Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சுயமரியாதை இயக்க வீரர்களிடம் கற்க வேண்டிய போர்க்குணம் – 3 வாழ்க ஆசிரியர் ஆ.திராவிடமணி

“ஓர் இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷ
மடைந்தவன் சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். பெருமையைக் கண்டு சந்தோஷமும் அடையாதிருந்தவன் சிறுமையைக் கண்டு துக்கிக்க வேண்டியதில்லை. எப்படி இருந்தபோதிலும் இவ்விரண்டையும் உத்தேசித்துத் தனது உறுதியான கொள்கைகளிலிருந்து பிறழாமல் இருப்பானேயானால் அவன் ஒருவகையில் காரிய சித்தியடைந்தவனேயாவான். ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் காரியம் தனது சொந்த லாப நஷ்டத்திற்கா? அல்லது பொது ஒரு கஷ்டத்தை நீக்கும் பிறர் நலத்திற்கா? என்பதை முதலில் தனக்குள்ளாகவே யோசித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டுவித லாப நஷ்டத்திற்கும் தயாராயிருக்க வேண்டும்” என்பது நம் அறிவாசான் தன் தொண்டர்களுக்கு வழங்கிய அறிவுரை ஆகும்.

பெரியாரின் விருப்பத்தையே கட்டளையாக  ஏற்ற சுயமரியாதை இயக்க வீரர்கள் சொந்த வாழ்க்கையில் பல நஷ்டங்களை அடைந்தாலும், கொள்கை வெற்றிக்காக வெறியுடன் உழைத்தனர். வெற்றியும் கண்டனர். நூறாண்டை நிறைவு செய்திருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் நிகழ்கால சாட்சியமான திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆசிரியர் சுயமரியாதைச் சுடரொளி ஆ.திராவிடமணி அவர்களின் சீரிய தொண்டு வாழ்வைத் துய்ப்போம் – அவர் வழி தொடர்வோம்.

ஆசிரியரின் ஆசிரியர் – ஆசிரியர்களுக்கான வழிகாட்டி

1944 நீதிக்கட்சி சேலத்தில் திராவிடர் கழகமாக உருவெடுத்தது. திராவிடர் கழகத்திற்கு ஆ.திராவிடமணி மாநிலச் செயலாளராக அறிவாசான் பெரியார் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

சென்னை பொன்னேரி அருகிலுள்ள சிற்றூரான ஆசானபுதூரைச் சேர்ந்தவர் திராவிடமணி. கடலூரில் போர்ட் டிரஸ்ட் அலுவலராகவும், பின்னர் தலைமையாசிரிய
ராகவும் பணியாற்றியவர்.

இவரது முன்னெடுப்பில் கடலூர் நகரில் மிகுந்த எழுச்சியுடன்  மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றதாகவும், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் புதுமையாக இருந்ததாக அண்ணாவின் பாராட்டைப் பெற்ற மாநாடு. இது மட்டுமன்று தனது வருமானத்தின் பெரும்பகுதியை இயக்கத்திற்காகச் செலவழித்து, இயக்க நலனுக்காகப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானாலும் அதையெல்லாம் பொருட் படுத்தாது, தென்னார்க்காடு மாவட்டத்தில்  இயக்கம் வளர்வதற்கு அடித்தளமாய் இயங்கியவர் ஆ.திராவிடமணி அவர்கள்.

திராவிடமணி அவர்களின் தூய தொண்டைப் போற்றும் வகையில் தந்தை பெரியார் அவர்கள் திராவிடமணி அவர்களிடம் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு, ஈரோட்டுக்கு வருமாறு அழைத்தார். தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று அவர் ஈரோடு ‘குடிஅரசு’ அலுவலகத்திற்குச் சென்றார்.

திராவிடர் கழகத்தின் மாநிலச் செயலாளர் களாக ஆ.திராவிடமணி, அறிஞர் அண்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அண்ணா பிரச்சாரப் பணிகளிலும், ஆசிரியர் திராவிடமணி அவர்கள்  தலைமை நிலையப் பணிகளையும் கவனித்து வந்தனர்.

இவர் விடுதலை மேலாளராகவும் திறம்படச் செயல்பட்ட பெருமைக் குரியவர். இதனினும் சிறப்பு யாதெனில் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை
அடையாளம் கண்டு திராவிடர் கழகத்திற்கு வழங்கியவர் திராவிடமணி அவர்கள். கடலூர் முதுநகரில் ஓர் இஸ்லாமியப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணி
யாற்றிய ஆசானபுதூர் சுப்பிரமணி எனும் இயற்பெயர் கொண்ட திராவிடமணி அவர்கள், சுயமரியாதை இயக்கப் பற்றாலும் – தமிழ் மொழி உணர்ச்சியாலும் – தந்தை பெரியார் அவர்களின் மீது கொண்ட பற்றின் காரணமாகவும் தனது பெயரை ஆ.திராவிடமணி என மாற்றிக்கொண்டவர். கவிஞர் கருணானந்தம் தனது ‘தந்தை பெரியார் முழுமையான வரலாறு’ நூலில் தந்தை பெரியாரிடம் ஏகலைவ பக்தி கொண்டவர் எனப் புகழ்ந்து கூறுகிறார்.

திராவிடமணி தன்னிடம் பயின்ற மாணவர்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டியவர். சாரங்கபாணியாக இருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் பெயரை வீரமணியாக மாற்றியவர்.

மாணவர்களுக்குப் பாடத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல்  பகுத்தறிவையும் ஊட்டிய நல்லாசான்தான் திராவிடமணி அவர்கள். இதோடு நில்லாமல் தான் தங்கியிருந்த இராமலிங்க பக்த ஜன சபையில் மாணவர்களுக்குத் தனிவகுப்பெடுத்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர்.

‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘திராவிடநாடு’ இதழ்களை வரவழைத்தும், புரட்சிக்கவிஞர்  கவிதைகளையும் மாணவர்களுக்குப் படிக்க வழங்கினார். இப்படி ஆசிரியர் திராவிடமணி அவர்களால் தயாரிக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டவர்களில் முதன்மையானவர் நமது ஆசிரியர் அவர்கள்.

ஆசானும் ஆசிரியரும்

ஆசான் திராவிடமணி தந்தை பெரியார் அவர்களால் திராவிடர் கழகத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், ‘விடுதலை’ மேலாளராகப் பணி செய்தார். திராவிடமணி அவர்களின் மாணவரான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தந்தை பெரியார் அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியராகவும், கழகப் பொதுச் செயலாளராகவும் நியமித்தார். அறிவாசான் கண்ட ஆசிரியர்களுக்கு இன்னுமொரு சிறப்புண்டு நம் ஆசிரியர் பிறந்தது டிசம்பர் – 2, ஆசிரியரின் ஆசான் திராவிடமணி அவர்கள் பிறந்ததும் அதே டிசம்பர் 2 – (1914) என்பது எத்தனை வரலாற்றுப் பொருத்தம்!

தன் ஆசிரியர் பற்றி நம் ஆசிரியர்

“என்னை இவ்வியக்க நுழைவு வாயிலுக்கு அழைத்து வந்து, விரல் பிடித்து கொள்கை எழுதச் சொல்லிக் கொடுத்த எனது ஆசிரியர் ஆ. திராவிடமணி ஆசானுக்கு  நன்றியைப் பணிந்து தெரிவிக்கின்றேன். அவரது ஆரம்ப காலப் பாடங்கள் இன்னமும் என்னைச் செதுக்கிட உதவிய கருவிகள் ஆகும்.”

ஓர் இயக்கத்தை, ஓர் இனத்தைக் காக்கும் காப்பரணை அடையாளம் கண்டு, கல்வியோடு இன உணர்வையும், பகுத்தறிவையும் பயிற்றுவித்த ஆசான் திராவிடமணி இன்றைய நம் இயக்க ஆசிரியர்களுக்கான வழிகாட்டி. அவர்தம் கொள்கைப் பயணம் திராவிட ஆசிரியர்கள் பயில வேண்டிய பாடம்; பின்பற்ற வேண்டிய வாழ்வு முறை.

வாழ்க ஆசிரியர் ஆ.திராவிடமணி! l