Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பிணங்களின்மீது தர்மஸ்தலா ! பி.ஜே.பி. ஆதரவில் சாமியாரின் வன்கொடுமை!-மஞ்சை வசந்தன்

கர்நாடகா மாநிலம் மஞ்சுநாதர் கோயில் “தர்மஸ்தலா”வில் 400 முதல் 4000 பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட செய்தி தற்போது நாட்டையே உலுக்கிக்
கொண்டிருக்கிறது. ஆனால், இவை பற்றி வடநாட்டு ஊடகங்களும், ஒன்றிய ஆட்சியாளர்களும், எந்த அதிர்ச்சியும், கவலையும், அதற்கான தீவிர நடவடிக்கையும் இன்றி அன்றாட அலுவல்களை வழக்கம்போல் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தர்மஸ்தலா, தட்சணகர்னாடகாவில்  மங்களூரிலிருந்து 75 கி.மீட்டர் தூரத்தில், கேரள எல்லையை ஒட்டியுள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் உள்ளது.

இங்குள்ள மஞ்சுநாதர் கோயில் சார்ந்ததே இந்தத் தர்மஸ்தலா. இதை 1948 முதல் 1968 வரை ரத்தினவர்மா ஹெஹ்டே என்பவர் நிர்வகித்து வந்தார். அவர் இறந்தபின் அவரது மகன் 20 வயதுடைய வீரேந்திர ஹெஹ்டே கோயில் நிருவாகப் பொறுப்பை ஏற்றார்.

இவர் நிருவாகத்தில் கோயிலும், தர்மஸ்தலாவும் வந்தபின், கோயில் பீடத்தில் அமர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்யும் அமைப்பாக அது மாற்றப்பட்டது. அவரால் பஞ்சாயத்து செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கிவிட்டால் அதை எதிர்த்து எவரும் பேசமுடியாது. வீரேந்திர ஹெஹ்டே கூறியதுதான் தீர்ப்பு, அவர் வைத்ததுதான் சட்டம். நீதிமன்றம், காவல் நிலையம், அரசு எதுவும் அதில் தலையிடாது.

கட்டப்பஞ்சாயத்து செய்வதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும். விளைச்சலில் ஒரு பகுதியை ஒவ்வொரு விவசாயியும் தர்மஸ்தலாவிற்குக் கொடுக்க வேண்டும். படித்து வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் முதல் மாத சம்பளத்தில் பாதியை இதற்கு வழங்குவது வழக்கம். இங்கு 10,000(பத்தாயிரம்) பேருக்கு தினம் இலவச உணவு வழங்கப்படுகிறது.

இது முதலில் சைன மடமாக  இருந்தது. இதை சைனர்களே நிர்வகித்தனர். படுத்த நிலையில் அங்கு தீர்த்தங்கரர் இருப்பது இதை உறுதி செய்கிறது. சைனர்களின் வழிபாட்டிடங்கள் பலவும், ஹிந்துக் கோயில்களாக மாற்றப்பட்டதைப் போலவே இதுவும் மாற்றப்பட்டது.

பிரதமர் முதல், மாநில முதல்வர்கள் வரை எல்லா உயர்நிலை மனிதர்களுடனும் வீரேந்திர ஹெஹ்டே நெருக்கமானவர். அதனால், காவல்துறை, நீதிமன்றம் ஆட்சியாளர்கள் எல்லாம் இவரிடம் ஒதுங்கியே நிற்கும் நிலை, இவர் நினைத்தபடியெல்லாம் ஆட்டமும், அதிகாரமும் செய்ய களம் அமைத்துத்தந்தன.

இவருக்கு இராஜ்ய சபா எம்.பி. பதவியும், பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டன என்பதிலிருந்தே இவரது செல்வாக்கை எளிதில் புரிந்துகொள்ளலாம். கர்நாடகா ரத்தனா விருதும் மாநில அரசால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த தர்மஸ்தலா நிருவாகத்தில், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் எல்லாம் உண்டு. ஆ.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், பி.ஜே.பி. ஆகிய அமைப்புகள் இவருடன் நெருக்கமாக இருக்கின்றன.

தட்டிக் கேட்க எவரும் இல்லாமல் தான் விரும்பியபடியெல்லாம் ஆட்டம் போட்ட இந்த தர்மஸ்தலா நிருவாகத்தின்கீழ் துப்புரவுப் பணியாளராய்ப் பணியாற்றிய “பீமா” என்பவரிடமிருந்து ஜூன் 3ஆம் தேதி ஒரு பார்சலும், ஒரு கடிதமும் காவல்நிலையத்திற்கு வரவே, நாடே அதிர்ச்சிக்குள்ளானது.

1996 முதல் 2014க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

புகார்தாரரான இவர், இந்திய பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (பி.என்.எஸ்.எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் புகார் அளிக்காமல் அமைதியாக இருந்ததாகக் கூறும் அவர்,

இதற்கு மேலும் உண்மைகளைக் கூறாது, உண்மைகளை மறைக்கும் குற்ற உணர்வோடு தன்னால் உயிரோடு இருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

இவரின் புகார்ச் செய்தி வெளிவந்தவுடன் தர்மஸ்தலாவில் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் தாய்,

என் மகளின் உடலைக் கண்டுபிடிக்க உடல்கள் அடையாளம் காணப்பட்டால் தாம் டி.என்.ஏ. சோதனைக்குத் தயாராய்இருப்பதாகக் காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார்.

22 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வழக்கில், விசாரணையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதைக் காவல்துறையினர் இன்னமும் முடிவு செய்யவில்லை. இதற்கிடையில் இந்த விசாரணை குறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் குழு ஒன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

*உடல்கள் ஒட்டுமொத்தமாகப் புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், பெயர்கள் வெளிவரக்கூடிய பெரும்புள்ளிகளைப் பாதுகாக்கவும் ஒரு யுக்தி கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிகிறது.” என உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கே.வி. தனஞ்செய் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த தூய்மைப் பணியாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் தர்மஸ்தலாவில் உள்ள ஒரு கோவிலில் பணியாற்றியவர். இவர் கருப்புத்துணியால் மூடியே அழைத்து வரப்படுகிறார்.

புகார் கூறிய தூய்மைப்பணியாளரான இவர், 1995 முதல் 2014 வரை நேத்ராவதி ஆற்றங்கரையைச் தவறாமல் சுத்தம் செய்து வந்தார். பின்னர், அவரது பணியின் தன்மை மாறியது. கடுமையான குற்றங்களைச் செய்ய அவர் வற்புறுத்தப்பட்டார். பல பெண்களின் உடல்களைப் புதைக்கவும், எரிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு அதற்குக் கூலியும் தரப்பட்டார். அவர் பல பெண்களின் உடல்களைப் பார்த்ததாகவும் அவை ‘ஆடைகள் இல்லாமல் பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் அடையாளங்களுடன் இருந்ததாகவும் கூறினார். சில சிறு வயதுப் பெண்கள் பள்ளிச் சீருடையுடன் பிணமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

இதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்க முயன்றபோது, மேலதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தபோது, அவருக்கு மிரட்டல்கள் கடுமையாக வந்ததாக அவர் கூறுகிறார். உன்னைத் துண்டு துண்டாக வெட்டுவோம். உன் உடலை மற்றவர்களைப்போல் புதைப்போம். உன் குடும்பத்தையே கொன்றுவிடுவோம்” என்று மிரட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

“2010இல் நடந்த ஒரு சம்பவம் இன்னும் என்னை அப்படியே உலுக்குகிறது. ஒரு பெட்ரோல் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், காவலர்கள் என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியின் உடலைப் பார்த்தேன். அவரது உடலில் ஆடைகள் குறைவாக இருந்தன. பாலுறவு வன்முறையின் தெளிவான அடையாளங்கள் இருந்தன. அவரது கழுத்தில் கயிற்றில் இறுக்கப்பட்ட தழும்புகள் இருந்தன. அவரையும் அவரது புத்தகப் பையையும் புதைக்க ஒரு குழியை தோண்டுமாறு என்னிடம் கூறப்பட்டது. அந்தக் காட்சி இன்னும் என் கண்களில் நிற்கிறது.” என முதல் தகவல் அறிக்கையில் (FIR) கூறப்பட்டுள்ளது.

அடுத்து, என்னால் மறக்க முடியாத மற்றொரு சம்பவம், 20 வயது பெண் ஒருவரின் முகம் அமிலத்தால் (Acid) சிதைக்கப்பட்டு பிணமாக என்னிடம் கொண்டுவரப்பட்ட காட்சிதான் என்று அவர் கூறியுள்ளார்.

முதல் தகவல் அறிக்கையின் கூற்றுப்படி, பெண்கள் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொடூர மானதாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு அறையில் நாற்காலியில் கட்டிப் போடப்பட்டு துண்டு ஒன்றால் அவர்கள் வாயைப் பொத்தி, மூச்சுத் திணறல் ஏற்படுத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. “நான் பணியாற்றிய காலத்தில் தர்மஸ்தலா பகுதியில் பல இடங்களில் உடல்களைப் புதைத்துள்ளேன்.” என்று தன் புகாரில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

‘சில உடல்கள் மீது டீசலை ஊற்றும்படி சொல்வார்கள். பின்னர் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க அந்த உடல்களை எரிக்கும்படி உத்தரவு வரும். இந்த வகையில் நூற்றுக்கணக்கான உடல்கள் என் உதவியோடு அழிக்கப்பட்டன. இச்செயல்களால் எற்பட்ட மன அழுத்தத்தைத் தம்மால் அதற்கு மேலும் தாங்கமுடியாமல்  குடும்பத்துடன் மாநிலத்தைவிட்டே வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

‘நான் குறிப்பிடும் குற்றவாளிகள் கோவில் நிருவாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்படையவர்கள். தற்போது அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது. ஏனெனில், அவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். எதிர்ப்பவர்களை அழிக்கும் வல்லமை உடைய வர்கள். எனக்கும் என் குடும்பத்திற்கும் சட்டப் பாதுகாப்பு கிடைத்தவுடன், அனை வரின் பெயர்களையும் அவர்களின் குற்ற விவரங்களையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.” என அவர் கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

தனது புகாரை நிரூபிக்கவும் ஆதாரங்களை வழங்கவும். தூய்மைப் பணியாளர் தானே ஒரு கல்லறையைத் தோண்டினார். பின்னர் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது சில புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களைத் தந்தார்.

அவரது வாக்குமூலம் இந்திய பொதுப் பாதுகாப்புச் சட்டம் (BNSS) பிரிவு 183 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. நீதிபதியின் முன் ஆஜரானபோது, புகார்தாரர் தலை முதல் கால்வரை முழுமையாக கருமையான துணியால் மூடப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

துப்புரவுப் பணியாளரின் புகார் ஜூலை 4ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. புகார்தாரர் BNSS பிரிவு 183இன் கீழ் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது, தான் புதைத்த ஒரு உடலின் எச்சங்களையும் சமர்ப்பித்தார்.

தூய்மைப் பணியாளரின் புகார் வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஒரு பெண்மணி 22 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன தனது மகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார்.

அப்பெண் மருத்துவக் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவியாக இருந்தார் தாயின் கூற்றுப்படி அவரது மகள் கடைசியாக கோவிலில் காணப்பட்டார்.

நான் அந்தக் கோயிலுக்குச் சென்றேன். அங்கு அதிகாரிகளிடம் பேச முயன்றேன். ஆனால், அங்கிருந்து விரட்டப்பட்டேன். அதன் பின்னர் நான் காவல்நிலையத்திற்குச் சென்றேன். அங்கிருந்தும் நான் திருப்பி அனுப்பப்பட்டேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அப்பெண்ணின் தாய்.

1979இல் கோயில் நிருவாகத்தில் நடக்கும் பள்ளி ஆசிரியர் வேதவல்லி என்பவர் கொலை செய்யப்பட்டார். தனக்கு உரிமைப்படி கிடைக்க வேண்டிய தலைமையாசிரியர் பதவி உயர்வு கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டார்.

தூய்மைப் பணியாளார் 100க்கும் மேற்பட்ட உடல்களைப் புதைத்திருப்பதாக கூறியிருப்பது கவனத்தைக் கவர்வது மட்டுமல்லாது, மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாகும்.

2012இல் 17 வயது மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மாநிலத்தில் பெரும் பெரும் விவாதத்தைத் தூண்டியது. அப்போது வி.எஸ்.உக்ரப்பா தலைமையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களை விசாரிக்க எம்எல்ஏக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

“ஒவ்வொரு ஆண்டும் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் 100 பெண்களின் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன என்று ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி குழுவின் முன் கூறினார். அதே மாவட்டத்தில் 402 பெண்கள் மாயமான வழக்குகளும் 100 க்கும் மேற்பட்ட  பாலியல் வன்கொடுமை வழக்கு
களும் பதிவாகியுள்ளன என உக்ரப்பா, பி.பி.சி.(ஹிந்தி)யிடம் தெரிவித்தார்.

இந்தக் குழுவின் அறிக்கை சில வாரங்களுக்கு
முன்பு மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்
பட்டது.

1983இல் தர்மஸ்தலா கோவிலில் நான்கு பெண்கள் காணாமல் போன விவகாரம் கர்நாடக சட்டமன்றத்தில் பெல்தங்கடி எம்.எல்.ஏ கே. வசந்த பங்கேடாவால் எழுப்பப்பட்டது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

புகார்தாரரான பீமா துப்புரவுப் பணியாளராக 1995ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பணியில் இருந்துள்ளார். பிறகு அந்த ஆண்டு முதல் தலைமறைவானார்.

அவர் துப்புரவுப் பணி செய்யும்போது, இரவு நேரங்களில் ஒரு கருப்பு நிறக் கார் வரும். அக்காரிலிருந்து கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் இறக்கப்படும். அவ்வுடல்களை எங்கு புதைக்க வேண்டும், அல்லது எங்கு எரிக்க வேண்டும் என்பது அக்காரில் வருபவர்களால் கூறப்படும். அவர்கள் கூறுவதுபோல் அவர் அப்பிணங்களை எரிப்பார்; அல்லது புதைப்பார். இப்படி அவர் நூற்றுக்கணக்கான பெண்களைப் புதைத்துள்ளார்; அல்லது எரித்துள்ளார்.

28 வயதில் துப்புறவு பணியில் சேர்ந்த அவருக்குத் தற்போது வயது 54.

இப்படிப்பட்ட குற்றச் செயல்களைச் செய்ய மனம் ஒப்பாத துப்புரவுப் பணியாளர் 2012இல் வேலையை விட்டே சென்றுவிட்டார். ஆனாலும், அவருடன் செல்பேசியில் பேசி மீண்டும் கருப்புக் காரில் வரும் ஆள்கள் கட்டாயப்படுத்தி அழைத்துள்ளனர். ஆனால், பீமா மறுக்கவே, காரில் கொண்டு வந்த பெண்ணின் பிணத்தைக் காட்டிலேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

அந்த உடல்தான் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட சவ்ஜன்யா என்ற பெண்ணின் உடல். அவ்வுடல் போலீசாரால் அப்போது கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதுவே முதல் வழக்கு.

சில பெண்கள் காயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் உயிருடனும் புதைக்கப்பட்டுள்ளனர்.

பீமா வேலையைவிட்டுச் சென்ற ஆண்டான 2014ல் ஒரு பெண் குழந்தையின் உடல் காரில் எடுத்துவரப்படுகிறது. அப்பிணத்தைப் பார்த்த பீமா அதிர்ச்சியடைகிறார். காரணம், அது அவரது உறவினரின் குழந்தை. தன் உறவினர் குழந்தைக்கே இக்கொடுமை செய்யப்படவே, பீமா வேலையை விட்டே சென்றுவிடுகிறார்.

வேலையை விட்டுச் சென்றாலும், குற்றச்செயல்களுக்கு நாமும் துணையாக இருந்து விட்டோமே என்று அவர் உள்ளம் துடிதுடித்தது. என்றாலும் மிரட்டலுக்கு அஞ்சி போலீசாருக்குத் தெரிவிக்காமல் காலம் கடத்தியவர், அண்மையில் துணிந்து இப்புகாரை அளித்துள்ளார்.

அவரது புகாரினால், கணக்கின்றிக் கொடூர
மாகக் கொலை செய்யப்பட்ட பெண்களின் சோக வரலாறு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சாமியாரின் அரசியல் செல்வாக்காலும், பணபலத்தாலும் நூற்றுக்கணக்கான பாலுறவு
வன்கொடுமைக் கொலைகள் மறைக்கப்
பட்டுள்ளன. நீதிமன்றங்கூட குற்றவாளிகள் பக்கம் நிற்கிறதா? என்ற அய்யம் ஏற்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வருகின்றன.

இது மக்களாட்சி நடைபெறும் நாடா? என்ற மிகப்பெரிய கேள்வி இன்று எழுந்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால், குற்றச்செயல்பாடுகள் பெருகத்தான் செய்யும். அதுவும் இளம் பெண்களுக்கு எதிரான வன்புணர்வுக் கொலைகள் பெண்களுக்கான பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிடும்.

மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால், கோயில்கள் கொலைக்கூடங்களாகவும், சாமியார்கள் பேட்டை ரவுடிகளாகவும்
மாறிச் செயல்பட்டால், மதத்தை, கடவுளை, கோயிலை மக்கள் முற்றாகப் புறக்கணிக்கும் நிலை வரும்.

சாமியார்களின் மீதான வெறுப்பு கடவுள் மீதும் திரும்பும். இவ்வளவு கொலைகளையும், கொடுமைகளையும் வேடிக்கை பார்ப்பது கடவுளா? என்ற மிகப் பெரிய வினா மக்கள் மத்தியில் எழும்.

எனவே, கடவுளைக் காக்கும் பொருட்டாவது இக்கொடுமைகளை அரசும் நீதிமன்றங்களும், காவல்துறையும் தடுத்து நிறுத்தவேண்டும். குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றிக் கடும் தண்டனை வழங்கவேண்டும்.

இல்லையெனில், பொதுமக்களே சட்டத்தைக் கையிலெடுக்கும் ஒரு பெரும்புரட்சிக்கு அது வழிவகுத்துவிடும்.

பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லா எந்த நாடும், எந்த ஆட்சியும் உலக அளவில் வெட்கித் தலைகுனிய வேண்டிவரும்.

பொதுவுடைமை இயக்கங்கள்,  பெண் அமைப்புகள், சமூகப் பாதுகாப்பில் அக்கறை உடையவர்கள் உடனடியாக ஓரணியில் திரண்டு இக்கொடுமைகளுக்குத் தீர்வும், முற்றுப்புள்ளியும் வைக்கவேண்டும். இது ஒவ்வொரு மனிதருக்குமான கட்டாயக் கடமையாகும். l