Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மநுவின் சட்டத்தைப் புதைத்த திராவிட மாடல் புரட்சி !- த.மு. யாழ் திலீபன்

பிறப்பின் அடிப்படையில் ஜாதிய அமைப்பு முறைப்படி பேதத்தைப் புகுத்திப் படிக்கவிடாமல் செய்தது ஆரிய வேத மதம். இதற்கு ஜாதிய அமைப்புகளின் கூட்டு தொகுப்பான ஹிந்து மதம் காவலாக நிற்கிறது. அதற்கு ஆதரவாகக் கட்டுக்கதைகள் கட்டப்பட்டு அவை இதிகாசங்கள் எனப்பட்டன. இதிகாசங்களை நம்ப வைக்கவும், வேத மதத்தை மீறிச் செயல்படுவதைத் தவிர்க்க மநு என்பது சட்டமாக்கப்பட்டது. மநுவின்படி நடப்பதை உறுதிப்படுத்தவும், சடங்கு, சம்பிரதாயம், சாங்கியம், மோட்சம், நரகம் என்று சொல்லி மக்களைப் பயத்தின் அடிப்படையில் கடவுள் பெயரால் இந்த அமைப்பு முறை செயல்பட்டு வருகிறது.

மநுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஹிந்து மதத்தில் “அனைவருக்கும் கல்வி, சமூக சமத்துவம், பொருளாதார சுதந்திரம், எனும் சமூகநீதி முறை தடுக்கப்பட்டுள்ளது” என்றார் டாக்டர் அம்பேத்கர். ஒரு மனிதன் சமூக சமத்துவம் பெறவும் பொருளாதார வளர்ச்சி பெறவும் கல்வி மிக முக்கியம். உலகத்தில் உள்ள மதங்களில் தம் சொந்த மத மக்களுக்குக் கல்வி கொடுக்கவிடாமல் தடுத்து வைத்தது தான் ஆரிய ஹிந்து மதம்.

கல்வி உரிமை மறுப்பது என்பது இரண்டு வகையில் பார்ப்பனருக்கு லாபம் தரக்கூடியது. ஒன்று, கல்வி மறுப்பின் மூலம் அம்மக்கள் பொருளாதார வளர்ச்சி பெறாமல் தலைமுறை தலைமுறையாகக் கடவுள் விட்ட வழி என்று அடிமை வேலைகளைச் செய்யும் ஆட்களாகவே தங்களை வைத்துக் கொள்ளுவது. மற்றொன்று, கல்வி மூலம் அறிவு பெற்றுவிட்டால் கிளர்ச்சி உருவாகும், ஜாதியக் கட்டமைப்பைக் கேள்வி கேட்கும் சூழல் வரும், மதத்தைத் துறக்கும்  நிலை வந்தால் ஆபத்து பார்ப்பனியத்துக்கு
என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். அதனால் தான் நாம் அனைவரும் ஹிந்துக்கள் என்று பொதுப்பெயரில் தங்களையும் ஒன்றுபடுத்திப் பெரும்பான்மை எனும் தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்.

அதனடிப்படையில் கல்வியைக் கடவுளின் வழியாகவும் மநுதர்மச் சட்டத்தின் வழியாகவும் ஹிந்து மதம் தடுத்து வந்தது; தற்போதும் தடுத்து வருகிறது. முறையான கல்வி இல்லாமல் பொருளாதார வளர்ச்சி இல்லாமல் தலையெழுத்துஎனும் விதிப்படி அவர்களின் வாழ்க்கை முடங்கிப் போகிறது. சிக்கலான சமூகத்தில் கல்விக்கு அடுத்து பொருளாதார வளர்ச்சியை அவர்களால் எட்டக் கூட முடியாது. இருந்த போதிலும் ஒருவேளை பொருளாதாரம் படைத்த வராக ஒரு சூத்திரர்  இருந்துவிடவே கூடாது என்பதில் ஹிந்து மதம் உறுதியாக நிற்கிறது.

“சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடியும் போதும், அவ்வாறு திரட்டிச் செல்வம் சேர்க்கக் கூடாது. ஏனெனில், செல்வந்தனான சூத்திரன் பார்ப்பனர்களுக்குத் துன்பம் தருகிறான்.” என்று மநுதர்மம் 10:129இல் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

கல்வி என்பதே வேதங்கள் என்பது தான் ஹிந்து மதத்தின் நிலைப்பாடு. அதனால்தான் வேதங்களை ஓதுவது மட்டுமே வேலையாக வைத்திருந்தனர். வேதங்களைப் பார்ப்பனரல்லாத மக்கள் படிக்கக் கூடாது என்றும் சட்டமியற்றினர். இதன் மூலம் இவர்கள் கல்வியாகக் கருதப்பட்ட வேதத்தையும் பார்ப்பனர்கள் மட்டுமே கற்கும் நிலையைத் திட்டமிட்டு உருவாக்கினர்.

கவுதம சூத்திரத்தில் 12:4இல் “சூத்திரன் மனப்பாடம் பண்ணும் நோக்கத்துடன் வேதம் படிப்பதைக் கேட்டால் அவனது காதுகளில் (காய்ச்சிய) ஈயத்தையும் அரக்கையும் ஊற்ற வேண்டும்; அவன் வேதம் ஓதினால் ஓதும் நாக்கைத் துண்டிக்க வேண்டும். வேதத்தில் முழுத் தேர்ச்சி அடைந்தால் அவனது உடம்பைத் துண்டு துண்டாக வெட்டிச் சிதைக்க வேண்டும்.” என்பது சட்டமாகிறது.

மநுதர்மத்தில் 9:18இல் “வேதப் பாடத்துக்கும் பெண்களுக்கும் தொடர்பேதும் இல்லை.” என்று பெண் கல்விக்கும் சேர்த்தே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

படிப்பதற்குப் பார்ப்பனருக்கு மட்டுமே அனுமதியிருந்தது. பார்ப்பனரல்லாத மக்களுக்கு எழுத்தறிவின்மையை ஹிந்து மதம் போதித்தது. இதனால் மடமையும் அறியாமையுமே பெரும்பான்மை சமூகத்தில் பரவி நின்றது. இத்தகைய முறையையே நீடித்திருக்க வேண்டுமென ஹிந்து மதம் விரும்புகிறது. தமது சொந்த நலனைக் காத்துக்கொள்ள பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெறாமல் தடுப்பதற்காக அவர்கள் கல்வி கற்பது தடை செய்யப்பட்டது.

மநு கல்வியைத் தடை செய்தது. 1921இல் நீதிக்கட்சி கல்வியை அனைவருக்குமானதாக மாற்றப் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. பிறகு காங்கிரஸ் காமராசர் ஆட்சியில் கல்வி பெருமளவில் மக்களிடம் சென்று சேர்ந்தது. 1967ஆம் ஆண்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிஞர் அண்ணா ஆட்சி தொடங்கி கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த தமிழ்நாடாக மாற்றிக் காட்டினார். படிக்கவே கூடாது எனும் கட்டுக்கதைகளைக் கடவுள் எனும் பயத்தின் அடிப்படையில் மகாபாரதத்தில் துரோணர் கேட்டவுடன் ஏகலைவன் தன் கட்டைவிரலைக் கொடுத்தான். குருவின் அனுமதியில்லாமல் கற்கக் கூடாது, சூத்திரன் எதிலும் உயர்ந்து நிற்கக் கூடாது என்பதால் வில் அம்பு எய்யும் கட்டைவிரல் காவு வாங்கப்பட்டது. இது அநீதி, அதே போல் தான் படிக்கக் கூடாது எனும் அநீதியைத் திராவிட இயக்கம் உடைத்தது. எங்கள் படிப்பை எவனாவது கேட்டால்  நாங்கள் ஏகலைவன்கள் அல்ல என்பதற்குக்  கலைஞரின் வரிகள் பொருந்திப்போகிறது.

கட்டைவிரலோ தலையோ

காணிக்கையாக இந்நாளில்

எவனும் கேட்டால் பட்டை உரியும்.

சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!”  என்றார்.

மீண்டும் ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் எங்கள் உரிமையைப் பறிக்க நினைத்தால் என்ன நிலை என்பதை கலைஞர் உரைத்தது மநுவின் தலையில் இடியை இறக்கியது போல இருந்திருக்கும்.

இப்படி மநுதர்மம் எதை எல்லாம் நாடக் கூடாது, செய்யக் கூடாது என்றதோ அவற்றை எல்லாம் கலைஞர் உரிமை பறிக்கப்பட்ட மக்களின் வசம் கொண்டுவந்தது வரலாற்றில் பெரும் புரட்சியே!

அப்படித்தான் இன்று திராவிட மாடல் ஆட்சி கலைஞரின் அடியொற்றி சமூக நீதி அரசியலால் மக்களைப் பிரிக்கும் மநுவுக்குப் பாடை கட்டிக்கொண்டிருக்கிறது.

இந்திய அரசின் நிதிப் பங்கீட்டில் கல்விக்கான நிதி, கல்வி ஊக்கத்தொகை, சிறும்பான்மையினர் கல்வித் தொகை, தலித் மாணவர்களின் கல்வித் தொகை மறுப்பு,
SC/ST மேம்பாட்டு நிதி நிறுத்தம், சிறுபான்மை / தொழிலாளர் நிதி குறைப்பு, தலித் குடியிருப்பு நிதி மறுப்பு, மாநிலக் கல்வி வளர்ச்சிக்கான நிதியைக் கொடுக்காமல் இருப்பது போன்ற மக்களின் அவசிய உடனடித் தேவைகளை மறுத்தும் நிதியைக் குறைத்தும் தமிழ்நாட்டு மக்களையும் மாணவர்களையும் மோடி அரசு வஞ்சிக்கிறது.

ஆனால், தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வியில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதற்குச் சான்றாக “தமிழ்நாட்டில் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர் கல்விக்
கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி” செய்யப்படு வதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்து மேல் படிப்பிற்ணகான பொருளாதாரச் சுமையைக் குறைத்துள்ளது.

மநுவால் – ஹிந்து மதத்தால் படிக்கவே அனுமதியில்லாதவர்கள் எனப்பட்ட சூத்திரர்கள் படித்தால், ஆரியப் பார்ப்பன மதவாதிகளுக்கு எரியாதோ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆதிதிராவிட, பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தி வரும் கல்வித் திட்டங்களால் 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96% ஆக உயர்ந்துள்ளது.  `நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அய்.அய்.டி., என்.அய்.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளனர். இது மநுவின் ஆக்டோபஸ் கரங்களில் அமிலம்
ஊற்றுவது போலல்லவா இருந்திருக்கும்!

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கான நிதியை ஒன்றிய அரசு கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைத்து வழங்கியிருக்கிறது. சமூக நீதி மற்றும் மாணவர்களின் கல்வியில்அக்கறையில்லாத ஒன்றிய அரசு ஆட்சி செய்யும்இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் மாணவர் கல்வி வளர்ச்சிக்குப் பல்வேறு செயல்திட்டங்களைத் திராவிட மாடல் அரசு நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறது.!

(தொடரும்…)