Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மநுவின் சட்டத்தைப் புதைத்த திராவிட மாடல் புரட்சி – த.மு. யாழ் திலீபன்

சென்ற இதழ் தொடர்ச்சி..

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் ஒன்றிய அரசு மாநிலத் கல்விக்குத் தரக்கூடிய ரூ.2152 கோடி நிதியைத் தர முடியும் என்று மிரட்டிய போதும், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி என்றால் அந்த நிதியே தேவையில்லை என்று அறிவித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கல்வி உரிமைச் சட்டத்தில் 25% ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 60% தொகையை ஒன்றிய அரசும், 40% தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். 2021ஆம் கல்வியாண்டு முதல் 2023ஆம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் ஒன்றிய அரசு ஒதுக்காமல் உள்ளது. 100% தொகையையும் மாநில அரசுதான் வழங்கித் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கல்வி அளித்து வருகிறது.

மநுஸ்மிருதி (அத்தியாயம் 8, ஸ்லோகம் 270-272): “சூத்திரன் ஒருவன் வேதங்களைப் படித்தால் அல்லது மற்றவர்களுக்குக் கற்பித்தால், அவனுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப் பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் தெரிவிக்கிறார்.இது சூத்திரர்களுக்குக் கல்வி கற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது. மநுதர்மத்தின் சட்டத்தை நிறைவேற்றும் விதமாக 1953இல் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் ஆரம்ப வகுப்பிலேயே மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலைக்குத்தான் உருவாக்கப்பட்டது. மோடியின் தேசியக் கல்வி கொள்கை NEP 2020 தகுதி, திறமை, வளர்ச்சி என்று சமூக நீதியை ஒழித்து, இடைநிற்றலை அதிகரிக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை சரியில்லைஎன்று ஆளுநரை வைத்துக் கூப்பாடு போட்டாலும், NEPயை ஏற்றுக்கொண்டால் கல்வி நிதியைத் தருகிறோம் என்று மிரட்டினாலும், தமிழ்நாடு போராடும் – வெல்லும் எனச் சூளுரைத்து இடைநிற்றலை ஒழித்தது.

திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறார் முதலமைச்சர். மேலும் பள்ளி செல்லாத மாணவர்களைக் கண்டறிந்து கல்வி கொடுக்கும் பணியை மேற்கொள்ள ஊக்குவிக்கிறார். பார்ப்பனரல்லாத மக்கள் படிக்கவே கூடாது எனும் மநுதர்ம நிலையைத் திராவிட இயக்கம் மாற்றியதன் விளைவாய், இன்று யாருமே படிக்காமல் இருக்கக் கூடாது எனும் நிலையைத் திராவிட மாடல் உருவாக்கியுள்ளது.

இடைநிற்றலை ஒழித்தது மட்டுமல்ல; திராவிட மாடலின் சாதனை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைப் பன்மடங்கு உயர்த்திக் காட்டியுள்ளது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 2025 – 26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட, இருமடங்குக்கு மேல் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு புதியதாக 6,000 மாணவர்கள் சேர்ந்த நிலையில் இதுவரை 15,618 மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த வகை மாற்றம் நீதிக் கட்சியின் தொடர்ச்சியான திராவிட மாடல் அரசுக்கே உண்டு. இந்தியத் துணைக்கண்டத்தில் எங்குமில்லாத அளவுக்குக் கல்விப் புரட்சியைச் சாதித்துக் காட்டியிருக்கிறது தமிழ்நாடு.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களை ஒன்றிய அரசுத் தேர்வுப் பணிகளுக்கு (UPSC) தயார்படுத்தும் பணியில் கடந்த 2024ஆம் ஆண்டில் 276 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 2025இல் 700 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 315 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தைச் சார்ந்த மாற்றுத் திறனாளி மாணவி யோகேஸ்வரி ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மும்பை அய்.அய்.டியில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கத் தேர்வாகியிருப்பது கவனத்திற்குரியது.

திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத், CLAT தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மகிழ்வு குறித்து முதலமைச்சர் “உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என்றும் அதன் வழிகாட்டுதலை சட்டத்துறை அமைச்சர் செய்வார்” என்றும் உறுதியளித்தார். ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வில் 58 பேர் தேர்ச்சி. குடிமைப் பணிகளுக்கான தேர்வில் கடந்த 3 ஆண்டுகளில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜாஜி அரசின் குலக்கல்வித் திட்டம் “அவரவர் அப்பன் தொழிலைப் பிள்ளை செய்ய வேண்டும்” என்று திணித்தபோது தந்தை பெரியார் விரட்டியத்தார். ஒன்றிய அரசின் “விஸ்வகர்மா யோஜனா” எனும் பழைய குலக்கல்வித் திட்டத்தை மோடி தூசி தட்டிக் கொண்டு வந்தபோது தமிழ்நாடு விஸ்வகர்மா யோஜனாவை ஏற்காது என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சமூக நீதியைப் பறிக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று அறிவித்தார். தமிழர்களின் கல்வியைப் பறிக்க மநுதர்மவாதிகள் என்ன வேடமிட்டாலும் அதைத் தகர்க்கும் ஆயுதமாய் திராவிட மாடல் அரசு நிற்கிறது. அப்பன் தொழிலைப் பிள்ளையையும் செய்யச் சொல்வது ஆரிய மாடல். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்லூரி படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ‘செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சியை’ திராவிட மாடல் அரசு வழங்குகிறது. இந்நாட்டில் மட்டும் தான் அறிவியலை ஒதுக்கி வேதம், இதிகாசம், புராணம் என்று கட்டுக்கதைகளின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருக்கும், பிரதமர் முதல் ஆளுநர் வரை எல்லோரும் பழமைவாதிகளாக உள்ளனர். ஆனால், இனி வரும் சமூகம் புரட்டுகளை நம்பி அறிவை இழக்கக் கூடாதென்று அறிவியலைப் படிக்கச் சொல்கிறது திராவிட மாடல். அறிவியல்தான் அறியாமையிலிருந்து மக்களை விடுவிக்கும் ஆயுதம். அறியாமையிலிருந்து விடுபடுதல் பகுத்தறிவை நோக்கிப் பாதை அமைக்கும்; பகுத்தறிவு புதிய சமூக அரசியல் புரட்சிக்கு வித்திடும் விடுதலைக்கான திறவுகோல். இந்த அறிவியல் திறவுகோல் எக்காலத்திற்கும் மநுவால்
செரித்துக்கொள்ள முடியாத உண்மைத் தத்துவம். அறிவியல் துணை கொண்டு, வரும் தலைமுறை, மநுவின் முதுகெலும்பை உடைக்கும் என்பதற்கு திராவிட மாடல் கல்வியே நல்ல எடுத்துக்காட்டாக இருக்கப்போகிறது.

“முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘NO 1’ இடத்தைப் பிடித்துள்ளது. அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!” என்று முதலமைச்சர் ஸ்டாலின்வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். முற்றிலும் எழுதப் படிக்கக் கூடாது என்று  சூத்திரர்களுக்குக் கல்வி இல்லையென்றது. பார்ப்பனரைப் படிக்கஅனுமதித்தும், பார்பனரல்லாத மக்களைத் திட்டமிட்டுஎழுத்தறிவின்மை மக்களாக மாற்றி வைத்திருந்தது அன்று.  ஆனால், இன்று திராவிட மாடல் ஆட்சியில் மநுவின் சூழச்சியை உடைத்து, எழுதப் படிக்கத் தெரியாத வயதான மக்களுக்கும் கல்வியைக் கொண்டு சேர்த்திருக்கிறது திராவிட மடல் அரசு.இளம் தலைமுறையினரின் கல்வியைக்கெடுக்க நினைக்கும் மநுதர்ம ஆட்சியாளர்களுக்கு மத்தியில், இளம் தலைமுறைக்கு மட்டுமல்ல, அதற்கு முந்தைய தலைமுறைக்கும் கல்வியைக் கற்றுக்கொடுத்து வட்டியும் முதலுமாய் மநுவின் சூழ்ச்சியை முறியடிக்கிறார் சமூக நீதிக்கான சரித்திர நாயகர்!

சேலம் மாவட்டம், கல்ராயன்மலையைச் சேர்ந்த கருமந்துறை, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அண்மையில் நடைபெற்ற ஜே.இ.இ. தேர்வில் அகில இந்திய அளவில் 417ஆம் இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை அய்.அய்.டி-யில் உயர்கல்வி பயிலத் தகுதி பெற்றுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் மாணவி ராஜேஸ்வரி சென்னை அய்.அய்.டி.யில் உயர்கல்வி பயிலத் தகுதிப் பெற்றுள்ளதை அறிந்தவுடன், அவரது உயர்கல்விச் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவித்தோடு ரூ.5.73 இலட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையையும், மடிக்கணினியையும் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். இதுதான் கல்வி வளர்ச்சிக்கான பணியில் ஓர் அரசு செயல்படுவதற்கான ஆர்வமாகப் பார்க்க முடியும். ஆனால், மநுவின்படி போதிப்பதும், மநுவைக் கல்வியில் திணிப்பதும், கல்வியை மீண்டும் ஒரு சாராருக்குக் கொண்டு செல்லும்ஒன்றிய அரசின் முயற்சி என்பது கல்வி வளர்ச்சிக்கான முயற்சியாய் இருக்காது. கல்வியைக் கொடுத்து அதன் பொருளாதாரத்தை ஈட்டும் நிலைக்கு வர வைப்பதே திராவிட அரசியல் நோக்கம். ஆனால், ஆரிய ஹிந்து மதம் கல்வியிலும் சரி, பொருளாதாரத்திலும் சரி, பார்ப்பனரல்லாத மக்கள்முன்னேறத் தடையாக மட்டுமே மநுதர்மச் சட்டம்இருந்து வந்துள்ளது. அனைவரும் சமம் என்னும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, இத்தகைய மநுதர்ம  சட்டத்தைக் கொண்டுவரத்தான் ஆர்.எஸ்.எஸ்.- பிஜேபி துடித்துக்கொண்டிருக்கிறது.

இது மநுவின் அடிப்படையான பிரித்தாளுதல் மற்றும் பொருளாதார முடக்கத்தைத் தகர்த்து கல்வி மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை இம்மக்களுக்குக் கொடுக்கும் சமதர்ம அரசாகத் திராவிட மாடல்  ஆட்சி திகழ்கிறது. குஜராத் மாடல் மட்டுமல்ல; இந்தியாவே திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கையை வரும் காலங்களில் பின்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அறியாமையைப் பரப்பிய மநுவின் கண்ணில்
கல்வியைக் கொண்டே அறுவைச் சிகிச்சை செய்துள்ளது தந்தை பெரியாரின் தமிழ்நாடு.

தமிழ்நாடு போராடும்தமிழ்நாடே வெல்லும்! l