீத-வேதனை வேண்டுதல். நாம் இன்னும் காட்டு
மிராண்டிகளாகவேதான் வாழ்கிறோம் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கும் வேண்டுதல்.

இரண்டுபேர் தலையை அமுக்கிப் பிடிக்கிறார்களாம். ஓங்கித் தலையில் அடித்துத் தேங்காயை ஒருவன் உடைக்கிறானாம். நினைக்கவே அதிர்ச்சி
யாக, வேதனையாக. அருவெறுப்பாக ஏன் வெட்கமாகக்கூட இருக்கிறது. இந்த அறிவியல் காலத்தில் இப்படியும் அறிவற்ற செயலா? வினா எழுகிறது.

ஆனால். ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு இது விநோதமாக இருக்கிறது! வேதனைப்படவில்லை. அதிர்ச்சி அடையவில்லை.

காட்டுமிராண்டிச் செயல் என்று கண்டனம் தெரிவிப்பார்கள் என்று கட்டுரையைப் படித்தால். ஒரு டாக்டரின் பேட்டியைப் போட்டு. அது அறிவுக்கு உகந்த செயல் என்பதாக முடிக்கின்றனர்.

‘வில்பவர்’ பற்றி டாக்டர் கூறி இந்த நிகழ்ச்சியை நியாயப்படுத்துகிறார்.

‘வில்பவர்’ என்றால் என்ன? விளக்கம் தருவரா டாக்டர். கராத்தே வீரன் செய்வதை இதில் வந்து ஒப்பிடுகிறார்.

கராத்தே வீரன் பயிற்சியில் தன் சக்தியை, மனதை ஒருமுனைப் படுத்தி அக்காரியங்களைச் செய்கிறான். அவ்வாறு ஒருமுனைப் படுத்தும் ஆற்றலைப் பல ஆண்டு பயிற்சிக்குப் பிறகு பெறுகிறான்.

இதில் கடவுள் சக்திக்கோ, மாய மந்திரங்களுக்கோ வேலையில்லை.

ஆனால், தலையில் தேங்காய் உடைத்துக் கொள்கிறவன் எந்தப் பயிற்சி மேற்கொண்டான்?

அவன் தலையை இரண்டுபேர் அமுக்கிப் பிடித்துத்தான் தேங்காய் உடைக்கிறார்கள் என்பதிலிருந்தே அவன் தன்னை ஒரு நிலைப்
படுத்த முடியாதவன் என்பது அர்த்தமாகிறது. அப்படிப்பட்ட பக்தன் தலையில் தேங்காய் அடித்தால் பாதிப்பு வராமல் எப்படியிருக்கும்?

‘இரத்தம் ஒழுகினால் கூட மண்டை ஓட்டில் எந்தப் பாதிப்பும் வராது’ என்று உத்திரவாதம் கொடுக்கிறார். இவர் என்ன டாக்டரா அல்லது கோயில் புரோக்கரா?

தேங்காய் உடையாமல் இரத்தம் வந்தாலும் கூட, அதே தலையில் மறுபடியும் அடித்து உடைக்கிறானாம்! எவ்வளவு கொடுமை!

மண்டை உடைந்தால் அது தெய்வக் குத்தமாம்:சுத்தமாக வந்திருக்க மாட்டார்களாம். ‘ஓர் அறிவியல் மேதை’ விளக்கம் அளித்தானாம் இப்படி! அதையும் பத்திரிகையில் வெளியிடுகிறார்கள்.

கருணை வடிவான கடவுள் என்கிறார்கள். அது இப்படிப்பட்ட செயலை ஏற்குமா? நன்மை வேண்டி இப்படிப்பட்ட கொடிய வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தனுக்கு அக்கடவுள் தண்டனை கொடுக்குமா? அப்படியென்ன பிரேமானந்தா செய்யாத தவறை அவன் செய்துவிட்டான்?

மண்டை உடைந்தவர்கள் குற்றம் செய்தவர்கள்; உடையாதவர்கள் நல்லது செய்தவர்களா?

இப்படி ஒரு கொடூரப் பிரார்த்தனை தேவையா?’என்று கண்டிப்பதற்குப் பதிலாக. அதில் ஒரு மகத்துவம் இருப்பதாகக் காட்ட முயலும் ‘தமிழன்எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையும், தன் அரைவேக்காட்டுத்தனத்தால் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைக் கூறிய திருச்சி டாக்டர் வி.ஜெயபாலும் கண்டனத்துக்கு உரியவர்கள்.

நரம்பியல் நிபுணர்களைக் கொண்ட ஒரு கூட்டத்திற்குத் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ ஏற்பாடு செய்யட்டும். அப்போது அவர்கள் முடிவு சொல்லட்டும் இது காட்டுமிராண்டிச் செயலா, கடவுள் சக்தியாலா? அல்லது வில்பவராலா? என்று. ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ தயாரா?

டாக்டர் ஜெயபால் வல்லுநர் கூட்டத்தில் தன் கருத்தை நிலைநாட்டத் தயாரா?

அலகு குத்துவது, அக்கினி மிதிப்பது எல்லாம் ‘will power’ என்கிறார். அந்தச் சக்தியால்நீறு நீக்காத, மேடுபள்ளமான நெருப்புப் பரப்பில். நிலையாக நெருப்பில் நிற்க யாராலாவது முடியுமா?

ஒரு கரண்டி நெருப்பை உள்ளங்கையில் ஏந்த முடியுமா?

டாக்டர் என்பவர் தன் தொழிலைப் பார்க்க வேண்டும். தனக்குத் தொடர்பில்லாத தனக்கு முழுமையாகத் தெரியாத விஷயங்களில் கருத்துக் கூற வருவது விளம்பர ஆசையின் விளைவு என்பது மட்டுமல்ல; விரும்பத்தகாததும் ஆகும்.

இதை வெளியிடுகின்ற பத்திரிகையும் நரம்பியல் நிபுணர்களிடம் கருத்தறிந்து போட வேண்டும்.

இதைவிடக் கொடுமையான இன்னொரு வேண்டுதல் திருப்பதியில் நடந்தது. 14.9.1996 அன்று ‘தினத்தந்தி’யில் வந்த செய்தியைக் கீழே தருகிறேன்.

”திருப்பதியின் அடிவாரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு 30 வயது வாலிபர் ஒருவர் முழங்காலாலேயே படி வழியே கடந்து சென்று சாமியைத் தரிசனம் செய்தார்”

படிகளில் அவர் முழங்காலால் சென்றபோது. அவர் முழுக்கால் சட்டை தேய்ந்து கிழிந்ததால், காலிலிருந்து இரத்தம் கொட்டியது இருந்தாலும் அவர் சோர்ந்து விடாது மற்றொரு பக்தர் கொடுத்த துணியை முழங்காலில் கட்டிக்கொண்டு. தொடர்ந்து முழங்காலாலேயே சென்று கோயிலை அடைந்தார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி அருகேயுள்ள திருவகனஜம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனது தந்தையின் முழங்கால் வியாதி குணமடைய இப்படி வேண்டுதலாம்”

இப்படிப்பட்ட வேண்டுதல்கள் அர்த்தமுள்ளவையா? அறிவுக்கு உகந்தவையா? கடவுள் இதையெல்லாம் விரும்புகிறதா? சிந்திக்க வேண்டும்.

இப்படிப்பட்ட கொடுமையான வேண்டுதல்களைச் செய்யும் பக்தர்களைப் பார்த்து எனதுமலேசிய நண்பர். ஒரு சிறப்பான. சிந்தனைக்குரிய வேண்டுகோளையும் தனது நூலில் வைத்துள்ளார். இதைப் பக்தர்கள் அனைவரும் கருத்தில் கொள்வது அவசியம்

“வேண்டுதல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை; கட்டாயமும் இல்லை. ஆனால் அது ஓர் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

தெய்வமே! எனது வேண்டுதலை நிறைவேற்றிவைத்தால் ஆடு வெட்டுகிறேன், மொட்டை அடிக்கிறேன், தீ மிதிக்கிறேன், அலகுக் குத்திக் கொள்கிறேன்” என்று வேண்டிக் கொள்வதற்குப் பதிலாக,

“தெய்வமே! எனது வேண்டுகோளை நிறைவேற்றி வைத்தால்,

இராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு 5 மூட்டை அரிசி தருகிறேன்,

ஓர் ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்கிறேன்,

முதியோர் இல்லத்திற்கு 30 கம்பளிகள் வாங்கித் தருகிறேன்,

புற்றுநோய்த் தடுப்புக் கழகத்திற்கு ஆயிரம் வெள்ளி நன்கொடை அளிக்கிறேன்” என்று,

ஏன் இப்படியெல்லாம் வேண்டிக்கொள்ளக் கூடாது. இதனால் மனித குலத்திற்காவது நன்மை பயக்குமல்லவா” என்று கேட்கிறார் மலேசிய நண்பர்.

ஏழைப் பக்தர்கள்,

”ஊர்ச் சாக்கடையைச் சுத்தம் செய்கிறேன்; சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்புகிறேன்; சாலை ஓரமாக 10 மரக்கன்று நட்டு வளர்க்கிறேன்
என்று வேண்டிக் கொள்ளலாம் அல்லவா?

பக்தர்கள் நம்பிக்கைப்படி கடவுள் என்று ஒன்று இருந்தால் இதைத்தானே விரும்பும்?

எனவே, எதையும் ஆழ்ந்து சிந்திப்போம். அவலங்களை அகற்றுவோம்; மூடத்தனத்தை அகற்றி முழுமை யாய் வாழ்வோம்; அறிவு வழிச் சென்று அர்த்தமுடன் வாழ்வோம்!                     l