‘அப்சசன்’ (Obsession) என்றால் என்ன?
சென்ற அத்தியாயத்தில் பார்த்தது போல, ‘அப்சசன்’ என்பது எண்ணமாக இருக்கலாம், பயமாக இருக்கலாம், சந்தேகமாக இருக்கலாம், ஒரு தூண்டுதலாக இருக்கலாம் அல்லது ஒரு காட்சியாகக் கூட இருக்கலாம்.

உதாரணத்திற்கு, ஒரு தாய்க்கு, கத்தியைப் பார்க்கும்போதெல்லாம் தனது குழந்தையை அந்தக் கத்தியால் குத்துவதைப் போன்று ஒரு காட்சி மனதில் ஓடுகிறது. அது அந்தத் தாயைப் பதற்றமடையச் செய்கிறது. இந்தக் காட்சியும் கூட அப்சசனின் ஒரு வகையே. இந்த அப்சசன்கள் திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் தோன்றியவுடன் மனதின் உள்ளே ஊடுருவிப் பரவி மனதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. மனம் இப்படிப்பட்ட அப்சசசின் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது அந்த அப்சசன் சார்ந்த பதற்றம் உருவாகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் அமைதியிழக்கிறார், நிதானமிழக்கிறார், மனவுளைச்சல் அடைகிறார். இதிலிருந்து வெளியேற வேண்டுமென நினைக்கிறார். அதனால் தன்னையும் அறியாமல் இந்த அப்சசன் சொல்கிறபடி நடக்கத் தொடங்குகிறார்.

அப்சசன் சொல்கிறபடி நடந்தாலும்கூட அவரது பதற்றமும், மனவுளைச்சலும் அதிகமாகிறதே தவிர குறைவதில்லை. அதனால் அவர் இன்னும் அதிகமாக அப்சசனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறார். இது அந்த மனிதரை அவரின் அன்றாடச் செயல்களில் இருந்து முற்றிலுமாகத் துண்டித்து, அவரைத் தனிமைப்படுத்துகிறது. அவரால் என்ன செய்தும் இந்த நிலையில் இருந்து விடுபட முடியவில்லை. முழுக்க முழுக்க தன்னை இழந்து விடும் நிலைக்குச் செல்கிறார். உண்மையில் இப்படிப்பட்ட எண்ணங்களையோ, சந்தேகங்களையோ அவர் வேண்டுமென்றே நினைப்பதில்லை. அவரையும் அறியாமல் அவரின் மூளையில் இவை தன்னிச்சையாக திடீரெனத் தோன்றுகின்றன. அதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் வசம் வருவதையும் கட்டுப்படுத்த முடிவதில்லை.
அப்சசனின் மூன்று முக்கியமான பண்புகள்:
* தன்னிச்சையாகத் தோன்றி ஊடுருவிப் பரவக்கூடியது
* பாதிக்கப்பட்டவரால் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது
* அதீத மனவுளைச்சலையும், நிம்மதியின்மையையும் கொடுக்கக்கூடியது
இந்த மூன்றும்தான் அப்சசனின் முக்கியமான பண்புகள். இந்தப் பண்புகள் தான் இதன் தீவிரத் தன்மைக்கும் காரணமாக இருக்கின்றன.
‘கம்பல்சன்’ என்றால் என்ன?
ஒரு அப்சசிவ் எண்ணமோ, பயமோ, சந்தேகமோ அல்லது தூண்டுதலோ ஒரு பதற்றத்தையும், அமைதின்மையையும் ஒருவருடைய மனதில் உருவாக்கும். இந்தப் பதற்றமும், அமைதியின்மையும் ஒருவரை அதீத மனவுளைச்சலுக்கு உள்ளாக்கும். இந்தப் பதற்றத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுவதற்காக அவர்கள் சில செயல்களைச் செய்யத் தொடங்குவார்கள் அப்படிச் செய்வதனால் தற்காலிகமாக அந்தப் பதற்றத்திலிருந்து வெளியேறுவார்கள். எப்போதெல்லாம் அந்த அப்சசிவ் எண்ணம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். இதைத் தான் கம்பல்சன் என்று சொல்கிறோம்.

கத்தியைப் பார்க்கும்போதெல்லாம் குழந்தையைக் குத்திவிடும் அந்தக் காட்சி தோன்றி பதற்றப்படுத்துவதால் எங்கே குழந்தையைக் குத்திவிடுவோமா எனப் பயந்து போய், அப்படி நினைத்ததற்காக இரண்டு முறை அந்தத் தாய் தோப்புக்கரணம் போட்டுக்கொள்கிறார். எப்போதெல்லாம் கத்தி அந்தத் தாயின் கண் முன் படுகிறதோ அப்போதெல்லாம் அவர் இரண்டு முறை தோப்புக்கரணம் போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். யார் இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் அவர் தன்னுடைய கட்டுப்பாட்டையும் மீறி இதைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள். இதுதான் கம்பல்சன்.
வீட்டின் வாசலைத் தாண்டி நடந்து செல்கிறோம். அப்போது திடீரென ஒரு ‘அப்சசிவ்’ பயம் எழுகிறது. “நீ வாசலைச் சரியான முறையில் தாண்டவில்லை, மீண்டுமொருமுறை தாண்டி வா
இல்லையென்றால் நீ செல்லும் வேலை சரியாக நடக்காது”.
இந்த எண்ணம் வந்தவுடன் பதற்றமும் வந்துவிடுகிறது. அப்படியெல்லாம் நடக்காது என்று தெரிந்தாலும் பதற்றப்படாமல் இருக்க முடியவில்லை. இனம் புரியாத பயம் மனம் முழுக்க நிறைந்து விடுகிறது. உடனடியாகத் திரும்பச் சென்று மறுபடியும் வாசலைத் தாண்டி வரும்போதுதான் அந்தப் பதற்றம் குறைகிறது. அதற்குப் பிறகு எப்போது அந்த வாசலைத் தாண்டினாலும் அந்த அப்சசன் தோன்றுகிறது. இரண்டு முறை, மூன்று முறை எனப் பல முறை திரும்பத் திரும்ப வாசலைத் தாண்டிக் கொண்டேயிருக்கும் நிலையைத் தான் நாம் கம்பல்சன் எனச் சொல்கிறோம்.
ஓ.சி.டி. (Obsessive Compulsive Disorders)
பெருவிருப்பக் கட்டாய மனப் பிறழ்வு நோயைப் பொறுத்த வரை மூன்று வகைகள் இருக்கின்றன:
- திரும்பத் திரும்ப ஏதாவது எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் வகை (Predominantly Obsession)
- கட்டுப்படுத்த முடியாமல் திரும்பத் திரும்ப ஏதேனும் செயல்களில் ஈடுபட்டுகொண்டிருக்கும் வகை (Predominantly Compulsion)
- கட்டுப்படுத்த முடியாத எண்ணங்களும், செயல்களும் என இரண்டும் கலந்த வகை (Mixed)
மனம் என்றால் இயல்பாகவே ஏதாவது சிந்தனைகளும், எண்ணங்களும் அதிலே ஓடிக்கொண்டேதான் இருக்கும். தேவையானது, தேவையற்றது, நல்லது, கெட்டது என அனைத்து வகையான எண்ணங்களும் நம்மையும் மீறி மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கும். நாம் விருப்பப்பட்டுச் சிந்திக்கும் எண்ணம் தான் நம் மனதில் வரும் என்று சொல்லமுடியாது, நமது விருப்பத்தையும் மீறி ஏராளமான எண்ணங்கள் நம் மனதில் உருவாவதை நம்மால் தடுக்க முடியாது.இப்படி வரும் எண்ணங்கள் எல்லாம் ஓசிடி நோய் அல்ல. ஏனென்றால் மனதில் வரும் இப்படி ஏராளமான எண்ணங்களை நாம் பொருட்படுத்துவதில்லை; இப்படி வருகிறதே என கவலைப்படுவதில்லை; இப்படி வரக்கூடாது என நினைப்பதில்லை, அதையும் மீறி வரும் எண்ணங்களை நினைத்து குற்றவுணர்ச்சி கொள்வதுமில்லை. இதையெல்லாம் செய்யும் போது, அதாவது ஏதாவது ஒரு எண்ணத்தை நினைத்துக் கவலைப்பட்டு, அது வரக்கூடாது என்று நினைக்கும்போது நம்மையும் அறியாமல் அந்த எண்ணம் முக்கியத்துவம் பெறுகிறது, முக்கியத்துவம் பெறும் எண்ணத்தின் மீது மனம் கவனத்தைக் குவிக்கிறது, மனதின் கவனம் பெறுவதால் அந்த எண்ணம் மீண்டும், மீண்டும் வருகிறது, நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும், மீண்டும் வருவதால் அது நமக்குப் பதற்றத்தைக் கொடுக்கிறது. இந்த எண்ணங்களே அப்சசனாக மாறுகின்றன.
இப்படிப்பட்ட அப்சசிவான எண்ணங்கள் கொடுக்கும் பதற்றம் ஒருவரை நிலைகுலைய அதுவும் இந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப
வரும்போது இந்தப் பதற்றமும் அதிகரித்துக்
கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் இந்தப் பதற்றத்தைச் சமாளிக்க முடியாத நிலைக்கு ஒருவர் செல்கிறார். அந்த நேரத்தில் ஏதாவது ஒரு செயலைச் செய்ய மனம் உந்துகிறது, அந்தச் செயலுக்கும், எந்த எண்ணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், அதைச் செய்யச் சொல்லி மனம் கொடுக்கும் தொடர் உந்துதல் காரணமாக அந்தச் செயலைச் செய்யும் போது அந்தப் பதற்றம் தற்காலிகமாகக் குறைந்து அந்தப் பதற்றத்திலிருந்து தணிந்து சற்று நேரம் விடுவிக்கிறது. இந்தச் செயல்களைத் தான் கம்பல்சன் எனச் சொல்கிறோம். ஒருவர் இந்தக் கட்டாயச் செயல்களைச் செய்வதன் விளைவாக அதீத பதற்றத்திலிருந்து சற்று நேரம் ஆசுவாசம் கொள்கிறார். இந்தக் கட்டாயச் செயல்கள் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது என உணர்ந்துகொள்ளும் ஒருவர் எப்போதெல்லாம் அப்சசன் பதற்றத்தைக் கொடுக்கிறதோ அப்போதெல்லாம் இந்தக் கட்டாயச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்.
– தொடரும்…





