Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எண்ணங்களும் அதன் நோய்மைகளும்

சிந்தனை என்பது எண்ணங்களின் தொகுப்பு. பல்வேறு இலக்கற்ற எண்ணங்கள் மனதில் அலைபாயும் தருணத்தில், அவை அனைத்தும் ஓர் இலக்கில் திரளும்போது நாம் அதை சிந்தனை எனச் சொல்கிறோம். அப்படி திரளாத வேளையில் அவற்றை நாம் வெறும் எண்ணங்கள் என்றே சொல்கிறோம்.

 

சிவபாலன் இளங்கோவன்
மனநல மருத்துவர்

மனம் ஓய்வு நிலையில் இருக்கும்போது, அதில் பல்வேறு எண்ணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். பொதுவாக அந்த எண்ணங்களை மனம் பொருட்படுத்தாது. தேவையான நேரத்தில் இந்த எண்ணங்களை ஓர் இலக்கை நோக்கிக் குவித்து, மனம் நமது சிந்தனையை ஒருங்கிணைக்கிறது.

குதிரையின் இலக்கைத் தீர்மானிக்கும் கடிவாளம் போல, நமது மனம் எண்ணங்களுக்குக் கடிவாளமிட்டு இலக்குகளை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கும். எண்ணங்களை விட மனமே வலிமையானது. மனம் சொல்வதற்கு ஏற்றவாறு எண்ணங்கள் உருவாகும், அந்த எண்ணங்களைத் தொகுப்பதும் அல்லது கலைப்பதும், தேவையில்லை என்று முடிவு செய்வதும் மனமாகவே இருக்கிறது. ஒருவேளை மனம் தனது கடிவாளத்தை இழக்கும்போது கட்டுத்தறியின்றி ஓடும் எண்ணங்கள் மனதைக் கட்டுப்படுத்த தொடங்குகின்றன, எண்ணம் நோய்மையடையும் புள்ளி இதுதான்.

எப்போதெல்லாம் எண்ணங்களின் மீதான இந்தக் கட்டுப்பாட்டை மனம் இழக்கிறதோ அப்போதெல்லாம் எண்ணங்கள் வலிமை மிகுந்தவைகளாக மாறிவிடுகின்றன. மனதைக் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன. எண்ணங்களுக்கு ஏற்றவகையில் மனம் செயல்படத் தொடங்கும். இந்த நிலையில் எண்ணங்கள் முழுமையாக நோய்மையடைந்து விடுகின்றன.

நாம் நம்பும் ஒருவர் மீது, எந்த விதக் காரணமும் இல்லாமல் தன்னிச்சையாக ஓர் எதிர்மறை எண்ணம் மனதில் உருவானால், மனம் இயல்பு நிலையில் அந்த எண்ணத்தை நிராகரித்து விடும். ஆனால், மனம் பலவீனமாகும் போது அந்த எண்ணம் மனதைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும். “அவர் உனக்குத் துரோகம் செய்கிறார்” என்ற எண்ணத்தை நிராகரிக்க முடியாமல், அந்த எண்ணத்திற்கு மனம், தன்னைப் பூரணமாக ஒப்புவிப்பது தான் நோய். இந்த நோய்மை நிலைதான் “எண்ணச் சுழற்சி நோய்” எனச் சொல்லக்கூடிய ‘Obsessive Compulsive Disorder.’

சமகாலத்தின் மிக முக்கியமான மனநலப்
பிரச்சினையாக இந்த ஓசிடி உருவெடுத்துக்
கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதினருக்கும் இந்த நோய் வரலாம். அதுவும் குறிப்பாக கொரொனா காலகட்டத்திற்கு பிறகு இந்த நோய் இன்னும் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

‘Obsessive Compulsive Disorder’ என்று சொல்லக்கூடிய எண்ணச் சுழற்சி நோய் என்பது சிகிச்சையளிக்க வேண்டிய – குணப்படுத்தக்கூடிய ஒரு வகையான மனநலப் பிரச்சினை. சிகிச்சையளிக்காத நிலையில் நாளுக்கு நாள் இதன் தீவிரத்தன்மை அதிகமாகி அதிதீவிர நோயாகவும் மாறக்கூடியது.

ஓர் எண்ணம், திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றி, உங்கள் மனதை முழுவதுமாக ஆக்ரமித்துக்கொண்டு வேறு எதிலும் உங்களை ஈடுபட விடாமல், எதன் மீதும் கவனம் கொள்ள முடியாமல் செய்யுமானால் அந்த எண்ணத்தை ‘Obsession’ என்று அழைக்கலாம்.

ஒரு பெண் என்னிடம், “பீரோ பூட்டுனமா இல்லையானு தோணிட்டே இருக்குங்க, நிம்மதியாவே இருக்க முடியல, இவ்ளோ தூரம் கோயிலுக்கு வந்துட்டு சாமி கும்படக் கூட மனசு வரல, போய் ஒரு டைம் செக் பண்ணிட்டு வந்தாதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்” என்றார்.

பீரோவைப் பூட்டிவிட்டோமா இல்லையா என்ற அந்தப் பெண்ணின் சந்தேகம்தான் ‘Obsession’. அந்தச் சந்தேகம் அவளின் மனதை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது. இதே போல ஏதாவது ஓர் எண்ணம் உங்களுக்குள்
திரும்பத் திரும்பத் தோன்றி உங்களது முழுக் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக்கொண்டால் அந்த எண்ணத்தை ‘Obsession’ என்று சொல்லலாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்
றால், ‘Obsession’ என்றாலே வியாதியோ, மனப்பிரச்சினையோ கிடையாது. இயல்பாகவே நம் எல்லோருக்குமே கூட சில நேரங்களில் அந்தந்தச் சூழல் சார்ந்து சில ‘அப்சசன்’ வருவது இயற்கையே. நாம் செய்யும் சில செயல்களில், சடங்குகளில் இந்த ‘அப்சசனின்’ தன்மை இருக்கிறது. தேர்வு எழுதச் செல்லும்போது எல்லாவற்றையும் படித்துவிட்டோமா என்ற சந்தேகம் திரும்பத் திரும்ப வருவதும், படிப்பதைச் சரியாக எழுத முடியுமா என திரும்பத் திரும்பத் தோன்றும் பயத்திலும் கூட அப்சசனின் தன்மை இருக்கிறது. அதனால் ‘Obsession’ என்றாலே அது வியாதியோ அல்லது மனப்பிரச்சினையோ அல்ல; அது இயல்பானதே!

இயல்பான இந்த ‘Obsession’ எப்போது நோயாக மாறுகிறது?

ஓர் எண்ணம் திரும்பத் திரும்ப உங்களுக்குள்
தோன்றுகிறது என்றால், செய்ய வேண்டிய ஒரு செயலை இன்னும் கச்சிதமாக, திருத்தமாகச் செய்ய அது உங்களை நிர்ப்பந்திக்கிறது என்று பொருள். அதன் காரணமாக நீங்கள் இன்னும் அதை நன்றாக, திருப்தியாகச் செய்ய முடிந்தால் அந்த ‘Obsession’ ஆக்கப்பூர்வமானதே!

இன்று மாலைக்குள் ஒரு ரிப்போர்ட்டைச் சரி பார்த்து மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும். ஒரு முறை சரி பார்த்த பிறகும் திருப்தி இல்லாமல் இன்னும் சில முறை சரி பார்த்து அனுப்புவது இயல்பானது, ஆக்கப்பூர்வமானது. அதுவே எத்தனை முறை சரி பார்த்த பிறகும் திருப்தி வராமல் திரும்பத் திரும்ப அதை சரி பார்த்துக்கொண்டே இருந்து, கடைசியில் அந்த ரிப்போர்ட்டை மேலதிகாரிக்கு அனுப்ப முடியாமலேயே போனால் அது நோய். எண்ணச் சுழற்சி நோய்.

இருபது வயது இளைஞன். அண்மைக்கால
மாக ஒரு பெண்ணுடன் பழகி வருகிறான். இரவில் நீண்ட நேரம் அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பான். ஒரு நாள் அவனுக்குத் திடீரென ஓர் அய்யம் வந்துவிடுகிறது. “ஒருவேளை நான் போனை வைத்தவுடன் அவள் வேறு யாருடனோ பேசுவாளோ?” என்று தோன்றிவிடுகிறது. அப்படி ஓர் அய்யம் வந்தவுடன் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உடனடியாக அந்தப் பெண்ணுக்கு அழைப்புச் செய்தி பேசுகிறான். அவளது எண் எந்த தொடர்பிலும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்கிறான். ஓரளவிற்கு நிம்மதியாக இருக்கிறது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் திரும்பவும் அந்த அய்யம் வருகிறது. திரும்பவும் அழைத்துப் பேசுகிறான். அடுத்த சில நாட்களில் அவனது இந்த நடவடிக்கை மேலும் அதிகமாகிறது. அடிக்கடி அவளுக்கு அழைப்புச் செய்து அவள் யாரிடமும் பேசவில்லை என உறுதி செய்து கொள்கிறான். இரவு முழுக்க அழைத்துக்கொண்டேயிருக்கிறான். ஒரு கட்டத்தில் அவள் வெறுத்துப் போய் “எதுக்கு இப்படி ‘நைட்’ முழுக்க மிஸ்டு காலா கொடுத்துட்டு இருக்க” எனக் கோபித்து கொள்ளும்போது உண்மையைச் சொல்லியிருக்கிறான். அவள் ஓரளவு இதைப் புரிந்து கொண்டு என்னிடம் அழைத்து வந்தாள்.

“எனக்கு நல்லாவே தெரியும் சார், அவ யார்கிட்டயும் பேச மாட்டானு. ஆனால், என்னால அந்தச் சந்தேகம் வரும்போது என்ன பண்றதுனு தெரியல, அப்படிலாம் இருக்காதுனு எவ்வளவோ சமாதானம் எனக்கே சொல்லிக்கிட்டாலும் என்னால நிம்மதியா இருக்க முடியல, அவளுக்குப் போன் பண்ணி ஒரு ரிங்காவது கேட்டாத்தான் என்னால நிம்மதியா இருக்க முடியுது, அந்த நிம்மதியும் கூட கொஞ்ச நேரம் தான், திரும்பவும் அந்தச் சந்தேகம், திரும்பவும் கால் பண்றேன். ஒரு நாள் நைட் மட்டும் அய்நூத்தி முப்பது மிஸ்டு கால் பண்ணியிருக்கேன்” என்று அழுதான்.

இதுதான் நோய்மை. ஓர் எண்ணம் திரும்பத் திரும்ப வருவதன் விளைவாக மனதை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டு, மனதை முழுவதும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதால் வேறு எதன் மீதும் கவனம் இல்லாமல், வேறு எதையும் செய்ய முடியாமல் எந்த நேரமும் இதன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அந்த எண்ணங்கள் சொல்கிறபடியே நடந்து கொண்டிருந்தால் அந்த எண்ணம் அதாவது அந்த ‘அப்சசன்’ நோய்மையாக மாறிவிட்டது என்று அர்த்தம். இப்படித்தான் இயல்பான சில ‘அப்சசன்கள்’ நோய்மையாக மாறுகின்றன.

“எனக்கு எதையும் ரெண்டு மூணு முறை ‘செக்’ செய்து பார்ப்பது தான் வழக்கம், இதனால்
எனது செயல்கள் எதுவும் பாதிக்கப்படுவதில்லை, எனது நிம்மதி ஒன்றும் கெட்டுப்போவதில்லை, இந்த இயல்பான ‘அப்சசன்’ கூட பின்னாளில் நோய்மையாக மாறுமா?” என நண்பர் ஒருவர் கேட்டார்.

நிச்சயம் மாறாது. காலம் காலமாக நமது ஆளுமைகளில் இருக்கும் சில ‘Obsession’ பண்புகள் எப்போதும் அதே மாதிரியாகவே தொடரும். எதுவும் நோய்மையாக மாறாது. நோய்மை என்பது திடீரென ஓர் ‘அப்சசன்’ தோன்றி, அது கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமாகி, நோய்மை அளவுக்குச் செல்லுமே தவிர, நமது ஆளுமையில் எப்போதும் இருக்கும் ‘Obsessiongal’ எப்போதும் நோய்மையை அடைவதில்லை.

(தொடரும்…)