Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அவர்களை ஏன் அழைக்கணும்?- இறை.ச.இராசேந்திரன், மும்பை

காலை எட்டு ஒன்பது மணி ஆனாலே பூனா – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடங்கி விடுகிறது.

தமிழ்மாறனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்னும் சுங்கச் சாவடியைக் கடப்பதற்கு இருபது நிமிடங்கள் ஆகும் என்று மூளை கணித்தது. தன் தொடை மீது ஓங்கி ஒர் அறை விட்டுக் கொண்டு மனைவியைப் பார்த்தார். “ஏன் ஆத்ரப் படுறீங்க” தமிழ்மாறன் தோள் மீது கை வைத்து அமைதிப்படுத்தினாள். “இல்லப்பா, பத்தரைக்கு முகூர்த்தம். இங்கேயே ஒன்பதரையாயிட்டு. இன்னும் செம்பூர் போறதுக்கு முக்கால் மணி நேரமாகும். அதுக்குப் பிறகு மாமஞ்சடங்கு முடிச்சிட்டு தாலி கட்டணும்னா முகூர்த்தம் கடந்திருமே. அக்காவும் அத்தானும் காலுல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டு நிப்பாங்களெ” என்று வருந்தினார்.

வருத்தத்திற்குக் காரணமிருக்கிறது. தமிழ்மாறன்தான் மணமகளின் தாய் மாமன்.
அவர் போனபின்தான் மணமகள் சார்பான
மேடை நிகழ்வே ஆரம்பிக்கும். அக்காவிட
மிருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். “இன்னா டோல் நாக்காவ கடந்துட்டென்.” என்று அலைபேசியை அணைத்தார். முன்னால் இடைவெளி கிடைத்ததும் மகிழுந்தை இயக்கிக் கிளம்பினார்.

மண்டப வாயிலை நெருங்குமுன் மங்கல ஓசைகள் காதுகளை வந்தடைந்தன. மகிழுந்தை விட்டு இறங்கியதும் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த அக்காவும் அத்தானும் “என்னப்பா இவ்வளவு லேட்டா வர்றீங்க; மாப்பிள்ளை எதிர்மாலை சந்தனத்திற்கே நீங்களெல்லாம் வந்திருக்க வேண்டாமா” இரண்டு பேரும் ஒரே குரலில் குறைபட்டுக் கொண்டார்கள்.

அரங்கத்திற்குள் நுழையும் போதுதான் மாப்பிள்ளை வீட்டுத் தாய்மாமன் சடங்கு நடந்து கொண்டிருந்தது. தமிழ்மாறனுக்குக் கொஞ்சம் ஆறுதல். இருக்கையில் அமரும் முன்னே தெரிந்தவர்களுக்கு வணக்கம் சொன்னார். வரவேற்றார். பார்வை மேடையை நோட்டமிட்டது. இரண்டு அய்யர்கள் சம்மணமிட்டு வடக்கு முகமாய் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் இரும்புத் தகடாலான வேள்விக் குழி நெய்யருந்திய மகிழ்ச்சியில் நாக்கைச் சுழற்றிச் சுடர்ந்து நெளிந்தது.

மேடையில் மெல்லிய புகை மூட்டம். கண்களைக் கரிக்கச் செய்தன. தமிழ்மாறன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அத்தானும் அவர் உறவினர்களும் தமிழ்மாறன் கைகளிலும் நெற்றியிலும்  சந்தனம் பூசி, குங்குமப் பொட்டிட்டு, இடது கையில் காப்புக் கட்டி, மலர் மாலை அணிவித்து, தேங்காய் ஒன்றைத் தலையைச் சுற்றி அவர் கைகளில் கொடுத்துப் பெருமைப்படுத்தி முடித்ததும் மணமகள் அவர் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றதும் தமிழ்மாறன் தன் கழுத்தில் கிடந்த மலர்மாலையைக் கழற்றி மணமகள் கழுத்தில் அணிவித்து தாய்மாமன் சீராக ஒரு மோதிரமும் அணிவித்தார்.

மனிதர்களைத் தொட்டுச் செய்யும் எந்தச் சடங்கையும் அவர்கள் செய்வதில்லை. ஆனாலும், இந்த அய்யரை வைத்து ஏன்தான் சடங்கு செய்கிறார்களோ? அக்காவிடமும் அத்தானிடமும் “அய்யரை வைத்துக் கல்யாணம் பண்ண வேண்டாம்” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.  அவர்கள் கேட்கவில்லை. “வந்த துப்பெல்லாம் தட்டிக் கழிச்சிட்டுப் போவுது. நாங்க என்ன செய்யட்டும்? அவ பெறந்த நேரமும் அப்படி, நெறமும் அப்படி. கட்டம் சரியில்லன்னு அம்பது பேரு கழிச்சானுவ. கலரு கம்மின்னு அம்பது பேரு கழிச்சானுவ. நூறு சாதகத்துக்கு மேல பாத்து அம்பதாயிரம் செலவு. தோசம் கழிப்புன்னு ஒரு அம்பதாயிரம் செலவு. அமைஞ்ச மாப்பிள வீட்டுக்காரங்களோ அய்யரை வச்சித்தான் தாலி கட்டணும்னு ஒத்தக் காலுல நிக்காங்க. நாங்க என்ன செய்ய? சொல்லு” ஒருபாடு சலித்துக் கொண்டாள்.

மேடையை விட்டு இறங்கி வந்து முன்னிருக்கையில் அமர்ந்தார். மனைவி மல்லிகை உறவினர்களோடு கலந்து கரைந்திருந்தாள்.

மணமகன் மேடையில் வந்து காத்திருந்தான். வேள்வி புகைவதும் சுடர் எழுவதுமாக இருந்தது. அய்யர் மாப்பிள்ளையின் அப்பாவைக் கூப்பிட்டு “கொஞ்சம் விடுபூக்கள் வேண்டும். அதை யாரிடமாவது கொடுத்து பிய்த்துக் கொண்டு வாருங்கள்” என்றார்.

விடுபூக்களை ஒரு தாம்பாளத்தில் பரப்பி அதன் மீது வெற்றிலையை அய்ந்து முகமாக விரித்து வைத்தார். தேங்காய்க்குச் சந்தனம், குங்குமப் பொட்டிட்டு அழகுபடுத்தினார். தாலிக்கொடியை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு தாலியில் சந்தனமும் குங்குமமும் வைத்தார். பின் தாலியில் ஒரு துண்டு மல்லிகைச் சரம் சுற்றினார். மேளமும் நாதசுரமும் விடாமல் முழங்கிக் கொண்டிருந்தன.

ரமேசு நெருங்கி அமர்ந்தபடி  மூவரையும் சேர்த்து ஒரு தற்படம் (Selfie) எடுத்தான். அதை மூவரும் பார்த்து “நல்லா வந்திருக்கு”ன்னு சிரித்துக் கொண்டார்கள். மேடையில் மணமக்களை ஒளிப்படம் எடுக்கக் கிளம்பினான். போகும் போதுதான் கால்களைப் பார்த்தார் தமிழ்மாறன். இரண்டு கால்களிலும் கருப்புக் கயிறு கட்டியிருந்தான். கையில் அலைபேசி. வாயில் ஆங்கிலம், தோள்பையில் மடிக்கணினி. நாகரிக உடை. இருந்தாலும் மூடத்தனம் பெருகிக்கொண்டே போகிறதே ஏன்?

மணமகள் மேடைக்கு வந்தாள். மணமகன் பக்கத்தில் அமர வைத்தனர். மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் பரபரப்பாக இருந்தார்கள். அய்யர் ஒருவர் நெய்யைக் கோரிக் கோரி குண்டத்தில் ஊற்றிக் கொண்டிருந்தார். அது நம் ஒட்டு மொத்தத் தமிழர்களின் மூளையை உருக்கி ஊற்றுவது போல உணர்ந்தான் தமிழ்மாறன்.

மாப்பிள்ளையின் அண்ணன் பூச்சரம் சுற்றி தாலிக்கொடி வைத்திருந்த தாம்பாளத் தட்டை அனைவர் முன்பாகவும் ஏந்தி அருள் வாழ்த்து வேண்டி வலம் வந்து கொண்டிருந்தான். தமிழ்மாறன் முன்னால் நீட்டினான். தொட்டு வாழ்த்தினான். மங்கல இசை முழங்கிக்கொண்டே இருந்தது. ஒருவர் எல்லாரோட கைகளிலும் மஞ்சள் கலந்த அரிசியும் உதிர்ப்பூக்களையும் கொடுத்துக்கொண்டே போனார்.

மணமகனின் பெற்றோரின் காலைக் கழுவி பொட்டிட்டு வணங்கிய பின், மணமகளின் பெற்றோரின் பாதங்களைக் கழுவி, பொட்டிட்டு வணங்கச் சொன்னார் அய்யர். நேரம் சடங்குகளில் கடந்து கொண்டிருந்தது. தமிழ்மாறன் அலைபேசியைப் பார்த்தான். நேரம் 10.35 காட்டியது. முகூர்த்த வேளை தாண்டி விட்டது. ஆனாலும் சடங்குகளில் தொங்கிக் கொண்டிருந்தன பூணூல்கள்.

அருள் வாழ்த்துப் பெற்ற தாலி அய்யர் கைக்குப் போனது. அவர் அதை எடுத்து தூக்கிப் பார்த்து, புரண்டு கிடந்த தாலியைச் சரி செய்து “நான் கொடுத்த மாதிரியே கட்டுங்கோ” என்று சொல்லித் தாலியை மாப்பிள்ளை கையில் கொடுத்தார். திருப்பூட்டுக் காட்சிகளைக் காண
வும் மணமக்களை வாழ்த்தவும் ஒருவரொருவ
ராக வந்து மேடையை மறைத்தபடி நின்றார்கள்.
தமிழ்மாறனும் மூர்த்தியும் எழுந்து நின்று கொண்டனர். மங்கல இசை கனிந்து பொழிந்தது.
மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினான். எல்லோர் கைகளில் இருந்த விடுபூக்களும் மஞ்சள் கலந்த அரிசியும் பறந்து விழுந்து  மணமக்களுக்கு அருள்மழை பொழிந்தன.

மேடையின் ஒவ்வொரு நிகழ்வாக நடந்து கொண்டு இருந்தன. பார்க்கச் சலிப்புற்ற தமிழ்மாறன் இருக்கையில் வந்து அமர்ந்தார். கூடவே மூர்த்தியும் வந்து அமர்ந்ததும். “அத்தான் கொஞ்ச நாளைக்கி முன்னால சயன் தமிழ்ச்சங்கத்ல ஒரு கல்யாணம் பார்த்தேன். ரொம்ப வித்தியாசமா நடத்தினாங்க. திருக்குறள் ஓதி தாலி கட்டினாங்க. ஒவ்வொரு திருக்குறளா சொல்லச் சொல்ல மேடையில் இருபுறமும் நின்ற ஆண்களும் பெண்களும் மலர்தூவி வாழ்த்தினார்கள்.  அங்கே அய்யரும் இல்லை இந்த மாதிரி சடங்குகளும் இல்லை. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது” என்று உவகையோடு சொன்னான்.

மேடையில் அய்யர் இருவரும் கொண்டு வந்த பொருள்களை எடுத்துப் பரப்பியதும், ஓமகுண்டம் வளர்த்து நெய்வார்த்ததும், மந்திர
மென்று வன்மச் சொற்களை முனங்கியதும், தாலி எடுத்துக் கொடுத்ததும் தவிர எந்த வேலையும் செய்யவில்லை.  வந்ததிலிருந்து மணமக்கள் வீட்டுக்காரர்களை இதைக் கொண்டா,
அதைக் கொண்டா என்று வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு 15,000 ரூபாய்.

மணமக்களைக் கட்டிப்பிடித்தும் கன்னத்
தோடு கன்னம் வைத்தும் ஒயிலாக நிற்க வைத்தும் ஒளிப்படக் கலைஞர்கள் படாத பாடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். செம்பஞ்சு மேடை விரிப்பில் உதிர்ந்து கிடந்த வண்ண மலர்களில் மணமக்களைப் பல நிலையில் அமர வைத்து ஒளிப்படமும் தொடர்நிலைப் படமும் எடுத்துக் கொண்டார்கள்.

அய்யர் இருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த சொம்பு, தட்டுமுட்டுப் பொருட்கள் முதல் மிஞ்சிப்போன வாழையிலை வரை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கினார்கள்.

மணமகனின் தந்தை சுந்தரம் தலைக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கிக் கும்பிட்டு “சாமி, ரெண்டுபேரும் இங்க சாப்புட்டு எங்களப் பெருமப்படுத்த வேணும்.” என்று வேண்டினார். இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு மனதளவில் நிரம்ப அல்லல் பட்டிருப்பார் போல் தெரிந்தது. பொதுவாகவே அய்யர்கள் திருமணம், புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பூசைக்கு வந்தாலும் கையில் காசை வாங்குவதோடு சரி; ஒரு மடக்கு பச்சத் தண்ணீர் கூட குடிப்பதில்லை.

“இல்ல சுந்தரம், நீ சொன்னதிலே வயிறு நிறைந்துவிட்டது.” எனக் கூறியபடி கிளம்பினார்.

“சாமி நீங்க கண்டிப்பா சாப்பிட்டுத்தான் போகணும். அங்க பாருங்க, நீங்க சாப்பிட்ட
பிறகுதான் மத்தவங்களச் சாப்பிட அனுமதிக்
கணும்னு சமையல் ஆள்களிடம் சொல்லி வச்சிருக்கேன். இன்னும் யாரையும் சாப்பாட்டு ஹாலுக்குள்ள போகவிடல. நீங்க மொத மொத சாப்பிட்டுப் போன பெறகுதான் பந்தியே ஆரம்பிக்கும்.” இப்பொழுது மாப்பிள்ளையின் தந்தை சுந்தரம் கெஞ்சும் நிலைக்கு வந்து விட்டவர் போல குரல் தளர்ந்திருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக எந்தக் கெஞ்சலுக்கும் எந்தக் கண்ணீருக்கும் இரங்காத பார்ப்பனர்கள் மனமா சுந்தரத்தின் வேண்டு கோளுக்கு இரங்கப் போகிறது?  “சுந்தரம் வாசல்ல சாப்பிடத் தயாரா நிக்கிறவங்கள உள்ள விடுங்க. சாப்பாட்டுக்கு நேரமாயிட்டு. இன்னொரு பங்சன்ல பாக்கலாம். வரட்டுமா” – சுந்தரத்திடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள் அய்யர்கள் இரண்டுபேரும்.

வெகுதூரத்திலிருந்து வந்தவர்கள் முதல் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டுக் கிளம்ப வேண்டும் என்று சாப்பாட்டுக் கூடத்தின் வாசலில்
குழந்தைகளும் பெரியவர்
களுமாகத் திரண்டார்கள்.

இப்பொழுது அவங்க பார்வையும் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியது. “யப்பா அய்யருங்க சாப்பிட்ட
பெறவுதான் பந்தி ஆரம்பிக்கு
மாம்.

பெரிய சிக்கலாவதை உணர்ந்தனர் சுந்தரமும் அய்யப்பனும். கிறித்துவர்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்
களுக்கு முதல் விருந்து படைத்து விட்டு, அடுத்து மத்தவங்களுக்குப் பந்தி ஆரம்பிப்பது போல நாமும் செய்தால் அய்யர்கள் சம்மதிப்பார்கள் என எண்ணி இருந்தார்கள். நம்ம வீட்டுத் திருமணத்தில் அவர்கள் சாப்பிட்டால் நமக்கும் நம்ம ஜாதிக்கும்
பெருமை என்று கருதித் திட்டமிட்டிருந்தார்கள். அந்தத் திட்டம் அய்யர்களிடம் பலிக்கவில்லை.

கூட்டம் அவர்களைச் சுற்றிக் கூடிவிட்டது. அய்யர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து நகர்வ
திலேயே குறியாக இருந்தனர். சுந்தரத்திற்கும்
அய்யப்பனுக்கும் இது பெரிய இழுக்காகப்பட்டது. “சுந்தரம், நீங்க ரெண்டு பேரும் வெவரமான ஆளுங்க. சொன்னாப் புரிஞ்சுக்கோங்க.” என மெது
வாக நடந்து போய்க்கொண்டே இருந்தார்கள்.

இந்த நிகழ்வு திருமண மகிழ்ச்சியையே கெடுத்து விட்டதாக உணர்ந்த சுந்தரம் “அய்யா, எங்கள் வீட்டுக்கு வந்து விட்டு கை நனைக்காமல் போனா எங்களுக்கு மனசுக்கு நல்லா இருக்காதுல்லா…” முடிக்க நா குழறியது.

“சுந்தரம் உனக்கு அப்படியொரு எண்ணம் இருக்குதுன்னா முரளிகிட்ட ஒரு ஆயிரம் ரூபா கொடு. போறவழியில ஆரிய பவன்ல சாப்டுட்டுப் போறம்” என்றார்.

உறவினர்கள் நடுவில் இந்தச் சொற்கள் சுந்தரத்தைச் செருப்பைக் கழற்றி அடிப்பது போல உணர்ந்தார். இருவர் வாய்களும் திறக்கவில்லை. குவிந்திருந்த கைகள் தளர்ந்தன.

சுந்தரமும் அய்யப்பனும் கையெடுத்துக் கும்பிட்டு “எல்லாரும் சாப்பிடப் போங்க” என்று
சொன்னார்கள்.

ஒரு சிலரைத் தவிர யாருமே சாப்பிடப் போக வில்லை. மொய்ப்பணத்தை மணமக்களிடம் கொடுத்து விட்டு சாப்பிடாமல் போனார்கள்.

தமிழ்மாறன் “என்னங்க
இப்படிப் பண்ணிட்டீங்க. பாப்பான சாப்பிட வைக்
கறதுக்காவ நம்மாளுங்க
சாப்பிடப் போறத ஏன் நிறுத்தி வச்சீங்க. பட்டாத்
தான் நமக்கெல்லாம் புத்தி
வருது, என்ன? பாப்பானைத் தூக்கிச் செமந்ததுக்கு நல்ல மரியாத கொடுத்
துட்டுப் போறானுவல்ல.” என்றார் சீற்றத்துடன்..

“மாப்பிள்ள கொஞ்சம் சும்மாயிரு, என்ன?” என்றார் சினத்தோடு.

“என்ன அத்தான் அய்யர் மேல உள்ள கோவத்த
எம்மேல காட்றீங்க.” என்றார் பதிலுக்கு.

பேசப் போன அய்யப்பனைக் கை காட்டி
விட்டு “சும்மாருங்க சம்பந்தி.  அவர் சொல்வது
தான் சரி. நம்ம மேலதான் தப்பு. நாமளும் நம்ம முன்னோர்கள் போல குடும்பத்துல பெரியவங்க வைச்சிக் கல்யாணம் செய்திருக்கணும். பார்ப்பான்களைக் கூப்பிட்டது தப்பு” என்று ஆற்றாமையில் கூறிய அவர் சொல்லில் எரிமலை
வாய் திறந்தது போல வெக்கை வீசியது.

“சாப்பாட்டு பிரச்சினைக்கே இவ்வளவு கோபப்
படுகிறாரே… பார்ப்பான் ஓதும் மந்திரத்தின் அர்த்தம் தெரிந்தால் என்னவாகும்! என்று முணுமுணுத்தார் விவரமான ஒருவர். l