Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திருச்சி திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு!- கி.வீரமணி

குடந்தை சாக்கோட்டையில் பெரியார் படிப்பகத்திறப்பு விழா….

திருச்சியில் சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் 10.8.2007 அன்று காலை பங்கேற்றோம். அன்று மாலை சாக்கோட்டையில் பெரியார் பெருந்தொண்டர் கே.கணபதி- ஏகாம்பாள் நினைவுப் படிப்பகம் திறப்பு விழா எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் வரவேற்புரை
யாற்றினார்.

பெரியார் படிப்பகக் கல்வெட்டை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா திறந்து வைத்தார்; படிப்பகத்தை அமைச்சர் கோ.சி.மணி திறந்து வைக்க, நினைவரங்கத்தை நாம் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினோம். பெருமளவில் கழகத் தோழர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு 11.08.2007 அன்று திருச்சி ஓட்டல் அரிஸ்டோ விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

காலை 10.30 மணியளவில் தொடங்கிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மகளிரே! ஆண்கள் அரங்கத்தின் கடைசிப் பகுதியிலும், வெளியேயும் தான் இருந்தனர்.

“எங்கெங்கு காணினும் பெண்களடா எதற்கும் அஞ்சா எம் சிங்கங்களடா”

என்று பெருமையோடு பாடி முழங்க வேண்டும் போலிருந்தது!

திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில் சமூக காப்பணியின்
மகளிர் பிரிவு அணிவகுப்பு மரியாதை

காலை கருத்தரங்கத்தில் பெருமழையெனப் பெய்தன பெரியார்தம் கொள்கைகள்! ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் தொடங்கி வைத்தார்.கலைஞர் ஆட்சியின் சாதனைச் சட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள், பாலியல் வேறுபாடு களைந்த சாதனை, மூட நம்பிக்கைகளை முறியடித்த சாதனை இவைபற்றி மானமிகு டெய்சி மணியம்மை எம்.ஏ., எம்.எட்., (உதவித் தலைமை ஆசிரியை – சென்னை) தலைமையில் நடைபெற்ற பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் கருத்தரங்கில் பேராசிரியர் திலகவதி எம்.ஏ.,எம்.எட்., பொறியாளர் தகடூர் தமிழ்ச் செல்வி,பொறியாளர் கனிமொழி, பேராசிரியர் டாக்டர் தமிழ்மொழி எம்.பாம்., பிஎச்.டி., (முதல்வர், பல்லவன் மருந்தியல் கல்லூரி, காஞ்சி), தமிழ்ச்செல்வி எம்.எல்.அய்.எஸ்.(நூலகர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி), ஆகியோர் கருத்தரங்கில் பொழிந்தனர்.

தஞ்சை கீழவாசல் பகுதியைச் சார்ந்த பெண் கலைஞர்கள் வழங்கிய நாதஸ்வரம், தவில் இசைக்க, அரங்கம் கலகலப்பானது.  மாலை 4 மணிக்குத் தொடங்கிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் பெரியார் கல்வி நிறுவன மாணவிகளும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு. ஆண்கள்தான் செய்ய முடியும் என்றிருந்த தப்பாட்டம், கராத்தே, சிலம்பம் போன்றவற்றைச் செய்தது பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது. பெரியார் சமூகக் காப்பு அணி பெண்களின் ராணுவ அணிவகுப்பும் கருப்புச் சீருடை அணிவிப்பும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.

திராவிட மகளிர் எழுச்சி மாநாடு – பிரச்சார நிதி வழங்கும் மகளிர் அணியினர்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த திராவிடர் கழக மகளிர் கைகளில் கொடியோடும் தீச்சட்டி ஏந்தியும் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை முழங்கிக் கொண்டே வந்தது காண்போரை மெய்சிலிர்க்கச் செய்தது.

பேரணியை பேராசிரியர் டாக்டர் பர்வீன் தொடங்கி வைத்தார். முதல்வர்கள் தேன்மொழி, டாக்டர் செந்தாமரை ஆகியோர் முன்னிலை ஏற்க, புதுவை மகளிர் அணித் தலைவர் செயல் வீராங்கனை விலாசினி தலைமையேற்று நடத்தினார். ஊர்வலத்தில் கைக் குழந்தைகள், பெரியார் பிஞ்சுகள், மழலையர், மகளிர், வயோதிக மகளிர் உட்பட அனைவரும் வயது இடைவெளி இன்றிக் கலந்து கொண்டது கண்டு பொதுமக்கள் வியப்பிலாழ்ந்தனர்.

பின்னர் திறந்தவெளி மாநாட்டின் தொடக்கத்திலேயே, 18 முக்கியத் தீர்மானங்களை மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த மகளிர் முன்மொழிய பொதுமக்கள் வழிமொழிந்தனர். உழவர் சந்தை என்ற பெருந்திடல் முழுவதும் உற்சாகம் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் பெரியார் பாதையில் பெண்கள் என்னும் இயல் இசை நாடக நிகழ்ச்சி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தது. மாநாட்டில் சென்னை மீனா கந்தசாமி அவர்களால் ஆங்கிலத்தில் அற்புதமாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு நேர்த்தியாக திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட ‘பெண் ஏன் அடிமையானாள்?’ (why were women enslaved) நூல் வெளியிடப்பட்டது. மேலும் ‘திராவிடர் கழகத்தில் மகளிர் சேர வேண்டும் ஏன்?’, ‘ஊடகங்களின் பார்வையில் பெரியார் திரைப்படம்’ உள்ளிட்ட நூல்களும் வெளியிடப்பட்டன.

சித்திரையில் பவுர்ணமி, வைகாசியில் கருடசேவை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் அமாவாசை, ஆவணியில் அவிட்டம், புரட்டாசியில் சனி, அய்ப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீப விழா, மார்கழியில் திருவாதிரை, தையில் பூசம், மாசியில் மகம், பங்குனி உத்திரம் என்று வைதிகர்களுக்கு மூளை நிரப்பப்பட்டு இருக்கும் சூழலில், இது போன்ற விழிப்புணர்வு எழுச்சி மாநாடுகள் அவசியம் என்பதை இந்த மாநாடு உணர்த்தியது.

பெரியார் திரைப்பட வெற்றி விழா சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் திரையரங்கம் முன்பாக 13.8.2007 அன்று நடைபெற்றது.

தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த கவுசிக பூபதி வரவேற்புரையாற்ற, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை ஏற்றார். இந்த விழாவில் சேலம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களும், சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி, வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராஜா  ஆகியோர் பெரியார் படத்தில் நடித்த கலைஞர்களைப் பாராட்டி உரையாற்றினார்கள்.

இந்த விழாவினை மிகச் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ‘இனமுரசு’ சத்யராஜ், திரைக் கலைஞர்கள் நிழல்கள் ரவி, கண்ணம்மாவாக நடித்த லாவண்யா, ஆடை வடிவமைப்பாளர் சகுந்தலா, இயக்குநர் ஞான.ராஜசேகரன், லிபர்டி கிரியேஷன் சார்பில் ஆடிட்டர் ராமச்சந்திரன், தயாரிப்பு நிருவாகி இருதயநாத், திரையரங்க உரிமையாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்திசெல்வன் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

பின், அமைச்சர் வீரபாண்டியார் நெகிழ்ச்சியான உரையாற்றினார்.

திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்ற கொள்கை வீராங்கனைகள்

அவரது உரையில், “பெரியார் கொள்கை, காலத்தைத் தாண்டி வெல்லக் கூடியது. அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் என்றைக்கும் மனித குலம் தழைத்தோங்க பெரியார் கொள்கை தேவையானது. பெரியார் திரைப்படத்தை இளைய தலைமுறையினர் அனைவரையும் தவறாமல் பார்க்கச் செய்ய வேண்டும். அதனை நாங்கள் சேலத்தில் நிறைவேற்றி இருக்கிறோம். பெரியார் திரைப்படம் உருவாகக் காரணமாக இருந்த அண்ணன் ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டை
யும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் நிழல்கள் ரவி, நடிகை லாவண்யா, இயக்குநர் ஞான.ராஜசேகரன், ‘இனமுரசு’ சத்யராஜ் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக நாம் நிறைவுறையாற்றி நிகழ்ச்சிக்கும் திரைப்படத்திற்கும் உழைத்தவர்களுக்குச் சிறப்பு செய்தோம்.

‘புதிய நிலா’ பத்தாமாண்டு நிறைவு தொகுப்பு நூல் வெளியிட்டு, சிறப்புரையாற்ற சிங்கப்பூர் சென்றோம். 17.8.2007 அன்று காலை சிங்கப்பூர் விமான நிலையம் சென்ற நமக்கு “புதிய நிலா” விழாக் குழுவின் சார்பாகவும், சிங்கப்பூர் பெரியார் சமூகசேவை மன்றத்தின் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மு.ஜஹாங்கீர் (நூல் ஆசிரியர், ‘புதிய நிலா’), எம்.இலியாஸ் (பொதுச்செயலாளர், தமிழவேள் நற்பணி மன்றம்), கலைச்செல்வம் (தலைவர், பெரியார் சமூக சேவை மன்றம்), மாறன் – கவிதா, பெரியார் பிஞ்சு இனிய நிலா, இராஜராஜன், இரமேஷ்குமார் – கார்த்திகா, பார்த்திபன், பழனி, கதிராமங்கலம் கலியபெருமாள், க.பூபாலன், ரமேஷ் மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். ‘புதிய நிலா’ பத்தாம் ஆண்டு தொகுப்பு வெளியீட்டு விழா 19.8.2007 அன்று நடைபெற்றது. விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாய்க் கலந்து கொண்டனர்,

நாம் சிங்கப்பூரில் இருந்த போது தொலைப்பேசி வாயிலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.

சேலத்தில் நடைபெற்ற பெரியார் திரைப்பட நூறாம் நாள் வெற்றி விழாவில் இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தல் (படத்தில் உள்ளோர் இனமுரசு சத்யராஜ்,
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்)

தஞ்சை – வல்லத்தில் உள்ள “பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி”யை நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக அறிவித்து, இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர் கல்விப் பிரிவு ஆணையிட்ட செய்திதான் அது. அறிந்து மிக்க மகிழ்சியடைந்தோம். சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நம் கல்லூரியில் படித்த மேனாள் மாணவிகள் பலர் மகிழ்ச்சி அடைந்து நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி பல்கலைக்கழக மானியக் கமிசன் சட்டம் 1958இன் பிரிவு 3இன்படி, இந்திய அரசு “தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி”யை (பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (PMIST) தஞ்சாவூர்) நிகர் நிலைப் பல்கலைக்கழகமாக அறிவித்து 17.8.2007இல் ஆணையிட்டுள்ளது. இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த இக்கல்லூரி அதிலிருந்து விடுவிக்கப்
பட்டு தனிப் பல்கலைக்கழகமாக ஆனது.

சிங்கப்பூரில் வரவேற்பு வழங்கிய தோழர்கள்

இந்த அறிவிப்பினைக் கேட்டு பெரியார் தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல் உலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் கல்விப் பணிகளுக்கான ஒரு தொடக்கத்தைக் கொடுத்தார் தந்தை பெரியார். 1955ஆம் ஆண்டு பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் பிறகு 1957இல் பெரியார் தொடக்கப் பள்ளியும், 1959இல் நாகம்மையார் குழந்தைகள் இல்லமும்,  1961இல் நாகம்மை ஆசிரியைப் பயிற்சி நிறுவனமும் நிறுவப்பட்டன. அதனைக் கண்ணும் கருத்துமாகப் போற்றி வளர்த்த பெருமை அன்னை மணியம்மையார் அவர்களைச் சாரும். இதனைத் தந்தை பெரியார் அவர்களே அறிக்கைகள் வாயிலாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.

அய்யா அவர்களின் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் திருச்சியில் பெரியார் மணியம்மை பெண்கள் உயர் நிலைப் பள்ளியைத் தொடங்கினார்கள் (1974). அன்னையார் அவர்களின் மறைவிற்குப் பிறகு இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது (1979).

சிங்கப்பூரில் பெரியார் திரைப்பட வெற்றிக்காகப் பாராட்டு

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளியைத் தொடங்கினோம். நம் காலத்தில் ஏராளமான கல்வி நிறுவனங் களைத் தொடங்கி அதன் ஒவ்வோர் அங்குல வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி, நாடு போற்றும் நிறுவனமாக வளர்ந்தோங்கச் செய்துள்ளோம்.

தந்தை பெரியார் அவர்கள் நூற்றாண்டு நிறைவையொட்டி தஞ்சையில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவப்பட்டது. (1980).

இன்று அது 45 ஆண்டுகளைக் கடந்து துருவ நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது. பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் கல்வி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு பன்னாட்டு விருதுகளையும் உலகத் தரச் சான்றுகளையும் பெற்றுத் திகழ்கிறது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சமுதாயப் பாலிடெக்னிக் திட்டத்தின்கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருகிறது.

திருச்சியில் பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி 1982 இல் தொடங்கப்பட்ட ஒன்றாகும். தமிழ்நாட்டிலேயே முதலாவதாக ISO 9001-2000 என்ற தரச் சான்றிதழும், NationalBoard of Accrediation (NBA) என்ற அனைத்திந்திய சான்றிதழும் பெற்ற சிறப்புக்குரிய நிறுவனம் இதுவாகும்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

அதன் பிறகு தஞ்சை வல்லத்தில் “பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி” 1990ஆம் ஆண்டு பெண்களுக்காகவே நிறுவப்பட்ட உலகின் முதல் பொறியியல் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. உலகத் தரச் சான்றை (அய்.எஸ்.ஓ. 9001) பெற்ற பெருமைக்குரிய நிறுவனமாகத் திகழ்கிறது.

குடியரசுத் தலைவர் அணு விஞ்ஞானி ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் இக்கல்லூரிக்கு வருகை தந்து, இக்கல்லூரி, கிராமப்புறங்களை நகருக்கு நிகராக வளர்த்தெடுக்க மேற்கொண்டுவரும் பெரியார் புரா திட்டத்தைப்பார்த்து பூரித்துப் போனார்கள் (24.09.2006). அன்றுமுதல் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏன், அவர் குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்து பிரியா விடைபெறும் நிகழ்ச்சியின் நிறைவுரையில்கூட இக்கல்லூரி அளித்துவரும் இந்தத் திட்டத்தின் சாதனைகளைப் போற்றிப் புகழ்ந்தார். நாடே இதனைப்பின்பற்றவேண்டும் என்ற தம் அவாவினையும்பெருமிதமாக வெளிப்படுத்தினார். பின்னர் தான் எழுதிய ‘Target 3 billion’ என்ற புத்தகத்திலும் அதற்கெனப்பல பக்கங்களை ஒதுக்கிப் பாராட்டி எழுதியுள்ளார்.

அந்தக் கல்லூரிக்குத்தான் அப்பொழுது ‘‘நிகர்நிலைப் பல்கலைக்கழகம்’’ என்ற தகுதி நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அன்னை மணியம்மை யாரால் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணி கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் பெரியார் மணியம்மை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்று பெயர் மாற்றப்பட்ட அறக்கட்டளையின் நிருவாகக் குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 19.8.2007 அன்று காலை நடைபெற்றது. அதில் அந்த அறக்கட்டளையின் தலைவராக இருந்த எம்மை பல்கலைக்கழக வேந்தராகவும், பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியின் தாளாளராக இருந்த திருச்சி தொழிலதிபர் டாக்டர் வீ.கே.யென். கண்ணப்பன் அவர்களை இணைவேந்தராகவும் தேர்வு செய்து இந்தத் தகவலை எமக்குத் தொலைப்பேசியில் கூறினார்கள்.

(நினைவுகள் நீளும்…)