துறவிக்கும் மேலான தோழர் இளைய பட்டக்காரர்– த.சீ. இளந்திரையன்
சென்ற இதழ் தொடர்ச்சி..
நம் வாலிபர்களுக்கு நல்ல புத்தி இருக்கின்றது. அதை முதலாவது அவனவன் தன்மானத்திற்குப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். வாலிபர்களுக்கு வேலை செய்ய நல்ல வேலை இருக்கிறது. அதற்கேற்றபடி நாடு பண்பட்டு நன்றாய் உழுது போடப்பட்டிருக்கிறது; பருவமும் அனுகூலமாய் இருக்கின்றது. இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நல்ல விதைகளை விதைக்க வேண்டிய வேலை ஒன்றுதான். இதற்கு வாலிபர்கள் முன்வர
வில்லையானால் நம்மைச் சூத்திரர் என்றும், மானத்தில் கவலையற்றவர்கள் என்றும் நம் எதிரிகள் சொல்லுவதில் பெரிய குற்றம் என்ன இருக்கின்றது?
வாலிபர்களே! தயவு செய்யுங்கள்! தைரியமாய்த் தியாக உணர்ச்சியுடன் முன்வாருங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். நல்ல பெருமையும் கவுரவமான மதிப்பும் ஏற்படும். தமிழர் தன்மானம் வாலிபர்களின் கடமையை எதிர்பார்த்து இறைஞ்சுகிறது. வாருங்கள்! வாருங்கள்! அவசியம் வாருங்கள்” என்று இளைஞர்களை இனமானத் தொண்டுக்கு அழைத்தார் தந்தை பெரியார்.
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் அழைப்பை ஏற்று இயக்கத் தொண்டாற்றிய இளைஞர்கள் படையில் முன்னணியில் நின்றவர் தான் பழையகோட்டை இளையபட்டக்காரர் ந.அர்ச்சுனன்.
முழுமூச்சாய் இயக்கத்துக்கு உழைத்தவர்:
ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் இளையமகனும், ஊத்துக் குளி ஜமீன்தார் அவர்களின் மைத்துனரும், தோழர் வி.சி.வெள்ளியங்கிரி அவர்களின் உடன்பிறந்தாரின் மருமகனுமான பழைய கோட்டை இளையபட்டக்காரர் ந.அர்ச்சுனன் அவர்கள் ஓர் இலட்சம் ஏக்கர் நிலமும், ஆயிரக்கணக்கான கால்நடைகளைக் கொண்டவர் (குறிப்பாக காங்கேயம் இரக
மாடுகளாகும்) என்பது மட்டு
மல்லாமல், பல்லாயிரக்கணக்
கான மக்களைப் பண்ணை ஆட்களாகக் கொண்டிருந்தார்.
இதுமட்டுமல்லாது, கொங்குப் பகுதி மக்கள் சாமி – எஜமான் என்று சமூக வழக்கப்படி அழைக்கும்படியான தகுதி
யுடன் முடிசூட்டப்பெற்ற மன்னராய் விளங்கினார்.
இவற்றையெல்லாம் பெருமையாகக் கருதாத தோழர் ந.அர்ச்சுனன் அவர்கள் பெரியார் கொள்கை பரப்பும் தீவிரத் தொண்டராய் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
மின்னல் வெட்டாய் இயக்கத் தொண்டு:
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்ப தனது 20 ஆம் அகவையில் இயக்கத்தில் இணைந்து கொண்ட தளபதி ந.அர்ச்சுனன் அவர்கள் நீதிக்கட்சியும் – சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமானபோது, கழகத்தின் நிருவாக சபை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தனது அயராத இயக்கத் தொண்டினால் திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் ஆனார். மேலும், கோவை மாவட்ட சாரணர் இயக்க உதவி ஆணையராகவும் சிறப்பாகச் செயல்பட்டார்.
தொண்டு வாழ்வில் உச்சம் தொட்டு, இயக்கத்திலும், இயக்கக் குடும்பத்தவர் உள்ளங்களிலும் தனக்கோர் தனித்த இடம் பெற்ற தோழர் ந.அர்ச்சுனன் அவர்கள் மின்னல் தோன்றி மறைவதுபோல தமது 23ஆம் வயதில் இயற்கை எய்தினார் (14.10.1923 -12.10.1946).
தோழர் அர்சுனன் மறைவின் போது ‘குடி அரசு’ வெளியிட்ட தலையங்கத்தைப் படிக்கும் போதே உடல் சிலிர்க்கின்றது. கண்ணீர் ததும்புகிறது என்றால், அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் அர்ச்சுனன் இழப்பில் எப்படி வருந்தித் தவித்து இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
‘குடிஅரசு’ இரங்கல் அறிக்கையின் சில பகுதிகள்:
தோழர் அர்ச்சுனன் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்ட ஒவ்வொரு திராவிடரும் கண்ணீர் விடாமலிருக்க முடியாது. காரணம் அர்ச்சுனன் திராவிடர் கழகத்தின் ஒப்பற்ற தூணாய் விளங்கியதுதான்.
திராவிடர் கழகத்தில் 3 ஆண்டுகளாகத்தான் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்தார். 3 ஆண்டுகளாகத்தான் பங்கு கொண்டார் என்றாலும், தனது 20 ஆம் ஆண்டுக்கு முன்பே திராவிடத் தொண்டராகிவிட்டார் என்று கூறலாம். அம்மூன்று ஆண்டுகளில் அவர் திராவிட மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் வீட்டுப்பேச்சில் கலந்து பேசும்படியான அளவுக்கு வியாபகம் பெற்றுவிட்டார்.
திராவிடச் செல்வர்களுக்கு வெட்கமும், சங்கடமும் பொறாமையும் ஏற்படும்படியான அளவுக்கு அவ்வியாபகம் உச்சம் பெற்றிருந்த
தென்றே சொல்லலாம்…..
மக்களில் எவ்வளவு ஞானம் பெற்றவர்களும் தங்கள் செல்வத்தையும் மனைவி மக்களையும் துறந்து விடலாம். ஆனால், ஒருவன் தனது அந்தஸ்து என்னும் தகைமையைத் துறப்பது என்பது உண்மையான தொண்டனுக்குத்தான் முடியும். ஏனெனில், முற்றுந் துறந்த துறவிகள் எதைத் துறந்தாலும் தாங்கள் முற்றுந்துறந்த துறவி
என்கின்ற அந்தஸ்தைத் துறக்க மாட்டார்கள்.
உண்மைத் தொண்டர்களுக்கு அந்தஸ்தும் இருக்காது. பயன் எதிர்பார்ப்பதும் இருக்காது. தொண்டு செய்வதையே தொண்டாகவும், அத்தொண்டில் ஏற்படும் உற்சாகத்தையே பயனாகவும் கருதிக் கொண்டு இருப்பவர்களாவார்கள். ஆதலால் அர்ச்சுனன் தனது தகைமையையும் மறந்து தொண்டர் தன்மையையே சதா கருத்தில் வைத்து, மனமொழி மெய்களால் உண்மைத் தொண்டாற்றி வந்த சேவகனாகவே இருந்தார்…”
பெரியார் அவர்கள் அர்ச்சுனன் மறைவுக்காக வருந்துவதைப்போல் இதுவரை யாருக்காகவும் வருந்தி இருக்க மாட்டார் என்று கூறலாம். அர்ச்சுனனைக் கொண்டு நம் இயக்கம் எவ்வளவோ நலமடையுமென்று கருதியிருந்தேன். அது இல்லாமல் போயிற்று. திராவிட மக்களுக்கு நல்வாய்ப்பு இல்லை என்று சொல்லிச் சொல்லி பெரியார் வருந்தியிருக்கிறார். அதனால் தமது சுற்றுப் பிரயாணங்களையும் நிறுத்திவிட்டுத் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் பெரியார்.
“திராவிடர் கழகம் தனது உண்மையான பணியாளர்கள் பலரை இழந்து வருகிறது என்றாலும், பன்னீர்செல்வம், சி.டி.நாயகம் ஆகியவர்களைப் போலவே வேறு ஈடு செய்ய முடியாத ஒப்பற்றவராகிய அர்ச்சுனனை இழந்தது. திராவிட மக்களுக்கு நல்ல வாய்ப்பளிக்க இயற்கையே வஞ்சனை செய்கிறது. துரோகம் செய்கிறது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
அர்ச்சுனன் மறைவினால் எதற்கும் கலங்காத பெரியாரும், திராவிட மக்களும் கண்ணீர் விட்டார்கள்… திராவிடர் சமுதாயம் தன்மானத்தையும், தன் இரத்த சுத்தத்தையும் சிறிது நேரமாவது நினைவுறுத்திப் பார்க்குமேயானால் ஒவ்வொருவரும் செல்வம், நாயகம், அர்ச்சுனன் போல் தானேயாகி விளங்கி மனிதத் தன்மை அடைவார்கள் என்பதில் அய்யமில்லை. திராவிட இளைஞர்கள், செல்வர்கள் அர்ச்சுனன் மறைவால் உணர்ச்சி பெற்று, அர்ச்சுனன் இடத்தைப் பூர்த்தி செய்வார்களாக” என்று விரிகிறது –
‘குடிஅரசு’ தலையங்கம் -19.10.1946
திராவிடர் கழக இளைஞர்களுக்கு தளபதி ந. அர்ச்சுனன் வழிகாட்டி. தோழர் அர்ச்சுனன் தாங்கிப் பிடித்த தந்தை பெரியாரின் கொள்கை வெல்ல திராவிட இளைஞர்களே, வாரீர்! தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை ஏற்போம்!
– சுடர் பரவும்

