Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதவெறி ஆபத்தை மக்களுக்கு விளக்கும் ஆவணம்- வை.கலையரசன்

நூல் :
‘தேசியக் கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’
நூல் ஆசிரியர் :
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வெளியீடு :
அன்பில் பதிப்பகம்
பக்கங்கள்: 136
நன்கொடை : ரூ.100/- (மக்கள் பதிப்பு)

ஆர்.எஸ்.எஸ். தனது அரசியல் வடிவமான பி.ஜே.பி. என்னும் கட்சி மூலம் 2014இல் ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது. அன்று முதல் தனது மதவெறிக் கொள்கைகளை  நிறைவேற்ற பல்முனை முயற்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் கல்வித் துறையை காவிமயமாக்குதல் என்னும் படுமோசமான முயற்சியாகும். 2016இல் புதிய கல்விக் கொள்கை வரைவு – 2016 என்னும் பெயரில் பிற்போக்குக் கருத்துகளைக் கொண்ட ஒரு வரைவறிக்கையை வெளியிட்டது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘புதிய கல்விக் கொள்கையா? நவீனக் குலக்கல்வித் திட்டமா?” என்று தலைப்பிட்டு ஒரு நூலை எழுதினார். அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், “புதிய கல்விக் கொள்கை என்ற ‘மதயானை’ தமிழகத்திற்குள் புகுந்து, “கல்வி சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கை
களுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை!” என்று சமூக வலைதளங்களில் 23.7.2016 அன்று பதிவிட்டார்.

அவர் சொன்ன மதயானை மீண்டும் 2020இல் கல்வித் திட்டமாக வந்துள்ளது. இதில் காணப்படும் ஆபத்துகளை விளக்கி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரால் எழுதப்பட்ட நூல் தான் இந்த நூல்.

தேசியக் கல்விக் கொள்கையில் காணப்படும் ஆபத்தான கருத்துகளை ஆழமான பார்வையு
டன், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் என அனைவரும் அறிந்து கொண்டு சிந்திக்கும் வகையில் எளிய நடையில் விளக்குகிறார்.

2016 முதல் ஒன்றிய அரசு கல்வித் துறையை சிதைத்து, தங்கள் மதவெறிக் கொள்கைகளைத் திணிக்கவும், அனைவருக்கும் கல்வி என்னும் சமூக நீதித் தத்துவத்தைச் சிதைக்கவும், மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் படம் பிடிக்கிறார். மேலும் ‘நீட்’ என்னும் சமூக அநீதியின் வழியே நம் பிள்ளைகளின் மருத்துவக் கல்விக் கனவுகள்
சிதைக்கப்படுவதையும் தமது முன்னுரை
யிலேயே விளக்குகிறார்.

“ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கையால் தமிழ்நாடு மட்டுமல்ல… நாடெங்கிலும் உள்ள மாணவச் செல்வங்களின் எதிர்காலமும் சிதைக்கப்பட்டு வருகிறது. அவர்களும் நமது பிள்ளைகள்தாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகவும் அவர்களின் கல்வி உரிமைகளுக்காகவும் போராடி வருகிறது தமிழ்நாடு. அந்த வகையில் மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர், இருவருடைய கரங்களையும் வலுப்படுத்தும்விதமாக, ‘தேசியக் கல்விக் கொள்கை-2020 ஆவணத்தைப் படித்து, அதனால் ஏற்படப்போகும் எதிர்காலப் பாதிப்புகளை உள்வாங்கி, அதிலுள்ள பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரு பகுதிகளில், ‘பள்ளிக் கல்வி’யின் உள்ளடக்கப் பக்கங்களுக்குள் ஒன்றியத்தை ஆள்பவர்கள் மறைத்து வைத்திருக்கும் வஞ்சகமான திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக இந்த நூலை எழுதியிருக்கிறேன்” என்று அறிமுகத்துடன் தொடங்குகிறது.

யாரைத் தேர்வு செய்கிறார்கள் யாரை இழக்கிறார்கள் என்னும் முதல் அத்தியாயத்தில் யுனெஸ்கோ 2015இல் நடத்திய உலகக் கல்வி மாநாட்டின் தீர்மானம்; “2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சமமான மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியையும் வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துவதில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்”  என்பதை தமது இலக்காகக் காட்டிக்கொள்ளும் தேசியக் கல்விக் கொள்கை 2020 அதற்கு நேர் விரோதமான கொள்கைத் திட்டங்களை வகுத்துள்ளதை விளக்குகிறார். அதாவது, தேசியக் கல்விக் கொள்கை என்கிற பெயரால் தங்களின் மதவாத அரசியலுக்கான எதிர்காலத் திட்டங்களைக் கல்வியின் பெயரால் நம் கல்விக்கூடங்களில் நுழைக்கிறார்கள் என்பதை விரிவாக விளக்குகிறார். மேலும் இந்தக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் எல்லாம் பகுத்தறிவுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் பொருந்தாத பழமை வாதக் கருத்துகளாகவும் நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைத்து ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கை என்னும் சர்வாதிகார மனநிலையையும் கொண்ட ஆர்.எஸ்.எஸ். முன்மொழியும் காவிக் கொள்கையாகவும் இருக்கிறது என்பதை விளக்குகிறார்.

இந்தப் பிற்போக்குக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்புகளான 11 ஹிந்துத்துவ அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஊடுருவல் குறித்து விரிவாக விளக்கி, அது கல்விக் குழுவாக இல்லாமல் காவிகள் கூடாரமாக விளங்குவதை ஆதாரப்பூர்வமாக அவர்களின் பின்னணியுடன் விவரிக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிற்போக்குத்தனமான வேதக் கலாச்சாரத்தை மறுகட்டமைக்கும் நூற்றாண்டு கனவை நிறைவேற்றவே இந்த கல்வித் திட்டம் என்பதையும், கொரானா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு சிக்கித் தவித்த போது அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி எப்படியாவது தங்களின் காவி மையில் எழுதப்பட்ட கல்விக் கொள்கையைச் செயல்படுத்த விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டதையும் அதற்குத் தமிழ்நாடு அரசு காட்டிய எதிர்வினையையும் விளக்குகிறார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதங்கள் இல்லை. மத்திய கல்வி ஆலோசனை வாரியத்திடமும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதலும், ஒன்றிய அரசின் ஒப்புதலும் இருக்க வேண்டும் என்னும் அரசியலமைப்பு சட்டத்தின் அறிவுரையும் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை விளக்குகிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கும் அதன் விதிகளுக்கும் எதிரானதாகவே இந்த தேசியக் கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது என்றும், கல்வியில் மாநில அரசியலுக்கு உள்ள அதிகாரங்களைப் பறிப்பதும், அதிகாரங்களை மய்யப்படுத்துவதும், கல்வியைத் தனியார் மயமாக்குவதும், பெரு வணிக நிறுவனங்களின் சந்தை கூடங்களாக கல்விக்கூடங்களை மாற்றுவதுமே இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்குகிறார்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள கல்வி வளர்ச்சியையும் தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களையும் தெளிவுபடுத்தி, அவை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை விளக்குகிறார். மேலும் நிபந்தனை இன்றி பிஎம்ஸ்ரீ பள்ளிகளை அனுமதித்தால் மட்டுமே கல்வித் திட்டங்களுக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறுவது அறமற்றது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் விளக்குகிறார்.

அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்று தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்வதாக இந்தக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறாதவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைக்கக் கூடாது என்னும் கொள்கை நடைமுறை உள்ளது. ஆனால், இந்தக் கல்விக் கொள்கை மூன்றாம் வகுப்பு தொடங்கி அய்ந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வுகள் எழுத வேண்டும் என்று திணிப்பதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையற்ற தேர்வு பயம், பயிற்சி வகுப்புகள் செலவு, என்பதை கடந்து அவர்கள் ஒரு கட்டத்தில் இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் கல்வியில் இருந்தே அப்புறப்படுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறது.

தங்கள் தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு தொழிற்கல்வி
யைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்கிறது இந்தக் கல்விக் கொள்கை. இதற்கு வசதியாக கடந்த 2016ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தில் 14 வயதுக்கு குறைவான குழந்தைகளை, குடும்பத் தொழிலில் அதாவது குலத்தொழிலில் ஈடுபடுத்தலாம் எனச் சட்டத் திருத்தமும் செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அவற்றையும் கடந்து படித்து வந்தாலும் விஸ்வகர்மா போன்ற பிற்போக்குத் திட்டங்களின் மூலம் மீண்டும் அவர்களைக் குலத்தொழிலுக்குள் தள்ள முயற்சிக்கிறது என்பதை விளக்கமாக எடுத்துரைக்கிறார். தமிழ்நாட்டில் ஜாதி அடிப்படையில் ஆன கல்வி என்ற குருகுலத் திட்டம் ராஜாஜி காலத்தில் திணிக்கப்பட்டு தந்தை பெரியார் அண்ணா உள்ளிட்ட தலைவர்களால் எதிர்க்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. அதை மீண்டும் கேட்பதை இலக்காகக் கொண்டுள்ளது இந்தக் கல்வி முறை.

மொழிக் கொள்கையைப் பொறுத்தவரை தேவையற்ற மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்படுவதன் சூழ்ச்சியைத் தெளிவாக எடுத்துரைக்கிறார். ஏதேனும் ஓர் இந்திய மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று ஆசை காட்டினாலும் அவர்களது அறிவிப்புக்குப் பின்னால் விருப்பமுடியாக வலுவான சலுகைகளுடன் முக்கிய நீரோட்டத்தில் சமஸ்கிருதம் கொண்டுவரப்படும் என்றும் கணிதம், வானியல், தத்துவம், மொழியில் நாடகம், யோகா போன்ற பிற சமகால பாடங்களுடனும் சமஸ்கிருதம் இணைக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பதை எடுத்துக்காட்டி அவர்களது கொள்கை சமஸ்கிருதத் திணிப்பு என்பதை விளக்குகிறார்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திற்கு வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையாக சமூக நீதி இட ஒதுக்கீட்டு முறை பயன்பட்டு வருகிறது. இந்தக் கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்கள் அத்தகைய சமூகநீதியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தர மறுக்கின்றன. எனவே, கல்வியில் சமூக நீதியை ஒழிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைக் கல்வியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான சூழ்ச்சி இதில் இடம்பெற்றுள்ளது என்பதை விளக்குகிறார். குறிப்பாக பெண் கல்வியை முக்கிய அம்சமாகக் கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஒரு நிலையில், கல்விக் கொள்கையில் அது பற்றிய கூறுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பள்ளிக்குச் செல்லும் பிஞ்சு உள்ளங்களில் வேதங்கள், பகுத்தறிவுக்குப் புறம்பான செயல்பாடுகளைக் கொண்ட புராண இதிகாசங்கள், முற்பிறவிகளைப் பற்றிக் கூறும் ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், வேடிக்கை கட்டுக்கதைகள் உள்ளிட்ட சுயநலத்தைத் தூண்டும் அறிவியலுக்கு எதிரான பிற்போக்குச் சிந்தனைகளை மீறி போதனைகள் என்ற பெயரில் விதைப்பதையே குறியாக கொண்டுள்ளது இக்கல்வித் திட்டம்.

அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தி தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு அம்சங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல். இதன் அடிப்படையில் தற்போது வட மாநிலங்களில் ஏறக்குறைய 64 சதவிகித பள்ளிகள் தனியார் மயம் ஆக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலையும் வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர்களின் உரிமைகளுக்கும் நலனுக்கும் எதிரானதாகவும், ஆசிரியர்களை எந்திரங்கள் போல, தினக்கூலிகள் போல பயன்படுத்தவும் இந்தக் கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

கூட்டாட்சித் தன்மையைச் சிதைக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருவதைக் குறிப்பிட்டு அந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவது தமிழ்நாட்டு மக்களின் தலையாய கடமை என்பதை உணர்த்துகிறார்.

இந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ‘‘மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய பண்பாடு இருக்கின்ற நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் படிக்கவேண்டும் – எந்தப் பாடத்திட்டத்தில் படிக்கவேண்டும் என்று முடிவு செய்கின்ற அதிகாரம் மாநில அரசுகளுக்குத்தான் இருக்கவேண்டும்! எனவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் வரை நம்முடைய போராட்டம் தொடர வேண்டும். அதற்கு தம்பி அன்பில் மகேஸ் எழுதியுள்ள இந்த நூல் ஊக்கமளிக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் பாராட்டிற்கேற்ப நம் தலைமுறையின் உரிமைகளைக் காக்கும் இந்தப் போரில் மக்கள் இயங்க வேண்டிய ஒரு கருத்தியல் ஆயுதத்தை வழங்கி இருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

இந்த நூல் வெளியிடப்பட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்ட நிலையில் இதனை மக்கள் பதிப்பாக கொண்டு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தார்.

அதனையேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து மக்கள் பதிப்பும், மின்னூல் பதிப்பும் 29.6.2025 அன்று சென்னை பெரியார் திடலில் வெளியிடப்பட்டன. l