Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பகுத்தறிவுக் கல்வி- தந்தை பெரியார்

பகுத்தறிவு என்கின்ற சொல்லும் கருத்தும் ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. மற்ற அறிவு என்பது எல்லா ஜீவன்களுக்கும் உண்டு. விஷயங்களைச் சிந்தித்து ஆராய்ந்து உணர்வது என்பதுதான் பகுத்தறிவாகும். பகுத்தறிவினால் எவ்வளவு காரியங்கள் ஆகும் என்பது இன்னமும் முடிவாகவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. எங்கு போய் நிற்குமென்று சொல்வதற்குமில்லை.

மனித ஜீவன் தோன்றி எவ்வளவு நாட்கள் ஆயிற்று என்று சரியாகச் சொல்வதற்கில்லை. பலர் பலவாறு சொல்கிறார்கள். என்றாலும் பேரறிஞர்கள் ஆராய்ச்சிக் கருத்துப்படி பார்த்தால் பல இலட்சக் கணக்கான ஆண்டுகள்
ஆகிறது என்பது புலனாகிறது. என்றாலும் பகுத்தறிவின் பலன் இப்போதுதான் பயனாகின்றது.
சமீபகாலம் வரை மக்கள் அதன் பலனைப் பெறவில்லை. நன்மையும் அடையவில்லை. அதன் பயனையும் அடையவில்லை.

பகுத்தறிவிற்கு எவ்வளவோ சக்தியுண்டு. அதைக் கொண்டு எவ்வளவோ வளர்ச்சியடைந்
திருக்க முடியும். பல அதிசய அற்புதங்களைக் கண்டிருக்க முடியும். என்றாலும் மனிதன் ஏன் அந்த நிலையை அடையவில்லை என்றால், மனிதன் பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு கடவுள், மதம், சாஸ்திரம் – கடவுள் தன்மைகளைப் புகுத்தி பகுத்தறிவைப் பயன்படுத்துவது இவற்றிற்கு விரோதம் என்றாக்கி விட்டதால், மனிதன் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் மிருகங்களைப் போல் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.

இதை ஏன் புகுத்தினார்கள் என்றால் மடமையாலேயேயாகும். மனிதன் சக்தியால்
ஒன்றுமில்லை; எல்லாம் கடவுள் செயல்;
மனிதனுக்கும், அறிவுக்கும் சம்பந்தமில்லை
யென்று மதத்தைப் பலப்படுத்தி விட்டார்கள்.

எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும் கடவுள் – மத – சாஸ்திரத்தில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும், அவன் அறிவு மழுங்கிவிடும். எவ்வளவு அறிவு அற்றவனாக இருந்தாலும் அவன் கடவுள் , மத, சாஸ்திர நம்பிக்கையில்லாதவனாக இருந்தால் பெரிய அறிஞனைவிட சிறந்தவனாக இருக்க முடியும்.

பகுத்தறிவுவாதியென்றால், அவன் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் ஏற்பாட்டிற்கு விரோதி – நாத்திகன் என்று மக்களால் கருதப்படுவதால், பகுத்தறிவுவாதிகள் மறைந்து இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் தங்கள் வரையில் பகுத்தறிவுவாதிகளாக இருப்பவர்கள் இருக்கிறார்களே ஒழிய, அவர்கள் சமுதாயத்திற்குப் பயன்படுபவர்களாக இல்லை.

இப்போது கடவுள் – மத – சாஸ்திரத்தில் மக்களுக்கு ஓரிரு (நூற்றாண்டுகளாக) நம்பிக்கை குறைந்ததன் காரணமாக கடவுள் வேறு; அறிவு வேறு. மனிதன் தன் அறிவைக் கொண்டு சிந்திக்கலாம் என்றானதும் எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளோமே! 150 வருடங்களுக்கு முன் நெருப்புக் குச்சி கிடையாது. சிக்கிமுக்கிக் கல்லைக் கொண்டு தான் நெருப்பு உண்டாக்க வேண்டும். மனிதர்கள் மிருகத்தோடு ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.

இந்த 150 வருடத்திற்குள்தான் மனிதன் பல வகைகளில் முன்னேறி இருக்கின்றான். இரயில், மின்சாரம், மற்ற விஞ்ஞான அதிசய
அற்புதங்களை அனுபவிக்கின்றான். மனிதன் தோன்றி எவ்வளவோ காலமாகியும் அப்போதி
ருந்தே அறிவுடையவனாக இருந்தும், அப்போதெல்லாம் தோன்றாத விஞ்ஞான அதிசயங்கள் இப்போது தோன்றுவதற்குக் காரணமென்ன? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

300 ஆண்டுகளுக்கு முன் எல்லாம் கடவுள்
செயல் என்று மனிதர்கள் நம்பிக் கொண்டிருந்
தனர். அப்போது மனிதனின் சராசரி வயது 20தான். இப்போது மனிதனின் சராசரி வயது 50ஆக இருக்கிறது. காரணம், மனிதனுக்குக் கடவுளிடமிருந்த நம்பிக்கையானது குறைந்து, தனது அறிவின்மேல் நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்ததே ஆகும்.

கி.பி. ஒன்றாம் ஆண்டில் 20 கோடிதான் உலக ஜனத் தொகையாகும். கி.பி. 1,400ஆம் ஆண்டில் அது 40 கோடியாக உயர்ந்தது. 1,400 வருடங்களில் 20 கோடிதான் உயர்ந்தது. இந்தப் பெருக்கத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், அப்போது மனிதனின் சராசரி வயது 5ஆகக் கூட இருந்திருக்காது என்று தோன்றுகிறது. கி.பி. 1,650இல் உலக மக்கள் தொகை 47 கோடியாயிற்று.  கி.பி. 1,800இல்  75 கோடியாக அது உயர்ந்தது. 1914இல் 170 கோடியாக உயர்ந்தது. 14 வருடங்களில் 95 கோடி உயர்ந்தது. அடுத்து 1954-இல் உலக மக்கள் தொகை 320 கோடியாயிற்று. 40 வருடங்களில் 150 கோடி மக்கள் அதிகமாகி விட்டார்கள். அதன் காரணமாகத்தான் இன்று உலகிலுள்ள நாடுகள் கர்ப்பத் தடை செய்து கொள்ளும்படி மக்களைக் கட்டாயப்படுத்துகின்றன.

மனிதனுக்கிருந்த  கடவுள் – மத எண்ணங்கள் போய் அவை ஒரு சிலரின் வயிற்றுப் பிழைப்பிற்கே பயன்படுகிறது என்பதை மக்கள் உணர ஆரம்பித்ததன் பயனாக மக்கள் தொகை வளர ஆரம்பித்து விட்டது. பகுத்தறிவைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட புதிய சாதனங்களும், மருத்துவ வசதிகளும், சிகிச்சை முறைகளும் மனிதனின் ஆயுளை வளர்ப்பதோடு, நோயினால் இறந்து கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. சில வியாதிகள் தவிர, எல்லா வியாதிகளுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மனிதன் அறிவாளியாகக் கூடாது; சாதாரண
வாழ்விற்கு மேல் அனுபவிக்கக் கூடாது; மனிதன் வளர்ச்சியடையக் கூடாது என்கின்ற கெட்ட எண்ணத்தின் மீது ஏற்பாடு  செய்யப்பட்டதே கடவுள், மதம், சாஸ்திரம் யாவுமாகும்.

கடவுள் – மத – சாஸ்திர தர்மத்திற்கு எதிராகச் சிந்திப்பது பாவம் என்று மனிதன் கருதிக் கொண்டிருந்ததால் தொல்லைக்கும், இழிவிற்கும் ஆளானான்.

மனிதன் பகுத்தறிவின் பயன் தொல்லை
களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதற்கே ஒழிய, தொல்லைக்கு ஆட்படுவதற்காகவல்ல.

கடவுள், மத நம்பிக்கையுள்ள மற்ற நாட்டு மக்கள் இருப்பதற்கும், நம் நாட்டு மக்கள் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. அவர்களின் கடவுள், மத நம்பிக்கை அறிவு வளர்ச்சியைத் தடுப்பது கிடையாது. மனித அறிவு வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி. சமுதாய வளர்ச்சியைத் தடுப்பதற்கென்றே நமது நாட்டு மதம், கடவுள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

அதன் காரணமாக 1920 வரை ஞானபூமி
யான நமது நாட்டில் சரஸ்வதி கல்விக் கடவுள் உள்ள நமது நாட்டில் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தார்கள். புலவரைக் கேட்டால், தமிழ் கல் தோன்றா காலத்தில் தோன்றியது என்று பெருமை பேசுகின்றனர். அத்தனை காலமாக தமிழ் இருந்தும் படித்தவன் 100க்கு 5 பேர்தான். 1950இல் எடுக்கப்பட்ட கணக்குப்படி நமது மக்கள் 100க்கு 9 பேர்தான் படித்திருந்தார்கள். 1960இல் அது 25ஆக ஆகிவிட்டது. இப்போது 7 வருடத்தில் 50 ஆகி விட்டதே! இதேபோக்கில் போனால், 1980-இல் 70 பேருக்கு மேல் படித்தவர்களாகி விடுவார்கள்.

இன்றைக்கிருக்கிற சரஸ்வதிதான் அன்றைக்
கும் இருந்தாள். இந்த மத, சாஸ்திரங்கள் தான் அன்றைக்குமிருந்தன. என்றாலும் இப்போது வளர்ந்ததற்குக் காரணம், “கடவுள் ஒழிக; மதம் ஒழிக; மேல் ஜாதிக்காரன் ஒழிக; சாஸ்திர சம்பிரதாயங்கள் ஒழிக” என்று ஆரம்பித்த பின் மக்கள் அதன் உண்மையை உணர்ந்து தங்களின் முட்டாள்தனமான கருத்துகளைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்ள முற்பட்டதாலேயே ஆகும்.

நமது நாட்டில் பகுத்தறிவு வளர வேண்டு
மானால் வழி என்ன? பகுத்தறிவு என்ற சொல்லுக்குப் பொருள் கற்பித்தவர்கள் நாத்திகம் என்றே கற்பித்தனர். பகுத்தறிவுவாதி என்றால் அவன் நாத்திகன்; கடவுள் – மதத்திற்கு விரோதி என்று மக்கள் வெறுப்பிற்கு, கொடுமைக்கு ஆளாகும்படி செய்து விட்டார்கள். மேல் நாடுகளில் பகுத்தறிவுவாதிகளுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறார்கள். அதனால் அங்கு அறிவு வளர்ச்சியடைகின்றது.

ஆராய்ச்சிக்கும் – விவாதத்திற்கும் – பிரத்தி
யட்சத்திற்கும், அனுபவத்திற்கும் மாறானதை நம்பாமல் தன் அறிவிற்கும், அனுபவத்திற்கும், ஆராய்ச்சிக்கும் பிரத்தியட்சத்திற்கும் சரியென்று தோன்றுவதை ஏற்றுக் கொள்வதே பகுத்தறிவாகும். முன்னோர்கள் சொன்னது, நீண்ட நாட்களாக இருந்து வருவது, புராண இலக்கியங்களில் சொல்லப்பட்டது, பெரும்பாலான மக்களால் நம்பப்படுவது என்பதெல்லாம் மூட நம்பிக்கையாகும்.

நம் நாட்டு மக்களிடையே பகுத்தறிவு பரவாத
தற்கும், பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் தோன்றாததற்கும் காரணம் நம் நாட்டில் பகுத்தறிவுவாதி மக்களால் வெறுக்கப்படுவதோடு, அரசாங்கத்தாலும் வெறுக்கப்படுகின்றான். இங்கு பள்ளிக் கூடங்களில் கடவுள், மத, மூடநம்பிக்கைகளே புகுத்தப்படுகின்றன. பகுத்தறிவுக் கருத்துகளுக்கு இடம் கொடுப்
பதில்லை. பள்ளிக்கு வரும்போதே மாணவ – மாணவிகள் மதக் குறி இட்டுக் கொண்டு வரவேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறார்கள். மூடநம்பிக்கைக் கதைகளை, புராணங்களைப் புகுத்தி பேராசையை ஏற்படுத்தி விட்டதால் பகுத்தறிவிற்கே இடம் இல்லாமல் போய்விட்டது.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது என்றாலும், இதை ஒழிப்பதற்குப் பாடுபடக் கூடியவர்கள் அதிகமிருக் கிறார்களே தவிர, இது வளர வேண்டுமென்று நினைப்பவர்கள் மிகக் குறைவேயாகும்.

அநேக பிள்ளைகள் கடவுள் பக்தியாலேயே
சரியாகப் படிக்காமல் தேர்வில் தோல்வியடை
கின்றனர். உலகில் மக்கள் தங்கள் அறிவின் பலனால் எவ்வளவோ விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் கண்டு பிடித்திருக்கின்றனர். நாமே அவைகளில் பலவற்றைத் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதில் எதையாவது ஒன்றை நம் நாட்டு மக்கள் கண்டுபிடித்தார்களா என்றால், இல்லை. நம் மக்கள் கண்டுபிடித்ததெல்லாம் அந்தக் குளத்தில் குளித்தால், தாயைக் கொன்ற பாவம் சரியாகிவிடும்; ஒரு சிட்டிகை சாம்பலை நெற்றியிலிட்டுக் கொண்டால் தாயைப் புணர்ந்த பாவம்கூட தீர்ந்து விடும்; இந்த ஸ்தலத்திற்குச் சென்றால் தீராத நோயெல்லாம் தீர்ந்து விடும் என்கின்ற முட்டாள்தனமான மூட நம்பிக்கைகளேயாகும்.

உலக மக்களைவிட நமக்கு இருக்கிற கேடெல்லாம் மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கடவுள் – மதம் – சாஸ்திரம் – புராணம் – இலக்கியம் என்பவைகளேயாகும். இயற்கைத் தன்மையோடு பார்த்தால் 2,000 வருடங்களுக்கு முன் மனிதன் எப்படி இருந்திருப்பான்? 300 வருடங்களுக்கு முன்பே மனிதன் மனிதனாக வாழவில்லை என்றால் 2,000 வருடங்களுக்கு முன் இருந்தவன் காட்டு மிராண்டியாகத்தானே இருந்திருப்பான்? அவனுக்கு இன்றைய அறிவைப் பற்றிய சிந்தனைக்கு இடமே இருந்திருக்காதே! நமது மக்கள் முட்டாள்தனமான காரியங்களுக்குத் தான் 2,000 வருடங்களுக்கு முன் உள்ளவைகளைச் சொல்கின்றார்களே தவிர, அனுபவிப்பதில் புதுமைகளைத்தான் அனுபவிக்கின்றனர்.

பழமை என்பதில் சிலர் வயிற்றுப் பிழைப்பிற்கு வகை இருப்பதால் அதில் கைவைக்கக் கூடாது என்று தடுக்கின்றனர்.

உலக மக்கள் கண்டு சிரிக்கும்படியாக நமது கடவுள்கள் இருப்பதற்குக் காரணம், அவை தோன்றிய காலம் மனிதன் அறிவு பெறாத காட்டுமிராண்டிக் காலம் என்பதுதானாகும். நமது நாட்டில் அறிவிற்கேற்ப மத நூல்கள் இலக்கியங்கள் கிடையாது.

பகுத்தறிவுதான் விஞ்ஞானத்திற்கு, வாழ்விற்கு,
ஆராய்ச்சிக்கு என்று நமது பிள்ளைகளிடம் புகுத்தினால், இன்னும் 10, 15 ஆண்டுகளில் மற்ற அயல் நாட்டாரோடு போட்டி போடுகிற அளவிற்கு நமது மக்களும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைச் செய்வார்கள். நம்மக்களின் பகுத்தறிவற்ற தன்மையால் நேரம், பொருள், முயற்சி யாவும் வீணாகின்றன.

நாங்கள் பகுத்தறிவுவாதிகள், பகுத்தறிவற்ற
தன்மை ஒழிக்கப்பட வேண்டுமென்று பாடுபடுப
வர்கள் ஆவோம். எங்கள் கொள்கை, இலட்சியம்,
குறிக்கோள் என்பதெல்லாம் நமது மக்கள் பகுத்தறிவு பெற வேண்டும், தங்களின் அறிவைக்
கொண்டு சிந்திப்பவர்களாக வேண்டும். மற்ற உலக மக்களைப் போன்று இழிவற்று, சுதந்திரமாக, மனிதத் தன்மையோடு வாழ வேண்டுமென்பதேயாகும்.

(26.2.1970 அன்று முசிறியில் நடைபெற்ற

மாணவர் இலக்கிய மன்ற ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள்
‘பகுத்தறிவு’ என்னும் பொருள்
பற்றி ஆற்றிய சிறப்புரை

– ‘விடுதலை’ 25.3.1970